கொலை செய்த பார்ப்பனர்களுக்கு மரண தண்டனை தரக்கூடாது என்ற மனு தர்மத்தைப் பின்பற்றி செயல்பட்ட தமிழ் மன்னர்களின் வரலாறுகளை விளக்குகிறது இக்கட்டுரை. பேராசிரியர் ஆ. சிவசுப்ரமணியம் எழுதிய ‘வரலாறும் வழக்காறும்’ நூலிலிருந்து ஒரு பகுதி.

வடமொழியில் ‘ஸ்மிருதிகள்’ என்ற பெயரில் 128 நூல்கள் உள்ளனவாக கானே என்பவர் குறிப்பிடுவார். இவை நீதி  நூல்கள் அல்லது சட்ட நூல்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால், அம்பேத்கர் (1995 ஏ:243) இக்கருத்தை மறுத்து,

ஸ்மிருதிகள் சட்டப் புத்தகங்கள் என்று கூறப்படுகின்றன. இது அவற்றின் உண்மையான தன்மையை மறைக்கிறது. உண்மையில் அவை பார்ப்பனர்களின் உயர்ந்த நிலையையும், அவர்களின் சிறப்பு உரிமைகளையும் வலியுறுத்திக் கூறும் புத்தகங்களாகும்.

என்று குறிப்பிடுகிறார். பின்வரும் மனுதர்ம சுலோகங்கள் அம்பேத்கரின் கருத்தை உறுதி செய்கின்றன.

மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றியமையினாலும், படைக்கப்பட்ட யாவற்றிலும் அந்தணன் சிறந்து விளங்குகின்றான். (1:93)

சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார். (1:94)

பிராமணப் பிறவியென்பது உண்மையில் தருமங்களின் வடிவமாக இருப்பது. தரும விளக்கத்தைப் புலப்படுத்தா நின்ற பிராமணன் ஞானத்தில் முக்தியடைகிறான். (1:98)

மாந்தரின் சமய சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே உயிரினங்கள் அனைத்தினும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான். (1:99)

இவ்வாறு பார்ப்பனர் சிறப்பைக் கூறும் மனு, அவர்களுக்குக் கொலைத் தண்டனையில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்பதைப் பின் வருமாறு வலியுறுத்தியுள்ளார்:

ஆசார்யன், ஓதுவித்தவன், தாய், தகப்பன், குரு, அந்தணன், பசு, முனிவன் இவர்கள் தனக்கு எதிர் செய்தாலும், தான் அவர்க்கு எதிர் செய்யக் கூடாது.  (மனு 4:162)

அந்தணனைக் காயப்படுத்தாமல் துரத்தி விட வேண்டுமென்றும் மனு கூறியுள்ளார். சிலர் அவனுடைய ஆடையைப் பறித்துக் கொண்டு, அவன் வீட்டை இடித்துவிட்டு, அவனையும் ஊரைவிட்டு ஓட்ட வேண்டியதென்று அபிப்பிராயப்படுகின்றனர். (மனு 8:124)

பிராமணனுக்குத் தலையை மொட்டை அடித்தால் போதும். அதுவே உயிர்த் தண்டனைதான். ஏனையோருக்கு உயிர்த் தண்டனையே உண்டு. (மனு 8:378)

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக. (மனு 8:379)

‘எத்தகைய பாவத்தைச் செய்த போதிலும் பிராமணனை அரசன் கொல்லக் கூடாது’ என்ற இம் மனுதர்ம சுலோகத்தைத் தன் கட்டுரையென்றில் மேற்கோளாகக் காட்டும் அம்பேத்கர் (1995:161) பின்வரும் செய்தியை அடிக்குறிப்பாக எழுதியுள்ளார்.

இந்தப் பாதுகாப்பு 1837 வரை பிரிட்டிஷ் அரசாலும் அளிக்கப்பட்டு வந்தது. 1837 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட இந்தியக் குற்றவியல் சட்டத்தில்தான் முதன்முதலாகப் பார்ப்பனர் மரண தண்டனைக்குட்பட்டவராக்கப்பட்டனர். இந்திய சமஸ்தானங்களில் பார்ப்பனருக்கு மரண தண்டனை இல்லை என்ற பாதுகாப்பு நீடிக்கின்றது. இந்தச் சலுகை அளிப்பதை எதிர்த்த பொது மக்களைச் சமாதானப்படுத்த திருவாங்கூர் சமஸ்தானத்தின் பார்ப்பனரான திவான் ஒரு சாமர்த்தியமான வழியைக் கண்டார். பார்ப்பனர்களுக்குத் தூக்குத் தண்டனை அளிப்பதைத் தவிர்ப்பதற்காகத் தூக்குத் தண்டனையையே ஒழித்துவிட்டார்.

பிரம்மஹத்தியைவிடப் (பார்ப்பனரைக் கொலை செய்வது) பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது.  (மனு 8 : 380)

பிரம்மஹத்தி செய்தவன், கள் உண்ட பிராமணன், அந்தணன், பொன்னைத் திருடியவன், குரு மனைவியைக் கூடியவன் இந் நான்கு பேரும் பெரும் பாவிகள். (மனு 9:235)

பிரம்மஹத்தி முதலியன புரிந்த பெரும்பாவிகளுடன் கூட்டுறவாடினாலும், பிறன்மனை கூடினாலும், அந்தணன் பொருளை அபகரித்தாலும் இவற்றினால் பிரம்மராக்ஷஸனாகப் பிறப்பான். (மனு 12:60)

பிரம்மஹத்தி முதலிய பெரும் பாவங்கள் செய்தோர், பல்லாயிரம் ஆண்டுகள் கொடிய நரகங்களில் உழன்று, பின்னர் இனி கூறப்படுகின்ற பிறவிகளிற் புகுவர். (மனு 12: 54)

நாய், பன்றி, கழுதை, ஒட்டை, பசு, ஆடு, சிங்கம் முதலிய விலங்கினமாகவும், பறவை, சண்டாளன், புற்கசன்  ஆகிய தாழ்ந்த மானிடப் பிறவிகளாகவும் தோற்றமுறுவர். (மனு 12:55)

அந்தணர்க் கோறல், கள்ளுண்டல், பொன்களவு, குரு மனைவியைக் கூடல் இவை தனித்தனியாகவும், ஒன்று சேர்ந்தும் ஐந்து பெரும் பாவங்கள் உண்டாகின்றன. (மனு 11: 54)

அந்தணன் ஒருவனைக் கொன்ற மற்றொரு அந்தணன், கொலையுண்டவனுடைய மண்டை யோட்டையோ, மற்றொன்றையோ கரத்தில் ஏந்தி, நாள்தோறும் ஏழு வீட்டில் பிச்சை வாங்கித் தின்று 12 ஆண்டுகள் காட்டில் குடிசை கட்டி வாழ வேண்டும். (மனு 11:72)

க்ஷத்திரியன் அந்தணனைக் கொன்று விட்டால், வில்லாளி ஒருவனால் எய்யப்பட்டு உயிரைவிடவும். அம்பால் எய்யப்பட்டு உயிரிழந்தாலும், பிழைத்தாலும், பிழை நீங்கும். அல்லது ஏரியில் தலைகீழாக மும்முறை வீழ்க. (மனு 11:73)

மூன்று வருணத்தாரும் அறிவீனத்தால் இத்தகைய குற்றமிழைத்துவிட்டால், அஸ்வ மேதம், சுவர்ஜித் கோமேதகம், அபிஜித், விஸ்வஜித், திரிவிருந்து, அகனிஷ்டித்து ஆகிய வேள்விகளில் யாதாமொன்றை இயற்ற வேண்டும். (மனு 11:74)

மனுவின் இக்கருத்து சங்க காலத் தமிழகத்திலேயே செல்வாக்குப் பெறத்  தொடங்கிவிட்டது.

நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யார்.  (புறநானூறு 43:13-14)

பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும். (புறநானூறு 34:3)

என்ற செய்யுள் அடிகள் இதற்குச் சான்றாகின்றன.

வரலாற்றில் பார்ப்பனக் கொலை

இவ்வாறு உயிர்த் தண்டனையிலிருந்து பார்ப்பனர்களுக்கு விலக்களிக்கப்பட்டதையும், பார்ப்பனக் கொலை கொடிய பாவமாகக் கருதப்பட்டதையும் வரலாற்று நூல்களும் குறிப்பிடுகின்றன.

பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தில் முதலாம் இராசராச சோழனின் அண்ணனான ஆதித்த கரிகாலன் கி.பி.965 இல் பஞ்மன் பிரமாதி ராசன், இருமுடி சோழப் பிரமாதிராசன் என்ற பார்ப்பனர்களால் கொலை செய்யப்பட்டான். அவன் இறந்து இருபது ஆண்டுகள் கழித்துத் தன் தமையனின் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து முதலாம் இராசராசன் தண்டித்துள்ளான். ஆனால், அவர்கள் பார்ப்பனர்கள் என்பதால் உடலை வருத்தும் தண்டனை எதுவும் விதிக்காமல் அவர்களின் விலை நிலங்களைப் பறிமுதல் செய்தான். பறிமுதல் செய்த நிலங்களை விற்று, அத்தொகையைக் கொண்டு காட்டுமன்னார் கோயில் என்ற ஊரில் உள்ள சிவன் கோவிலில் பார்ப்பனர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தான்.

தமிழ்நாடு அரசு, கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில், ஆங்கிலேயர் காலத்தில் சேகரித்த, ஏறத்தாழ நூற்று ஐம்பது ஊர்கள் குறித்த செய்திகள் அடங்கிய சுவடிகள் உள்ளன. அவற்றில் இருந்து இருபது ஊர்களின் வரலாற்றை எடுத்தெழுதி, ‘தமிழக ஊர் வரலாறுகள்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர். அதில் செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் சாலையிலுள் வல்லம் (வல்லக்கோட்டை) என்ற கிராமத்தின் வரலாறு இடம் பெற்றுள்ளது. அவ்வரலாற்றில் இடம் பெற்றுள் செய்தியொன்று 'பிராமண'க் கொலை தொடர்பான நம்பிக்கையைக் குறிப்பிடுகிறது.

விசய நகரத்தைச் சேர்ந்த அன்னமதேவராய தேவரின் (தேவராயர் 1, 1404-1422) ஆட்சியில் காஞ்சிபுரம் இருந்தபோது, கலியாணம்மாள் என்ற இராணி, காஞ்சிபுரம் பார்ப்பனர் சிலரை அழைத்துக் கொண்டு, இராமேஸ்வரத்திற்குத் தீர்த்த யாத்திரை சென்றாள். அங்கு கடலில் நீராடிய பின்னர் பார்ப்பனர்களுக்குத் தானம் செய்தாள். அப்போது பார்ப்பனன் ஒருவன், அக்கிரகாரம் ஒன்று நிறுவ, காஞ்சிதுக்குடியிலே உள்ள வல்லம் (வல்லக் கோட்டை) என்ற கிராமத்தை, தானமாக வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தான்.

அதனையேற்று வல்லம் கிராமத்தைச் சர்வ மானியமாக இராணி வழங்கினாள். தானம் கொடுக்கப்பட்ட கிராமமோ, திருவரங்கத்து ஈசுவரர் கோவிலுக்கு ஏற்கனவே தேவதானமாக வழங்கப்பட்டிருந்தது. தானம் பெற்ற பார்ப்பனர்கள் இனி கோவிலுக்கு வரி தராமல் தங்களுக்கே வரி தர வேண்டுமென்று கூறினர்.

இதனால் கோவில் நிர்வாகிகள், குருக்கள், மேளவாத்தியக்காரர், தேவதாசிகள் ஆகியோர், விஜயநகரம் சென்று மன்னனிடம் முறையிட்டனர். அதையேற்ற, தேவதானக் கிராமத்தை பார்ப்பனர்களிடம் இருந்து மீட்டுத் தருவதற்காக, மல்ல செட்டிகள் என்போரை மன்னன் அவர்களுடன் அனுப்பி வைத்தான்.

அதன்படி மல்லச்செட்டிகள் வந்தபோது, தமக்கு ஆதரவாகச் சிலரைத் திரட்டிக்கொண்டு, பார்ப்பனர்கள் அவர்களை எதிர்த்தனர். அதன் பின்னர் நடந்ததை ஓலைச் சுவடி பின்வருமாறு குறிப்பிடுகிறது.

.... வந்திருக்கிற மல்லசெட்டிகள் பெலசாலிகளானபடியினாலே கையிலே இரும்பு உலக்கையையெடுத்துக் கொண்டு 'பிராமணாளை' துரத்தி துரத்தி அடித்தார்கள்.

'பிராமணாளெல்லாரும்' பயந்து ஓடிப் போயி, அதிலொரு பிராமணன் வைக்கல்ப் (வைக்கோல் போர்) போருக்குள்ளே புகுந்து கொண்டான். அவனை ஒரு மல்லன் இரும்பு உலக்கையினாலே அடிச்சயிடத்திலே அந்த பிராமணன் ம(ண்)டை நசுங்கி செத்துப் போனான்.

அந்த தோஷம் அந்த மல்லனுக்கு வந்தபடியினாலே அந்த  தோஷம் போ(கிற) நிமிர்த்தியாத்தம் வழிமுறையாக அந்த மல்லனாகப்பட்டவன் வல்லம் திருவரங்கத் தீஸ்வரர் கோயிலுக்கு யீசானிய திக்கிலே சிவபிரதிஷ்ட்டை பண்ணி வைத்தான்.

மல்லசெட்டிகளை அழைத்து வந்த கோவில் நிர்வாகிகளும், குருக்களும்கூட 'பிராமணக் கொலை'ப் பாவத்திற்கு ஆளாவார்கள் என்று

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரிடம் (1623-1656) படைத் தளபதியாக இருந்த இராமப்பையன் என்ற பார்ப்பனன் இராமநாதபுரத்தை  ஆண்டிருந்த சடைக் கத்தேவன் மீது படை எடுத்து அவனைச் சிறைப் பிடித்தான். 17 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த இந்நிகழ்வை மையமாகக் கொண்டு ‘இராமப்பையன் அம்மானை’ என்ற கதைப் பாடல் உருவாகியுள்ளது. இராமப் பையனின் படையெடுப்பைக் கேள்விப்பட்ட சடைக்கத்தேவன்.

பின் குடுமி தன்னில் பேருலகு தானறிய
தேங்காயைக் கட்டி சிதற அடிக்காவிட்டால்
என்பேர் சடைக்கனோ?

என்றும், அவனது  மருமகன் வன்னியன்,

பார்ப்பான் குடுமியிலே பாங்குடனே
தேங்காயைக் கட்டி அடிப்பேன்

என்றும் வஞ்சினம் கூறியதாக இக்கதைப் பாடல் குறிப்பிடுகிறது. இதற்கு நேர்மாறாக,

அரக்கர் குலத்தை அனுமார்
அறுத்தாப்போல்
மறக்குலத்தை நானும் மாய்த்துக்
காவறுப்பேன்

என்று இராமப்பையன் வஞ்சினம் கூறுகிறான்.

‘பிராமணனுக்குத் தலையை மொட்டை  அடிப்பதே உயிர்த் தண்டனை யாகும்’ என்ற மனுதர்ம (8:378) சுலோகத்தின் தாக்கத்தினால், படையெடுத்து வந்தவன் பார்ப்பனன் என்றால், போரில் அவனைக் கொல்லாமல் குடுமியை அவமதித்தால் போதுமானது என்ற நம்பிக்கை நிலவியுள்ளது. சடைக்கத் தேவன், வன்னியன் ஆகிய இருவரது கூற்றுகளும் இதை வெளிப்படுத்துகின்றன.

மேலும், குற்றங்களுக்காக விதிக்கப்படும் தண்டனைகள் சாதி அடிப்படையில் வேறுபட்டிருந்தன. இதை ஜடாவர்மன் என்ற திரிபுவன சுந்தர பாண்டியன் காலத்தியக் கல்வெட்டொன்றில் (கி.பி.1263) இடம் பெற்றுள்ள செய்தியின் வாயிலாக அறியலாம்.

செங்கல்பட்டு மாவட்டம் ஆதி நாயக சதுர்வேதி மங்கலம் (உதிப்பாக்கம்) ஊரைச் சேர்ந்த ஆவணச் செட்டு ஐயன் என்பவனுடைய ஐந்து மகன்கள், ஆயுதம் ஏந்தி பார்ப்பனரை  வெட்டியும், காதுகளை அறுத்தும், அவமதித்தும், களவு செய்தும், கால்நடைகளை அழித்தும் விற்றும் வந்தனர்.

இது குறித்துப் பார்ப்பனர்களும் நாட்டவரும், நகரத்தாரும் முறையிட்டதன் அடிப்படையில், அவர்களுடன் சண்டையிட்டு அவர்களைப் பிடித்துச் சிறையில் இட்டதுடன் அவர்களது உடைமைகளையும் பறிமுதல் செய்து விற்று கோவிலுக்கு வழங்கினர். இச் செய்தியைக் குறிப்பிடும் கல்வெட்டானது அவர்களைத் தண்டிப்பது குறித்து, ‘கீழ்சாதிகளைத் தண்டிக்கும் முற்றமை களிலே’ என்று குறிப்பிடுகிறது.

‘கீழ் சாதியினர்’ எவ்வாறு தண்டிக்கப் பட்டனர் என்பதற்கு திரிபுவனச் சக்கர வர்த்தி குலசேகர தேவனின் 13 ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு ஒன்று சான்று பகர்கிறது. பார்ப்பனன் ஒருவனைக் கொன்றமைக்காக, கொன்றவனை எருமைக் கடாவின் காலில் கட்டி இழுத்துச் செல்லச் செய்து தண்டித்தனர். இதனால் அவன் இறந்துபட, அவன் நினைவாக உணவு வழங்க, திருப்பத்தூர் (புதுக் கோட்டை மாவட்டம்) திருத்தொண்டத் தொகையான திருமடத்திற்கு நிலம் வழங்கியுள்ளனர்.

அறச் செயல்களைக் கூறும் கல்வெட்டுகள் சிலவற்றின் இறுதியில் அதைச் சிதைத்தவர்களுக்கு ஏற்படும் பாவம் குறித்துப் பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது:

‘..... பிரம்மஹத்தியவதை பண்ணின தோஷத்திலும்

... .... போகக் கடவாராகவும்’   

‘.... கங்கைக் கரையிலே காராம் பசுவை யும் பிராமணனையும் கொன்ற தோஷத் திலே போகக் கடவாராகவும்’.

மேற்கூறிய கல்வெட்டு வரிகள் பார்ப்பனக் கொலை என்பது மிகப் பெரிய பாவம் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன.

பல்லவர் காலத்தில் பரவலாக அறிமுகமான பிரமதேயக் கிராமங்கள் சோழர், பாண்டியர் ஆட்சியில் மேலும் அதிகரித்தன. அதேநேரத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டதால் நிலங்களை இழந்தவர்கள் அந்த நிலங்களைப் பறிக்கக் கூடாது என்பதற்காக கீழ்க்கண்டவாறு அச்சமூட்டினர்.

பிராம்மணன் சொத்து கொடிய விஷம்;
வேறுஎந்த விஷமும் விஷமாகாது. விஷம்
ஒருவனைக் கொல்லும்; பிரம்ம சொத்தோ
புத்திர பௌத்திரர்களையும் (மகன், பேரன்களையும்) கொல்லும்

என்ற வரிகள் பிரம்ம தேயத்தைக் குறிக்கும் செப்பேடுகளில் இடம் பெற்றுள்ளன.

Pin It