`குடிஅரசு' இதழ்களும்கூட, குறுந்தகடுகளாக வெளியிடப்பட்டுள்ளன. அப்படி வெளியிடப்பட்டவைகளை நூல்களாகத் தொகுத்து சிலர் வியாபாரம் செய்யப் பார்ப்பது அறிவு நாணயமான செயலா? - என்று விடுதலையில் தி.க. பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரியார் திராவிடர் கழகம், 2003 ஆம் ஆண்டு `குடிஅரசு' முதல் தொகுப்பை வெளியிட்ட பிறகு தான், மக்கள் மன்றத்தில் அம்பலமாகி விடுவோம் என்ற பதைபதைப்பில் - திராவிடர் கழகம் `குடிஅரசு' குறுந்தகடுகளைக்கூட வெளியிட முன் வந்தது, இது, கலி.பூங்குன்றனுக்கு தெரியுமா? தெரியாதா? அப்படி - குறுந்தகட்டை வெளியிட்டு, அடுத்து சில நாட்களிலேயே குறுந்தகட்டில் சில தவறுகள் நடந்துள்ளதால், அதை வாங்கியவர்கள், உடனே திருப்பித் தருமாறு, `விடுதலை'யில் அறிவிப்பு வெளியிடப்பட்டதே; அது விடுதலையின் பொறுப்பு - ஆசிரியராக இருக்கும் கலி.பூங்குன்றனுக்கு தெரியாமல் போய் விட்டதா?

அப்படி - திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று அறிவித்த பிறகு, இதுவரை, அந்தக் குறுந்தகடுகள், மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட அறிவிப்பு ஏதும் விடுதலையில் வெளிவரவில்லை என்பதும் அவருக்கு தெரியுமா? தெரியாதா?

விற்பனைக்கு வந்த குடிஅரசு குறுந்தகடுகளை திரும்ப ஒப்படைக்கச் சொன்ன ஒரே பிரச்சார இயக்கம் - வீரமணியின் இயக்கமாகத்தான் இருக்க முடியும். உலகத்திலே தனித்தன்மை வாய்ந்த இயக்கம் இது ஒன்று தான் - என்று இதே கட்டுரையில் கலி. பூங்குன்றன் எழுதியதற்கான காரணம் இதுதான் போலிருக்கிறது.

குடிஅரசு குறுந்தகடுகளை திரும்ப ஒப்படைக்காதவர்கள், கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய துரோகிகள்; கழகம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் என்றுகூட இவர்கள் அறிவித்திருந்தாலும், வியப்பதற்கு இல்லை. ஆதாரங்களையும், ஆவணங்களையும் கோப்பு கோப்புகளாக அடுக்கி வைத்துக் கொண்டு, அவ்வப்போது தூசி தட்டி எடுத்து, சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் வீரமணியை ஜாக்கி வைத்து தூக்க முயற்சிக்கும், கலி. பூங்குன்றனாரின் ஆதாரக் கோப்புகளில் - இவைகள் வராமல் போய்விட்டதோ!