அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சர்வதேச தமிழர் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் வரவேற்றுள்ளன. மயிலாடுதுறையில் 29.3.2014 அன்று கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவை, இத் தீர்மானம் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைவிட மேலும் முன்னேற்றம் கண்டிருப்பதை சுட்டிக்காட்டி, வரவேற்றுள்ளது.

2012-2013 ஆண்டுகளில், அய்.நா. வலியுறுத்திய ‘நம்பகத் தன்மையான விசாரணை’யை நடத்தும் தீர்மானத்தை ராஜபக்சே ஆட்சி முற்றிலும் புறந்தள்ளிய நிலையில் இப்போது அய்.நா. மனித உரிமை ஆணையரின் நேரடி கண்காணிப்பு வளையத்துக்குள் இலங்கை கொண்டு வரப்பட்டிருப்பது ஒரு முக்கிய திருப்பம். இதில் இந்தியா மேற்கொண்டுள்ள நிலைப்பாடு தமிழினத்துக்கு இழைத்த துரோகமாகும். மனித உரிமைக் குழுவில் இடம் பெற்றுள்ள 47 நாடுகளில் 23 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தும், கியூபா, ரஷ்யா, சீனா, வெனிசுலா, மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்துள்ளன. ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கிய 12 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உண்மையில் இந்தியா நடுநிலை என்ற நாடகத்தை நடத்தினாலும் தீர்மானத்தை எதிர்க்கும் அணியில்தான் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக உள்ள திலிப் சின்கா, கூட்டத்தில் வெளிப்படுத்திய கருத்துக்களே இதற்குச் சாட்சியமாகும்.

அய்.நா. உள்ளிட்ட எந்த ஒரு நாடோ அமைப்போ இலங்கையில் தலையிடக் கூடாது என்றும், இத்தகைய தலையீடுகள் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளைக் குலைத்து விடும் என்றும் கூறியுள்ளதோடு, இலங்கை அரசு, போர் முடிவுக்கு வந்த பிறகு பல நல்ல செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது என்றும், அவர் பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளார். இலங்கை அரசு தனக்குத் தானே நியமித்துக் கொண்ட “கற்ற பாடம்; இணக்கத்தை உருவாக்கும்” (எல்.எல்.ஆர்.சி.) ஆணையப் பரிந்துரைகள் அரசியல் தீர்வை உருவாக்குவதற்கான ஒரு வாயிற்கதவு என்றும் பெருமையுடன் கூறியிருக்கிறார். இந்தியாவின் இந்த முடிவை இலங்கை அதிபர் ராஜபக்சே மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார். அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்களையும் விடுதலை செய்துள்ளார். உடனே இந்தியாவின் அயல் உறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங், தமிழக மீனவர்களைக் காப்பாற்றவே இந்தியா இப்படி ஒரு நிலை எடுத்ததாக கடைந்தெடுத்த ‘அரசியல்வாதி’யைப் போல் தமிழக மக்களின் ‘காதில் பூ சுற்றும்’ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அய்.நா. தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பே தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து தந்து வரும் அழுத்தத்தினால் இரு நாட்டு பிரதிநிதிகளிடையே பேச்சு வார்த்தை தொடங்கி மீனவர் விடுதலை படிப்படியாக நடந்து வருவதை மக்கள் அனைவரும் நன்றாகவே அறிவார்கள். தமிழகத்தில் அரசியல் கட்சிகளே வெவ்வேறான கருத்துகளை முன் வைத்து வருவதால்தான் இந்தியா இப்படி ஒரு நிலை எடுக்க வேண்டியிருப்பதாக தனது ‘வழக்கறிஞர் வாதத் திறமை’யைப் பயன்படுத்தி மக்கள் சிந்திக்கவே தெரியாதவர்கள் என்ற ஆணவத்தில் ப. சிதம்பரம் பேசியிருக்கிறார். தேர்தலில் ஓட்டு வாங்கும் நேரத்தில் இப்படி நடந்து விட்டதே என்ற மனப்புழுக்கத்தில் அமைச்சர் ஜி.கே. வாசன் போன்றவர்கள், சொந்த கட்சி ஆட்சியின் ‘துரோகத்தை’ வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் ‘கரை சேரும்’ வாய்ப்புகள் இருந்த காலத்திலேயே துரோகத்தை வெளிப்படுத்த தயங்காத மத்திய ஆளும் காங்கிரஸ் ஆட்சி இப்போது ‘அனாதையாக’ தனித்துவிடப்பட்ட காலத்தில் துரோகத்தை வெளிப்படுத்திட தயங்கிடவா, போகிறது? இவர்களின் இந்த ‘சப்பைக் கட்டு’ சமாதானங்கள் எல்லாமே கலப்படமற்ற பொய் என்பதற்கு அய்.நா.வில் இந்திய பிரதிநிதி பேசிய பேச்சே உறுதியான சாட்சியமாகும்.

அமெரிக்க தீர்மானம் நிறைவேறுவதற்கு முன்பு அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் தலையீட்டைக் கோரும் தீர்மானத்தின் 10 ஆவது பகுதியை முழுவதுமாக நீக்கிட வேண்டும் என்று பாகிஸ்தான், ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர, அதன் மீதும் வாக்கெடுப்பு நடந்தது. அந்தத் தீர்மானமும் 23 நாடுகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்தியா நடுநிலை நாடகம் நடத்தியது. பாகிஸ்தான் தீர்மானத்தில் வலியுறுத்திய அதே குரலைத்தான் இந்தியாவும் சேர்ந்து ஒலிக்கிறது.

பிரித்தானியா தமிழ்ப் பேரவை (பி.டி.எஃப்), சர்வதேச விசாரணைக்காக லண்டனில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற கட்டிடத்திலேயே அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உலகத் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளையும் அழைத்து சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக முன்னெடுத்ததைத் தொடர்ந்து, உலகத் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கையாக இது வடிவமெடுத்தது. இப்போது உலகத் தமிழர் மன்றம் (ஜி.டி.எஃப்) கனேடியன் தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டணியின் வடக்கு மாகாண கவுன்சில், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பலவும் தீர்மானத்தை வரவேற்றுள்ளன. ராஜபக்சே இத்தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்துவிட்டார். இந்தநிலையில் மனித உரிமை ஆணையம், தனது கண்காணிப்புப் பணியை எந்தப் புள்ளியிலிருந்து தொடங்கப் போகிறது என்பதும் ஒத்துழைக்க மறுக்கும் சிங்கள பேரினவாத ஆட்சியை வழிக்குக் கொண்டுவர அழுத்தங்கள் தரக்கூடிய நடவடிக்கைகள் என்ன என்பதும் இப்போது விவாதத்துக்கும் முன்னெடுப்புக்கும் உள்ள பிரச்சினையாகும்.

ஆணையத்தின் முன் சாட்சியமளிக்க முன்வரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே இந்த விசாரணைக்கான முன் நிபந்தனையாக இருக்க முடியும். அதற்கு தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம் அகற்றப்பட வேண்டியது அவசியமாகும். (இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், மியான்மார் நகரில் நடந்த சர்வதேச மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்தபோது தமிழர் பகுதியில் ராணுவக் குவிப்புக் குறித்து கவலை தெரிவித்ததாக செய்திகள் வந்தன. அது பற்றி எல்லாம் இந்தியா இந்த தீர்மானத்தின்போது கவலை எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை.) ஈழத் தமிழர் பிரச்சினை சர்வதேச அரங்கில் விவாதங்களுக்கு வந்துள்ள நிலையில் அய்ரோப்பிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் எழும் முரண்பாடுகளை கூர்மையடையச் செய்ய வேண்டிய முன் நகர்த்தல்களும் அவசியமாகிறது.

மற்றொரு ஆபத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினையை சர்வதேச அரசியல் தளத்திலிருந்து வெளியே இழுத்துப் போடும் சில முயற்சிகளும் நடப்பதாக நாம் அறிகிறோம். உண்மையில் இலங்கைப் பேரினவாத ஆட்சி இத்தகைய செயல்பாடுகள் தீவிரமடையுமானால் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு விடலாம் என்று திட்டமிடுகிறது. அந்த நோக்கத்துடனேயே இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்ற கருத்துகளை கசியவிடத் தொடங்கியிருக்கிறது. “பயங்கரவாதம்” முற்றாக ஒழித்துவிடவில்லை என்ற செய்தியை சர்வதேசத்தின் முன் வைக்க இலங்கை திட்டமிடுகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்கிடும் முயற்சிகளில் ஈடுபட்டதாக பாலேந்திர ஜெயக்குமாரி, ரூக்கி பெர்ணான்டோ, அருட்தந்தை பிரவின் முகேஷ் ஆகியோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கை கைது செய்தது. உலக நாடுகளின் எதிர்ப்பால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ‘காணாமல் போனவர்களுக்காக’ தொடர்ந்து அச்சமின்றி போராடி வருபவர் பாலேந்திரன் ஜெயகுமாரி. அவரையும் அவரது 13 வயது மகளையும் கைது செய்த ‘பயங்காரவாத புலனாய்வுப் பிரிவு’ அவர்களை சித்திரவதை செய்த கொடுமைகளை ‘சர்வதேச மனித உரிமை அமைப்பு’ அம்பலமாக்கியிருக்கிறது. அந்தப் பெண்ணின் 13 வயது மகள் இன்னும் ராணுவத்தின் பிடியிலேயே உள்ளார். இப்படி மீண்டும் ‘புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடங்கப் போகிறது’ என்று இலங்கை பேசத் தொடங்கியுள்ளதற்குப் பின்னால் உள்ள அரசியல் சதியை உலகத் தமிழர்கள் புரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

‘அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கிறோம்; அமெரிக்க நாட்டை எப்படி நம்புவது?’ என்ற குரல், சில முகாம்களிலிருந்து கேட்கிறது. நார்வே நாட்டிலிருந்து செயல்படும் ‘தமிழ் நெட்’ என்ற இணைய தளம், கடுமையாக எழுதுகிறது. அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கும் பார்ப்பன ஊடகங்களோடு ‘அசல் திராவிடர்’ அமைப்புகளும் கைகோர்த்து நிற்பதாக கேலி கிண்டலோடு எழுதுவது மட்டுமல்ல; தீர்மானத்தை எதிர்ப்பதில் என்ன பயன் கிடைத்திடப் போகிறது? என்ற கேள்வி எழுப்புகிற இயக்கங்கள் மீது மிக இழிவான சொற்களைப் பயன்படுத்துகிறது. தீர்மானத்தின் மீது கருத்து தெரிவிக்கும் உரிமை ‘தமிழ் நெட்’டுக்கு உண்டு. அதில் நாம் குறுக்கிடவில்லை. என்றாலும் மாற்றுக் கருத்து கொண்டோர் மீது எல்லை மீறும் ‘நாகரிகமில்லாத’ விமர்சனங்களை முன் வைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இதேபோன்று தமிழ்நாட்டிலும் ஒரு சில குழுக்கள் இளைஞர்களைக் குழப்பி விடுகிறார்கள். இவை அனைத்தும் ராஜபக்சே விரும்பும் அரசியலுக்கு வலு சேர்க்கும் முயற்சியாகவே நாம் கருத வேண்டியிருக்கிறது. தேவை ஏற்படும்போது ஈழத் தமிழர் உரிமைகளுக்கு எதிரானஇந்த சதிகளை நாம் அம்பலப்படுத்தியே தீருவோம்.

அமெரிக்காவின் தீர்மானம் சர்வதேச கண்காணிப்பு வளையத்துக்குள் இலங்கையையும் கொண்டு வந்திருப்பது ஒரு சிறு முன்னேற்றம் தான். இன்னும் கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஒருமித்த தெளிவான அரசியல் புரிதலோடு சர்வதேச அரங்கில் முன்னெடுக்கும் கடமையை தொடர்ச்சியாக மேற்கொள்ள உறுதியேற்று செயல்படுவோம்!க்

Pin It

‘பன்னாட்டு விசாரணை’ குறித்த பல்வேறு தகவல்களை எளிமையாக விளக்குகிறது, இக்கட்டுரை.

ஒரு நாடு தனது நாட்டில் நடக்கும் பரவலான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க முடியாத நிலை ஏற்படும்போது, அங்கு பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிடும் கடமை சர்வதேச சமூகத்திற்கு உண்டு. எனவே நியூயார்க்கில் உள்ள அய்.நா. பாதுகாப்புச் சபை, ஜெனீவாவில் அய்.நா. மனித உரிமைப் பேரவை ஆகிய அமைப்புகள் சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றன.

இவையன்றி அய்.நா. பொதுச் செயலர் /அய்.நா. மனித உரிமை ஆணையர், பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும் இதுபோன்ற சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றனர். பாதுகாப்பு சபை மற்றும் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளே அதிக அதிகாரமிக்கதாகக் கருதப்படுகின்றன.

 பன்னாட்டு விசாரணை எவ்வாறு நடக்கும்?

அய்.நா.வின் சார்பில் நடத்தப்படும் பன்னாட்டு விசாரணைக்கு என குறிப்பிட்ட ஒரு வடிவம் ஏதும் இல்லை. ஒரு நாட்டில் நடந்து முடிந்த ஒரு நிகழ்வு அல்லது தற்போதும் தொடரும் நிகழ்வுகள் குறித்த உண்மை நிலையை அறியும் நோக்கிலேயே பன்னாட்டு விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன.

பன்னாட்டு சட்டங்களை மனித உரிமைச் சட்டங்கள் என்றும் பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்கள் என்றும் பிரிக்கின்றனர். இவற்றில் ஏதேனும் ஒன்று மீறப்பட்டது குறித்தோ, இரண்டும் மீறப்பட்டது குறித்தோ சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்படுகிறது. இவ்வாறு விசாரணை ஆணையம் அமைப்பதற்கான தீர்மானங்களிலேயே அவற்றின் நோக்கமும் வரையறுக்கப்படுகிறது. பொதுவாக,

• உண்மையிலேயே சர்வதேச சட்டம் மீறப் பட்டதா?

• திட்டமிட்டும் பரவலாகவும் மனித மீறல்கள் நடத்தப்பட்டனவா?

• குற்ற நிகழ்வுகளில் அரசாங்கத்தின் பங்களிப்பு என்ன?

• குற்ற நிகழ்வுகளின் பின்னணி என்ன? சூழல் என்ன?

என பலவிதமான குற்றப் பின்னணிகளையும் கண்டு பிடிக்கும் நோக்கில் சர்வதேச விசாரணை நடத்தப்படு கிறது. குறிப்பாக பொறுப்புடைமையை நிலை நாட்டுதல். அதாவது குற்றச் செயல்களைக் கண் டறிந்து அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படு வதை உறுதி செய்வதே சர்வதேச விசாரணை ஆணையத்தின் முதன்மை நோக்கமாகும்.

மொத்தத்தில் பெரிய அளவில் நடைபெற்ற குற்றச் செயல்கள் குறித்து ‘நடந்தது நடந்தபடி’ அதிகாரப் பூர்வமாக ஆவணப்படுத்துவதுதான் சர்வதேச விசாரணையில் கிடைக்கும் முதன்மை பலன் ஆகும்.

குற்றம் இழைக்கப்பட்ட நாடுகளில் ஆட்சி மாற்றம் நடந்த பின்னர் சர்வதேச விசாரணையை குற்றமிழைத்த நாடுகளின் அரசுகள் அனுமதிக்கப் படுகின்றன. மாறாக, குற்றத்தில் ஈடுபட்டவர்களே ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்திருந்தால் அவை சர்வதேச விசாரணையை ஏற்படுத்துவதில்லை. அத்தகைய விசாரணை ஆணையத்தை நாட்டுக்குள் அனுமதிப்பதும் இல்லை.

ஆனாலும், நாட்டுக்குள் நுழைய முடியாது என்பதே விசாரணை நடத்த தடையாக இருப்ப தில்லை. ஒரு நாட்டில் நடக்கும் குற்றத்தை பார்த்த சாட்சிகளும், ஆதாரங்களும் வெளிநாடுகளில் பரவிக் கிடப்பதாலும், அறிவியல் நுட்பங்களாலும் எந்த ஒரு நாட்டிற்கு உள்ளேயும் நுழையாமல் அந்த நாட்டில் நடந்தக் குற்றங்களை மதிப்பிட முடியும். சிரியா, வடகொரியா போன்ற நாடுகளுக்காக அமைக்கப் பட்ட விசாரணை ஆணையங்கள் அந்த நாடுகளுக் குள் நுழையாமலேயே விசாரணை நடத்தியுள்ளன.

சர்வதேச விசாரணையின் பலன் என்ன?

உள்ளது உள்ளபடி உண்மைகளை ஆவணப் படுத்தி வெளியுலகிற்கு சொல்வதுதான் சர்வதேச விசாரணை ஆணையத்தின் பணியாகும். அந்த உண்மையின் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அய்.நா. அவை மற்றும் உலக நாடுகள் முடிவு செய்ய வேண்டும்.

உண்மை இரண்டு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாக நீதி, அடுத்தது நல்லிணக்கம், குற்றங்கள் கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக் கப்படுவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தவரை ஈடு செய்யப்படுவதும், குற்றமிழைத்தோர் அதனை உணர்ந்து வருந்துவதும் நீதியின் வடிவங்களாகும்.

குற்றத்தால் பாதிப்படைந்தோர் குற்றம் இழைத்தவர்களை மன்னிக்க முன்வருவதும், குற்றம் இழைத்தோர் தமது தவறுகளை ஒப்புக் கொண்டு வருந்துவதும் அதன் தொடர்ச்சியாக இரு தரப்புக்கும் பலனளிக்கும் எதிர்காலத்தைக் கட்டமைப்பதும் நல்லிணக்கத்தின் அடையாளமாகும்.

இந்த வழி முறைகளில் ‘நீதி’ மிக முதன்மையானது. நீதியை விட்டுவிட்டு நல்லிணக்கத்தை மட்டும் பேசுவது, நடந்த தவறுகளை மூடி மறைத்துவிட்டு எதிர்காலத்தை மட்டும் பேசுவோம் என்கிற ஆபத்தான பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.

எனவே, ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத வார்த்தைகளாக ‘உண்மை, நீதி, நல்லிணக்கம்’ என்கிற பட்டியலில் உண்மையே முதலில் வருகிறது. அந்த உண்மையைக் கண்டறிவதே சர்வதேச விசாரணை யின் பலனாகும். நீதி மற்றும் நல்லிணக்கம் நோக்கியப் பாதையில் இதுவே முதல்படி.

விசாரணை ஆணையம்-தீர்ப்பாயம்

விசாரணை ஆணையமும் தீர்ப்பாயமும் ஒன்றா? இல்லை. ‘பன்னாட்டு விசாரணை ஆணையம்’ என்பது இலங்கையில் 2008-2009 ஆம் ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை அதிகாரப்பூர்வமாக வெளிக் கொண்டு வரும் முயற்சி. இதற்கு மாறாக ‘பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம்’ என்பது அந்தக் குற்றங்களை விசாரித்து குற்றவாளி குற்றவாளி களுக்குத் தீர்ப்பளிக்கும் நடைமுறை. இவை இரண்டும் ஒன்றல்ல.

பன்னாட்டு விசாரணை ஆணையம் தனி மனித குற்றங்களை நிரூபிக்க முயற்சிக்காது. மாறாக, அரசின் குற்றங்களை விசாரிக்கும். நடந்தது என்ன, அரசாங்கம் செய்த குற்றம் என்ன, அரசாங்கம் எவ்வாறு கடமை தவறியது என பரந்துபட்ட அளவில் விசாரணை நடத்தும். குற்றமிழைத்த தனிமனிதர்களின் தோராயமான பட்டியலையும் கண்டறிய முடியும். இந்த விசாரணை சில மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும். பன்னாட்டு விசாரணை ஆணைய விசாரணையின் போது குற்றங்கள் மற்றும் விதிமீறல்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் நம்பத் தகுந்த அளவில் இருந்தாலே போதும். விசாரணையின் முடிவில் யாருக்கும் தண்டனை வழங்கப்படாது. மாறாக, பரிந்துரைகள் அளிக்கப்படும்.

ஆனால், பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் என்பது அரசின் குற்றங்களை விசாரிக்காது. மாறாக, தனிமனித குற்றங்களை விசாரிக்கும். இந்த விசாரணை முடிய பல ஆண்டுகள் ஆகும். பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாய விசாரணையின்போது குற்றங்களை நிரூபிப் பதற்கான ஆதாரங்கள் சந்தேகத்துக்கு அப்பாற் பட்டதாக இருக்க வேண்டும். விசாரணையின் முடிவில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்.

ஜெனீவாவில் முன் வைக்கப்படுவது ஆணையமா? தீர்ப்பாயமா? இலங்கை அரசின் குற்றங்களை முதன்மையாக விசாரிக்கும் வகையிலான ஒரு பன்னாட்டு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையே ஜெனீவாவில் முன் வைக்கப்படுகிறது. ‘பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம்’ என்கிற கோரிக்கை அங்கு எழுப்பப்பட வில்லை. அப்படி ஒரு தீர்ப்பாயத்தை அமைக்கும் அதிகாரம் ஆய்நா. மனித உரிமை பேரவைக்கு இருப்பதாகவும் தெரியவில்லை.

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த பன்னாட்டு சட்ட விதி மீறல்கள் குறித்து இலங்கை அரசு ஒரு நியாயமான, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்தி, குற்றமிழைத்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை தண்டிக்க வேண்டும் என்பதே பன்னாட்டு சமூகத்தின் கோரிக்கை. ஆனால், அத்தகைய ஒரு நியாயமான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என்பதை சர்வதேச சமூகம் உணரத் தொடங்கியுள்ள நிலையில் அங்கு நடந்த அப்பட்டமான விதிமீறல்களை அடையாளம் காண்பதற்கான முன் முயற்சியாகவே மனித உரிமைப் பேரவையில் ‘பன்னாட்டு விசாரணை’ என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

உண்மையை அறியும் முயற்சி

எனவே ‘பன்னாட்டு விசாரணை ஆணையம்’ என்கிற கோரிக்கை உண்மையை அறிவதற்கான முயற்சி ஆகும். இது குற்றம் செய்தவர்களை உடனடியாகத் தண்டிப்பதற்கான முயற்சி அல்ல. பன்னாட்டு விசாரணை ஆணையத்தின் மூலம் இலங்கையில் பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது உறுதி செய்யப்பட்டால் அதன் தொடர்ச்சியாக பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் அமைக்கப்படும் வாய்ப்பு உண்டு.

பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தை யார் அமைப்பார்கள்? முதலில் இலங்கையில் பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டதை அய்.நா. மனித உரிமைப் பேரவையால் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு அடுத்ததாக அந்த சட்ட மீறல்களில் ஈடுபட்டோரைக் கண்டறிந்து, தண்டிக்கும் கடமையை இலங்கை அரசு மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என்று உலகம் நம்ப வேண்டும். அப்படிப்பட்ட சூழலில், குற்றவாளி களைக் கண்டறிந்து தண்டிக்கும் கடமை சர்வதேச சமூகத்துக்கு வரும்.

இவ்வாறு, ‘இலங்கையில் கொடும் குற்றங்கள் நடந்தன’ என்றும், அந்தக் குற்றங்களுக்கு ‘இலங்கை அரசின் மூலம் நீதி கிடைக்காது’ என்றும் தெளிவான முடிவுக்கு சர்வதேச சமூகம் வரும் நிலையில் பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தை அய்.நா. பாதுகாப்பு அவை அமைக்கும்.

எனவே, பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் இடம் ஜெனீவா அல்ல. நியூயார்க்கில் அமைந்துள்ள அய்.நா. பாதுகாப்பு அவைதான் அதனை அமைக்கலாம். அல்லது, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கும் இதற்கான விசாரணை நடத்த அய்.நா. பாதுகாப்பு அவை பரிந்துரைக்கலாம்.

நேரடியாக இப்போதே குற்றவியல் தீர்ப்பா யத்துக்கு பரிந்துரைக்கக் கூடாதா என்ற கேள்வி எழலாம். குற்றவியல் தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என இப்போதைய நிலையிலேயே அய்.நா. மனித உரிமைப் பேரவை பரிந்துரை செய்யுமானால் அதனை அய்.நா. பாதுகாப்பு அவை ஏற்காது. ஏனெனில், சீனா, ரஷ்யா ஆகிய நாடுளின் ஆதரவு இல்லாமல் அய்.நா. பாதுகாப்பு அவையில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது. அந்த நாடுகள் வீட்டோ அதிகாரத்துடன் உள்ளன. இலங்கை மீது பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் அமைக்கும் தீர்மானத்தை மிக எளிதாக தோற்கடித்து விடுவார்கள்.

பன்னாட்டு விசாரணை ஆணையத்தால் என்ன பலன்?

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, பன்னாட்டு விசாரணை ஆணையத்தின் மூலம் இலங்கையில் பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது உறுதி செய்யப்பட்டால் அதன் தொடர்ச்சியாக பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் அமைக்கப்படும் வாய்ப்பு உண்டு. ஏனெனில், சர்வதேச சமூகத்தால் உண்மை ஏற்கப்பட்ட பின்னர், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தொடர்ந்து இலங்கையைக் காப்பாற்ற முடியாது.

அதுமட்டுமல்லாமல், பன்னாட்டு விசாரணை ஆணையம் குற்றத்தை உறுதி செய்தாலே, இலங்கை யின் தலைவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களாக ஆகி விடுவார்கள். அவர்கள் உலகின் பிற நாடுகளுக்கு பயணம் செல்வதற்கான தடையும், பொருளாதாரத் தடையும் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டதற்கான குற்றச்சாட்டுகளை பன்னாட்டு விசாரணை ஆணையம் உறுதி செய்தால் குற்றவாளிகளை உலகின் எந்த ஒரு நாட்டின் நீதிமன்றமும் விசாரிக்க முடியும். எனவே, ராஜபக்சேவும் அவரது கூட்டாளிகளும் உலகின் எந்த பகுதி நீதிமன்றத்தாலும் குற்றவாளி களாக தேடப்படும் வாய்ப்பு ஏற்படும்.

எனவே, அய்.நா. மனித உரிமைப் பேரவையால் ஒரு ‘பன்னாட்டு விசாரணை ஆணையம்’ அமைக்கப் பட்டால் அது ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான முதல்படியாக அமையும்.

Pin It