நரபலி, மாயமந்திரம், பேய், பில்லி சூன்யம் போன்ற மூடநம்பிக்கைகளைத் தடை செய்யவும், அதில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவும் மகாராஷ்டிராவில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு தபோல்கர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்காக அவர் தயாரித்து அனுப்பிய மசோதா, தொடர்ந்து பல ஆண்டுகளாகவே ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்டு வந்தது. பா.ஜ.க., சிவசேனா போன்ற அமைப்புகள் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்து வந்தன. இந்த மசோதாவை தாக்கல்  செய்யாமல் காலம் கடத்தும் மராட்டிய முதல்வர் பிரித்திவிராஜ் சவானை இரண்டு வாரங்கள் முன் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் தபோல்கர் கடுமையாக விமர்சித்தார்.

அவர் உருவாக்கித் தந்த மசோதாவை அவரது வீரமரணத்தின் நினைவாக மராட்டிய அரசு இப்போது சட்டமாக்கியுள்ளது. தபோல்கர் உருவாக்கிய மசேதாவை சட்டாக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பொது மக்களிடமிருந்து அழுத்தம் வந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 21 ஆம் நாள் மராட்டிய அமைச்சரவை கூடி, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியது. அவசர சட்டத்தின் வழியாக மசோதாவுக்கு மாநில அரசு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது. தபோல்கர் தனது வீரமரணத்தின் வழியாக மராட்டிய மக்களுக்கு பெற்றுத் தந்துள்ள வெற்றி இந்த சட்டம்.

2011 ஆம் ஆண்டு ஆக. 10 ஆம் தேதி மராட்டிய மாநில சட்டமன்றத்தில் நரபலி, பில்லி சூன்யம் போன்றவற்றை தடை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மசோதாவை அவர் தயாரித்தார். கடுமையான எதிர்ப்புகளினால் 24 முறை திருத்தப்பட்டு நிறைவேற்றப்படாமலே இருந்தது. இந்த மசோதாவின்படி  பில்லிசூன்யம், தாயத்து மந்திரம் போன்ற மோசடிகளில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும். மிருகங்கள் பலியிடுல், நோய் தீர்ப்பதற்கு ‘அற்புத சிகிச்சை’ முறைகளை இந்த மசோதா தடை செய்கிறது. தபோல்கர் படுகொலையைத் தொடர்ந்து மக்களின் கடும் கோபத்தை தணித்து, அவர்களின் உணர்வுகளை மதிக்க இந்தச் சட்டத்தை உடனே கொண்டு வரவேண்டும் என்று மாநில மூத்த அமைச்சர்கள் முதல்வருக்கு அழுத்தம் தந்தனர். அதன் பிறகு, அவசர சட்டம் பிறப்பிக்க முதல்வர் ஒப்புக் கொண்டார். அத்துடன் தபோல்கர் படுகொலையைத் தொடர்ந்து மாநிலத்தில் செயல்படும் சில மதவெறி அமைப்புகளை தடைசெய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

புனே முடங்கியது

தபேல்கர் வீரமரணத்தைத் தொடர்ந்து, புனேயில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைமை பீடம் செயல்படும் பார்ப்பனக் கோட்டையான புனேயில் தபோல்கருக்கு இரங்கல் தெரிவித்து முழு அடைப்பு வெற்றி பெற்றது. அரசுப் பேருந்து ஓடியதைத் தவிர, புனே நகரமே முடங்கிப் போய், பகுத்தறிவாளருக்கு வீரவணக்கம் செலுத்தியது.

பார்ப்பனர் எதிர்ப்பு

1972இல் சோஷலிஸ்ட் தலைவர் பாபா ஆதவ், கிராமங்களில் பொதுக் கிணறுகளில் தலித் மக்கள் தண்ணீர் எடுப்பதைத் தடுக்கும் ஜாதி வெறிக்கு எதிராக ‘ஒரு கிராமம், ஒரு கிணறு’ இயக்கத்தைத் தொடங்கியது. அதில் தபோல்கர் தீவிரமாகப் பங்கேற்றதைத் தொடர்ந்து பார்ப்பனர்கள், உயர்சாதியினர், மதவெறி சக்திகள் கலவரத்தில் இறங்கினர். அதற்கு எதிர்வினையாக மகாராஷ்டிரா முழுதும் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள் வீறு பெற்றன. இயக்கத்தில் முதல் நபராக களமிறங்கிய தபோல்கர், சதாரா மாவட்டத்தில் ‘இரட்டைக் கிணறு’ தீண்டாமைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். ‘அம்பேத்கர் நடத்திய மகர் குளத்தில் நீர் எடுக்கும் போராட்டமே இதற்கு உந்து சக்தியாக இருந்தது’ என்று அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சமூகப் பணியாளர் சுரேஷ் கிர்புக்கர், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் உயரிய கவுரவ விருதான ‘மகாராஷ்டிரா பூஷன்’ விருதை தபோல்கருக்கு வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று கம்ப்யூட்டர் விஞ்ஞானி விஜய் பச்தர், மராட்டிய முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரின் உன்னதமான தியாகம் வீண் போகக் கூடாது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திலும் சட்டம் வரவேண்டும்

மராட்டிய மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதைப் போல் தமிழ்நாட்டிலும் தமிழக அரசு கொண்டு வரவேண்டும் என்று சென்னை கணித விஞ்ஞான நிறுவனத்தின் பேராசிரியர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர். கணித விஞ்ஞானிகள் இரமேஷ் அனிஷ் ஷெட்டி, ஏ.பி.பெல்லியப்பா, மதுரா சிறிபாசு, டி.ஆர். கோவிந்தராஜன், பி. சங்கரன், பாலா. சதிபாலன், சுந்தர் உள்ளிட்ட 22 கணித பேராசிரியர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தபோல்கர் கொலைக் குற்றவாளிகளைக் கண்டறிவதில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பகுத்தறிவுப் பிரச்சாரத்தால் தங்கள் மத உணர்வு புண் படுவதாகக் கருதுவோர் அதை கருத்துகளாக வெளிப்படுத்த வேண்டும். மதத் தீவிரவாதம் ஆயுதம் தூக்குவதைக் கண்டிக்க முன்வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

திமிர் அறிக்கை

கொலையில் சந்தேகப்படும் ‘சனாதன சங்கம்’ என்ற பார்ப்பன அமைப்பின் தலைவர் அபய்வர்த்தக் என்பவர், இந்தக் கொலையில் தங்களுக்கு தொடர்பில்லை என்று மறுக்கிறார். அத்துடன் அவர் எந்தக் கடவுளுக்கு எதிராக செயல்பட்டாரோ அதே கடவுள், அவருக்கு நல்ல சாவை கொடுத்து விட்டார். இப்படி உடனடியாக சாவது என்பது கடவுளின் செயலே என்று கோவா மாநிலம் பனாஜியி லிருந்து திமிரோடு அவர் அறிக்கை விடுத்துள்ளார்.