வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட 'தீக்குளிப்புகளை' அம்பலப்படுத்தினார், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன். அவரது உரையின் சென்ற வார தொடர்ச்சி -காங்கிரசிலிருந்து வெளியேறிய வி.பி.சிங், 'ஜன்மோர்ச்சா' என்ற அமைப்பைத் தொடங்கினார். ஊழலுக்கு எதிராக அந்த இயக்கம் போராடியது.

இந்தியாவின் நாடாளுமன்றத்தை நிர்ணயிக்கக்கூடிய எண்ணிக்கை வலிமை உ.பி., பீகார் மாநிலங்களிடம் இருந்ததால், இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்துக் காட்டுவேன் என்று சபதமேற்ற வி.பி.சிங், அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கினார்.

ஜனதா, லோக்தளம், காங்கிரசு (எஸ்) போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, 'ஜனதா தளம்' என்ற கட்சியை உருவாக்கினார். (1988, அக்.11). 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க, மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய 'தேசிய முன்னணி' என்ற கூட்டணி அமைப்பை உருவாக்கியதும் வி.பி.சிங் தான். மத்திய அரசில் மாநிலக் கட்சிகளும் அதிகாரப் பங்கு பெறும். கூட்டாட்சிப் பாதைக்கு வழியமைக்கும் முயற்சியாகவே இது அமைந்தது.

காங்கிரஸ் எதிர்ப்பு ஒன்றையே முன்னிறுத்தி - முரண்பாடுகள் கொண்ட, இடதுசாரிகள்-பா.ஜ.க.வினரையும் ஒரே அணிக்குள் கொண்டு வந்த சாதனையை வி.பி.சிங் ஒருவரால் தான் செய்ய முடிந்தது. வி.பி.சிங் மீதான நம்பகத் தன்மையும் நேர்மையுமே இதற்கு அடிப்படை என்று உறுதியாகக் கூற முடியும். முரண்பாடுகளை நிர்வகித்தல் (Managing the Contradictions) என்று வி.பி.சிங், இதற்குப் பெயர் சூட்டினார். ஆனாலும்கூட பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார மேடையில் வி.பி.சிங் பேச மறுத்தார். தனது இயல்பான நட்பு சக்தி இடதுசாரிகள்தான் என்று கூறிய வி.பி.சிங், பா.ஜ.க.வை அரசியலுக்கான கூட்டணி என்று கூறினார்.

1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று, வி.பி.சிங் பிரதமரானார். பாரதிய ஜனதாவும், இடதுசாரி கட்சிகளும், வெளியிலிருந்து ஆதரவை நல்கினர். 1977 க்குப் பிறகு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தோற்கடிக்கப் பட்டது. வி.பி.சிங் சபதம் ஏற்றதுபோல், உ.பி.யில் 83 தொகுதிகளிலும், பீகாரில் 54 தொகுதிகளிலும் தேசிய முன்னணி வெற்றி வாகை சூடி, 137 இடங்களை இந்த இரண்டு மாநிலத்தில் மட்டும் கைப்பற்றியது.

காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இந்திராவின் மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் வி.பி.சிங் விலகலுக்குப் பிறகு 200 இடங்களைத் தாண்டவே முடியவில்லை. ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து நடந்த தேர்தலில்தான் 200க்கும் சற்று கூடுதலாக வெற்றி வெற்றது. இந்திய அரசியலில் காங்கிரசின் அரசியல் ஆதிக்கத்தைக் கணிசமாக குறைத்தப் பெருமை வி.பி.சிங் அவர்களுக்கு உண்டு. இதை மறுத்துவிட முடியாது. 'ஜன்மோர்ச்சா' தொடங்கிய காலத்தில்கூட வி.பி.சிங்கிற்கு இடஒதுக்கீடு குறித்த தெளிவான பார்வை இருந்ததாகக் கூற முடியாது.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற முழக்கம்தான் அப்போது முன் வைக்கப்பட்டது. அவரைச் சூழ்ந்து நின்ற அருண்நேரு போன்ற பார்ப்பன சக்திகளின் கருத்து 'ஜன்மோர்ச்சாவுக்குள்' நுழைக்கப்பட்டது. தொடர்ந்து இடஒதுக்கீடு கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அதற்காக தொடர்ந்து நாடாளு மன்றத்தில் குரல் கொடுத்த ராம் அவதேஷ்கிங் போன்ற தலைவர்கள் வி.பி.சிங்கிடம் இடஒதுக்கீட்டு கொள்கைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறியபோது நியாயங்கள் அவருக்குப் புரியத் தொடங்கின. இங்கே பேசிய சகோதரி ஓவியா குறிப்பிட்டதைப்போல, மண்டல் ஆணையின் ஒரு பகுதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு ஆணையைப் பிறப்பித்த வி.பி.சிங், உடனே ராம் அவதேஷ்சிங் அவர்களைத்தான் நேரில் போய் சந்தித்து நன்றி கூறினார்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத ஒதுக்கீடு செய்யும் முடிவை வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்து, அதற்கான ஆணையைப் பிறப்பித்தவர், அன்று சமூகநலத்துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் என்ற தலித் தான்! ஒரு தலித் அமைச்சர் ஆணை வழியாகத்தான் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு கிடைத்தது. என்பதை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் மறந்துவிடக் கூடாது.

அதேபோல் அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கர் உருவாக்கிய பிரிவுகள் தான் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது என்பதையும் பிற்படுத்தப்பட்டவர்கள் மறந்துவிடக் கூடாது. (கைதட்டல்)வி.பி.சிங் பிரதமராகப் பதவி ஏற்று (2.12.1989) 11 மாதங்களில் ஆட்சியை உதறினார் (10.11.1990), 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் நாள். ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் மட்டுமல்ல. இந்திய அரசியலிலும் திருப்புமுனையை ஏற்படுத்திய நாள்.

அன்றுதான் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது. பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் அலறின. எரி மலையாக வெடித்தார்கள். ஏதோ பூகம்பமே வந்து விட்டதைப்போல கொதித்தார்கள். வடமாநிலங்களில் மாணவர்களைத் தூண்டி கலவரத்தை நடத்தினர். இதிலே மிகப் பெரும் சோகம் என்னவென்றால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து மாணவர்களே இதை எதிர்த்து வீதிக்கு வந்து, கலவரத்தில் இறங்கியதுதான்.

இது, தங்களுக்கான உரிமை என்ற விழிப்புணர்வு, அவர்களிடம் உருவாக்கப்படவில்லை. ஏன்? என்ன காரணம்? அங்கு ஒரு பெரியார் பிறக்கவில்லை; (கைதட்டல்) அதுதான் காரணம். ஆணை வந்தவுடன் புதுடில்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில், முக்கிய தலைவர்கள் கூடி வி.பி.சிங் ஆட்சிக்கு பாரதிய ஜனதாவின் ஆதரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வற்புறுத்தினர்.

பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் மனோகர் ஜோஷியும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனாலும், பாரதிய ஜனதா கட்சி உடனே ஆதரவைத் திரும்பப் பெற்று விடவில்லை. பிற்படுத்தப்பட்டோரின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்று தயங்கியது. காரணம், நாடாளுமன்றத்தில் மூன்று அல்லது நான்கு எண்ணிக்கையைத் தாண்டாத பாரதிய ஜனதா வி.பி.சிங் அணியில் இடம் பெற்றதால்தான் 86 உறுப்பினர்களைப் பெற முடிந்தது.

அந்த 86 பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 38 பேர் பிற்படுத்தப் பட்டவர். 12 பேர் தாழ்த்தப்பட்டவர். எனவே, இவர்களின் எதிர்ப்புக்குள்ளாக நேரிடுமோ என்ற தயக்கம் பா.ஜ.க.வுக்கு இருந்தது. எதிர்ப்பை வேறு வழியில் காட்ட காரணம் தேடிக் கொண்டிருந்தது. ஆணையை எதிர்த்தது, ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல; காங்கிரஸ்கட்சியைச் சார்ந்த வசந்த் சாத்தே என்ற பார்ப்பன நாடாளுமன்ற உறுப்பினர், ஆணையைத் திரும்பப் பெறக் கூறி நாடாளு மன்றத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். தனது கட்சியின் கருத்து பற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை.

பார்ப்பன உயர்சாதி அய்.ஏ.எஸ். அதிகாரிகள் ரகசியமாகக் கூடி பேசி, அரசுக்கு எதிராக செயல்படுவதென முடிவெடுத்தனர். முதல் கட்டமாக அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் மனைவியர்களை திரட்டி, அணியாக்கி, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஊர்வலம் நடத்தினர். எப்போதாவது இந்த பரம்பரையெல்லாம் வீதிக்கு வந்திருப்பார்களா? பெங்களூரில் பார்ப்பனர் சங்கம் அவசரமாகக் கூடி, "இந்த ஆணை இந்து மதத்தை சாதி அடிப்படையில் பிரித்து விடும். எனவே அமுல்படுத்தக்கூடாது" என்று தீர்மானம் போட்டனர்.

சாதி அடிப்படையில் பிரிப்பது இந்து மதமா? அல்லது அரசு ஆணையா? ஏதோ இந்து மதத்துக்குள் சாதி நுழைந்ததே ஆகஸ்ட் 7 ஆம் தேதி தான் என்பதுபோல் நாடு முழுதும் பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும் ஒரே குரலில் ஓலமிட்டனர்.

இப்போது 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக டெல்லியிலுள்ள 'அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவன' பார்ப்பன மாணவர்கள் எப்படி எதிர்த்தார்களோ, அதுபோல், அப்போது டெல்லிப் பல்கலைக்கழக பார்ப்பன மாணவர்கள்தான் எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர்.

விவரமறியாத பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் ஏதோ தேசத்துக்கே ஆபத்து வந்துவிட்டதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட வைத்து, கலவரத்தைத் தூண்டினார்கள். பீகாரில் நடந்த கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, அதில் இறந்த 6 மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். எதிர்ப்புக் கலவரத்தில் பீகார், உ.பி., ம.பி., ஒரிசா, இராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் இறந்த 32 மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். அதே ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி நாடாளு மன்றத்தின் முன்பு மாணவர்கள் நடத்திய பேரணி கலவரமாக மாறிய போது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரும், செப்டம்பர் 24 ஆம் தேதி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரும், முஸ்லிம் மாணவர்கள் தான்.

மாணவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து தீக்குளிப்பதாக பார்ப்பன ஏடுகள் செய்திகளை வெளியிட்டன. உண்மையில், பல மாணவர்கள் திட்டமிட்டு உயிருடன் எரிக்கப்பட்டு, அவர்கள் தீக்குளித்ததாக நாடகமாடினார்கள். இன்று எப்படி வி.பி.சிங் அவர்களை 'சமூக இழிவைக்' கொண்டு வந்தவர் என்று பார்ப்பன இறுமாப்போடு 'இந்தியா டுடே' எழுதியதோ அதே ஏடு அன்றைக்கும், கலவரங்களை ஊதி விட்டது.

அப்படி இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்த அதே 'இந்தியா டுடே' தான் - தீக்குளிப்பு என்ற பெயரில் ராஜீவ் கோஸ்வாமி என்ற பிற்படுத்தப்பட்ட மாணவரை பார்ப்பன மாணவர்கள் தீக்குளிப்பது போல் நாடகமாடுமாறு கூறிவிட்டு, பிறகு, உண்மை யிலே தீக்குளிக்க வைத்தனர் என்ற செய்தியை மருத்துவனையில் உயிருக்குப் போராடிய கோஸ்வாமியின் வாக்குமூலத்தின் வழியாக அம்பலப்படுத்தியது (இந்தியா டுடே அக்.6-20, 1990).

இதே போல் பல பள்ளி மாணவர், மாணவிகளும் தீக்குளிக்க செய்யப்பட்டனர். பலர் கொளுத்தப்பட்டனர். புதுடில்லி ஆர்.கே.புரத்தில் வகுப்பை விட்டு தண்ணீர்குடிக்க வெளி வந்த பிரவீணா என்னும் சீக்கிய மாணவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பைப் பற்ற வைத்து கொலை செய்தனர். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் ஆசிரியராக இருந்த பார்ப்பன அருண்ஷோரி, வி.பி.சிங்குக்கும், இடஒதுக்கீட்டுக்கும் எதிரான 'குருசேத்திரப் போரையே' நடத்தினார்.

ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 30 வரை ஒன்றரை மாத காலத்தில் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏட்டில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக அருண்ஷோரி எழுதி குவித்த தலையங்கங்கள், கட்டுரைகளின் எண்ணிக்கை மட்டும் 168. அதே போல் 'டைம்ஸ் ஆப் இந்தியா' அதே காலகட்டத்தில் வெளியிட்டவை 171. 'இந்து' வெளியிட்டவை 151. 'இந்து' சென்னையை தலைமை யிடமாகக் கொண்டு வெளிவந்த காரணத்தால் இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகப் போய்விடும் என்பதால், சற்று அடக்கியே எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

"மண்டல் பரிந்துரை நாட்டையே அழித்துவிடும்; அரசு நிர்வாகத்தை மேலும் சீர்குலைக்க வைத்துவிடும்; இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாத முடிவு சமூகப் பதட்டத்தைத்தான் உருவாக்கப் போகிறது. இதன் முதன் விளைவு இதுவாகவே இருக்கும்" என்று 'எக்ஸ்பிரஸ்' எழுதியது.

"40 ஆண்டுகாலமாக - நவீன - சமத்துவ சமுதாயத்தை உருவாக்க படிப்படியாக எட்டிய சாதனைகள் அனைத்தையும் ஒரே அடியில் வி.பி.சிங் வீழ்த்திவிட்டார்" என்று 'டைம்ஸ் ஆப் இந்தியா' பார்ப்பன நாளேடு எழுதியது. இவ்வளவையும் நாம் விரிவாக ஏன் சுட்டிக்காட்டுகிறோம் என்றால், எத்தகைய சூழலில் வி.பி.சிங், இப்படி ஒரு சமூகநீதி ஆணையைப் பிறப்பித்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.

பார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பு; பார்ப்பன ஏடுகளின் ஒரு சார்பான பிரச்சாரம்; மிரட்டல்கள்; பார்ப்பன மாணவர்களின் வன்முறை; வடமாநிலங்களில் உண்மையையறியாத பிற்படுத்தப்பட்ட மாணவர்களே. பார்ப்பன மாணவர்களோடு சேர்ந்து போராடிய அவலம். பா.ஜ.க., காங்கிரஸ்கட்சியின் கடுமையான எதிர்ப்புகள்.

இவ்வளவு எதிர்ப்புகள் சூழ்ந்திருந்த நிலையிலும் கொள்கைக் குன்றாய் நிமிர்ந்து நின்ற மாமனிதன் தான் வி.பி.சிங். (கைதட்டல்) அதற்கு முன் 10 ஆண்டுகாலமாக காங்கிரஸ்ஆட்சியால் முடக்கப் பட்டுக் கிடந்த அறிக்கையை வெளியே கொண்டு வந்து ஆணை பிறப்பித்து, சுழன்றடிக்கும் பார்ப்பன எதிர்ப்புச் சூறாவளிகளுக்கு இடையே எதிர்நீச்சல் போட்ட அந்த மாமனிதரின் இந்த வரலாற்று சாதனையை நாம் நன்றியுடன் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எடுத்துக் காட்டினோம்.

இப்படி ஒரு அரசியல்வாதியை, தந்தை பெரியார் போல் நெஞ்சுரம் கொண்ட ஒரு லட்சியவாதியை நாம் எங்கே தேடினாலும் கிடைப்பார்களா?