தோழர் கவி தொகுத்துள்ள “மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” நூல் வெளியீட்டு விழா 8.5.2015 அன்று திருவாரூர் எத்திராஜ் திருமண மண்டபத்தில் முக்கூடல் அமைப்பின் சார்பில் நடைபெற்றது. நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, முதல் படியை நீதிக்கட்சித் தலைவர் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பேரன் மார்டின் செல்வம், டாடாஸ் இரவி, பசு.கவுதமன், த.பரமசிவம், கோவி.லெனின் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ‘நக்கீரன்’ முதன்மை ஆசிரியர் கோவி.லெனின் திறனாய்வு செய்தார். நூலாசிரியர் கவி ஏற்புரை வழங்கினார்.

நூலை வெளியிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:

முக்கூடல் அமைப்பின் சார்பாக நடந்துகொண்டிருக்கின்ற இந்த நிகழ்வில், அருமையான ஒருநூலை அளித்திருக்கின்ற அன்புக்குரிய தோழர் கவி அவர்களே! இந்நூல் வெளியீட்டில் பங்கேற்றிருக்கிற பெருந்தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், அய்யா அ.சி. சுப்பய்யா, தமிழவேள் சாரங்கபாணி ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களே! எனக்குமுன்னால், நண்பர், த.பரமசிவம் விளித்துப் பேசிய பெரியோர்களே! அனைவருக்கும் எனது வணக்கம்.

நம்முடைய கவி அவர்களுடைய நூலை வெளியிட்டு அவருடைய செயல்களை நாம் பாராட்ட கடமைப்பட்டிருக்கின்ற வேளையில், அவருடைய தோல்வி ஒன்றையும் சொல்லிவிட்டு நான் தொடங்க வேண்டும். அந்தத் தோல்விதான் இந்த நூலுக்கு என்னிடம் பெற முயன்ற அணிந்துரை. அவர் எவ்வளவோ முயன்றும் அவரால் பெற முடியவில்லை. அதில் தோல்வியைத்தான் சந்தித்தார் என்பதை சொல்லிவிட்டு, சில செய்திகளை கூற விரும்புகிறேன்.

தொடர்ச்சியாக இந்த நூலில் ஒவ்வொரு நிலையிலும் தொகுக்கும் போதெல்லாம் எனக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டே இருந்தார். படித்து மகிழ்ந்தேனே தவிர, அணிந்துரை தர வேண்டும் என்று அப்போது தோன்றவில்லை. அதற்குக் காரணம் என் சோம்பலாகக்கூட இருக்கலாம். ஆனால், இந்நூலைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறி, நேரம் கடந்து கொண்டிருப்பதால் சில செய்திகளை விரைவாக சொல்லி விட வேண்டும்.

முதலில் இந்த ‘மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்’ என்ற நூலில் தமிழ் முன்னோடிகளின் சிறப்பையெல்லாம் சொல்லியிருக்கிறார். நான் பொதுவாகத் தோழர்களிடம் சொல்லுவேன். இரண்டு நூல்களைப் பற்றி பெருமையாக சொல்லுவேன். கூட்டங்களுக்கு செல்லும் தோழர்கள், புராணங்களைப் பற்றி அதில் இருக்கிற பொய்மைகளைப் பற்றியெல்லாம் பேசவேண்டும் என்றால் இரண்டு நூல்களைப் படியுங்கள் போதுமென்று சொல்லுவதுண்டு. ஒன்று சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ். அதில் எல்லா புராணங்களையும், எல்லா திருமண முறைகளையும் ஆய்ந்திருப்பார்.

இன்னொன்று, சித்தூரில் ஒரு வழக்கு நடந்திருக்கிறது. 1812இல் அதற்கான தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. மார்க்க சகாய ஆச்சாரி என்பவர் (இவர் விசுவகர்மா பிரிவைச் சார்ந்தவர்) தன்வீட்டுத் திருமணத்தை நடத்திக் கொள்ள முகூர்த்தகால் நட்டபோது அந்த ஊர் பஞ்சாங்கம் குண்டய்யர் தகராறு செய்கிறார். திருமணம் செய்விக்கும் உரிமை தனக்குத்தான் உண்டு; மார்க்க சகாய ஆச்சாரிக்கு அந்தஉரிமை கிடையாது என்று, அவர் வீட்டுத்திருமணத்திலேயே போய் தகராறு செய்கிறார். வழக்குநடக்கிறது. மார்க்க சகாய ஆச்சாரியார், நானும் பிராமணன்தான் என்கிறார். எப்படி பிராமணன்? என்று கேள்வி எழுப்புகின்றனர். பிரம்மா படைப்பைச் செய்கின்றவன். இந்த பிராமணனோ ஒரு படைப்பையும் செய்வதில்லை. ஒரு தொழிலும்செய்வதில்லை. படைப்புத் தொழிலைச் செய்பவர்கள் நாங்கள்தான். நாங்கள்தான் உண்மையான பிராமணர்கள் என்று சொல்லுகிறார். அதைப் பற்றிவிவாதம் வருகின்றபோது எனக்கு வேதம் தெரியும் என்கிறார். வேத அறிஞர்களை வைத்து விவாதம் நடத்துகிறார்கள். மார்க்க சகாய ஆச்சாரியாரிடம் வேதங்களிலிருந்து பஞ்சாங்கம் குண்டய்யர் கேள்வி கேட்கிறார். கேள்விகளுக் கெல்லாம் விளக்கம் தருகிறார். ஆனால், இவர் கேள்வி கேட்கும்போது பஞ்சாங்கம் குண்டய்யர் அமைதியாக இருந்து விடுகிறார். அவர்கள் அறிக்கை தருகிறார்கள், மார்க்க சகாய ஆச்சாரி வேதம் முழுதும் அறிந்தவர் என்று!

மார்க்க சகாய ஆச்சாரி திருமணம்நடத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பும் வந்து விடுகிறது. அப்போதும் அங்கேபோய் பஞ்சாங்கம் குண்டய்யர் தகராறு செய்கிறார். பி.ஜே.பி.க்காரன் ரவுடிகளை யெல்லாம் கட்சியில் வைத்திருப்பது மாதிரி, பஞ்சாங்கம் குண்டய்யர் ரவுடிகளை கூட்டிக் கொண்டுபோய் கலாட்டா செய்கிறார். அதற்கு வழக்கும் நடந்து, 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. 1813இல்வழக்கு நடந்துள்ளது. வழக்குச் செலவு 96 ரூபாய்தான். அபராதம் 500 ரூபாய்போட்டிருக்கிறார்கள். அந்த விவாதத்தை ஒரு நூலாகப் போட்டிருக்கிறார்கள்.

நாம் இன்று எல்லா மேடைகளிலும் பேசுகின்ற அந்த வேதங்களை, புராணங்களை, சாஸ்திரங்களை சுக்குநூறாகக் கிழித்துள்ள நூல், அ.சி.சுப்பையா எழுதிய ‘சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்’ என்ற நூல். அ.சி.சுப்பையாவின் வழித் தோன்றல்கள் எல்லாம் இங்கு வந்திருக்கிறார்கள். அவர் இங்கிருந்து மலேசியா போய்விவேகானந்தர் சங்கம் வைத்திருக்கிறார். அகமுடையார் சங்கம் வைத்திருக்கிறார். ஆதி திராவிட சங்கம் உருவாக்கி அதையும் நடத்தியிருக்கிறார். மக்கள் உரிமை பெறமுடியாத உரிமையிழந்த மக்களை உரிமை கோருவதற்கு சங்கம் நடத்தி பெரியார் இயக்கத்திற்கு வந்துள்ளார். பெரியார் தோன்றி இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவர்தான்.

அதேபோல் தான், தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களும்! எப்படி அஞ்சா நெஞ்சம் படைத்தவர்களாக பெரியார் இயக்கத்துக்காரர்கள் இருந்தார்கள் என்பதற்கு இரண்டு எடுத்துக் காட்டுக்களைச் சொல்லலாம். ஒன்று அகம்பாவத்தோடு ஆட்சியில் அமர்ந்திருந்த இராஜாஜி, இந்தி போராட்டம் வந்தபோது, “இந்தியை யார் எதிர்க்கிறார்கள். இரண்டு பேர் எதிர்க்கிறார்கள். ஒரு தமிழ்ப் புலவர் சோமசுந்தர பாரதி; ஒரு நாஸ்திகர் இராமசாமி நாயக்கர். வேறு யார் எதிர்க்கிறார்கள்?” என்று இராஜாஜி கேட்டபோது, சட்டமன்றத்தில் எழுந்து சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பதில் சொன்னார். “எதிர்ப்பவர்கள் இரண்டு பேர்தான்; ஆதரிப்பவர் நீங்கள் ஒருவர்தான்.”

அதேபோலத்தான் அய்யா சாரங்கபாணி வாழ்க்கையில் ஒரு சம்பவம். பெரியார் வருகையைப் பற்றிய அறிவிப்பு வந்தவுடன் அங்கு ஒரு பார்ப்பனர். பார்த்தசாரதி என்ற அய்யங்கார், தனது வேலையைத் தொடங்கி விடுகிறார். ‘தமிழ்நேசன்’ என்ற ஏட்டின் ஆசிரியர் அந்தப் பார்ப்பனர் . அவர் ஊர் ஊராகப் போய் பெரியாருக்கு எதிராக பரப்புரை செய்கிறார். இவர் (பெரியார்) வந்தால் பெரும் கலவரம் ஏற்படும் என்றெல்லாம் பேசுகிறார்.

ஒருமுறை நிகழ்ச்சிக்கு போய்விட்டு திரும்பினவுடனே அய்யா சாரங்க பாணி, “நான் அலுவலகத்துக்குப் போய்விட்டு வந்துவிடுகிறேன்”என்கிறார். எந்த அலுவலகத்துக்கு அய்யா? என்கிறார்கள். தமிய்நேசன் அலுவலகத்துக்கு சென்று வரலாம் என்று சொல்கிறார். இரண்டு பேரும் அவ்வளவு கடுமையான எதிரிகளாக இருக்கிறார்கள். அவர் போய் நுழைந்தவுடனே அதிர்ச்சி. அந்த செய்தியாளர் எழுதுகிறார், “வழக்கமான கருப்புக்கரைப் போட்ட வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பாவுடன் உள்ளே நுழைந்ததைப் பார்த்தவுடன் அவர்களுக்கு அதிர்ச்சி. என்னடா இவன்நம்ம அலுவலகத்துக்குள்ளேயே வருகிறான்”. அப்போது அவர் எழுதியதை அப்படியே சொல்லுகிறேன்.“

அப்போது தமிழ்நேசனின் ஆசிரியராக இருந்தவர் பார்த்தசாரதி அய்யங்கார். தமிழவேள், அவரைப்பின் தொடர்ந்து சென்ற அவரது சகாக்களான எங்களையும் எதிர்பாராதவகையில் தமிழ்நேசன் காரியாலயத்தில் திடீரென கண்டதும், அய்யங்கார், திக்பிரமையால் செயலற்றவராகத் திகைத்துப் போய் அப்படியே நின்றுவிட்டார். சற்று நேரத்தில் தம்மைச் சமாளித்துக் கொண்டு, எங்களைக் கேவலமாகவும், இழிவாகவும் சமயம் வாய்க்கும் போதெல்லாம் திட்டி, ‘தமிழ்முரசி’ல் எழுதிவிட்டு, எங்கள் காரியாலயத்துக்கே முன்னறிவிப்பின்றி வந்து விட்டீர்களே! உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்” என்று வியப்பு மேலிடக் கூறினார். அதற்குத் தமிழவேள், சிரித்துக்கொண்டே, “நாங்கள் பார்ப்பனர்களை எந்தச் சூழ்நிலையிலும் திட்டுவதில்லை; திட்டப் போவதுமில்லை. ஆனால், பார்ப்பனீயத்தையே எதிர்க்கிறோம். மனத்தில் உள்ள களங்கத்தையும், வெறுப்பையும் அப்புறம் எடுத்து வைத்துவிட்டு தூய மனத்தோடு எங்கள் எழுத்தைப் படித்துப் பாருங்கள். அப்போது நான் சொல்வது நூற்றுக்குநூறு உண்மை என்பது புலனாகும்என்று ஒரு போடு போட்டார்” என்று எழுதியிருக்கிறார்கள்.

தோழர் கவி, பல ஆவணங்களைத்தொகுத்துக் கொடுத்திருக்கிறார். அதன்வழியாக அவர் செய்த ஆய்வு; அதில் திருவாரூரைச் சுற்றி இருக்கிற இருபெரும் தலைவர்கள்; அவர்கள் அங்கு ஆற்றிய பணி. மலேயாவுக்கு இரண்டு முறை மட்டுமே பெரியார் சென்றிருக்கிறார். ஒரு முறை 1929இல், இரண்டாவது முறை 1954இல். 1954இல் பர்மாவில்புத்தர் மாநாட்டிற்கு உரையாற்ற, பெரியாரும் அம்பேத்கரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். போகிறார்கள். மாநாட்டை முடித்து விட்டுஅப்படியே மலேயா போகிறார் பெரியார். அந்த வாய்ப்பில் தான் இரண்டாவது பயணம் நிகழ்கிறது.

அந்தப் பயணத்தின்போது அவர் ஆற்றிய உரைகள் எல்லாம் இந்தத்தொகுப்பில் வருகிறது. இந்த நூலின் ஊடாக பல செய்திகளைப் பார்க்கிறோம். இது ஓர் ஆவணத் தொகுப்பு.நாம் ஆணவங்களை ஆவணப்படுத்துவதில்லை என்பது நமக்குள்ள பெரும்குறைதான். பழைய இதழ்களெல்லாம் இப்போது இருப்பதில்லை.

(தொடரும்)

Pin It