சொந்த மண்ணின் மக்களான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ய அந்நிய நாட்டுக்கு ஆயுதம் தரும் ஒரே அரசு இந்தியாதான் என்று புதுவை பிரதேச மீனவர் வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா.மங்கையர் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளியில் 20.3.208 அன்று நடைபெற்ற சிங்கள இராணுவத்தின் தொடர் படுகொலைக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில் மங்கையர் செல்வன் இதனைத் தெரிவித்தார்.

கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது:

மீனவர்கள் சமுதாயம் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக- தனித்துவிடப்பட்ட சமுதாயமாக இருந்து வருகிறது. இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் குழு அறிக்கையில் கூட மீனவர்களுக்கு தனித்தொகுதி- தனி நிதியம் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை. மன்னார் கடற்பரப்பின் கரையோரங்களின் இருபக்கமும் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். ஆனால் அந்தத் தமிழர்களை இந்தி பேசுவோரும் சிங்களம் பேசுவோரும்தான் கண்காணிக்கின்றனர். பிரான்சில் வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது அமைச்சராக இருந்த பூட்டாசிங் பிரான்சுக்கே சென்று சீக்கியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வலியுறுத்தினார்.

வங்கதேச போரின் போது அங்குள்ள வங்காளிகளுக்கு ஆபத்து நேர்ந்தால் மேற்கு வங்க காவல்துறையை அனுப்பி பாதுகாப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் சித்தார்த் சங்கர் ரே கூறினார். ஆனால் 300-க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை படுகொலை செய்துள்ள நிலையில் 25 ஆண்டுகாலமாக ஒரு கண்டனத்தைக் கூட இந்திய அரசு தெரிவிக்கவில்லை. இலங்கையில் நடக்கின்ற போரில் அந்நாட்டு இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு இராணுவ இலக்கு. போரில் இராணுவ இலக்கு மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வழமையானது. யார் அந்த சரத் பொன்சேகா? யாழ்ப்பாணம் செம்மணியில் 600 தமிழர்களை கொன்று புதைத்தவர்.

அப்படியான சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது கடுமையாக கண்டனம் தெரிவித்த இந்திய அரசாங்கம், 300-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இதுவரை எதுவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. மதுரையில் ஒரு சிங்களவன் தற்கொலை செய்து கொண்டதற்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசாங்கமோ, சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் ரூ. 5 லட்சமும் வழங்குகிறது.

இலங்கை இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்திய அரசு கூறுகிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஒப்பந்தங்களை எழுதுவதற்கான பொருட்களையல்லவா கொடுக்க வேண்டும்? பீரங்கிகளும் துப்பாக்கிகளும் அல்லவா நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்? தமிழ்நாட்டில் சிறிலங்காவுக்கான துணைத் தூதரகம் தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கு ஒரு தமிழ் பேசும் ஒருவரை சிங்கள அரசு நியமிக்கின்ற போது சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக ஏன் ஒரு தமிழனை நியமிக்கவில்லை? என்றார் கொளத்தூர் மணி.

தென்னிந்திய மீனவர் நல சங்கத்தின் தலைவர் கு.பாரதி:

கடல் தொழிலுக்குச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு வாரத்துக்கு 3 நாள் மட்டுமே இந்திய கடற்படை அனுமதிக்கிறது. மேலும் 24 மணி நேரத்தில் கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறுகிறது. டீசலுக்கும் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. கடுமையான சோதனைகளிடப்படுகிறது. இப்படி நிராயுதபாணியாக நாங்கள் கடல் தொழிலுக்குச் செல்லும்போது எங்களை சிங்கள கடற்படை சுட்டுப் படுகொலை செய்கிறது.

கடல் தொழிலில் ஈடுபடுவோர் எல்லை தாண்டி மீன்பிடிப்பது இயல்பான ஒன்று. இந்த அடிப்படை விடயமே தெரியாத ஒருவர் இந்தியாவின் பிரதமராக உள்ளார் என்றார் அவர்.

புதுவை பிரதேசத்தின் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா. மங்கையர் செல்வன்:

மேற்குவங்கத்துக்குச் சொந்தமான தீவை இந்திரா அம்மையார் வங்கதேசத்துக்குத் தாரைவார்க்க முயற்சித்தபோது அதனை இன-மொழி உரிமைகள் பற்றி பேசாத கட்சியின் ஜோதிபாசு கேள்வி எழுப்பினார். கச்சத்தீவை சிறிலங்காவுக்கு தாரைவார்த்த போது தமிழக முதல்வராக இருந்தவர் கேள்வி கேட்டிருக்க வேண்டும். அண்மையில் புதுவைக்கு சீன ஆய்வாளர் ஒருவர் வருகை தந்திருந்தார். ஈழ விடுதலைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்குக் காரணமாக அவர் கூறியது, ஈழ விடுதலைப் போருக்குத் தலைமை தாங்குபவர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் என்றார்.

பிரான்ஸ் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது டர்பன் விவகாரம் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகிறார். காரணம் அவர் சீக்கியர். ஆனால் தமிழனை சிங்களக் கடற்படை சுடும்போது அவன் கடற்பரப்பில் நீ நுழைந்தால் அவன் சுடத்தான் செய்வான் என்று அவர் கூறுகிறார்.

சிங்களக் கடற்படையைச் சேர்ந்த குணதிலக்க என்பவரை 1986 ஆம் ஆண்டு கடல் எல்லையை மீறி வந்ததாக இந்தியக் கடற்படை கைது செய்து உடனே விடுதலை செய்தது. அதே குணதிலக்கதான், 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலரையும் இரத்தக் காயங்களுக்கு உட்படுத்தினார். எந்த குணதிலக்கவை மனிதாபிமானத்தோடு இந்தியா விடுவித்ததோ அதே குணதிலக்கதான் மனிதாபிமானமே இல்லாமல் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். ராஜீவை சுட்டுக் கொன்றமைக்காக சோனியாவோ ராகுல்காந்தியோ நடுத்தெருவில் நின்று பிச்சை எடுக்கவில்லை. ஆனால் சிங்களவனால் சுட்டுக் கொல்லப்பட்ட 300 தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பங்கள்தான் நடுத்தெருவில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது. ராஜீ;வ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு, மீனவர் படுகொலைகள் தெரியவில்லையா?

சொந்த மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்ய அன்னிய நாட்டுக்கு ஆயுதங்களை கொடுக்கிற ஒரே அரசு இந்திய அரசுதான். ஹிட்லர் கூட இந்தக் கொடுமையைச் செய்தது இல்லை. ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்றால்தான் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விடிவு வரும் என்றார் மங்கையர் செல்வன்.

தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோசுமணி, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் உள்ளிட்டோரும் கண்டன உரையாற்றினர்.

கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் சிங்களக் கடற்படையை கண்டிக்காத- தடுத்து நிறுத்தாத இந்திய அரசை எதிர்த்து முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஆகஸ்ட் 13-இல் கண்டன நாள் கடைபிடிக்க பெரியார் திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.