கிணத்துக்கடவு பகுதிகளில் தொடர்ந்து வரும் தீண்டாமைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்து வரும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் முற்றுகையிட்டு 178 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தீண்டாமையை தடுக்கத் தவறிய குற்றத்தை இழைத்துள்ள மாவட்ட நிர்வாகம் அதை சுட்டிக்காட்டிய தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

வன்கொடுமை வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கில் 19-04-2011 அன்று உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்த நீதிபதிகள் மார்கண்டேய கட்சு, கியான் சுதா மித்ரா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், தீண்டாமை கொடுமைகள் இருப்பது தெரிந்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரை பணி இடை நீக்கம் செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என்று கடுமையாக எச்சரித்து, அனைத்து மாநில அரசு களுக்கும் தீர்ப்பின் நகலும் அனுப்பி வைக்கப் பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டத் தில் பல தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை இருப்பதையும், முடித் திருத்தகங்களில் தாழ்த்தப் பட்டோர் புறக்கணிக்கப்பட்டும் வருகின்றனர். இப்படி இந்த பகுதியில் நிலவும் தீண்டாமையை அகற்றக்கோரி, தீண்டாமை நிலவும் வடிவங்கள்-ஊர்கள்-கடைகளின் பெயர்கள் என விரிவான பட்டியலையும், மேற்கண்ட தீர்ப்பின் நகலையும் இணைத்து தொடர்புடைய அலுவலகங்களில் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த ஆண்டு ஒரு முறையும், இந்த ஆண்டில்

11-5-2013 அன்றும் கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கிணத்துக்கடவுவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நடைபெற்று வரும் ஜாதிக் கொடுமைகள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் கோவை மாவட்ட நிர்வாகங்களை கண்டித்தும், அதிகாரிகளின் அக்கறையற்ற போக்கை அரசுக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தவும்,  17-06-2013 திங்கட்கிழமை அன்று காலை 11-00 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்றது. தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஒலி முழக்கங்களை எழுப்பிய தோழர்கள், ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். காவல் துறையினர் தடுப்பு அரண்களை பயன்படுத்தி, தோழர்களை தடுத்து நிறுத்தினர். காவல் தடுப்பை மீறி அலுவல கத்திற்குள் தோழர்கள் நுழைய முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தோழர்களை கட்டுப் படுத்த சிரமப்பட்ட காவல் துறையினர், ஆட்சியர் அலுவலக வாயில் கதவை இழுத்துப் பூட்டினர்; அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பதால் மனு கொடுக்க வந்திருந்த ஏராளமான பொது மக்கள் உள்ளே செல்ல முடியாமலும், உள்ளிருந்த பொது மக்கள் வெளியே வராமலும் தடுக்கப்பட்டனர். காவல் துறையின் இந்த நடவடிக்கையால் ஆட்சியர் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொருளாளர் ஈரோடு ப.இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில வெளியீட்டுச் செயலாளர் சூலூர் தமிழ்ச்செல்வி, கோவை மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விசயன், மாவட்டக் காப்பாளர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், மாநகர் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் பன்னீர்செல்வம், புறநகர் மாவட்டத் தலைவர் வெள்ளமடை நாகராசன் உட்பட 178 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் அண்ணா மலை அரங்கில் அடைக்கப்பட்டனர். அரங்கில் சிறிய ஒலி பெருக்கி மூலம் கழகப் பொறுப் பாளர்கள் உரையாற்றினர், அரங்கு முழுவதும் தோழர்கள் நிரம்பியிருந்ததால் மாநாடு போல காட்சியளித்தது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 143, 341 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறை, தோழர்கள் அனைவரை யும் சொந்த பிணையில் விடுதலை செய்துள்ளது. கோவையில் வெளியான மாலை செய்தித்தாள்கள் அனைத்திலும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதல் பக்கத்தில் வண்ணப்படங் களுடன் வெளியிட்டுள்ளது; தொடர்ந்து நிலவி வரும் தீண்டாமைக் கொடுமைகளையும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கையும் மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்திருப்பது போராட்டத்தின் வெற்றியாகும்.

செய்தி : கோகுல்.கண்ணன்

Pin It