இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மாந்தநேயத்துக்கு எதிரான குற்றங்களை தனக்குத் தானே இலங்கை அரசு விசாரிக்கும் நாடகத்துக்கு இம்முறையாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற சர்வதேச தமிழினத்தின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே பதிலாகக் கிடைத்துள்ளது.

அய்.நா.வின் 25ஆவது மனித உரிமை மன்றத்தில் இங்கிலாந்து, மொரிசியசு, மான்டி நிக்ரோ, மாசிடோனியா நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா தாக்கல் செய்துள்ள வரைவு தீர்மானம், கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தமிழர் பகுதிகளை இராணுவ மயமாக்கிவரும் இலங்கை அரசு, தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து, இராணுவத்தையும் சிங்கள மக்களையும் குடியேற்றி வருவதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபையை செயல்பட முடியாத நிலைக்கு முடக்கி வைத்து விட்டது. மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்குவதிலிருந்து அன்றாட சிவில் நிர்வாகம் வரை இராணுவம் கையில் எடுத்துக் கொண்டுவிட்டது. இந்த நிலையில் சர்வதேச நேரடிக் கண் காணிப்புக்கு உடனடியாக இலங்கை அரசு உட்படுத்தப்படா விட்டால், தமிழர் நில ஆக்கிரமிப்புகள் மேலும் தீவிரமாகிவிடும் என்ற நியாயமான அச்சம் உருவாகியிருக்கிறது. மற்றொரு புறத்தில் போருக்கு முன்பும் பின்பும் இலங்கையின் சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு எதிராக நடத்திய இனப்படு கொலைகளை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், சர்வதேச விசாரணை மன்றத்தின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக் கின்றன. இலங்கைக்கு நேரில் சென்று அய்.நா. மனித உரிமை ஆணையர் நவிப்பிள்ளை தாக்கல் செய்த அறிக்கை, சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபையும், சர்வதேசப் புலனாய்வு விசாரணையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகு, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம், மீண்டும் இலங்கை மைதானத்துக்கே பந்தைத் தள்ளியிருக்கிறது.

ஈழத் தமிழர்களின் உரிமைகளை மீட்டுத் தரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அமெரிக்கா இம்முயற்சிகளில் இறங்கியிருக் கிறது என்றோ, அமெரிக்கா இத்தகைய முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என்றோ, தமிழர்கள் நம்பிக் கொண்டிருக்கவும் முடியாது. அதே நேரத்தில் ஈழத்தில் இனப்படுகொலைக்கு துணை போன இந்தியா, இவ்வளவுக்கும் பிறகாவது அய்.நா.வில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். அதற்கு இந்தியாவை நாம் வலியுறுத்த வேண்டும். இதைத் தவிர்த்துவிட்டு அமெரிக்கா இதில் உறுதியான தீர்மானத்தை ஏன் தாக்கல் செய்யவில்லை என்று எதிர்ப்பதில் என்ன அர்த்தமிருக்க முடியும்? 2009 ஆம் ஆண்டு இனக் கலவரத்தைத் தொடர்ந்து, அடுத்த ஒரு வாரத்தில் இலங்கை அரசைப் பாராட்டி இந்தியாவின் ஆதரவோடு அய்.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அடுத்தடுத்து உலகத் தமிழர்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டதும், அதிலும்கூட இந்தியா தலையிட்டு தீர்மான வாசகங்களை மேலும் நீர்த்துப் போகச் செய்ததும், கடந்த காலங்களில் நாம் சந்தித்த கசப்பான வரலாறு.

ஆனாலும்கூட ஆண்டுக்கு ஒரு முறை அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் வழியாகத்தான் ஈழத் தமிழர் பிரச்சினை சர்வதேச அரங்கின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு விவாதப் பொருளாகிறது. தனது அரசியல் பொருளாதார நலனுக்காக அமெரிக்கா கொண்டு வரும் இந்தத் தீர்மானமும் இல்லாமல் போய் விட்டால், சர்வதேச அரங்கில் முழுமையான இருட்டடிப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஈழத் தமிழர் பிரச்சினை உள்ளாகியிருக்கும். எனவே தீர்மானம் ‘பல் இல்லாத’ - பிரச்சினைக்கு சரியான தீர்வு தராத ஒன்றாக இருக்கிறது என்பதற்காகவே அமெரிக்காவை எதிர்க்க தொடை தட்டிக் கிளம்புவது பயனற்றது என்பதே நமது கருத்து.

அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் இலங்கை அரசு மேற்கொள்ளப்பட வேண்டிய விசாரணைகள் இப்போது முதன்முதலாகக் கொண்டு வரப்பட்டுள்ளது - ஒரு முன்னேற்றம் தான். அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் நேரடி தலையீட்டுக்கு பிரச்சினை போய்விட்டதால் ராஜபக்சே அலறி அமெரிக்காவை கடுமையாக எதிர்த்து வருகிறார். ராஜபக்சேயின் அமெரிக்க எதிர்ப்புக் குரலோடு தமிழர்களின் குரலும் சேர்வதால் யார் பயனடைவார்கள் என்பதை நாம் கருதிப் பார்க்க வேண்டியதும் அவசியமாகும்! இந்த விவாதத்தின் பின்புலத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைக்கு மக்கள் கருத்தை உருவாக்கும் இயக்கங்களை நடத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.

பொது வாக்கெடுப்பு நடத்தி, ஈழத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்ற இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் பல மைல்களைக் கடக்க வேண்டிய அரசியல் தெளிவும் புரிதலும் அவசியத் தேவை. வெற்று உணர்ச்சி முழக்கங்கள் மட்டுமே அரசியல் தீர்வை முன்னோக்கி நகர்த்தலுக்கு ஒரு போதும் பயன்படாது! சிந்தனைத் திறனும் அரசியல் விழிப்புணர்வுமே இனத்துக்கு வலிமை சேர்க்கும்!

Pin It