மே 17, மே 18 நாள்களில் முறையே ம.தி.மு.க. மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யம் நடத்திய முள்ளி வாய்க்கால் வீர வணக்கக் கூட்டங்களில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் தொகுப்பு.

• பொது மக்கள் வாழும் பகுதியில் இராணுவத்தைக் குவித்திருப்பதில் தெற்காசியாவிலேயே முதலிடம் பெறுவது இலங்கைதான். வடக்கு கிழக்கு மாகாணத்தில் 6 தமிழர்களுக்கு ஒரு இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

• முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையோடு போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அப்போதைய அதிபர், இனப்படுகொலையாளன் இராஜபக்சே அறிவித்தார். ஆனால், போர் முடிந்ததற்குப் பிறகும் ஒரு இலட்சம் பேரை கூடுதலாக இராணுவத்தில் சேர்த்து, இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது இலங்கை அரசு.

• 2006-2009 ஆண்டுகளுக்கிடையே வன்னிப் பகுதியில் மட்டும் விமானத்திலிருந்து வீசப்பட்ட வெடிப் பொருள்களின் அளவு 144 மில்லியன் கிலோ கிராம். இந்த 3 ஆண்டுகளில் வன்னிப் பகுதியில் இராணுவ விமானம் பறந்தது 13,000 முறை. இந்தப் புள்ளி விவரத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெளியிட்டதே அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்.

• மேற்குறிப்பிட்ட 3 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாகக் கொல்லப்பட்ட தமிழர்கள் 116 பேர். இது அய்.நா.வே தயாரித்த உள்ளக அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல். ‘அயர்லாந்து சமாதானப் பேரவை’ இதை வெளிக் கொண்டு வந்திருக் கிறது.

• கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, சமூகப் பாதுகாப்பு, மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக் கீட்டை 50 சதவிகிதமாகக் குறைத்து பல மடங்கு இராணு வத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது, இனப்படு கொலை அரசு.

• இனப்படுகொலைக்கான போரில் உயிர் தப்பியவர்கள், பாதிக்கப் பட்டவர்களின் நேரடி சாட்சியப் பதிவுகள், கற்பனைக்கு அப்பாற் பட்ட கொடூரங்களாகும். அந்த காட்சிப் பதிவுகள் ஆவணங் களாக இருக்கின்றன.

• ‘போரில்லாத பகுதி’ என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும், ஏன், அய்.நா. அலுவலகங்களுக் கான பாதுகாப்பு பகுதியிலும்கூட குண்டுகள் வீசப்பட்டன. சுமார் 3 இலட்சம் தமிழர்கள் பாதுகாப்புக்கருதி, உயிர் பிழைக்கத் திரண்டிருந்த போரில்லா பகுதியில்கூட நிலம், கடல், வானம் என்ற மூன்று நிலைகளிலிருந்தும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி பிப்.6, 2009 அன்று தாக்குதல் நடத்தப்பட்டதை அய்.நாவின் தலைமைச் செயலாளர் பான்-கி-மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை பதிவு செய்திருக்கிறது.

• “இறுதித் தாக்குதல் நடக்கப் போகிறது; ‘போரில்லாத’ பகுதிக்கு பொது மக்கள் போய்விடலாம்” என்று இடைவிடாது இராணுவம் அறிவித்துக் கொண்டு, துண்டுப் பிரசுரங்களையும் வழங்கியது. தனது நாட்டின் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒரு அரசுக்கு உண்டு. ஆனால், தனது நாட்டின் குடிமக்கள், தங்கள் உயிரைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு அரசு அறிவித்திருப்பது இனப்படுகொலைக்கான வலுவான சான்று.

• இறுதிக்கட்ட இனப்படுகொலையில் அப்பாவி தமிழ் மக்களை இலங்கை அரசு காப்பாற்ற வேண்டும் என்று கருதியிருந்தால் காப்பாற்றியிருக்க முடியும். மக்களை போராளிகளிடமிருந்து பிரித்து அடையாளம் காணக்கூடிய தொழில்நுட்ப வசதிகள் இலங்கை அரசிடம் உண்டு. இலங்கை அரசே நியமித்துக் கொண்ட ‘பாடம் கற்றல்; தீர்வு காணுதல்’ (எல்.எல்.ஆர்.சி.) விசாரணை ஆணையத்தின் முன் வாக்கு மூலம் அளித்த இராணுவத் துறை செயலாளர் கோத்தபய ராஜ பக்சே மற்றும் விமான படை தளபதி குணதிலகா அளித்த வாக்குமூலங்கள் இதை உறுதி செய்கின்றன.

“எங்களிடம் ஆள் இல்லாமல் பறக்கும் விமானங்கள் இருக்கின்றன; இரவு பகல் எந்த நேரத்திலும் மக்கள் வாழும் பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், குடியிருப்புப் பகுதிகள், ஆயுதம் வைத்திருப்போர், மற்றும் அப்பாவி பொது மக்களை அதன் வழியாக அடையாளம் காண முடியும். இதைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை பாதுகாத்தோம்” என்று கூறியிருக்கிறார். உண்மை என்னவென்றால், இந்த நவீன தொழில்நுட்பத்தை மக்களின் பாதுகாப்புக்கு பயன்படுத்தாமல், அவர்களை அழித்தொழிக்கவே பயன்படுத்தியிருக்கிறார்கள். இதோ சில சான்றுகள் மட்டும்.

• போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் புனர் வாழ்விற்கு விடுதலைப்புலிகள் இயக்கம் மனித நேயத்துடன் நடத்திய ‘செஞ்சோலை’யை இந்த ஆள் இல்லாத விமானம் மூலம் கண்டறிந்து, குண்டு வீசி, 60 குழந்தைகளைப் பிணமாக்கினார்கள். இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரான போர்க் குற்றம்.

• யுத்தப் பகுதியில் மக்களுக்கு உதவுவதாக முகாமிட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கம், மருத்துவமனை இருக்கும் பகுதிகளை பட்டியலிட்டு இராணுவத்திடம் அளித்தது. நோக்கம், இந்தப் பகுதியில் குண்டுவீச்சுகளை நடத்தக் கூடாது என்பது. ஆனால் பட்டியலைப் பெற்றுக் கொண்டு இலங்கை அரசு, அந்த மருத்துவமனைகள் மீதே குண்டு வீசியது. மருத்துவமனைகள் மீது மட்டும் 64 முறை குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்த தமிழ் மருத்துவர்கள், “தயவுசெய்து மருத்துவமனை இருக்கும் பகுதிகளின் விவரங்களை இராணுவத்திற்கு தெரிவிக்க வேண்டாம்” என்று செஞ்சிலுவை சங்கத்தினரிடம் கண்ணீர்விட்டு மன்றாடியிருக்கிறார்கள்.

• 2009 பிப்ரவரி 3ஆம் தேதி அன்று புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் 800க்கும் அதிகமான பொது மக்கள் அடைக்கலம் புகுந்திருந் தனர். இதில் 500 பேர் நோயாளிகள். அன்றைய நாளில் மட்டும் பிற்பகல் 3 மணியி லிருந்து 6 மணி வரைக்கும், மீண்டும் இரவு 10.20 மணிக்கும், அடுத்த நாள் பிப்ரவரி 2ஆம் தேதி மாலை 6.40 மணிக்கும் இராணுவம் குண்டுகளை வீசிக் கொண்டே இருந்தது.

இந்த குண்டுவீச்சுகள் அனைத்தை யும் செஞ்சிலுவை சங்க  மருத்துவ ஒருங்கிணைப்பாளர் மோர் வன்மூர்ச்சிகன் போசரி தனது விரிவான அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார்.

• ‘இனப்படு கொலை’ நடந்த பகுதியில் மக்களைக் காப்பாற்ற அரசு முயற்சிகளை மேற்கொண்டது என்றும், ஆனால், விடுதலைப் புலிகள் தான் மக்களைப் போக விடாமல் தங்கள் பாதுகாப்புக்காக தடுத்ததாகவும், அரசு நியமித்த ஆணையத்தின் முன் (எல்.எல்.ஆர்.சி.) இராணுவ செயலாளர் கோத்தபய இராஜபக்சே வாக்குமூலம் தந்திருக்கிறார் (2010, ஆக.14). இது அப்பட்டமான பொய். இனப்படுகொலை முடிந்தவுடன், இராஜபக்சே ‘இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டி (2009, ஜூன் 30), கோத்தபயே கூறியது பொய் என்பதை அம்பலப்படுத்தி விட்டது.

“போரில்லாத பகுதிகள் எது என்று முடிவு செய்து அறிவித்ததே நாங்கள்தான். அய்.நா.வோ அல்லது வேறு நிறுவனங்களோ அதை தீர்மானிக்கவில்லை. நாங்கள் அப்படி அறிவித்த பகுதிக்குத்தான் பிரபாகரனும் மக்களும் வந்தனர். அவர்கள் தப்பிச் செல்ல வேறு எவருடைய உதவியையோ எதிர்பார்த்திருந்தனர். இப்படி ஒரே இடத்தில் திட்டமிட்டு திரட்டி, அவர்களை சுற்றி வளைத்து தாக்கினோம்” என்று இராஜபக்சே அந்தப் பேட்டியில் கூறி விட்டார். மக்களைக் காப்பாற்ற அரசு முயன்றது என்று கோத்தபய அளித்த சாட்சியம் பொய் என்பதை இராஜபக்சேவே மறுத்து விட்டார்.

• போரின் கடைசி 6 மாதங்களில் மக்களுக்கு உணவு மருந்துகள் மறுக்கப்பட்ட நிலையில் மக்கள் பெரும் அளவில் பட்டினிச் சாவுக்கு தள்ளப்பட்னர். 2009 ஏப்ரலில் அகதி முகாம்களில் மடிந்து போன 30 மூத்த தமிழ் குடிமக்களின் சவப் பரிசோதனையில் அவர்கள் பட்டினியால் மடிந்தது உறுதி செய்யப்பட் டிருக்கிறது. வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே. அலெக்° ராஜா முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சவப்பரிசோதனை அறிக்கை, கொழும்பில் உள்ள அய்.நா. தூதரக அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

• இனப்படுகொலைக்கு சர்வதேச சட்டத்துக்கு புறம்பாக இரசாயன வாயு, வெள்ளை பா°பர° மற்றும் கிள°டர் குண்டுகளை இராணுவம் பயன் படுத்தியிருப்பதற்கு சான்றுகள் உள்ளன. பாகி°தானிலிருந்து இவற்றை இலங்கை அரசு வாங்கி யிருப்பதை பாகி°தான் ஏடுகள் செய்திகளாக வெளியிட்டுள்ளன. தீக்காயங்களுடன் இறந்தவர் களை நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை, பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் விரிவான அறிக்கைகள் பதிவு செய் துள்ளன.

• 2009, மே 18இல் விடுதலைப்  புலிகளின் அரசியல் பொறுப் பாளர் நடேசன், சமாதானப் பிரிவுத் துறை பொறுப்பாளர்  புலித் தேவன் தலைமையில் 300 பொது மக்களுடன் வெள்ளைக் கொடியுடன் இராணுவத்திடம் சரணடைய வந்தபோது, சர்வதேச நெறிமுறை சட்டங் களுக்கு எதிராக இராணுவம் சுட்டுக் கொன்றது. இது ஒழுங்கு மீறிய செயல் என்று வெளிப் படையாக அப்போது இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன் சேகாவே ஒப்புக் கொண் டுள்ளார். (அந்த சரத் பொன் சேகா, இப்போது, மீண்டும் இராணுவத் தளபதியாகி விட்டார்) சுட்டுக் கொல்லப் பட்டது ஆயுதம் தாங்கிய இராணுவப் போராளிக் குழுவின் - அரசியல் பிரிவுத் தலைவர் - என்பது சர்வதேச முக்கியத்துவம் கொண்டதாகும்.

• 2009 மே 9ஆம் தேதி அன்று மட்டும் ‘போரில்லாத’ பகுதியில் திரண்ட மக்கள் மீது இராணுவம் ஆர்ட்டிலரி தாக்குதல் நடத்தி யதில் கொல்லப்பட்ட மக்கள் 1000 பேர்; படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்கள் 1,122 பேர்; இறந்து போன 1000 பேரில் 378 உடல்கள் மட்டுமே - மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டன. எஞ்சிய உடல்களை இராணுவம் சாலை ஓரங்களிலும், கடற்கரையிலும் வீசி எறிந்தது. அதே நாள் மாலை யில் கொல்லப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கை மட்டும் 3200. இவ்வளவு கொடூரமாக இராணுவம் வெறி பிடித்ததற்கு காரணம், அன்று புலிகள் தற்காப்புக்காக எதிர்த் தாக்குதல் நடத்தினார்கள் என்பதுதான். அய்.நா.வின் புனர் வாழ்வுக்கான கள அதிகாரி லாரன்° கிறி°ட் - இந்தப் படுகொலைகளை உறுதிப்படுத்துகிறார்.

• அடுத்த நாள் மே 10 அன்று மருத்துவமனைக்கு சடலமாகக் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கை 391. படுகாயங் களுடன் கொண்டு வரப்பட்ட வர்கள் 1300 பேர். மே 14 அன்று கொல்லப்பட்ட தமிழர்கள் 1700 பேர். படுகாயமடைந்தவர்கள் 3000. அன்றைய நாளில் மட்டும் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் 150 பேர்.

• 2008 அக்டோபரிலிருந்து 2009  மே மாதம் வரை 8 மாதங்களில் கொல்லப்பட்ட தமிழர்கள் 70 ஆயிரத்திலிருந்து ஒன்றரை இலட்சம் வரை இருக்கும் என்கிறது, அய்.நா.வின் மனித சேவைக் குழுக்கள். 1 இலட்சத்து 20 ஆயிரத்திலிருந்து 1 இலட்சத்து 80 ஆயிரம் வரை இருக்கும் என்று மதிப்பிடுகிறார், அய்.நா.வின் உள்ளக ஒருங்கிணைப்பு அதிகாரி (U.N. Resident Co-ordinator). கொல்லப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கை 2 இலட்சத்து 10 ஆயிரம் என்கிறது, அய்.நா.வின் உலக உணவு திட்ட நிறுவனம். முல்லைத் தீவு மாவட்ட அரசு அதிகாரி தரும் மதிப்பீடு 3 இலட்சத்து 5 ஆயிரம். மன்னார் பகுதி ஆயர், அரசு ஆவணங் களின் பதிவுகளை ஆதாரமாகக் காட்டி, காணாமல் போனவர்கள் 1,46,679 பேர் என்று, அரசு ஆணையத்தின் முன் பதிவு செய்த குற்றச்சாட்டுக்கு, இதுவரை அரசு தரப்பிலிருந்து எந்த மறுப்பும் வரவில்லை.

இப்படி, போர்க் குற்றம், மாந்த நேயத்துக்கு எதிரான குற்றம், இனப் படுகொலை என்ற குற்றச்சாட்டு களுக்கு உள்ளாகி நிற்கிறது இலங்கை அரசு. ஆதாரங்கள் ஆவணங்களாக குவிந்து கிடக்கின்றன.

மக்கள் மன்றத்தில் இந்த உண்மைகளை உரக்கச் சொல்வோம்!

இனப்படுகொலை இலங்கைக்கு துணை போகாதே என்று - இந்திய அரசை வலியுறுத்திப் போராடுவோம்!

அய்.நா.வே. இலங்கையை சர்வதேசக் கூண்டில் ஏற்று!

இந்திய அரசே, இனப்படுகொலை அரசை காப்பாற்றத் துடிக்காதே!

ஒற்றைக் குரலாக ஓங்கி ஒலிப்போம்!

Pin It