நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் மே 18 அன்று தமிழீழ சுதந்திர சாசனத்தை முரசறைந்தது.

நாடு கடந்த தமிழீழ அரசு, கடந்த மே 15ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் கூடி சுதந்திர தமிழ் ஈழத்துக்கான பிரகடனத்தை மே 18இல் வெளி யிட்டது. தட்டியூஸ் ஸ்டீவென்ஸ் சென்ட்டர் என்ற அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழீழ சுதந்திர சாசனத்தில் இடம் பெற்றுள்ள சில முக்கிய கருத்துகள்:

“இன அழிப்புப் போர்க் குற்றங்களிலிருந்து நிரந்தரமாக விடுவித்துக் கொள்ள அனைத்துலக சட்டங்களுக்கேற்ப தமிழீழ தனியரசை அமைத்துக் கொள்ளும் உரிமை எங்களுக்கு உண்டு. தனியரசு அமைவது மட்டுமே எமக்கான ஒரே ஒரு வழி முறை. எமது சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யவும், இன அழிப்புக்குக் காரணமானவர்களை நீதிமன்றம் முன் நிறுத்தவும் ‘மக்களாணை வாக்கெடுப்புக்கு’ ஆவன செய்ய வேண்டும். அமையப் போகும் தமிழீழ அரசு ஜனநாயகத்தையும் மனித உரிமை களையும் அது தொடர்பான அனைத்துலகப் பிரகடனங்களையும் பேணி காத்து, மனித குல வரலாற்றை முன்னோக்கி நகர்த்தும். தமிழீழ அரசு அதிகாரங்களை ஒரே இடத்தில் மய்யப்படுத்தா மலும், மதச்சார்பற்ற அரசாகவும் இருக்கும். மரண தண்டனை ஒழிக்கப்படும். தமிழீழ குடிமக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம். மதம், ஜாதி, பால், மொழி அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் ஒழிக்கப்படும். முஸ்லீம் மக்களின் தனித்துவமான அடையாளங்கள் மதிக்கப்பட்டு, தமிழீழத்தில் அவர்களின் வகுபாகத்தினை (வாழ்விட உரிமை) அவர்களே உருவாக்கிக் கொள்ளும் உரிமை வழங்கப்படும். மலையக மக்கள் தமிழ் ஈழத்தில் குடியேற விரும்பினால் உடனடியாக குடியுரிமை வழங்கப்படும். தாயக விடுதலைக்குப் போராடிய அனைத்து வீரர்களும் தேசிய வீரர்களாக மதிக்கப் படுவார்கள். அவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும். மே 18 தேசிய துக்க நாளாகவும், நவம்பர் 27 மாவீரர் நினைவு நாளாகவும் பின்பற்றப் படும்” என்று சுதந்திர சாசனம் கூறுகிறது.

இந்தியப் பெருங்கடலில் அமைதி பாது காப்புக்கு உறுதுணையாகவும், இந்திய மக்களுடன் தோழமை பேணும் வெளியுறவுக் கொள்கையையும் தமிழ் ஈழ மக்களின் வளம், தேவைகளைக் கருத்தில் கொண்டு உலகநாடுகளுடன் கூட்டுறவை வளர்க்கக் கூடிய பொருளாதாரக் கொள்கையையும் சாசனம் முன் வைக்கிறது. கல்வியை அடிப்படை உரிமையாகக் கருதி, கட்டாய இலவசக் கல்வியை சாசனம் வலியுறுத்துவதோடு, தமிழ் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் தமிழ் ஈழத்தின் அதிகாரபூர்வ மொழிகளாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் என்று உறுதி சாசனம் கூறுகிறது. தமிழீழத்துடன் தொடர் புடைய தமிழர் பிறப்பு வழி சந்ததியினர், உலகின் எந்தப் பகுதியில் வசித்தாலும், தமிழீழக் குடியுரிமைக்கு தகுதி உடையவர். தமிழ் ஈழக் குடிமக்கள் இரு நாட்டுக் குடி உரிமைக்கு அங்கீகாரமும், தகுதியும் உடையவர் என்றும் பிரகடனம் கூறுகிறது. பிரகடனத்தை நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரும் மாநாட்டுத் தலைவருமான வி.உருத்திரகுமார் வெளியிட்டார்.

மாநாட்டு நிகழ்ச்சிகள்

மே 17 ஆம் தேதி காலை முதல் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. பங்கேற்பாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர். சர்வதேச சட்ட நிபுணர் ஃபிரான்சிஸ் பாய்ல், அன. பரராஜசிங்கம், ஈழவேந்தன், அருட் தந்தை ஜோசப் சந்திரகாந்தன், முனைவர் இராமு. மணிவண்ணன், நக்கீரன், வி.தங்கவேலு மற்றும் பல்துறைப் பன்னாட்டுப் பேராசிரியர்கள் கருத்தரங்கில் ஆய்வுரைகளை முன் வைத்தனர்.

தமிழ்நாட்டிலிருந்து நாடுகடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சரசுவதி மற்றும் பேராசிரியர் இராமு. மணிவண்ணன், எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் ஆகியோர் பங்கேற்றனர். பேராசிரியர் சரசுவதி, மாநாட்டைத் தொடங்கி வைக்கவும், பிரகடன முரசறைவுக்கு முன் அது குறித்த பீடிகையை முன்வைக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யம் சார்பில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட 30 நிமிட ஆவணப்படம் திரையிடப்பட்டது. முள்ளி வாய்க்கால் இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் சந்தித்த இராணுவ ஒடுக்குமுறைகளை அவர்களே வாய்மொழியாகக் கூறும் இந்த ஆவணப்படம், மாநாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வழக்கறிஞர் பாண்டி மாதேவி இயக்கத்தில் பேராசிரியர் சரசுவதி மேற்பார்வையில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.

Pin It