மாலதி மைத்ரியின் கவிதைத் தொகுப்பான ‘நீரின்றி உலகு’ வைப் படித்த ராணி திலக் சிவனேயென்று இருந்திருக்கலாம். கை துருதுருவென்று இருந்திருக்கும் பட்சம், ஆயிரத்தோருமுறை ராமஜெயம் எழுதியிருக்கலாம். விதியாரை விட்டது. மாலதி மைத்ரியிடம் அவர் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்றிருக்கிற போது... தப்பிக்க முடியுமா? மாலதி மைத்ரி யார்?

பெண்ணியவாதிகளும், பெண்படைப்பாளிகளும் அங்கீகரித்தாலும் கரிக்காவிட்டாலும் அவர்தான் பெண்ணியத்தின் பிரதிநிதி, பெண்படைப்பாளிகளின் தளபதி. ‘பால்வீதியின்’ மொத்தப் பெண்களுக்குமே மோட்ச வழிகாட்டி, பாவை விளக்கு. கீர்த்தியில் ஏதேனும் விட்டுப்போயிருக்கக் கூடும். சம்மந்தப்பட்டவர் என்னை மன்னிக்கனும்.

தனது சுண்டுவிரல் அசைவுக்கு ஆடாத தன் சக பெண் படைப்பாளிகளை தீரா நதியில் அவர் சாடியிருப்பதை நான் வாசித்து விக்கித்துப் போனேன். இந்த வருடம் அக்னி நட்சத்திரத்தின் உக்ரம் தொடர்ந்து அதிகமென்றிருந்ததை யூகிக்கப் போய் கொஞ்சத்திற்கு சமாதானம் ஆக முடிந்தது.

மாலதி மைத்ரியின் கட்டுரையால் பாதிப்புக்குள்ளான சுகிர்தராணி என்ற பெண் படைப்பாளி இராணிப் பேட்டையிலிருந்து தீராநதியில் விளக்கம் எழுதி ஆத்து ஆத்து மாய்ந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்த ஜீவனின் குரலை கேட்கவும் பரிதாபமாக இருந்தது.

மாலதி மைத்ரியின் பிறாண்டலுக்கு மேலும் உள்ளானவர்களின் பட்டியலில் குட்டி ரேவதி, சல்மா, உமாமகேஸ்வரி போன்றோரும் உண்டு. இவர்களின் மறுப்பு இன்னும் வெளியாகவில்லை, அவர்கள் அப்படி எழுதாததையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இவர்களில் குட்டி ரேவதியைப்பற்றி எனக்கு பெரியதாய் எதுவும் தெரியாது. அவரது சில கவிதைகளை மட்டும் படித்திருக்கிறேன். அவ்வளவுதான். பெண்கவிகளில் பாலியல் ரீதியான புதுக் கவிதை எழுதிய தொடக்கப் புள்ளி இவர்தான் என அறிகிறேன். பெண்களுக்கு விதிக்கப்பட்ட மறைமுகமான சில தடைகளை கவிதை வழியே மிக சாதாரணமாக கடக்க முனைந்த இவரது செயல் தீரம் மிக்கது.

சல்மாவின் கவிதைகள் மீது எனக்கு பெரிய ஈடுபாடு எப்பவும் கிடையாது. மனுஷ்ய புத்திரனின் நகல் மாதிரியான ஆக்கங்கள் அவை. பின் தங்கிய சமூகத்தில் இருந்து கவிதை எழுத வந்ததாலோ என்னவோ அவரை இலக்கிய உலகம் மேலே உயர்த்திப் பிடித்திருக்கிறது.

‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்கிற அவரது நாவல் நம்மை புருவம் உயர்த்த வைக்கும் ரகம். பெண்வழிப் பார்வையில் இதுவரை சொல்லப்படாதிருந்த ஓர் சமூகத்தின் அவலங்களை அவர் அதில் பதிவு செய்திருக்கிறார். தான் சார்ந்த சமூகத்தைத் தோலுரித்து கோர்ட்ஸ்டாண்டில் மாட்டி விமர்சனத்திற்கு உட்படுத்திய சல்மாவின் துணிவு நிஜமாலுமே பாராட்டுதலுக்குரியது.

உமாமகேஸ்வரியின் படைப்புகள் எல்லோராலும் தீர்க்கமாக வாசிக்கப்பட்டு பாராட்டுதல்களையும் பெற்றவை. துல்லியமாய் உள்வாங்கி வாசிக்கும் வாசகனிடம் அவைகள் எதிர்வினை நிகழ்த்தக் கூடியன. இந்த படைப்புகளில்தான் எத்தனை விதமான பெண்கள். அவர்களுக்குத்தான் எத்தனை எத்தனை விதமான பிரச்சனைகள்.

இவரது ‘யாரும் யாருடனும் இல்லை’ என்கிற நாவல் தமிழ் இலக்கிய உலகில் இன்னொரு பொக்கிஷம் என்று சொல்லலாம். மத்தியதர கூட்டுக் குடும்பம் ஒன்றில் வலம் வரும் பெண்சிறார்களின் பார்வை அவர்களின் மனவோட்டம், வியப்பு, விந்தை, விளையாட்டு இன்னும் அறம் மீறும் அறியாமையின் அழகு என்று அந் நாவல் நம் சிந்தையை கவர்கிறது. தனது கூச்சலை மட்டுமே பெரிதென நம்பும் படைப்பாளிகள் இந்த நாவலை வாசித்துப் பார்க்க வேண்டும். அதன் கவிதை நடை அவர்களின் சப்த நாடியையே ஒடுக்கிவிடும்.

குட்டி ரேவதி, சல்மா, உமாமகேஸ்வரி என்ற இந்த மூன்று பெண் படைப்பாளிகளும் பெற்றிருக்கிற தீர்க்கமான வெற்றிகளுக்குப் பின்னால் அவர்கள் தகர்த்த தடைகளையும், தங்களது அக-புற சமூக சூழல்களை எதிர் கொள்ள நேர்ந்திருக்கும் அவர்களின் மூர்க்கத்தையும் நம்மால் யூகிக்க முடிகிறபோது இவர்கள் எப்படி பூஞ்சையாகவும் கோழையாகவும் இருக்க முடியும் என்று தெரியவில்லை.

தன் அடையாளம், பெண்ணிய அடையாளம், ஆண் எழுத்து, பெண் எழுத்து என கவிதையை புரிந்து கொள்ள இத்தனை உபகரணங்கள் வேண்டும் என்கிற மாலதி மைத்ரியின் இந்த கூற்று அநியாயத்திற்கான அலம்பல். சுத்தமான பேத்தல் ரகம். வாசகனுக்கு பூச்சாண்டி காட்டுகிற மாய்மாலம்.

ஒரு கவிதை கவிதையாக இருக்க, அது கவிதையாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். நவீனத்துவம் என்ற எந்த அடிப்படையில் எழுதினாலும் அதுதான் இலக்கணம். ஒரு கவிதைக்கும் அதை வாசிப்பவனுக்குமான நெருக்கமும் கிளர்ச்சியும் அது, தன் அகத்தே கொள்ளும் கவித்துவத்தை வைத்து மட்டும்தான். கவிதை அதன் போக்கில் பேசும் சங்கதிகள் என்பதெல்லாம் இங்கே இரண்டாம் பட்சம்தான். ஒரு கவிதையின் இறுக்கமான கட்டமைப்புகளையும் தாண்டி அதன் கவித்துவத்தை கண்டடைபவனுக்கு அதில் பேசப்படும் அத்தனையை குறித்துமான புரிதலும் உள்வாங்கிக் கொள்ளுதலும் சுண்டைக்காய் சமாச்சாரம்.மேலும் பிரபஞ்சம் என்கிற பதத்தை மாலதி மைத்ரி கண்டமேனிக்கு புழங்குவதென்பதெல்லாம் ரொம்ப அதிகம்.

ராணி திலக் எழுப்பிய நான்கு கேள்விகள் அனைத்தும் துல்லியம். ஒரு கேள்வியில், ‘இந்தப் பெண்கள்’ என்றோர் பதத்தை உபயோகித்திருக்கிறார். இதை சுட்டிக் காட்டி மாலதி மைத்ரி கடுமையாக சாடி இருக்கிறார். அந்தப் பதத்தில் மிதமிஞ்சிய சினேகிதம் அல்லது சகோதரத்தனம்தான் வெளிப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன். அந்தப் பதம் கேலியே என்றாலும் ரசிக்கத் தகுந்த ஒன்றுதான். எழுதுபவர்களிடம் நகைச்சுவை உணர்வே இருக்கக்கூடாது என்பது அவரது நினைப்போ என்னவோ. எழுத்தும் அதன் வெளியும் எத்தனை சுதந்திரமானது என்பதை யாரேனும் அவருக்கு சொன்னால் தேவலாம்.

‘பொறுக்கித்தனம்’ என்று அவர் சாடியதை வாசித்த நாழியில் கூட எனக்கு சிரிப்புத்தான் வந்தது. மாலதி மைத்ரிக்கு கூட இப்படி நகைச்சுவை மிளிர எழுதவருவது சந்தோசத்தையே தருகிறது. என்ன.. கொஞ்சமும் அறநெறி குறித்த உணர்வுதான் இல்லை. உன்னதம் மே-ஜீன்-05, இதழில் மாலதி மைத்ரி ‘நம் காலத்துக் கேள்வி’ என்ற நேர்காணலில்,

‘பெண்கள் உடலை ஆணுக்குக் கொடுப்பதற்கான பாலியல் சொல்லாடல்களை கவிதைக்குள் கட்டமைப்பதும் ஆண் மொழிதான்’

‘ஆண் உடல் சுதந்திரமாக பெண்உடலை ஆலிங்கனம் செய்ய கவிதைக்குள் உலவ விடுவது பெண்ணின் இருப்பையும், ஆளுமையையும், விடுதலையையும் இழிவுபடுத்தும் செயலாகும். இதை நான் சொல்வதால் சக பெண்களே என்னை எதிரியாகப் பாவிக்கிறார்கள்”

‘என் எழுத்துக்களின் மூலம் பெண்ணை இந்த சமூக வெளியிலிருந்து மீட்டெடுத்து கடத்திக்கொண்டு போகிறேன் மாற்றுலகுக்கு’

‘அப்பெண் தான் கடக்கும் வெளியையும் காலத்தையும் எனது கவிதைக்குள் பேசுகிறாள்’

‘உடல், மனதுய்ப்பு, இன்பம் என்பது ஆணை மட்டுமே மையப்படுத்தியது என்பதை என் கவிதைக்குள் மறுக்கிறேன்’

இத்தனை உன்னதமான கருத்தாக்கங்களை இந்த நூற்றாண்டில் பிற எந்த பெண்கவிகளும் எழுதி நான் வாசித்ததில்லை. இதையொட்டிய மகிமைகளையும், புற சங்கதிகளையும் கொஞ்சம் தீர பார்க்கலாம்.

பாலியல் குறியீடுகளைத் தாங்கிய கவிதைகளை நம் சக பெண் படைப்பாளிகள் எழுதி, மறைமுகமாக நின்ற சில தடைகளை தகர்த்து வென்ற அவர்களது முயற்சிகள் குறித்து, ‘தொட்டால் தீட்டு பட்டால் பாவம்’ என்றும் இதுகாரும் எழுதாததை எழுதினால், அலறிப் புலம்பும் சில பஞ்சாங்க பேர் வழிகள்தான் நேற்றுவரை கூடி கூடி எதிர்த்தார்கள். இன்றைக்கு அதே ஆயுதத்தை வேறு முகமாகக் கையில் எடுத்திருக்கிறார் இந்த மைத்ரி.

இது இவரது நாடகத்தின் புதிய காட்சி. அரங்கில் நேர் நின்று பேசியவர், திடுமென இப்படி திரும்பி நின்று பேசுகிறார். இதுவும் ரசனையாகத்தான் இருக்கிறது.

தன் எழுத்து மூலம் பெண்ணை இந்த சமூக வெளியிலிருந்து மீட்டெடுத்து மாற்றுலகுக்கு ஏன் இவர் இத்தனை பிரயாசைப் பட்டு கடத்திக் கொண்டு போக வேண்டும்? நானறிந்து பெண்ணியம் பேசுவதெல்லாம், வாழும் இந்த யதார்த்த உலகில் ஆண்களுக்கு சமமான உரிமைகள் பெண்களுக்கும் வேண்டும் என்பதாகவே அறியவருகிறேன். சம்மந்தப்பட்ட மேதைக்கு இந்த அடிப்படையின் ஆத்திச்சுவடி கூட புரியவில்லை.

பெண்ணியத்தை இன்னும் அழுந்த பேசி எழுதி ஆண் ஆதிக்க சக்திகளின் உச்சந்தலைப் பார்க்க ஓங்கி அடிக்க வேண்டியவர் ஏதோ கவிதை என்ற பாவலாவில் ஹோமோ செக்சுவலை மாற்றுலகு என குறியீடாய் ‘தப்பித்தலிஸம்’ பேசுவது வேடிக்கை.

பெண்ணியத்தை சிதைக்கக்கூடிய எந்த ஒரு ஆணும் நெடுஞ்சாண் கிடையாக விழுமிடம் பெண்களின் காலிடைப் பரப்பாகத்தான் இருக்கிறது. ஆண் ஆதிக்கத்தை வெடி வைத்து தகர்த்துக் கொண்டிருக்கும் சித்தாந்த தலைவியும் கூட சாய்ந்து இளைப்பாறும் இடம் என்பது ஆண்மகனின் திரண்ட தோள்களாகத்தான் இருக்கிறது. இது இயற்கையின் அழுத்த திருத்தமான கட்டமைப்பு.

கல்லோடு கல் மோதுகிறபோது என்ன நிகழும்? பொறி தெரிக்கும், பற்றியும் பற்றும், எரிக்கவும் செய்யும், கடைசியில் மிஞ்சுவது கரிக்கட்டைதான். உளி கொண்டு கல்லை செதுக்குகிறபோதுதான், அந்த ஆத்மார்த்தமான இன்பத்தில்தான் உயிரான படைப்புகள் நமக்கு கிடைக்கும்.

ஒருபால் உறவு முறையை எல்லா தரப்பினரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அதில் காரண காரியங்களோ,முழுமையோ காணமுடிவதில்லை. படைப்பு ரீதியான இயற்கை நிலைக்கும் அது நேர் எதிர்பாடு. ஒரு பெண்ணுக்கு உடல், மன துய்ப்பு, இன்பம் என்பது நிச்சயம் ஆணை மட்டுமே மையப்படுத்திய ஒன்றுதான். இதில் இரண்டு கருத்திற்கு இடமே இல்லை.

ஆண் ஆதிக்க சிந்தனை, பெண்ணிய சிந்தனை என்பதெல்லாம் மானிட வர்க்கத்தின் அறிவு சார்ந்த செயல்பாடுகள். ஜீன் சார்ந்தும், புற சூழல் சார்ந்தும் வெளிப்படுவதுண்டு. ஆனால் ஆண் - பெண் பாலியல் துய்ப்பு என்பது முழுக்க முழுக்க உடல் சார்ந்து இயற்கை நிகழ்த்தும் உபாதை. தாகம், பசி, வேட்கை, அரிப்பு என்கிற உபபதத்தில் காமத்தை நாம் சுட்டுவதை இங்கே நினைவு கொள்வது தகும்.

இந்த இரு நிலைகளையும் வேறு வேறு தளத்தில் பிரித்தறிவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். எட்டு கோடி தமிழர்கள் வாழும் இந்தப் புவியில், வெறும் முன்னூறு பிரதிகள் விற்பனை ஆகும் ஒரு சிற்றிதழில் வெளியாகும் புதுக்கவிதை சுமார் நூறு பேர்களால் வாசிக்கப்படுவதே அதிகம். அதிலும் நமது தீவிர நவ கவிதை முப்பது பேர்கள் அளவில் தான் ‘ஏதோ’ கொஞ்சம் பிடிபடும். கடைசியாக அந்த கவிதையை சரியாக உள்வாங்கிக் கொண்டவர்கள் என்று விரல் விட்டால்... அது மூன்று பேர்களில் வந்து நிற்கும். அதிலும் ஒருவருக்குத்தான் அந்த கவிதை அச்சு அசலாய் புரியும். புரியுமவர் அந்த கவிதையை எழுதிய படைப்பாளியாகவே இருப்பார்.

தமிழ் இலக்கியப் பரப்பில் புதுக்கவிதை எழுதுபவர்களை விட பரிதாபத்திற்குரிய ஆசாமிகளை வேறு எங்கும் காணமுடியாது. இந்த பரிதாபத்திற்குரிய பட்டியலில் நானும் உண்டு.

மாலதி மைத்ரி இந்த ‘லொடுக்கு’ வட்டத்திற்குள் நின்றபடிதான் தீவிரமான - தத்துவார்த்தமான - பெண்ணை கடத்திக் கொண்டு மாற்றுலகுக்குப் போகும் கவிதைகளை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார். தவிர கோபம், ஆவேசம், கீர்த்திகள் கொண்ட சித்தாந்தம், ஆண் மொழி, பெண் மொழி,யுனிவர்சல் என்று என்னென்னவோ செய்திகளுடன் குதியாய் குதிக்கிறார். பாலியல் கவிதைகள் எழுதி தடைகளை தகர்த்து சாதித்துவிட்டதாக முகம் காமிக்கும் இதர பெண் படைப்பாளிகளும் இந்த ‘லொடுக்கு’ வட்டத்தைப் பற்றிய யதார்த்த உணர்வு கொள்ள வேண்டும்.

மொத்த இந்திய துணைக் கண்டத்தில் பெண் அடிமை நீங்க அதிகம் பேசி - எழுதி செயல்பட்ட தனியொருவராக நான் ‘தந்தை பெரியாரைத்தான்’ பார்க்கிறேன். அவர் விட்ட இந்த பணியை விட்ட இடத்தில் இருந்து மேலேடுத்துச் செல்ல இங்கே யாருக்கும் துணிவில்லை. மாறாய் வீண் சப்தங்களாலும், வீண் முயற்சிகளாலும் மட்டுமே அதை நிரப்புகிறார்கள்.

Pin It