பால பாரதி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தொலைக்காட்சி பேட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி பற்றி கூறும்போது அந்த ‘பொம்பள’ய நான் பார்த்ததே இல்லை என்று கூறினார். இதற்கு பதிலளித்து ‘தமிழ் இந்து’ நாளேட்டின் பெண்கள் மலரில் (செப்.17) பாலபாரதி எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு அவரது உயிரைப் பறித்த நீட்டை ரத்து செய்யக்கோரிய மாணவர்களின் போராட்டம் தமிழகமெங்கும் வியாபிக்கத் தொடங்கியது. அதைத் திசை திருப்பும் நோக்கோடு நீட்டை ஆதரித்தும் அனிதாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் ஊடகங்கள் வழியாக விவாதங்கள் நிகழ்ந்து கொண் டிருந்தன. அதிலும் குறிப்பாக அனிதா நீட் தேர்வில் தோற்றுவிட்டதால் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான தகுதி யில்லையென்றும் நீதிமன்றத்தின் வழியாக அனிதாவின் உரிமையைப் பெற உதவ முன் வந்தவர்கள்தான் அவரது மரணத்துக்குக் காரணமானவர்கள் என்று டாக்டர் கிருஷ்ண சாமி போன்ற தலைவர்கள் பிரச்சாரத்தை நடத்தியதும் பெரும் வேதனையைத் தந்தன.

இதன் பின்னணியில்தான் 2015-ல் தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வொன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தேன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, டாக்டர் கிருஷ்ண சாமியின் மகளுக்கு மருத்துவ மேற்படிப்புக்கு சீட் வழங்கினார் என்பதை அன்றைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்ட மன்றத்தில் தெரிவித்திருந்தார். தமக்கென்றால் ஒரு நீதி அனிதாவுக்கென்றால் இன்னொரு நீதியா என்ற எனது கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாதவர், “அந்தப் பொம்பளை யாரென்றே எனக்குத் தெரியாது” என்று ஊடகத்தில் மறுப்பு தெரிவித்தார். “உங்களைப் போன்றே பொதுச்சேவைக்கு வந்த ஒரு பெண்ணை பொம்பளை எனச் சொல்லலாமா?” என்ற ஊடகத்தாரின் கேள்விக்கு மீண்டும் அவர், “பொம்பளையைப் பொம்பளை என்று சொல்வதிலே என்ன தவறு? அது அழகான தமிழ் வார்த்தைதானே” என்றார். அதே தூய தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தி, “அந்தப் பொம்பளையிடம் நான் சீட் வாங்கவில்லை” என ஏனோ அவர் சொல்லவில்லை. அதன் அரசியல் நமக்குப் புரியாமலும் இல்லை.

அந்தக் கேள்வியோடு நிறுத்தாமல், “பிறகு அந்தம்மா பொம்பளை இல்லையா?” என அடுத்த கேள்வியையும் தொடுத்தார். இதை விடக் கூர்மையான ஆயுதம் வேறு இருந்துவிட முடியாதுதான். நிகழ்ச்சித் தொகுப்பாளர் அசந்தே போனார். இத்தனை நெருக்கத்தில் ஆணாதிக்கத்தின் விஷ அம்பை அவரும் எதிர்கொண்டிருந்திருக்க மாட்டார். ஒரு அரசியல் கட்சியின் முக்கியத் தலைவரிட மிருந்து இப்படியொரு கேள்வியை யாரும் எதிர்பார்க்கவில்லை. போர்க்களத்தில் எனது ஆயுதம் பறிக்கப்பட்டதைப் போன்ற அனுதாபத் தோடும் இரக்கத்தோடும் பலரது பார்வையும் இருந்தது. அதே நேரம் எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

அனிதாவுக்கு நியாயம் கேட்டுத் தன் ஆசிரியர் பணியைத் துறந்த சபரிமாலாவை அதிமுகவின் பிரமுகர் ஒருவர், “இந்தம்மா வெல்லாம் டீச்சராக வேலை பார்த்தால் விளங்குமா? வேலையைவிட்டுப் போனதே நல்லது” என்று கொச்சைப்படுத்தினார். போற்ற வேண்டிய போர்க்குணத்தை, வளர்க்க வேண்டிய தியாகக் குணத்தை இத்தனை கேவலமாக இழிவுபடுத்த இவர் யார் என்ற கேள்வியை யாரும் எழுப்பவில்லை.

இந்துத்துவவாதிகளை எதிர்த்துப் பேசினார் என்பதற்காகத் தான் கௌரி லங்கேஷ் மீது ஏழு புல்லட்டுகளை வெறித்தனத்தோடு பாய்ச்சி, உடலைச் சல்லடையாக்கினார்கள் சமூக விரோதிகள். வேறு சிலரோ போதைப்பொருள் கடத்தலில் அவர் ஈடுபட்டதாகக் கூச்சநாச்சமின்றி அவதூறு சொல்லி உயிரற்ற உடலை மேலும் சல்லடையாக்கினார்கள். மதவெறியர், சமூகவிரோதிகளை விட்டுவிட்டு மாணவி வளர்மதியைக் குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளிய அரசு பயங்கரவாதம் உள்ளிட்ட பெண் மீதான வன்முறைகள் கூர்மையடைந்தே வருகின்றன.

குடும்பத்தில் மட்டுமல்ல பெண்கள் அரசியலுக்கு வந்தாலும் அங்கேயும் அடக்கமானவர்களாக இருக்க வேண்டும் என்றே உலகம் எதிர்பார்க்கிறது. அடக்க மானவர்கள் எல்லாம் சுடுகாட்டில்தான் இருப்பார்கள். அந்த அடக்கம் தேவையற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி என் எதிரியல்ல, நாவடக்கம் தேவை என என்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களையும் எச்சரிக்கிறார். அது அவரது குரல் அல்ல, ‘மனு’வின் குரல். ஆகவே, அவரது கருத்தை எதிர்க்கிறேன்.

‘பொம்பளை’ என்றால் பொம்பளை அல்ல. போராட்டம் என்பதே அதன் பொருளாகும் என மாணவிகள் உணர்த்திக் கொண்டிருக் கிறார்கள். எந்தவொரு பெண்ணுக்கு எதிராகவும் எங்கே அநீதி நிகழ்ந்தாலும் சாதி, மதம், அரசியல் வேறுபாடின்றி தடியைச் சுழற்றித் தட்டிக் கேட்பதற்கு ஒரு தந்தை பெரியார் நிச்சயம் வேண்டும்.