2013 டிசம்பர் 7, 8, 9, 10 தேதிகளில் ஜெர்மனியின் ப்ரமன் நகரில் மக்கள் தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வு விசாரணை நடைபெற்றது.

சிங்கள அரசு புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று கூறிக் கொண்டு, இலட்சக்கணக்கான தமிழர்களை குழந்தைகள், பெண்கள், ஆயுதம் ஏந்தாத பொது மக்கள் என அனைவரையும் படுகொலை செய்ததால், கொடுந்துயரத்துக்கு ஆளான ஈழத் தமிழர்கள் நேரடி சாட்சியங்களை பிரமாண வாக்குமூலங்கள் மூலம் மக்கள் தீர்ப்பாயத்தில் பதிவு செய்தனர். இனக் கொலை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் மனித உரிமை ஆர்வலர்கள், அனைத்துலக சட்ட வல்லுநர்கள், களப் பணியாளர்கள், ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்கள் ஆகியோரின் கருத்து களையும் தீர்ப்பாயம் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

தமிழகத்திலிருந்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான திருமுருகன் காந்தியும், உமரும் இது குறித்த அறிக்கையை தீர்ப்பாயத்திடம் தந்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பின், நான்காம் நாளான டிசம்பர் 10 ஆம் தேதி அன்று மக்கள் தீர்ப்பாயம் தனது தீர்ப்பை வெளியிட்டது.

1. ஈழத் தமிழர்களை தனித்தனியாக கொலை செய்யாமல், தமிழர் இனம் என்ற அடிப் படையில் அந்த சமூகத்தின் அடையாளமே இல்லாமல் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கை அரசு படுகொலையை நடத்தியுள்ளது.

2. புலிகளோடு சிங்கள அரசு நடத்திய யுத்தத்துக்கு முன்பாகவே, நீண்ட காலமாக தமிழ் இனப் படுகொலையை இலங்கை அரசு நடத்தி வந்துள்ளது. யுத்தத்துக்குப் பின்னரும் தமிழ் இன அழிப்பை இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

3. உலக நாடுகளின் உதவி இல்லாமல், இந்த இனப்படுகொலை யுத்தத்தை இலங்கை அரசு செய்திருக்க முடியாது. இலங்கை அரசுக்கு, இங்கிலாந்து அரசு ஆயுத உதவி செய்ததோடு, இனக்கொலை நடத்திய சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளது.

தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் மேலும் குறிப் பிடுகையில், இலங்கை அரசு இனக்கொலை நடத்துவதற்கான இராணுவ பலத்தைக் கொடுக்கும் விதத்தில், அமெரிக்க அரசு இராணுவ உதவி செய்திருக்கிறது. அமைதிக் கான பேச்சு வார்த்தை நடவடிக்கைகளின் போது அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கு சாதகமாக நடந்து கொண்டதால், 2009 இல் தமிழர்களின் பேரழிவுக்கு அது வழி வகுத்தது.

இந்தத் தமிழ் இனப்படுகொலையில் இந்திய அரசின் பங்கு குறித்து வலுவான சாட்சியங் களையும் ஆவண ஆதாரங்களையும் ஆய்வு செய்த பின், அதனைக் குறித்து முடிவை தீர்ப்பாயம் தெரிவிக்கும்.

ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் ஈழத் தமிழர் இனப் படுகொலை உண்மையை உலகத்துக்கு அறிவித்து விட்டது.

இந்தத் தீர்ப்பை நீதிபதிகளின் ஒருவரான டென்னிஸ் ஹாலிடே என்பவர் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

“ஐக்கிய நாடுகள் சபை ஈழத் தமிழர் படுகொலையை தடுக்கத் தவறியதோடு, அப்படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்டு தன் கடமையில் தவறியது என்றும், சர்வதேச சமுதாயமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது” என்றும் டென்னிஸ் ஹாலிடே குற்றம் சாட்டினார்.

ஜெர்மனி தீர்ப்பாய விசாரணையில், தீர்ப்பாயம் “ஈழத் தமிழர்கள்” என்றே இலங்கைத் தீவின் தமிழர்களை குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மன் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நாள், ஐ.நா. சபை கடைபிடிக்கின்ற உலக மனித உரிமை நாளான டிசம்பர் 10 ஆம் நாள் ஆகும்.

Pin It