உடுமலைப்பேட்டையில் தலித் பொறியாளர் சங்கர் சில ஜாதி வெறியர்களால் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டார். கொலைக் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட வர்களில் ஒருவர் திண்டுக்கல் இந்து மக்கள் கட்சியின் நகர செயலாளர். தமிழ் நாட்டில் தொடர்ந்து நடந்து வரும் ஜாதி ஆணவப் படுகொலைகளையும் ஜாதிய ஒடுக்கு முறைகளையும் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழக சார்பில் சென்னை, திருப்பூரில் காவல்துறையை முற்றுகையிடும் போராட்டத்தை கழகத் தோழர்கள் தோழமை அமைப்புகளுடன் இணைந்து நடத்தி கைதானார்கள். காவல்துறையிலேயே ஜாதி-தீண்டாமைக் குற்றங்களைத் தடுப்பதற்காகவே தனிப் பிரிவு ஒன்று இருக்கிறது. அதன் பெயர் ‘சமூகநீதி மற்றும் மனித உரிமை தனிப் பிரிவு’. இந்த அலு வலகத்தைத்தான் அதன் செயலற்றப் போக்கைக் கண்டித்து கழகம் முற்றுகை யிட்டது. கழகத்தின் போராட்டத்துக்குப் பிறகு, இத்துறையின் உயர் அதிகாரிகள் தங்கள் மவுனத்தைக் கலைத்து கருத் துகளைத் தெரிவித் துள்ளனர்.

‘தினத்தந்தி’ தமிழ் நாளேடு சென்னையில் ‘டிடி-நெக்ஸ்டு’ என்ற ஆங்கில பதிப்பையும் வெளியிட்டு வருகிறது. கடந்த 26ஆம் தேதி ஆங்கில பதிப்பு இது குறித்த செய்தியை வெளி யிட்டுள்ளது. அந்த செய்தியின் விவரம்: “அண்மையில் உடுமலைப்பேட்டை யில் மக்கள் முன் நடந்த ‘கவுரவப் படுகொலை’ நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது உண்மைதான். என்றாலும்கூட பல ஜாதியக் கொடுமைகள் வெளியே தெரியாமலேயே இருட்டடிப்புக்குள்ளாகி வருகின்றன.

இந்தக் குற்றங்களைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் அமைக்கப்பட்டுள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவின் உயர் அதிகாரிகளுடன் இது பற்றி கேட்டோம். ஒவ்வொரு ஆண்டும் ஜாதி-தீண்டாமைக் குற்றங்களின் கீழ் 1600 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். ஜாதியைச் சொல்லி திட்டுதல், தாக்குதல், தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு தீண்டாமைக் குற்றங்களின் கீழ் புகார்கள் வருகின்றன. ஆனால், தமிழ்நாடு காவல்துறை ‘கவுரவக் கொலை’ எவை என்பதை தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. எனவே இந்திய கிரிமினல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ் கொலைக் குற்றமாகவே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. (தமிழ்நாட்டில் ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) இதனால் ஜாதியப் படுகொலைகள் குறித்த புகார்களை காவல்துறையின் தீண்டாமை தடுப்புப் பிரிவுக்கு காவல் நிலையங்களால் அனுப்பப்படுவது இல்லை. எங்களிடம் நேரடியாக வரும் புகார்கள் மீது நாங்கள் குற்றத்தைப் பதிவு செய்து முறையாக விசாரணைகளை நடத்தி குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்து வருகிறோம். எத்தனையோ முன்னேற்றத் திட்டங்கள் இருந்தாலும்கூட தமிழகத்தில் தலித் மக்கள் மிகவும் மோசமாக ஒடுக்கப்பட்டு வருகிறார்கள்.

உள்ளூர் காவல் நிலை யங்களிலோ மாவட்ட காவல்துறை அலுவலகங் களிலோ ஜாதிய ஒடுக்கு முறைகள் குறித்து புகார்கள் தந்தால், வழக்கைப் பதிவு செய்யாமல் காவல் துறை யினரே இரு தரப்பினரிட மும் சமரசம் பேசி வழக்கை முடித்து விடுகிறார்கள். முதல் தகவல் அறிக்கை யையே பதிவு செய்ய மறுக்கும் பல வழக்குகள் பற்றி எங்களுக்குத் தெரியும். இது குறித்து எங்களிடம் புகார்கள் வரும்போது சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு உரிய நட வடிக்கை எடுக்குமாறு தாக்கீதுகளை அனுப்பி வருகிறோம்.

அண்மையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் (திருநாள்கொண்டசேரி) இறந்து போன ‘தலித்’ ஒருவரின் சடலத்தை இடுகாட்டுக்கு பொது வழியில் எடுத்துச் செல்லும் பிரச்சினையில காவல்துறை, ஜாதி இந்துக்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டது. கிராமங்களுக்கு நாங்கள் கள ஆய்வுக்கு செல்லும்போது பல கிராமங்களில் தலித் மக்கள் நடத்தப்படும் முறை சகிக்க முடியாததாகவே இருக்கிறது. அடிமைகளைப் போலவே நடத்தப்பட்டு வருகிறார்கள். பல கிராமங்களில் தேநீர்க் கடைகளில் ‘இரட்டை டம்ளர்’ முறை இருக்கிறது. பத்திரிகைகளில் செய்திகள் வந்தாலும் இந்த முறை நடைமுறையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது - என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்” என்று அந்த ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

Pin It