‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழக சென்னை மண்டல கழகத் தோழர்கள் நடத்திய 10 நாள் பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மார்ச் 24 மாலை காஞ்சிபுரத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. காஞ்சிபுரம் பெரியார் சிலை அருகே, சனாதன சங்கர மடத்தின் எதிரே மக்களை அடிமைப்படுத்தும் பார்ப்பன மனுவின் சாஸ்திரங்களை நிகழ்வில் பேசியவர்கள் விரிவாக தோலுரித்தனர்.

காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர்கள் ஜாதி-தீண்டாமை எதிர்ப்புப் பாடல்கள் நடனங்களுடன் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். தோழர் க. இரவி பாரதி தலைமையேற்றார். தோழர்களின் உரை, கலை நிகழ்ச்சி என்று மாறி மாறி மேடையில் நிகழ்ச்சிகள் நடந்தன. பயணத்தில் பெற்ற அனுபவங்களை விளக்கி, அதில் பங்கேற்ற தோழர் அய்யனார் உரையாற்றினார். வழக்கறிஞர்கள் துரை அருண், திருமூர்த்தி, காஞ்சி மக்கள் மன்றத் தோழர் மேகலா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் பாசறை செல்வராசு, பார் வேந்தன், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர்.

பார்வேந்தன் தனது உரையில், “பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசின் வன்னிய சமூக மக்கள் வாழ்க்கையில் இப்போதும்கூட தலித் மக்களுக்கும், அவர்களுக்கும் வேறுபாடு தெரியாத நிலையில்தான் வாழ்கிறார்கள். இந்த ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இணைந்து தங்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் உரிமைக்கும் போராட வேண்டிய நிலையில் தலித் மக்களுக்கு எதிராக வன்னியர்களை தூண்டிவிடுவது நியாயம் தானா?” என்று கேட்டார்.

“இதே காஞ்சிபுரத்தில் ‘சாமி’ ஊர்வலங்கள் வருகின்றன. அதில் ‘சாமி’ ரதத்தில் பார்ப்பான் உட்கார்ந்திருக்கிறான். இரண்டையும் தோளில் தூக்கிக் கொண்டு சாலைகளில் ஓடுகிறவர்கள் வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்தான். தலித் சமூகத்தினர்கூட சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி; இப்படி பார்ப்பனியம் சுமத்தும் இழிவை தூக்கிச் சுமக்கும் சொந்த ஜாதியினரின் இழிவை தட்டிக் கேட்க வேண்டிய மருத்துவர் ராமதாசு, தலித் மக்களுக்கு எதிராக கொடி தூக்குவது ஏன்?” என்ற கேள்வியை எழுப்பினார்.பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

“பரப்புரை இயக்கத்தில் பல இடங்களில் ஜாதி உணர்வாளர்கள், ஜாதியை உங்களால் ஒழித்துவிட முடியுமா என்று கழகத் தோழர்களைப் பார்த்து கேள்வி கேட்டுள்ளார்கள். அவர்களுக்கு நாங்கள் கூறிக் கொள்கிறாம் - தமிழ்நாட்டில், 100 ஆண்டு களுக்கு முன்பு, 50 ஆண்டுகளுக்கு முன்பு, இருந்த ஜாதி வெறி இப்போது தளர்ந்திருக்கிறதா, இல்லையா? என்று கேட்கிறோம். நாடகக் கொட்டகையில் பஞ்சமர்களுக்கும், பெரும் வியாதி கொண்டவர்களுக்கும் இடமில்லை என்று துண்டறிக்கையில் போட்டார்கள். தாழ்த்தப்பட்ட வர்கள் பேருந்தில் பயணம் செய்யக் கூடாது என்று பேருந்து டிக்கட்டிலேயே அச்சடித்தார்கள். மனநோய் மருத்துவமனையிலேயேகூட பைத்தியம் பிடித்த பார்ப்பனர்களுக்கு தனிப் பிரிவை கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் வைத்திருந் தார்கள். தேசத் தந்தையாக இருந்தாலும் காந்தி, மயிலாப்பூரில் சீனிவாச அய்யங்கார் வீட்டில் தங்கியபோது, அவரது வீட்டுத் திண்ணை வரை தான் அனுமதிக்கப்பட்டார். இன்று அத்தகைய கடும் ஜாதி வெறி மாறியிருக்கிறதா? இல்லையா? சூத்திரர் பஞ்சமர் கல்விக்கு முழுமையாக தடை போட்டது வர்ணா ஸ்ரமம் கட்டமைத்த ஜாதி அமைப்பு. அந்த ஜாதி கட்டமைப்பு தகர்க்கப்பட்டுத் தான் தமிழ்நாட்டில் 69 சதவீத சூத்திர பஞ்சமர்கள், கல்வி உரிமையைப் பெற் றிருக்கிறார்கள். இப்படி அரசியல், பொருளாதார தளங்களில் ஜாதியம் படிப் படியாகக் குறைந்து வருகிறது. திருமண முறைகளில் வாழ்வியலில் மக்கள் மூளை யில் திணிக்கப்பட்ட ‘ஜாதி’ பல்வேறு வடிவங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கொடுமைகள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே நாம் தொடர்ந்து போராடுகிறோம். ஒரு காலத்தில் திருமணம் என்றாலே அது ஒரே ஜாதிக்குள்தான் என்ற நிலைமை மாறி, ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கின்றன. இதுவே ஜாதியமைப்பு தோற்று வருகிறது என்பதன் அடையாளம் தானே? ஜாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிராக ஜாதியவாதிகளை மருத்துவர் ராமதாசு அணி திரட்ட வேண்டிய நிலை உருவாகியிருப்பதே ஜாதியமைப்பு நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது என்பதைத்தானே காட்டுகிறது? எந்த ஒரு பழமையான பிற்போக்கான அமைப்பும் அதற்கான பயன்பாடுகள் குறையும்போது தானாகவே செல்வாக்கை இழந்து விடும். எனவே தான் ஜாதியம் எனும் புரையோடிப் போன கொடூரமான சமூக அமைப்பின் கேடுகள், ஒடுக்கு முறைகள் பெருகி வருவதை நாங்கள் படம்பிடித்து, அதன் சமூக செல்வாக்கை கேடுகளை அம்பலப்படுத்தி வருகிறோம். இறுக்கமான இந்த ஜாதியமைப்பின் அடித்தளங்களையும் அதன் மேல் கட்டப்பட்ட தீண்டாமை ஒடுக்குமுறை வடிவங்களையும் ஒரே நேரத்தில் மக்கள் ஆதரவோடு அசைக்கத் தொடங்கி யுள்ளோம். அதற்காக இளம் தலைமுறையை அணி திரட்டுகிறோம். எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் என்று இயக்கம் நடத்துகிறோம். ஜாதிய கட்டமைப்பில் கடந்த காலங்களில் பெரியாரும், அம்பேத்கரும், ஏனைய தலைவர்களும் நடத்திய போராட்டங்கள் விரிசலை உருவாக்கி வைத்துள்ளது. இது வீழ்ச்சியடையும் வரை ஜாதியின் சமூகப் பயன்பாடுகள் செல்லாதவை களாக, தேவையற்றவைகளாக மாறும் வரை அதற்கான போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம். அணையப் போகும் விளக்கு ஒளி வீசிப் பிரகாசிப் பதைப் போல் தோன்றலாம்; ஆனால், இந்த ஜாதிய கட்டமைப்பு செல்வாக் கின்றி சரிந்து வீழும். அதற்கு காலம் நிர்ணயிக்க முடியாது. ஆனால், மறைந்தே தீரும். இதுதான் கடந்த காலங்களிலிருந்து நிகழும் சமூகப் போக்கு. இதுவே ஜாதியை ஒழித்துவிட முடியுமா என்று கேட்கும் ஜாதியவாதிகளுக்கு நாங்கள் தரும் பதில்” என்று விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார்.

“மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம், தாழ்த்தப்பட்டவர்களைவிட குறைவாக இருக்கும்போது, அந்த உரிமைக்குப் போராட வேண்டிய இந்த பிற்படுத்தப்பட்ட ஜாதித் தலைவர்கள் அதைச் செய்யாமல், தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகப் போராட கிளம்புவது ஏன்?” என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டார்.

“மத்திய அமைச்சர் நாராயணசாமி நாடாளுமன்றத்தில் 2008 நவம்பரில் தந்த புள்ளி விவரப்படி 3, 4, 5 ஆம் நிலைப் பதவிகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் 24 புள்ளி 79 விழுக்காடு உள்ளனர். ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களோ, 7 புள்ளி 11 விழுக்காடுமட்டுமே உள்ளார்கள். அதேபோல், மய்ய அரசின் முதல் நிலைப் பதவிகளில், தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் 17 புள்ளி 39 சதவீதம் உள்ள போது, மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் வெறும் 17 புள்ளி 39 சதவீதம்தான் உள்ளார்கள். இதிலே யார் மேல் ஜாதி? யார் கீழ் ஜாதி? மத்திய அரசுப் பதவிகளிலே கீழ் ஜாதியாக பிற்படுத்தப்பட்டவர்களும் அவர்களைவிட மேல்ஜாதியாக தாழ்த்தப்பட்டவர்களும் தான் உள்ளனர். பிற் படுத்தப்பட்ட சமுதாயத்துக்காக நாங்கள்தான் போராடுகிறோம் என்று இங்கே ஜாதிப் பெருமையைத் தூக்கி வரும் தலைவர்களிடம், ‘முதலில் மத்திய அரசில் மறுக்கப்படும் உரிமைகளுக்குப் போய் போராடு’ என்று நீங்கள் கேட்க வேண்டும்.

நாங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் பெரியார் தொண்டர்கள் பிற் படுத்தப்பட்டோர் உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்துப் போராடியவர்கள், வீரப்ப மொய்லி அறிக்கையை எரித்தோம்; பிற்படுத்தப்பட்டோர் உரிமை களுக்குப் பேராடிய அதே பெரியார் தொண்டர்களாகிய நாங்கள்தான் இப்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஜாதிவெறி பேசும் இந்த பிற்படுத்தப்பட்ட தலைவர்களுக்கு எதிராகவும் போராடுகிறோம்” என்றார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு கழகத் தலைவர், பொதுச் செயலாளர் கருப்பு ஆடைகளை போர்த்தி பாராட்டினர். காஞ்சி மாவட்ட கழகத் தலைவர் டேவிட் பெரியார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். தோழர் சுகுமார் நன்றி கூறினார்.      

          - நமது செய்தியாளர்

Pin It