ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வடுகபாளையத்தில் உள்ள ‘தலித்’ மக்கள் கடந்த 60 வருடங்களாக ஊரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள வாய்க்கால் புறம்போக்கில் இறந்தவர்களை அடக்கம் செய்து வந்தனர். மழைக்காலத்திலும் வாய்க்காலில் தண்ணீர் செல்லும் காலங்களிலும் சுடுகாட்டில் தண்ணீர் தேங்கி விடுவதால், ஊருக்கு அருகிலேயே உள்ள அரசுப் புறம்போக்கு இடத்தை சுடுகாட்டுக்கென ஒதுக்க வேண்டுமென கடந்த 6 மாத காலமாக தாசில்தார், மாவட்ட ஆட்சியர் உள்ளிட் டோருக்கு மனு அனுப்பி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 16.05.2013 அன்று அங்கு மாறன் என்பவர் இறந்து விட்டார். அவரது உடலை ஊருக்கு அருகில் உள்ள இடத்தில் புதைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் மக்கள் கோரிய இடத்தின் அருகில் உள்ள தோட்டத்து உரிமையாளர் ஆரம்பம் முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததோடு, அங்கு சிறியதாக ஒரு கோவிலையும் கட்டி வைத்து விட்டார்.

இந்நிலையில் இறந்த உடலை வைத்து செய்யப் பட்ட சாலை மறியலை கைவிட வலியுறுத்தி ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி, தாசில்தார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதில் சமாதானமடையாத மக்கள் பிணத்தை நடுரோட்டில் வைத்து விட்டு ஊருக்குச் சென்று விட்டனர். தொடர்ச்சியாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் திருப்தி அடையாததால் கோபமடைந்த அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் இரவு 12 மணிக்கு பிணத்தை பழைய சுடுகாட்டிலேயே அடக்கம் செய்தனர். அதன் பிறகு ஊருக்குள் நுழைந்த அவர்கள், அங்குள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் என 26 பேரைக் கைது செய்தனர். மறுநாள் பெருந்துறை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை சிறையில் அடைத்தனர். மேலும் 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்து (இறந்தவரின் மகன்கள் உள்பட) தேடத் தொடங்கியதால் ஊரிலுள்ள ஆண்கள் தலைமறைவாயினர்.

இந்நிலையில் திராவிடர் விடுதலைக் கழகப் பொருளாளர் இரத்தினசாமி, ஈரோடு மண்டலச் செயலாளர் இராம. இளங்கோவன், அந்தப் பகுதியைச் சேர்ந்த அறிவியல் மன்றப் பொருப்பாளர் ஆசிரியர் சிவக்குமார், கோபி அர்ச்சுணன் ஆகியோர் வடுகபாளையம் சென்று அங்குள்ள மக்களிடம் “ உங்களுக்காக வாதாட மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் அவர்களை அணுகியுள்ளோம். எனவே யாரும் பயப்பட வேண்டாம், உங்களுக்கு நீதி கிடைக்க நாங்கள் உள்ளோம்” என்று தைரியப்படுத்தினர். நம்முடன் ஆதித் தமிழர் பேரவையைச் சார்ந்த தோழர் தமிழின்பன், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர் லோகு ஆகியோரும் உடன் வந்தனர்.

இந்நிலையில் அங்குள்ள ஆதிக்க சாதியைச் சார்ந்த சிலர் ஊர்மக்களிடம் சென்று நம்முடைய பகுதியிலேயே ஒரு வழக்கறிஞர் உள்ளார், அவர் உங்களுக்காக வாதாடுவார், உள்ளூரிலேயே வழக்கறிஞர் உள்ள நிலையில் வெளியூர் வழக்கறிஞர் வேண்டாம் என்று கூறி குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தனர், ஏனென்றால் ஆதிக்க சமூக வழக்கறிஞரை வைத்து வாதாடினால் இந்த மக்களை நிரந்தரமாக நம் கட்டுக்குள் காலத்திற்கும் வைத்துக் கொள்ளலாம் என்பது இவர்களின் எண்ணம். குழப்பமடைந்த ஊர்மக்களில் சிலர் அங்கு சாய்ந்த போதும் நம் தோழர்களின் பெரும் முயற்சியால் பெரும்பாலானவர்கள் நம் தோழர்களின் பக்கம் நின்றனர்.

மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் அவர்களின் மூலமாக, தேடப்பட்டு வரும் மக்களுக்கான முன்ஜாமீன் பெறப்பட்டது. 22.05.2013 அன்று சிறையில் உள்ள 26 பேருக்கும் பிணை கிடைத்தது. ஆனாலும் இவர்கள் வெளியே வந்து விடக் கூடாது என்று கறுவிய அதிகாரிகள், 26 பேருக்கும் பிணை தர முன்வந்த கிராம மக்களுக்கான சொத்து மதிப்பு சான்றிதழில் கையொப்பமிட மறுக்குமாறு கிராம நிர்வாக அலுவலரை மிரட்டி இருந்தனர். உயர் அதிகாரிகளின் கட்டளையை மீறாத கி.நி.அலுவலர் அவ்வாறே செய்தார். “சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடாது” என்ற கிராமத்து பழமொழிக்கேற்ப, பக்கத்து ஊர்களில் உள்ள மக்களை வைத்து அவர்களை அங்குள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் சான்றிதழ் பெற வைத்து அதிகாரிகள் முகத்தில் கரியைப் பூசினர் நம் தோழர்கள்.

கடந்த 23.05.2013 அன்று ஜாமீனில் விடுதலையான 26 பேரை, அறிவியல் மன்றத் தோழர் சிவக்குமார், வடுகபாளையம் பகுதித் தோழர் முத்துச்சாமி, புரட்சிகர இளைஞர் முன்ணனியைச் சேர்ந்த லோகு ஆகியோர் கோவைக்குச் சென்று வரவேற்று அழைத்து வந்தனர். சென்னிமலை குமரன் சிலையிலிருந்து பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக கோசமிட்டவாறு வந்த அவர்களை திராவிடர் விடுதலைக் கழக பொருளாளர் இரத்தின சாமி, மாவட்ட அமைப்பாளர் சென்னிமலை செல்வராசு, ஆசிரியர் மோகன்ராஜ், ஈரோடு நகரத் தலைவர் திருமுருகன், சென்னிமலை ஒன்றியச் செயலாளர் அழகன், பெருந்துறை சின்னச்சாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்த தோழர் பொன்னையன், ஆதித் தமிழர் பேரவையைச் சார்ந்த தமிழின்பன் மற்றும் நூற்றுக்கணக்கில் திரண்டிருந்த கிராம மக்கள் வரவேற்று பொன்னாடை அணிவித்தனர். பின் அங்கிருந்து ஊருக்குச் அழைத்துச் சென்றனர்.

கடந்த ஆண்டு அங்குள்ள கே.ஜி வலசு பகுதியில் கழகம் பொதுக்கூட்டம் நடத்த முயற்சித்த போது, அங்குள்ள ஆதிக்க சமூகத்தினரின் தூண்டுதலால், காவல் நிலையம் வரை வந்து கூட்டம் நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இந்த வடுகபாளையம் பகுதி மக்கள், இது பற்றிய செய்தி “புரட்சிப் பெரியார் முழக்க”த்திலும் வந்துள்ளது. இன்றைக்கு கைது செய்யப்பட்ட 26 பேரில் பெரும்பாலானவர்கள் அன்று நமக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள். இந் நிலையில் அவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்து, விடுதலை அடைந்த பிறகு அவர்களை ஊர் வரை அழைத்துச் சென்ற அறிவியல் மன்றத் தோழர் சிவக்குமாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “அன்று உங்கள் கூட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எங்களின் விடுதலைக்காக இவ்வளவு தூரம் முயற்சி செய்த உங்கள் கருஞ்சட்டைகளுக்கு நாங்கள் என்றும் நன்றிக்கடன்பட்டிருப்போம்” என்று விடுதலையானவர்களும் ஊர்மக்களும் கண்ணீர் மல்கினர்.

செய்தி - ப.சிவக்குமார்

Pin It