கடவுள் மனிதனைப் படைத்தானா? மனிதன் கடவுளைப் படைத்தானா என்ற கேள்வி, காலம் காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. எவரும் படைக்கப்படவில்லை. மனிதன்கூட ஒரு பரிணாம வளர்ச்சி தான் என்று அறிவியல் அதற்கு விடை கூறிவிட்டது. ஆனாலும், அறிவியல் சிந்தனைகளை, கண்டுபிடிப்புகளைக்கூட கடவுளைக் காப்பாற்று வதற்கு பயன்படுத்த ஒரு கூட்டம் படாதபாடுபட்டு வருகிறது.

“கடவுள் எவர் என்று யார் பார்த்தார்?
அதை கண்ணில் காட்டியது சினிமாதான்!”

என்று கவிஞர் வாலி, ஒரு திரைப்படத்தில் பாடல் எழுதினார். கடவுள் வேடம் தரித்து நடித்த நடிகர்களும், நடிகைகளும், மக்கள் உள்ளங்களில் கடவுளர்களாகவே பதிந்து போனார்கள்.

‘கடவுள் உன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், எதைக் கேட்பாய்?’ என்று நண்பனிடம் கேட்டபோது, ‘நிறைய சொத்துகள், செல்வங்களைத் தா என்று கேட்பேன்’ என்று பதில் வந்தது. ‘நான் அதையெல்லாம் கேட்க மாட்டேன்; நல்ல அறிவைத் தா என்று கேட்பேன்’ என்று நண்பன் பதில் சொன்னான். சட்டென்று மற்றவன் சொன்னான், ‘யாரிடம் எது இல்லையோ, அதைத் தானே கேட்க முடியும்?’

பெரியாரிடம் இதே கேள்வியைக் கேட்டார்கள். பளிச்சென்று பதில் சொன்னார், ‘அப்படி வந்தால், கடவுள் இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் போகிறேன்’.

மனநல மருத்துவமனையில் ஒரு நோயாளி எப்போதும் தனியாக உட்கார்ந்து கொண்டே “கடவுளே எனக்கு நூறு ரூபாய் தர மாட்டாயா?” என்று ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டே இருந்தான். அனுதாபப்பட்ட மருத்துவர் ஒருவர், 50 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினார். அடுத்த நாள், அதே மருத்துவர் பார்த்தபோது, அவன் வேண்டுதலை நிறுத்தவில்லை. இந்த முறை அவன் வேண்டுதல் வேறாக இருந்தது. “ஆண்டவரே பணத்தை அந்த டாக்டரிடம் தராதே! அவர் ரூ.100 ரூபாயில் 50 ரூபாயை எடுத்துக் கொள்கிறார்.”

கடவுளிடம் வேண்டுதல்களை வைக்கும் பக்தர்களின் கோரிக்கைகள் பெரும்பாலும் சுயநலம் சார்ந்தவைகள் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

“உங்களின் கடவுள் எது?” என்று கேட்டால், விதம் விதமாக பதில் வரும். “அம்மா, அப்பா தான் எனக்கு தெய்வம். அவர் இல்லாவிட்டால் நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது; அவர்கள் தான் எனக்குக் கடவுள்.”

“கடவுள் நமக்குள்ளேதான் இருக்கிறார். அதைத் தேடிப் பிடிக்காமல் கோயில்களை நாடி ஏன் ஓட வேண்டும்” இப்படி பகட்டுக்காக தத்துவம் பேசு கிறவர்களும் உண்டு. இன்னும் சிலர், இயற்கைதான் கடவுள் என்று ஒரு படி மேலே போய் கூறுவார்கள். ‘கோயிலுக்குப் போனால் உள்ளத்துக்கு அமைதி கிடைக்கிறது’ என்பார் மற்றொருவர். இவை எல்லாமுமே மனிதர்களால் தேர்வு செய்துகொண்ட விரப்பக் ‘கடவுள்’கள்!

இது தவிர சிவன் தென்னாட்டுக் கடவுள்; முருகன் தமிழ்க் கடவுள் என்று தேசிய இனங்களின் அடிப்படையில் பிரிக்கப்படும் கடவுள்களும் உண்டு. இன்னும் சைவக் கடவுள், அசைவக் கடவுள், ஆகமக் கடவுள், ஆலமரத்தடிக் கடவுள், பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம், மருத்துவமனை, மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம் என்று திரும்புமிட மெல்லாம் கடவுள்களை கோயில்கள் கட்டி உட்கார வைத்திருக்கிறார்கள்.

இத்தனை கடவுள்களையும் தாண்டி, இமயமலைப் பிரதேசங்களுக்கு பக்தி சுற்றுலாவாக குழுகுழுவாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். தென்னாட்டு சிவன், தமிழ்நாட்டு முருகனை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, வடக்கே பத்ரிநாத்துக் கும், கேத்ரிநாத்துக்கும் போக வேண்டுமா? தமிழ்நாட்டுக் கடவுள் சக்தியற்றுப் போய்விட்டதா? என்று கேட்டால் உடனே கடவுளை நிந்திப்பதாக ஆத்திரத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள்.

இயற்கை வளம் நிறைந்த மனித நடமாட்டங்கள் இல்லாதிருந்த மலைப்பகுதிகளை “புண்ணிய ஸ்தலங்களாக்கி” அவைகளுக்கு மகிமைகளையும் சக்திகளையும் திணித்து மக்களிடையே பரப்பு வதற்கென்றே இங்கே ஊடகங்கள் ஏராளம் இருக்கின்றன. போதாக்குறைக்கு திரைப்பட “சூப்பர் ஸ்டார்கள்” படப்பிடிப்பு முடிந்து இந்தப் பகுதி களுக்கு ‘ஆன்மிகத் தேடலுக்காக’ விமானமேறிப் போய் இதற்கான ‘மகத்துவங்களை’ அதிகரிக்கச் செய்துவிட்டார்கள்.

“கடவுள்களின் தேசங்களாக” இப்படி இயற்கை வளம் நிறைந்த பகுதிகள் மாற்றப்பட்டு, விடுதிகளும், வீடுகளும், கடைகளும், வழிகாட்டிகளும், தரகர் களும் பெருகியதால் சுற்றுச் சூழலைக் காத்து நிற்கும் காடுகள் அழிக்கப்பட்டன. மண்வளத்தின் நீர் பிடிப்பு குறைந்தது. மழையும் வெள்ளமும் வரும் போது மலைச் சரிவுகளும் சாலை அரிப்புகளும் நிகழ்கின்றன. இதில்கூட சுற்றுலா வந்த பக்தர்கள் காப்பாற்றப்படுவதில் தான் பத்திரிகைகள் அக்கறை காட்டின. இந்தப் பக்தர்களின் சுற்றுலாவை வைத்து சிறு சிறு தொழில் நடத்தி பிழைப்பு நடத்திய ஏழைத் தொழிலாளர்களைப் பற்றி எவருமே கவலைப்படவில்லை என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதிலே, அரசியல் வேறு. குஜராத் மோடி ஒரே நாளில் ஹெலிகாப்டரில் பறந்து, 15000 குஜராத்தியர்களை மீட்டு வந்தார் என்று அவரது சீடர்கள் ஒரு பொய்யான செய்தியை பரப்பி னார்கள். மோடியே பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை என்று விளக்க மளித்த பிறகும், இப்படி ‘டமாரம்’ அடிப்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கேதார்நாத் கோயிலை தாம் கட்டித்தரப் போவதாக மோடி கூறுகிறார். உத்தகரகாண்ட் முதல்வர், ‘நாங்கள் தான் கோயில் கட்டுவோம்’ என்கிறார். ஹெலிகாப்டர் உதவியோடு விமானப் படையின ரால் உயிரைப் பணயம் வைத்து தமிழக முதல்வர் முயற்சியால் சென்னை கொண்டு வரப்பட்ட பக்தர்கள் கடவுள் கருணையால் உயிர் பிழைத்தோம் என்று வாய்கூசாமல் பொய் பேசுகிறார்கள்.

இமயமலையைச் சுமந்து நிற்கும் இயற்கை வளம் காப்பாற்றப்பட வேண்டுமானால் அங்கு பக்தர்கள் சுற்றுலா செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று கடந்த 34 ஆண்டுகளாக இந்தப் பகுதியின் இயற்கைச் சூழலை புகைப்படமெடுத்து 24 நூல்களை வெளியிட்டுள்ள அசோக் திவாலி என்ற மூத்த பத்திரிகையாளர் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டில் எழுதுகிறார்.

பக்தர்களைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட 20 ராணுவத் தினர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்து விட்டார்கள். இதில் தமிழகத்தைச் சார்ந்த பிரவின் என்ற விமானப்படை அதிகாரியும் ஒருவர். திருமண மாகாத தனது ஒரே மகனை தாய் பறி கொடுத்து நிற்கிறார். மீட்கப்பட்ட இந்த பக்தர்களுக்கு நன்றி உணர்ச்சியிருக்குமானால், இதயத்தில் ஈரம் இருக்குமானால், கடமைக்காக உயிரிழந்த இந்த மகத்தான மாவீரர்களின் படத்தைத்தான் தங்கள் வீடுகளில் மாட்ட வேண்டும்.

தன்னை நாடி வந்த பக்தர்களை கடவுள் காப்பாற்றவில்லை. மாறாக, கடவுள் பக்திதான், இயற்கை வளம், சுற்றுச் சூழல் பேரழிவுக்கு புனித யாத்திரைகளே காரணமாக இருந்திருக்கின்றன. இவ்வளவு கடும் விலை கொடுத்தப் பிறகும் மீண்டும் கோயிலைக் கட்டி, பக்தர்கள் வருகைக்கான ஏற்பாடுகளை செய்வோம் என்று உத்தரகாண்ட் முதல்வரும், மோடியும், பக்தி வியாபாரிகளும் அறிவிக்கிறார்கள் என்றால், இதைவிட மனித சமூகத்துக்கு எதிரான சுற்றுச் சூழலை அழித் தொழிக்கும் அடாவடித்தனம் வேறு இருக்க முடியுமா?

“கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்” என்ற பெரியாரின் கருத்து இவர்களால் உறுதியாக வழிமொழியப்படுகிறது என்பதுதானே உண்மை

Pin It