22.2.2008 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து நடத்திய 'பெரியார் அம்பேத்கர்: இன்றைய பொருத்தப்பாடு' என்ற தலைப்பிலான சிறப்புச் சொற்பொழிவில் பங்கேற்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆ.இராசா ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி:

நான் இந்த இடத்திலே ஒன்றைச் சொல்ல வேண்டும். கண்ணகிக்குச் சிலை வைத்தபோது தந்தை பெரியார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் பெண்களை அடிமைப்படுத்துகின்ற ஒரு கருவி கற்பு, கற்பு என்றால் அது ஆணுக்கும் இருக்க வேண்டும். நான் என்னவிதமான ஒழுக்கத்தை என்ன விதமான நடத்தையை இராஜதுரை அவர்கள் என் மீது காட்ட வேண்டுமென்று எண்ணுகிறேனோ அதை நான் அவரிடத்திலேயும் காட்ட வேண்டும். மற்றவருக்கும் காட்ட வேண்டும். அதுதான் கற்பு, அதுதான் ஒழுக்கம்.

ஒழுக்கத்துக்கு ரொம்ப எளிமையாக விளக்கம் சொன்னார் பெரியார்: "நான் உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறேனோ அதை நீ என்னிடம் எதிர்பார்ப்பதற்கும், இன்னொருவனிடம் நான் எதிர்பார்ப்பதற்கும் ஒன்றாக இருக்க வேண்டும். இதுதான் ஒழுக்கம்". அந்த அடிப்படையில் கண்ணகிக்கு சிலை வைப்பதைக்கூட தந்தை பெரியார் விமர்சித்தார். ஆனால், அண்ணா வேறுவிதமாகச் சொன்னார். கற்பு உண்டா இல்லையா என்பது வேறு, கண்ணகி கற்புக்கு அரசியா என்பது வேறு, ஆனால் இந்த மண்ணில் ஒரு கலாச்சாரப் படையெடுப்பு நடந்திருக்கிறது.

ஒரு உயர்ந்த செம்மாந்த வாழ்க்கை, ஒருவனுக்கு ஒருத்திதான் வாழ வேண்டுமென்கின்ற வாழ்க்கை. ஒரு வேளை விதவையாகிவிட்டால், அந்த விதவையை மறுமணம் வேண்டுமென்கின்ற உரிமைகூட இந்த தொல் சமுதாயத்தில் இருந்திருக்கிற இந்த தமிழ் சமுதாயத்தில் திடீரென்று 'ஐவனுக்கும் தேவி அழியாத பத்தினி' என்று திரௌபதி அம்மனுக்குக் கோயில் கட்ட வேண்டிய அவசியம் என்ன?

இந்தக் கலாச்சாரப் படையெடுப்பை மறுப்பதற்காகத்தான் கண்ணகிக்கு நான் சிலை வைக்கிறேன். கண்ணகிக்கு சிலை இந்த திராவிட இயக்கத்திற்கு அவசியப்பட்டதற்குக் காரணம், இது எங்கள் அடையாளம், இது எங்கள் நாகரிகம், இது எங்கள் பண்பாடு, வரலாறு என்று சொல்வதற்கு ஒரு அண்ணா இந்த மண்ணிற்கு அவசியப்பட்டதாக அண்ணா கருதிக் கொண்டார், எனவே திராவிட சட்டகம் என்கின்ற சட்டகத்திற்குள் பெரியார் தன்னை அடக்கிக் கொண்டதற்குக் காரணம், ஆரியருக்கு எதிர்ப்பு, இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் பிராமணர்களுக்கு எதிர்தளத்தில் இயங்குவதற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது அவ்வளவுதான். அதற்காக திராவிடர் அல்லாத ஒரு சமுதாயம் இந்த மண்ணிலே வாழக் கூடாது என்றோ, அவர்களுக்கு உரிமையற்றுப் போய்விட வேண்டுமென்றோ பெரியார் ஒரு போதும் கருதியவர் அல்ல.

‘எனக்கு மொழிப் பற்று கிடையாது, நாட்டுப் பற்று கிடையாது, தேசியக் கொடி என் கோவணத்துணி, இந்திய வரைபடத்தை எரிப்பேன்’ என்று எதையெல்லாம் எரிக்க முடிந்ததோ அதை யெல்லாம் செய்தவர் தந்தை பெரியார். இன்னும்கூட நான் சொல்லுவேன். ஒரு காலத்தில் இந்த நாட்டின் மீது சீனா படையெடுத்து வந்தபோது, இந்த நாட்டிலுள்ள தலைவர்களெல்லாம் துண்டேந்தி வசூல் செய்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் பேரறிஞர் அண்ணா உட்பட.

ஆனால் பெரியார் அந்தக் காரியத்தைச் செய்யவில்லை. நான் கர்ப்பக்கிரகத்திற்குள்ளே போகிறேன் என்று சொன்னார். பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், சீனா படையெடுத்து வருகிறது, நாடு பறி போகிறது, நீங்கள் இப்போது தான் ஜாதியை ஒழிக்கிறேன். மதத்தை ஒழிக்கிறேன் என்கிறீர்களே என்று கேட்டபோது பெரியார் சொன்னார்:

'ஒரு வேளை சீனாக்காரன் படையெடுத்து வந்து என்னுடைய சூத்திரப் பட்டம் போகுமானால், பற, பள்ளு பட்டம் போகுமானால் அவனையும் வரவேற்பதற்கு நான் தயார்' - என்று சொல்லுவதற்கு ஒரே ஒரு தலைவர் தான் இந்த மண்ணிலே இருந்தார். எனவே இருவரும் வேறுபட்ட அடையாளங்களோடு இருந்த தலைவர்கள். அம்பேத்கர் தேசியத்தை விரும்பியவர், பெரியார் தேசியத்தை விரும்பியவர் அல்ல.

தேசியம் ஒரு கற்பிதம் என்று சொன்னவர், நாட்டுப்பற்று பொய் என்று சொன்னவர். நேற்று வரை பாகிஸ்தான் நம்மோடு இருந்தது, நாளைக்கு அது பிரிந்து போய் விட்டால் அதன் மீதும் நாட்டுப்பற்று உனக்கு வருமா எனக் கேட்டவர். எனவே பெரியாருக்கு நாட்டுப்பற்று கிடையாது, பெரியாருக்கு மொழிப் பற்று கிடையாது,

உண்மையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையேகூட தமிழ் மேல் இருக்கிற காதலால் தந்தை பெரியார் செய்யவில்லை. இந்தி இங்கு வந்துவிடக் கூடாதே என்கின்ற அந்த வேகத்தில்தான் தந்தை பெரியார் செய்கின்றார். அதற்கு ஒரு அருமையான தலையங்கத்தையே தீட்டினார்.

தந்தை பெரியார் எழுதிய தலையங்கங்களிலே ஒன்று இரண்டு உணர்ச்சிப்பூர்வமானவை. நாகம்மை மறைந்தபோது எந்தக் கணவனும் அப்படி எழுத முடியாது. தன்னுடைய துணைவியார் மறைந்த பொழுது எழுதினார்: "எனக்கு இருக்கிற ஒரே தடையும் போய்விட்டது, என்னுடைய சுகம் போய்விட்டது எனச் சொல்வேனா? சொத்து போய்விட்டது எனச் சொல்வேனா? எனக்கு இருந்த ஒரே ஒரு நலன் போய் விட்டது என்று சொல்வேனா? நாகம்மை வாழ்ந்தது எனக்காகவே தவிர தனக்காக அல்ல" என்றெல்லாம் குறிப்பிட்டு விட்டுச் சொல்கிறார் - இருந்தாலும் ஒழிந்தது, இன்றோடு எனக்கிருந்த ஒரு தடை ஒழிந்தது. இனிமேல் இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காக என் வாழ்நாட்களை அர்ப்பணிக்கப் போகிறேன்.

மனைவி இறந்தபோதுகூட இப்படி ஒரு கட்டுரையை ஒரு தலைவனால் எழுத முடியுமென்கின்ற வரலாறு பெரியாருக்கு உண்டு. அந்தப் பெரியார் மறைமலையடிகளுக்கு ஒரு முறை ஒரு கடிதம் எழுதினார்: நான் உங்களைப் பல்வேறு விதமாக விமர்சித்திருக்கிறேன். உங்களுடைய சைவக் கோட்பாடு மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் பேசுகின்ற தனித்தமிழ் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால், தனித்தமிழ்க் கோட்பாடு என்பது பிராமணர்களுக்கு எதிராக சைவ வேளாளப் பண்பாடு என்கின்ற தளத்தோடு நின்று போய் விட்டது. தனித்தமிழ் இயக்கம் தேவைதான். தனித்தமிழ் இயக்கம் எதுவரை வந்தது என்றால் மொழியைப் பிரித்துப் பார்த்ததே தவிர கீழே இருக்கிற சாதி ஒழிய வேண்டுமென்று விரும்பவில்லை. அது சைவ வேளாளப் பண்பாடு என்கின்ற அந்த தளத்தோடு தனித்தமிழ் இயக்கம் நின்று போய்விட்டது.

ஆனால், உங்கள் மீது எனக்கு நிறைய கருத்து மாறுபாடு உண்டு, உங்களோடு உடன்படாத தளங்கள் நிறைய உண்டு, என்றாலும் தமிழை நாம் காப்பாற்ற வேண்டியதற்குக் காரணம், தமிழர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து விடுவார்கள். தமிழ் மொழி இல்லாவிட்டால் தமிழ் மக்கள் சுபிட்சமாக வாழ முடியாது என்பதற்காக உங்களை அழைக்கிறேன். கடந்த காலத்தில் தவறு செய்திருந்தால் அய்யா அவர்கள் மன்னித்து அருளுங்கள் என்று எழுதியவர் தந்தை பெரியார். ஆக, நான் இவ்வளவு பூடகம் போட்டுப் பேசுவதற்குக் காரணம், அம்பேத்கர் இயங்கிய தளம் வேறு, தந்தை பெரியார் இயங்கிய தளம் வேறு, இவர்களுக்குள் இருக்கிற ஓர்மை வேறு இடத்திலே வருகிறது. எதிலே வருகிறது?

எஸ்.வி.ஆர். அவர்கள் இங்கே குறிப்பிட்டுச் சொன்னார்கள். Annihilation of Caste என்கின்ற புத்தகத்தைப் பற்றி. Genesis, Mechanisism and Development of Caste in India என்ற கட்டுரையை அவர் எழுதுகிறபோது அவருக்கு வயது 25. 25 வயதில் ஒரு இளைஞன் இப்படி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுத முடியுமா என்று இதுவரை யாருக்கும் தெரியாது.

அவரால் பயன்படுத்தப்பட்ட மேற்கோள்கள் எவ்வளவு என்பதை இதுவரை ஆழம் பார்த்தவர்கள் இல்லையோ என எண்ணுகிற அளவுக்கு அம்பேத்கரினுடைய அறிவு நுட்பம் அந்த நூல்களில் வெளிப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் 1857, 1856 இல் சிப்பாய்க் கலகம் நடந்த பொழுது மத விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று வெள்ளைக்காரர்கள் இந்தியத் தலைவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்கள்.

பன்றிக் கொழுப்பை துப்பாக்கியிலே வைத்ததாகச் சொல்லப்பட்ட பொழுது அதை இசுலாமியர்கள் ஒப்புக் கொள்ள முடியாது என்று சொன்னபோது ஒரு மிகப் பெரிய இராணுவக் கலவரம் வெடித்தது. சிப்பாய்களுக்குள் கலகம் வந்த பொழுது வெள்ளைக்கார அரசாங்கம் ஒரு ஒப்புதலுக்கு வந்தது, உங்களுடைய மத விவாகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று. Genesis, Mechanism and Development of Caste in India ஜாதியினுடைய தோற்றமும் வளர்ச்சியும் அது இயங்குகிற முறையும் என்று ஒரு புத்தகத்தை அம்பேத்கர் 1916 இல் எழுதுகிறார். இந்தியாவில் முதன்முதலாகத் தடைசெய்யப்பட்ட ஒரு புத்தகம் வெள்ளைக்கார அரசாங்கத்தால் உண்டு என்று சொன்னால் அதுதான் அந்தப் புத்தகம் இந்தியாவில் முதன்முதலாகத் தடைசெய்யப்பட்ட அம்பேத்கரின் புத்தகம் தான். வெள்ளைக்கார அரசாங்கத்தால் ஒரு இந்தியர் எழுதி முதன்முதலில் தடைசெய்யப்பட்ட புத்தகம். அந்தப் புத்தகத்தைத் தடைசெய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றம் வரை சென்றனர்.

இன்றைக்கு உச்சநீதிமன்றம் டெல்லியிலே இருக்கிறது. ஆனால், அன்றைக்கு உச்சநீதிமன்றம் Privy Council என்று சொல்லப்பட்ட, இங்கிலாந்திலே இருந்த அந்த உச்சநீதிமன்றம் வரை சென்று அந்தப் புத்தகத்திற்குத் தடை வாங்கினார்கள் இங்கே இருக்கின்ற பிராமணர்கள். ஏனென்றால் அதிலே தான் ஜாதி எப்படித் தோன்றியது? அது இயங்குகிற காரணத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன? என்று சொன்னார். அதிலே ஒரு இடத்திலே சொல்லுவார் Hindus are the only people in the world whose relation between man to man has been consecrated as sacred, eternal and inviolativ உலகத்திலே வேறுபாடுகள் இருக்கிறது. பிளாட்டோ எழுதிய 'குடியரசே' Division of Labour தான். Division of Labour என்பது வேறு, Division of Labourers என்பது வேறு. தொழிலைப் பிரிப்பதென்பது வேறு, தொழிலாளர்களைப் பிரிப்பதென்பது வேறு. தொழிலைப் பிரித்தார்கள் மேலைநாடுகளில்.

நான்கூட ஒருமுறை வெளிநாட்டிற்குச் சென்றிருந்தேன். வெளிநாட்டிற்குச் சென்றிருந்து, ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் அறையிலே நான் தங்கியிருந்தபோது, திடீரென்று கதவைத் தட்டினார்கள் மாணவர்கள். மாணவர்கள் என்று தெரியாது. இளம் பிராயத்திலே இருக்கின்ற பெண்கள், ஆண்கள் எல்லாம் திடீரென்று கதவைத் தட்டினார்கள். உங்கள் அறையைச் சுத்தம் செய்யப் போகிறோம் என்று சொன்னார்கள். எனக்கு ஒரு சந்தேகம். யாரைப் பார்த்தாலும் நமது இந்தியன் புத்தி இருக்கிறதே நமக்குள் தெருக்கூட்டி என்றால் இப்படித்தான் இருப்பான், தோட்டி என்றால் இப்படித்தான் இருப்பான் என்று நம்மையும் அறியாமல் நமது மூளைக்குள் இருக்கிற புத்தி அங்கே வெளியே வந்தது.

நீங்களெல்லாம் யார்? உங்களுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என்று அவர்களைப் பார்த்து நான் கேட்டேன். அவர்கள் உடுத்தியிருந்த உடை, அவர்கள் வந்த நாகரிகம், அவர்கள் பழகிய பண்பாடு இவற்றையெல்லாம் பார்த்து எவ்வளவு உங்களுக்கு சம்பளம் என்று கேட்டேன். முதலில் அவர்கள் கேட்ட கேள்வி, நீ ஒரு இந்தியனா? என்று கேட்டார்கள், பாசத்தோடு. ஏன் என்று கேட்டேன். இந்தியாவில் தான் கூட்டுவதற்கும், கழுவுவதற்கும் ஒரு ஜாதி இருக்கிறது என்று கேள்விப்பட்டோம், நாங்கள் பக்கத்திலே இருக்கிற மருத்துவக் கல்லூரியினுடைய மாணவர்கள், இந்த ஓட்டலைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். ஒரு முறை பகலிலும், இரவிலும் சுத்தம் செய்துவிட்டுப் போனால் எங்களுக்கு பாக்கெட் மணி இத்தனை டாலர் கிடைக்கிறது. இதைத்தான் நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம் என்று சொல்லுகிற மனப்பாங்கு அந்த நாட்டில் இருக்கின்றது.

எனவே அங்கு சலவைத் தொழிலாளி இருக்கிறான். ஆனால், பிறப்போடு அது முடிச்சுப் போடப்படவில்லை. அங்கே செருப்புத் தைக்கிற தொழிலாளி இருக்கிறான். ஆனால் அவன் பிறப்போடு முடிச்சுப் போடப்படவில்லை. இன்றைக்குச் செருப்புத் தைக்கிற தொழிலாளி நாளைக்குத் தன்னுடைய தொழிலை மாற்றிக் கொள்ளுவார். அதனால்தான் சொன்னார், Division of Labour என்பது வேறு, Division of Labourers என்பது வேறு.

(தொடரும்)