மனு எழுதிய ஸ்மிருதியில் (தர்ம சாஸ்திரத்தில்) காணப்படும் சமத்துவம் இல்லாமை என்பது, கடந்த கால வரலாறு என்றும், இந்துவான ஒருவன் நிகழ்காலத்தில் நடந்து கொள்வதற்கும், மனு தர்மத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் வாதிடலாம். இப்படி வாதிடுவதைவிடப் பெரிய தவறு எதுவும் இல்லை என்று சொல்லுவேன்.

மனுவின் சட்டம் கடந்த காலத்தது அல்ல. நிகழ் காலத்தின் ஒரு கடந்த வரலாறு என்பதுடன் அது நிகழவில்லை. அது வாழ்ந்து கொண்டிருக்கும் பழைமை; நிகழ்காலப் பிரச்சினைக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அவ்வளவு முக்கியத்துவம் கடந்தகால மனு நீதிக்கு உண்டு.

மனுவினால் விதிக்கப்பட்ட சமம் இல்லாத தன்மை, பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு இந்நாட்டின் சட்டமாக இருந்தது என்பது அந்நியர் பலர் அறியாத ஒன்றாக இருக்கலாம். சில எடுத்துக்காட்டுகள் நிலையைப் புரிந்து கொள்ள உதவும்.

பேஷ்வாக்களின் ஆட்சியில், அவர்களின் தலைநகரான பூனா (புனெ) நகருக்குள், பிற்பகல் 3 மணிக்குப் பின்பும், முற்பகல் 9 மணிக்கு முன்பும் தீண்டப்படாதவர்கள் நுழையக் கூடாது. ஏனென்றால் காலை 9 மணிக்கு முன்பும், பிற்பகல் 3 மணிக்குப் பின்பும் அவர்களின் நிழல் நீளமாக இருக்கும். அந்த நிழல் பார்ப்பனர் மீது பட்டால் அவர்கள் தீட்டாகிவிடுவார்கள்.

மகாராஷ்டிராவில் தீண்டப்படாதவர்கள், கழுத்தில் அல்லது மணிக்கட்டில் கறுப்புக் கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். அவர்களைப் பிறர் உடனடியாக அடையாளம் காண்பதற்காக அவ்வாறு விதிக்கப்பட்டது.

பம்பாய் மாநிலத்தில் பொற்கொல்லர்கள் (சோனார்கள்) வேட்டியைப் பஞ்சக்கச்சம் வைத்துக் கட்டக் கூடாது, “நமஸ்காரம்” எனும் மரியாதைச் சொல்லைக் கூறக் கூடாது. (குறிப்பு: இங்கு அண்ணல் அம்பேத்கர், பம்பாய் கோட்டையில் இருந்து செயல்பட்ட ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசின் தீர்மானத்தையும், அந்தத் தீர்மானப்படி பொற்கொல்லர்கள் நடக்க வேண்டும் என அரசுச் செயலாளர், அந்த சாதித் தலைவர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தையும் தந்துள்ளார். தீர்மானம் 1779 ஜூலை 28 இல் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடிதம் 1779 ஆகஸ்டு 9 இல் எழுதப்பட்டது. பொற்கொல்லர்கள் நமஸ்காரம் எனச் சொல்லுவதால், தங்களுக்கு இந்து மதப்படி உள்ள உரிமை பாதிக்கப்படும் எனத் திரும்பத் திரும்பப் பார்ப்பனர்கள் புகார் கூறியதால், அப்படி ஒரு தீர்மானம் பம்பாய் மாநில அரசால் நிறைவேற்றப்பட்டது)

மராத்திய ஆட்சியில் பார்ப்பனர் அல்லாத மற்ற எவரேனும் வேத மந்திரம் ஓதினால் அவருடைய நாக்கு வெட்டப்படும். உண்மையிலேயே சோனார்கள் (பொற்கொல்லர்கள்) பலருடைய நாக்கு அவ்வாறு பேஷ்வாவின் கட்டளையால் வெட்டப்பட்டது. தீண்டப்படாதவன் மிக உயர்ந்த குத்தகை கொடுக்க வேண்டும்.

மனு வாழ்ந்தது, கிறித்துவுக்குச் சில காலத்திற்கு முந்தி அல்லது பிந்தி இருக்கலாம். ஆனால், இந்து அரசர்கள் ஆண்ட அண்மைக் காலம் வரை, சமத்துவம் அற்ற மனு நீதிதான் சட்டமாகும்.