‘ஒத்திகை’ என்றாலே சட் டென்று நினைவில் மின்னலடிப்பது நாடகம்தான்! ஒரு நாடகத்தை மேடையில் அரங்கேற்றுவதற்கு முன், அதற்கான வசனங்களை மனப்பாடம் செய்வதற்கும், காட்சிகளில் நடிக்கும் முறைகளை பயிற்சியாக்கிக் கொள் வதற்கும், நடப்பது ஒத்திகைகள்! நாடகக் குழுவில் பங்கேற்பதும், அதற்கு ஒத்திகைகள் பார்ப்பதும், ஒத்திகைகளுக்குப் பிறகு, நாடகத்தை அரங்கேற்றும்போது அதற்கு மக்களிட மிருந்து கிடைக்கும் நேரிடையான பாராட்டுகளும் உண்மையிலேயே மிகவும் குதூகலமானது. மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைக்கக் கூடியது. அதையெல்லாம் அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். “கூத்தும் கும்மாளமும்” என்ற சொற்றொடரே அதனால்தான் வந்தது போலும்!

நாங்களெல்லாம்கூட கைதேர்ந்த நடிகர்களாக இருந்தோம் என்று சொன்னால், அதை நீங்கள் நிச்சயமாக நம்பித்தான் ஆகவேண்டும். இன்றைக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் எல்லாம் ஈழத் தமிழர்கள் விடுதலையை முன்னிறுத்தி நாடகங் களைப் போடுவதற்கு துணிச்சலுடன் களமிறங்கினோம். நாங்கள் எல்லாம் திராவிடர் கழகத்தில் இருந்த காலம்! நாங்கள் நடித்த முதல் நாடகத்துக்கு கதாநாயகனாக பல நாள் விவாதங் களுக்குப் பிறகு ‘கழுதை’யை முன்னிறுத்துவது என்று - எதிர்ப்புகள் ஏதுமின்றி ஒரு முடிவுக்கு வந்தோம். கழுதை என்ற குணச்சித்திர வேடம் தாங்கி நடிப்பது அப்படி ஒன்றும் சாதாரணமானது அல்ல. கழுதை போன்ற முகமூடி துணிக்குள் முதுகை தரைக்கு சமமாக வளைத்துக்கொண்டு இரண்டு பேர் (நான்கு கால்களுக்காக) மணிக்கணக்கில் நின்று கொண்டும் ஓடிக் கொண்டும் நகர்ந்து கொண்டும் இருக்க வேண்டும். நாடகம் எப்போது முடியும் என்று பார்வையாளர்கள் காட்டும் ஆர்வத்தைவிட இந்த நடிகர்கள்தான் மேலும் துடித்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு நிமிடமும் புரட்டி எடுக்கும் முதுகுவலி அவர்களுக்குத் தானே தெரியும்! போதாக்குறைக்கு, கழுதை நடிப்பு போதாது; இன்னும் வேகமாக தலையை ஆட்ட வேண்டும்; சுழன்று சுழன்று ஓட வேண்டும் என்று சக தோழர்கள், ஒத்திகைகளில் மேலும் வெறுப்பேற்றுவார்கள்.

மேடைகளில் கழுதை பேசும் வசனங்களை திரைக்குப் பின்னால் இருந்து பேசுவதற்கு பொருத்தமான நபராக நீண்ட விவாதத்துக்குப் பிறகு அடியேனை ஏகமனதாக தேர்வு செய்தார்கள். சுயமரியாதையோடு நானும் சம்மதித்தேன். அதற்கு ஒரு உள் நோக்கமும் உண்டு. வசனங்களை மனப் பாடம் செய்ய வேண்டியதில்லையே; பார்த்தே படித்து விடலாமே!

ஈழத் தமிழ் மன்னன் சங்கிலியன் வரலாற்றை நாடகமாக்குவதற்கு ஒத்திகைகள் நடந்தன. துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு, சங்கிலி யனை போர்ச்சுகீசியர்கள் தூக்கிலிடுவ தோடு காட்சி முடியும். ஒத்திகையின் போது தூக்கிலிடுவதை ஒத்திகைப் பார்க்க வேண்டும் என்று நண்பர்கள் கட்டாயப்படுத்துவார்கள். பரவா யில்லை ஒத்திகையில் வேண்டாம்; நாடகத்தில் மட்டும் தூக்கிலிட்டால் போதும் என்று இறுதியாக முடிவெடுத்தபோதுதான் நடிகர் ‘சங்கிலியனுக்கு’ உயிரே வந்தது. ஒரு ஊரில் நாடகம் நடந்தபோது, தேனிசை செல்லப்பாவின் உணர்ச்சிகரமான பின்னணிப் பாடலோடு சங்கிலி மன்னன், தனது தாய் மண்ணை வணங்கி மேலே தொங்கும் தூக்குக் கயிற்றை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பது காட்சி. அது வெள்ளைத் திரைக்குப் பின்னால் நிழல் காட்சியாக அமைக்கப்பட் டிருந்தது. இதற்கு கைதட்டல் வரப் போவது நிச்சயம் என்று நடித்த தோழர் மிகவும் நம்பிக் கொண்டிருந்தார். நாங்களும் அதை அப்படியே ஆமோதித் தோம். ஒரு ஊரில் நாடகம் - சங்கிலியன் உணர்ச்சிப் பிழம்பாக நடித்து, தூக்குக் கயிற்றையும் தனது கழுத்தில் எடுத்து மாட்டிக் கொண்டார். உடனே விளக்கு அணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மின்சாரத்தை இயக்கியவர் விளக்கை அணைக்கவில்லை. சங்கிலியன் தூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு அப்படியே நின்றிருப்பதைப் பார்த்து, பதறிப் போய் அவரிடம் ஓடி, ‘ஏன் விளக்கை அணைக்கவில்லை’ என்று கோபத் துடன் சத்தம் போட்டோம். அவர் அமைதியாக பதில் சொன் னார், “என்ன சார் பேசுறீங்க, சங்கிலியன் இன்னும் கயிற்றில் தொங்கவில்லையே” என்றார்.

வடமாநிலம் ஒன்றில் (ம.பி. என்ற நினைவு) ‘ராமநவமி’யின்போது ராமன் நாடகத்தில் இறுதிக் காட்சியில் இராமன், இராவணன் மீது அம்புகளை விட, ராவணனோ, சாக மறுத்து கீழே விழாமல் நின்று கொண்டே இருந்தார். நாடக ஏற்பாட்டாளர் ஓடிப்போய் மேடை ஏறி கேட்டபோது, கடந்த ஆண்டு நடித்ததற்கு இன்னும் சம்பளம் பாக்கி இருக்கிறது. அதைத் தந்தால்தான் சாவேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். இந்த செய்தியை அடிப்படை யாக வைத்து, நாங்களும் ஒத்திகை களோடு நாடகம் நடத்தினோம். ஒத்திகை பார்த்தபோது நாடகம் நன்றாகவே இருந்தது என்று நாடகம், ஒத்திகை இரண்டையும் பார்த்தவர்கள் பாராட்டி னார்கள்.

ஒத்திகைகள் இப்போது நாடகங் களுக்கு மட்டும் இல்லை; மத்திய மாநில அரசுகளும்கூட ஒத்திகைகளை அரங் கேற்றி வருகின்றன. ஏதோ கிண்டல் செய்வதாக நீங்கள் நினைத்துவிடக் கூடாது. கடந்த வாரம் காவல்துறை மட்டும் இரண்டு ஒத்திகைகளை நடத்தி யுள்ளது. கடல் வழியாக தமிழகத்தில் நுழையும் தீவிரவாதிகளை தடுப்பது எப்படி என்பது குறித்து, தமிழக போலீ சாரும், கடலோர பாதுகாப்பு படை யினரும், கடற்படையினரும், மத்திய மாநில உளவுப் பிரிவினரும் இணைந்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தியுள்ளனர்.

இன்னொன்று-பாளையங்கோட்டை மகப்பேறு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை தாயிடமிருந்து திருடிச் சென்று கண்காணிப்புக் காமிரா வழியாக திருடிச் சென்றவர்களைக் கண்டுபிடித்துத் தரும் ஒத்திகையை மாவட்டக் காவல்துறை அதிகாரிகளே நடத்தியிருக்கிறார்கள். நடந்தது ஒத்திகைதான் என்ற உண்மையை குழந்தையைப் பறிகொடுத்த தாயிடம் கூட கூறாமல், இப்படி கதறவிடலாமா என்று அங்கே கூடிய பொது மக்கள் ஆத்திரத்துடன் காவல்துறை அதிகாரி களைக் கேட்டதாக ‘தினந்தந்தி’ செய்தி வெளியிட்டுள்ளது. “குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் எங்களுக்குப் பயிற்சி; மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்து கிறோம்” என்று காவல்துறை அதிகாரி கள் கூறுகிறார்கள். காவல்துறையின் கற் பனையில் உருவான இந்த ஒத்திகைகள் உண்மையிலேயே குற்றங்களைத் தடுப்பதிலும் வெற்றிப்பெற வேண்டும் என்பதே நமது விருப்பமும்கூட!

இப்படிப்பட்ட நாட்டுக்குத் தேவையான நல்ல ஒத்திகைகளை இன்னும் விரிவுபடுத்தவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்!

உதாரணமாக நாடாளுமன்ற சட்டமன்றங்களை செயல்படவிடாமல் எப்படி முடக்கலாம்? உறுப்பினர்களை காவலாளிகள் கூண்டோடு தூக்கி வெளியேற்றும் போது எத்தகைய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றலாம் என்பதற்கு ஒத்திகை நடத்தலாம்.

குறிப்பாக நடிகர் விஜய்காந்த் தனது நடிப்பு அனுபவத்தைப் பயன்படுத்தி, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, தொகுதி நலன்களுக்காக முதலமைச்சரை சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுக்காமல் தடுப்பதற்கான பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்தலாம்.

கிரிமினல் குற்றவாளி என்ற அடையாளத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டு, ஜெகத்குருவாக உலாவருவதற்கு பார்ப்பன ஏடுகளின் ஆதரவோடு காஞ்சிபுரம் ஜெயேந்திரன் ஏற்கனவே ஒத்திகைகளை வெற்றிகரமாக தொடங்கிவிட்டார். மற்றபடி, குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பில்தான் கொள்கை பாதுகாப்பு அடங்கியுள்ளது என்பதற்கு கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து ஒத்திகைகளை நடத்தி வருகிறது தி.மு.க.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் பல அடிதடி ஒத்திகைகளோடு, ஒரே தலைவர் என்ற சர்வாதிகாரத் திணிப்பை எதிர்த்து, ஜனநாயக வெறியோடு பல தலைவர்கள், பல ‘அவதாரங்’களை எடுத்து, கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்துவது குறித்து ஒத்திகைகளை தனித்தனியாக நடத்திக் கொண்டிருக் கிறார்கள். எங்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள மற்றவர்கள் ஒத்திகை நடத்திக் கொள்ளட்டும் என்று அம்மா பாசத்தோடு நடைபோடும் அ.தி.மு.க. வுக்கும் ஒத்திகைகள் தேவை என்ற கேள்விக்கே இடமில்லை. நாடகங்களை ஒத்திகைகளோடு நடத்தி நாட்டு மக்களை பார்வையாளர்களாகவே பாதுகாத்து வரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இதைக் கூறுகிறோமே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் எள்முனை அளவும் இல்லை என்று அறிக!

பின் குறிப்பு: கூடங்குளத்தில் முதன்முதலாக அணுமின் திட்டம் வந்தபோது, அதை எதிர்ப்பதில் அப்பகுதி மக்கள் ஆர்வம் காட்டவில்லை. கூடங்குளத்தில் விபத்து நேர்ந்தால், மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று அணுமின் நிர்வாகம் நடத்திய பாதுகாப்பு ஒத்திகையை நேரில் பார்த்தப் பிறகு தான், அதுவரை அமைதியாக இருந்த மக்கள் “அய்யய்யோ ஆபத்து” என்று புயலாக சீறத் தொடங்கினார்கள் என்பதிலிருந்தே ஒத்திகையின் சக்தியை புரியாதவர்களும் புரிந்து கொள்ளலாம்!