பெரியார் பற்றிய அவதூறுகள் - தீவிர ‘தமிழ்த் தேசியம்’ பேசும் சில குழுக்களால் இணையதளங்களிலும் எழுத்துகளிலும் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழனுக்கு அடையாளம் ஜாதியே என்று பார்ப்பனியத்துக்கு சேவை செய்யவும் ஒரு சிலர் புறப்பட்டிருக்கிறார்கள். ம.பொ.சி.யின் பேத்தியான பரமேசுவரி, ‘பெரியார்’ என்ற பட்டத்தை பெண்கள் கொடுத்தார்கள் என்பதற்கே சான்று எதுவும் இல்லை என்று எழுதியிருக்கிறார். இந்த அவதூறுகளுக்கு மறுப்பாக பெண்கள் மாநாட்டில் 13. 11. 1938இல் பெரியாருக்கு பட்டம் தந்த செய்தியை ‘குடிஅரசு’ (நவம். 20, 1938) இதழிலிருந்து எடுத்து இங்கு வெளியிடுகிறோம்.

தமிழ்மொழிக்கும் பெண்கள் உரிமைக்கும் 1938ஆம் ஆண்டிலேயே பெரியார் இயக்கம் குரல் கொடுத்திருக்கிறது என்பதை ‘காமாலைக் கண்’ கொண்டு பார்ப்போருக்கு உணர்த்திட, பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் இங்கு வெளியிடுகிறோம். தீர்மானங்களில் சில:

• இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய இயலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ. வெ. ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போதெல்லாம் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது.

• மணவினை காலத்தில் புரோகிதர்களையும் வீண் ஆடம்பரச் செலவுகளையும் விலக்கிவிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

• மற்ற நாடுகளைப்போல் தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு சமூகமாய் வாழ்வதற்கு இன்றுபெருந் தடையாயிருப்பது சாதி வேற்றுமையாதலால், சாதி வேற்றுமைகளை ஒழிப்பதற்கு இன்றியமையாத கலப்பு மணத்தை இம்மாநாடு ஆதரிக்கின்றது.

• இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் தங்கள் கமிட்டிக் கூட்டத்திலும் மகாநாட்டிலும், கட்டாய இந்தியை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதைக் கண்டிக்கின்றது.

• இந்திய மாதர் சங்கம் என்பது சில பார்ப்பனப் பெண்களும், பார்ப்பன அன்பு பெற்ற தாய்மொழியறிவில்லாத சில பெண்களும் கூடிய கூட்டமென்று கருதுகிறது.

• இம்மாகாணத்தில் எப்பகுதியிலாவது பெண்களைக் கூட்டிக் கட்டாய இந்தியை நிறைவேற்ற வீரமிருந்தால் இந்திய மாதர் சங்கத்தார் செய்து பார்க்கட்டுமென இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.

• பத்திரிகைகளின் வாயிலாகப் பணம் சம்பாதிப்பது ஒன்றையே எண்ணி தமிழர் இயக்கங்களைக் கேவலப்படுத்தி வெளிவரும் ‘ஆனந்த விகடன்’, ‘தினமணி’, ‘தமிழ்மணி’ முதலிய பத்திரிகைகளைத் தமிழர்கள் இனி வாங்கக் கூடாதெனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

• கணவனை இழந்த இளம் பெண்களின் துயர் நீங்க மாதர் மறுமணத்தை இம்மாநாடு ஆதரிக்கிறது.

• தமிழ்நாட்டில் 100-க்கு 95 மக்கள் கண்ணிருந்தும் குருடராய் தாய் மொழியில் கையெழுத்துப் போடத் தெரியாத நிலைமையில் இருக்கையில் சென்னை முதன் மந்திரியார் அதற்காவன செய்யாமல் அதற்கு மாறாக இந்தியைக் கட்டாயமாக செய்திருப்பதையும் அதனை கண்டிக்குமுகத்தான் தமிழ்நாட்டு பெருமக்களும், அறிஞர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், மாபெருங் கூட்டங்கள் கூட்டி தெரிவித்தும் அதனைச் சிறிதும்பொருட்படுத்தாமல் பிடிவாதமாகயிருப்பதையும் இதைப்பற்றி தங்களுக்குள்ள மனக்கொதிப்பைக் காட்டும் முறையில் அமைதியாக மறியல் செய்பவரை சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துவதையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

• தமிழ் மொழியைக் காப்பாற்றும் முறையில் இந்தியைக் கண்டித்து மறியல் செய்துசிறை புகுந்த வீரர்களுக்கு இம்மாநாடு மனமார்ந்த நன்றி செலுத்துகிறது. தீர்மானங்களை விளக்கியும், தமிழ்ப் பெண்கள் நிலைமையை விரித்தும் தோழர் ஈ.வெ.ரா. ஒரு சொற்பொழிவாற்றினார் - என்று ‘குடிஅரசு’ பதிவு செய்துள்ளது.