'இராவணன் உண்மையான மாவீரன்’ என்று சித்தரிக்கும் திரைப்படம் ஒன்று வடநாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கி வருகிறது. இராவணனை தீமையின் உருவம் என்றும், ‘இராமனை’ அவதாரமாகவும், பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆரிய-திராவிடப் போராட்டத்தில் ஆரிய சூழ்ச்சியால் திராவிட மன்னன் இராவணன் வீழ்த்தப்பட்டான் என்று, பெரியாரும், திராவிடர் இயக்கமும் மக்கள் மன்றத்திலே கொண்டு சென்ற கருத்துகள், இப்போது வடபுலத்திலும், பார்ப்பனரல்லாத சிந்தனையாளர்களால் ஏற்கப்பட்டு வருகிறது. உ.பி. மாநிலம் லக்னோவில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமூக நீதிக்கான கூட்டமைப்பு ஒன்று “சூத்ரா” என்ற பெயரில் உருவாகியுள்ளது.

அவர்கள் பெரியாருக்கு விழா எடுத்து, இராமனுக்கு ‘செருப்பு மாலை போட்டு, மனுதர்மம், பகவத் கீதையைத் தீ வைத்து எரித்தனர். உ.பி.யில் இந்நிகழ்ச்சி, பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்த அடிப்படையில் இராவணன் பற்றி திரைப்படம் ஒன்றும் தயாரிக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் இந்தியாவிலிருந்து ஒளிபரப்பாகிவரும் அய்.பி.எம்., ‘சி.என்.என்.’ தொலைக்காட்சி, கடந்த 24 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு, ‘இராவணன் உண்மையான வீரனா’ என்ற தலைப்பில், ஒரு விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. விவாதத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த பேராசிரியரும், ஆய்வாளருமான வெங்கடாசலபதி, ‘இராவணன் மாவீரன்’ தான் என்று விவாதித்தார்.

தமிழ்நாட்டில் பெரியார் இயக்கம் இந்த சிந்தனைகளை முன் வைத்துப் பிரச்சாரம் செய்ததையும், புலவர் குழந்தை ‘இராவண காவியம்’ படைத்ததையும் குறிப்பிட்டதோடு பெரியாருக்குப் பிறகும், அவரது வழி வந்த இயக்கத்தினரால், இந்தக் கொள்கைப் பரப்பப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

1998-99 ஆம் ஆண்டுகளில் ‘பெரியார் திராவிடர் கழகம்’ - டெல்லியில் இராமநவமி நடப்பதைக் கண்டித்து - தமிழ்நாட்டில், ராமன் படத்தை எரித்ததை, அவர் எடுத்துக் காட்டினார். பெரியார் திராவிடர் கழகம் ராமன் உருவத்தை 1999 இல் தமிழ்நாட்டில் எரித்தது என்ற வாசகத்தை ஆங்கிலத்தில் எழுத்து வடிவிலும், தொலைக்காட்சி அவர் பேசும் போதே வெளியிட்டது.

விவாதம் முடிந்த பிறகு, பார்வையாளர்களின் கருத்துகள் குறுஞ் செய்திகளின் (எஸ்.எம்.எஸ்.) மூலம் பெறப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. பெரும்பாலான பார்வையாளர்கள், ‘இராவணன் மாவீரனே’ என்ற கருத்தை ஆதரித்து செய்திகளை அனுப்பியிருந்தனர். ராமனுக்கு ஆதரவாக - சில பண்டிதர்கள் வாதிட்டது எடுபடவில்லை.

செய்தி: ‘தேவா’

சிங்களர்களோடு விருந்து வைத்து குலாவும் மணி சங்கர அய்யருக்கு எதிர்ப்பு வலுக்கிறது

ஈழத்தில் தமிழர்கள் மீதும் - மாணவிகள் - அகதிகள் மீதும் குண்டு வீசியும், பட்டினி போட்டும் படுகொலை செய்து வரும், சிங்கள அதிபர் ராஜபக்சேயை தனது குடும்ப விழாவுக்கு அழைத்து, விருந்து வைத்து மகிழும் மயிலாடுதுறை பார்ப்பன நாடாளுமன்ற உறுப்பினர் மணி சங்க அய்யருக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

பெரியார் திராவிடர் கழகம், தமிழின உரிமைக் கழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய அமைப்புகள், மயிலாடு துறையில் ஆர்ப்பாட்டங்கள், கொடும்பாவி எரிப்புப் போராட்டங்களை நடத்தின. சீர்காழியில் பெரியார் திராவிடர் கழகம் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தை நடத்தியது. மயிலாடுதுறையில் அடங்கியுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகள் அனைத்திலும் மணி சங்க அய்யரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.

மணி சங்கர அய்யரைக் கண்டித்து, பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., ம.தி.மு.க. அமைப்புகள், சுவரொட்டிகள் ஒட்டியுள்ளன.

சென்னையில் அண்ணாசாலையில் விடுதலை சிறுத்தைகள் மணிசங்கர அய்யரின் கொடும்பாவியைக் கொளுத்தி கைதாகியுள்ளனர். தஞ்சையிலும் மணி சங்கர அய்யர் கொடும்பாவி கொளுத்தப்பட்டது. மணிசங்கர அய்யர் தனது மகள் திருமணத்துக்கு - தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள தலைவர்களான சந்திரிகா, ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே ஆகியோரை அழைத்து விருந்து வைத்து தமிழர்ளை அவமதித்துள்ளனர். ‘மணிசங்க அய்யரே; தொகுதிக்குள் நுழையாதே!’ என்ற சுவரொட்டிகள் தொகுதி முழுதும் ஒட்டப்பட்டன.