விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள்

விருதுநகர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ‘விருதுநகர் சுயமரியாதை மாநாடு’ 23.9.2017 அன்று மாலை விருதுநகர் விஸ்வேஸ்வரர் அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது.

1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாட்டின் வரலாற்றை நினைவு கூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இம்மாநாடு. மாநாட்டையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் வரலாற்றுப் பதிவுகள் பேரறிஞர் அண்ணா சிலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இந்த வரலாற்றுச் சுவடுகள் கண்காட்சியை திறந்து வைத்தார்.

அங்கிருந்து பறை இசை முழங்க ஊர்வலமாக புறப்பட்டு மாநாட்டு அரங்கிற்கு தோழர்கள் வந்து சேர்ந்தனர். டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியன் நினைவரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் அல்லம்பட்டி நாத்திகபாண்டி முன்னிலை வகித்தார். தோழர்கள் டார்வின்தாசன் (திருச்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர்), ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), இரா உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்), ஈரோடு இரத்தினசாமி (கழக அமைப்புச் செயலாளர்) ஆகியோர் உரையைத் தொடர்ந்து தி.மு.க. கலை இலக்கியப் பேரவையின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் பா.அசோக் உரையாற்றினார்.

மாநாட்டின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள், சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், 1931இல் விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்களை எடுத்துக் கூறி இன்றைய காலகட்டத்தில் அத் தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்ட கருத்துகளை செயலாக்குவது குறித்தும் அதற்கான திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். தொடர்ந்து தி.மு.க. கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநில துணை அமைப்பாளரும், விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்தவருமான தமிழச்சி தங்க பாண்டியன், விருதுநகர் மாவட்டத்தின் சுயமரியாதை வீரர்களை நினைவுகூர்ந்தும் வரலாற்றில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பை விளக்கியும் ஒரு மணிநேரம் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், 1931இல் விருதுநகர் மாநாடு நடந்த காலத்தில் நிலவிய சமூகச் சூழலை விளக்கிப் பேசினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி விருதுநகர் சுயமரியாதை மாநாட்டு வரலாற்று நிகழ்வுகளையும் நீட் தேர்வின் ஆபத்துகளையும் விளக்கி, மாநாட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்தார்.

virdhunagar kolathurmani 600நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1931ஆம் ஆண்டு ஆகஸ்டு 8, 9 தேதிகளில் விருதுநகரில் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாடு மனிதத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் எதிரான மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அன்றைய காலகட்டத்தில் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது அத்தீர்மானம். எதிர்ப்பு களுக்கு அஞ்சாது பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மக்கள் மன்றத்தில் எதிர்நீச்சல் போட்டு பரப்பிய கருத்துகளால் தான் தமிழ்நாடு மதவெறிக்கு இடம் அளிக்காத மண்ணாக பக்குவம் பெற்றது. இப்போது பா.ஜ.க., சங் பரிவாரங்கள் ஆட்சி அதிகாரங்கள் வழியாக தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக மாற்றும் தீவிர முயற்சியில் இறங்கி இருக்கின்றன. சகோதரத்துவத்தை பேணும் மதவெறி அற்ற தமிழ்நாட்டுக்கு சங்பரிவாரங்கள் விடுக்கும் சவாலை தனித்துவமான தமிழகத்தின் மதச் சார்பற்ற சமூகநீதி கொள்கைகளில் ஊன்றி நிற்கும் அனைத்து கட்சிகள், இயக்கங்கள் மக்களோடு ஒருங்கிணைந்து முறியடிப்போம் என்று இம்மாநாடு 1931இல் பெரியார் முழங்கிய இந்த விருதுநகரில் இருந்து சூளுரைக்கிறது.

பெண்களுக்கு முக்கிய பங்கு: பெண்களின் சம உரிமைக்கும், விடுதலைக்கும் குரல் கொடுத்த பெரியார் பொது வாழ்க்கையில் பெண்களின் பங்கேற்பை தொடர்ந்து வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் பெண்ணுரிமை ஜாதி ஒழிப்பு சமூகநீதி போராட்டக்களம் நோக்கி ஏராளமான பெண்கள் முன்வரத் தொடங்கி விட்டார்கள். இந்த வரலாற்று மாற்றத்தை கருத்தில் கொண்டு பொது வாழ்க்கையில் பெண்களுக்கான ‘சுதந்திர வெளியை’ உருவாக்கித் தருவதற்கு கட்சிகளும் இயக்கங்களும் முன்வர வேண்டிய அவசியத்தை இம்மாநாடு சுட்டிக்காட்டு கிறது அதேபோல் குடும்பங்களிலும் பெண்களுக்கான ஜனநாயக உரிமைகளை மதிக்கும் சுயமரியாதை பண்பாடுகளையும் பேணி வளர்த் தெடுப்போம் என்று இம்மாநாடு உறுதி ஏற்கிறது.

மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரம் : மதவெறியர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு குறி வைக்கப்பட்ட தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கௌரிலங்கேஷ் அனைவரும் மதவெறி எதிர்ப்புடன் மூடநம்பிக்கை களுக்கு எதிரான அறிவியலை பரப்பியவர்கள்.  மதவெறி எதிர்ப்பு பரப்புரையுடன் அறிவியலையும் இணைப்பது தான் மக்களிடத்தில் உறுதியான மதவெறி எதிர்ப்பை உருவாக்கும் என்று மதவெறியர்கள் அஞ்சுகிறார்கள் என்பதையே இந்த படுகொலைகள் உணர்த்துகின்றன. எனவே மதவெறி எதிர்ப்பை அரசியல் கண்ணோட்டத்தோடு நிறுத்தி விடாமல் மூடநம்பிக்கைகளில் இருந்து மக்களை விடுவிக்கும் அறிவியல் மனப்பான்மையை வளர்த் தெடுக்கும் பரப்புரையையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

கழகத் தோழர்கள் கணேசமூர்த்தி, செந்தில் ஆகியோர் முன்னின்று தோழர்களை ஒருங்கிணைத்து கடும் உழைப்பில் இந்த மாநாட்டை நடத்தி முடித்துள்ளனர்.  நிகழ்வுகளை பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் ஒருங்கிணைத்தார்.