திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “மனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாடு” ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் எழுச்சியோடு நடைபெற்றது. மாநாட்டில் “குத்தூசி குருசாமி” நினைவு பந்தலும், அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி பெயரால் எழில் மிகுந்த அரங்கமும் மாநாட்டின் உணர்வுக்கு சாட்சியாக மிளிர்ந்தது.

23.12.12 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணியளவில் பல்லடம் சுயமரியாதைக் கலைக் குழுவினரின் பறை முழக்கத்துடன் மாநாடு எழுச்சியோடு துவங்கியது. அதனைத் தொடர்ந்துகாலை 10.15 மணியளவில் தலித் சுப்பையா குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மனு தர்ம சிறையினிலே

மடிந்தஎம் பெண்களின்

கண்ணீரைத் துடைத்த

மாமேதை யாரம்மா?

அவர், கலகம் செய்த வீரர் பெரியார்தானம்மா...

எனும் தலித் சுப்பையாவின் கணீர்குரல் தோழர்களை சிலிர்த்தெழ வைத்தது.

11.15 மணியளவில் கழகக் கொடியினை மாநில வெளியீட்டுச் செயலாளர் சூலூர் நா. தமிழ்ச்செல்வி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் இரா. அதியமான் முன்னிலையில் தோழர்களின் முழக்கத்திற்கு இடையே ஏற்றி வைத்தார். அய்யாவின் மண்ணில் கழகக் கொடி பட்டொளி வீசி பறந்தது.

11.30 மணியளவில் மனு சாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாடு தொடங்கியது. வந்திருந்த அனைவரையும் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் கோபி. இராம. இளங்கோவன் வரவேற்றார். கழக வெளியீட்டுச் செயலாளர் சூலூர் நா. தமிழ்ச் செல்வி உரையைத் தொடர்ந்து, ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா. அதியமான் மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தனது உரையில், “இந்த மாநாட்டில் எனக்கு பேச வாய்ப்பளித்தது, மிகுந்த மகிழ்வை அளிக்கிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எனக்கு டாக்டர் பட்டம் அளிப்பதாக சிலர் என்னிடம் சொன்னார்கள். இன இழிவுப் பட்டத்தை ஒழிப்பதற்காக நாங்கள் போராடுகிறோம். எனக்கு எதற்கு டாக்டர் பட்டம் என்று மறுத்து விட்டேன். இம்மாநாட்டில் பேசுவதற்கு அளித்த இந்த பெரும் வாய்ப்புதான் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பட்டமாக நான் கருதுகிறேன்” என்றார்.

கருத்தரங்கம்

தொடர்ந்து, “பெரியாரியல் எதிர்கொள்ளும் சவால்கள்” எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது. ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பொதுவுடைமை, பகுத்தறிவு, தமிழர் உரிமைகள் ஆகிய அய்ந்து தலைப்புகளில் கழகத்தின் முன்னணி தோழர்கள் உரையாற்றினர்.

‘ஜாதி எதிர்ப்பு’ எனும் தலைப்பில் முனைவர் ஜீவானந்தம் உரையாற்றினார். அவர் தனது உரையில், “சமூகத்தில் வரும் சவால்களை எல்லாம் எதிர்கொள்வது மட்டுமல்லாமல், அதில் வெற்றிப் பெறுவது ‘பெரியாரியல்’ மட்டுமே மனு சாஸ்திரப் பார்ப்பனியம் சர்வதேச சக்தியாக உருவெடுத்து நிற்கிறது” என்றார்.

‘பெண் விடுதலை எனும் தலைப்பில் சென்னை டார்வின் தாசன் தனது உரையில், “இந்த நாட்டில் பெண்களை இழிவுபடுத்துவதில் மனு சாஸ்திரம் தான் முதலிடம் வகிக்கிறது” என்பதை ஏராள சான்றுகளுடன் விளக்கினார்.

‘பொதுவுடைமை” எனும் தலைப்பில் பேசிய திருச்சி புதியவன், “பொதுவுரிமைதான் இந்த சாதியமயமான சமுதாயத்தில் பொதுவுடைமை வருவதற்கான முன் நிபந்தனை என்று பெரியாரியம் கூறுவதை எடுத்துக்காட்டி, பிறவி முதலாளி, கல் முதலாளிகள் அசைக்க முடியாத சக்திகளாக இருப்பதை சுட்டிக்காட்டினார். தற்போது சிறப்பு பொருளாதார மண்டலம், சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு போன்ற பிரச்சினைகள் நம் முன்னே நிற்கும் சவால்கள் என்றும் அதனை முறியடிக்க பெரியாரியம் போராடும்” என்றும் எடுத்துரைத்தார்.

‘பகுத்தறிவு’ எனும் தலைப்பில் திண்டுக்கல் விஜி, தனது உரையில், “பகுத்தறிவு வளர தடையாக இருப்பது ஜாதி மற்றும் மூட நம்பிக்கை என்றும் அதனைத் தூக்கி பிடிக்கும் மனுசாஸ்திரம் எரிக்கப்பட வேண்டும். மூட நம்பிக்கை அனைத்தும் பெண்களை வைத்தே இச்சமூகத்தில் பரப்படுகின்றது எனக் குறிப்பிட்டார்.

‘தமிழர் உரிமைகள்’ எனும் தலைப்பில் பேசிய ஈரோடு இராம. இளங்கோவன் தமிழ்த் தேசிய வாதிகள் பேசிவரும் தமிழர் உரிமைக்கும் பெரியாரியல்வாதிகள் பேசும் தமிழர் உரிமைகளுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. பெரியாரியல் சொல்வது ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான தமிழர் உரிமைகளை மீட்டெடுப்பது ஆகும். காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகத்திலுள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருந்து தமிழகத்திற்குரிய நீரினை தர மறுக்கிறார்கள். ஆனால், தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் பிளவுபட்டு ஒற்றுமை இல்லாமல் சிதறி கிடக்கின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மன்மோகன்சிங் தமிழர்களை இளித்தவாயர்களாக கருதி செயல்படுகிறார். தமிழர் உரிமைகளின் மூல எதிரியே இந்திய தேசியம் எனும் பொய்யான அமைப்பாகும். தந்தை பெரியார் கூறியதுபோல் தனித் தமிழ்நாடு ஒன்றே நமது உரிமைகளை மீட்டெடுக்கும் ஒரே வழி என்றார்.

இறுதியாக, கருத்தரங்கை நிறைவு செய்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் உரையாற்றினார். “ஜாதிக்கு அடிப்படை மனு சாஸ்திரம் என்றும், அந்த மனுவின்படியே பிரிட்டிஷ் ஆட்சியில் 1772 முதல் 1860 வரை சாதி பார்த்து குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்றும், தங்கள் வசதிக்காக மனுதர்மத்தை மீறும் பார்ப்பனர்கள் தங்களுக்கு கீழே திணிக்கப்பட்ட மக்கள் மீது மட்டும் அதை சுமத்தி வருகிறார்கள். இப்போது நவீன மனுவாதிகள் - சாதியத்தை ஆதரிக்கத் தொடங்கியுள்ளதை பெரியாரியம் எதிர்கொள்ளும்” என்றும் குறிப்பிட்டார்.

பாவரங்கம்

மதியம் இரண்டு மணியளவில், “மனுவியம் புதைப்போம்! மனிதம் விதைப்போம்!” எனும் தலைப்பில் கவிஞர் இளம்பிறை தலைமையில் முற்றிலும் மகளிர் / திருநங்கை பங்கேற்ற பாவரங்கம் நடைபெற்றது.

கவிஞர்கள் சென்னை கவிமலர், சேலம் சீறிதேவி, ஈரோடு அர்ச்சனா திருநங்கை, மதுரை நீதிமலர், சேலம் தமிழ் மதி ஆகியோர் நெருப்பு வரிகளால் மனுவை சுட்டெரித்தனர்.

தொடர்ந்து பிற்பகல் 4 மணியளவில் “தடை போடும் சாஸ்திரங்களும்-தடம் காட்டும் பெரியாரியமும்” எனும் தலைப்பில் பேராசிரியர் சரசுவதி தலைமையில் உரைவீச்சு தொடங்கியது.

‘திருமணத்திற்கு முன்’ என்ற  தலைப்பில் சூலூர் வீரமணி உரையாற்றினார். தனது உரையில், “பிறப்பு, சீதனம், பெண் பேணுதல், பெயர் சூட்டல், ஜாதிக்குள் திருமணம் ஆகிய அய்ந்து கட்டங்களில் மனு சாஸ்திரம் எப்படி திருமணத்திற்கு முன்பாக தடைபோடுகிறது” என்பதை விளக்கமாகக் குறிப்பிட்டார்.

‘திருமணத்திற்குப் பின்’ என்ற தலைப்பில், பொள்ளாச்சி விஜயராகவன் உரையாற்றினார்.

‘கல்வி-தொழில்’ எனும் தலைப்பில் உரையாற்றிய பழனி நல்லதம்பி, “சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்ற மனுசாஸ்திரத்தை எரித்து புதைக்க வேண்டும். அதுதான் நமது இலக்கு” என்றார்.

‘உணவு, உடை’ எனும் தலைப்பில் உரையாற்றிய சேலம் கோகுலக் கண்ணன், “ஒரு மனிதன் தான் பிறப்பு முதல் இறப்பு வரை எப்படி வாழ வேண்டும் என்பதை சாஸ்திரம் எழுதி வைத்திருக்கிறது. பெரியார் தான் ஆணிற்கும், பெண்ணிற்கும் உடைகளில் வித்தியாசம் இல்லாமல் சரிசமமாக உடை அணிய வேண்டும்” என்பதை வலியுறுத் தினார். ஒரு காலத்தில் நாடார் இனப் பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப்பட்டது. நம்ம வர்கள் தோளில் துண்டு போட மறுக்கப்பட்டார்கள். இந்த நிலையை மாற்றியதில் பெரியார் இயக்கத்துக்கு பெரும் பங்கு உண்டு” என்றார்.

‘வாழ்விடம்-சொத்து’ எனும் தலைப்பில் உரையாற்றிய விழுப்புரம் அய்யனார், “தருமபுரியில் நடைபெற்ற கலவரத்திற்கு மனுசாஸ்திர சிந்தனையே அடிப்படைக் காரணம் என அனைவரும் பேசத் தொடங்கிவிட்டனர். இது பெரியாரியலுக்குக் கிடைத்த வெற்றியாகும். கிராமப்புறங்களில் அன்று இருந்ததுபோல் இன்னமும் ஊர்-சேரி என்றும், தனி சுடுகாடு, இரட்டைக்குவளை முறை என்ற அவலமும் உள்ளது. இவற்றிற்கு மனு சாஸ்திரம் தான் காரணம் அதனை எரித்தால் தான் இன இழிவு ஒழியும்” என்றார்.

‘குற்றம்-தண்டனை’ எனும் தலைப்பில் உரையாற்றிய அன்பு தனசேகரன், “எல்லோருக்கும் ஒரே தண்டனை என்பது இந்திய குற்றவியல் சட்டம். ஆனால், மனுசாஸ்திரத்தில் பார்ப்பானுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி என பாகுபடுத்துகிறது. ‘சம்பூகன்’ எனும் ‘சூத்திரன்’ நேரடியாக கடவுளை வணங்கியதால் பார்ப்பனக் கூட்டம் ராமனைக் கொண்டு வஞ்சகமாக கொலை செய்தது. ஏகலைவன் சூத்திரன் என்பதால் வில் வித்தைகற்றதற்காக கட்டை விரலை பலி கேட்டது பார்ப்பனியம். மலையப்பன் என்கிற ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த தஞ்சை பகுதியைச் சேர்ந்த அதிகாரிக்கு எதிராக பார்ப்பன நீதிபதி ஒருவர் தனிப்பட்ட முறையில் தீர்ப்பில் எழுதியதற்காக பெரியார் கொதித் தெழுந்தார் என்பதற்காக, பெரியார் மீது பார்ப்பனக் கூட்டம் வழக்குத் தொடுத்தனர். அப்போது நீதிமன்றத்தில் பெரியார் அழகாக சொன்னார், ‘சிறுத்தை தனது குணத்தை மாற்றிக் கொண்டாலும், பார்ப்பான் தனது புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான்’ என்றார்.

இறுதியாக பேசிய பேராசிரியர் சரஸ்வதி, தமது உரையில், “மனு வலியுறுத்தும் பெண்ணுரிமை, அது சமூகத்தில் செலுத்தி வரும் செல்வாக்கு, மனு உருவெடுத்த வரலாறுகளை விரிவாக விளக்கினார். (உரை பின்னர்)

சமூக ஆய்வரங்கம்

மாலை 5 மணியளவில் சமூக ஆய்வரங்கம் தொடங்கியது.

“ஊடுருவி நிற்கும் சாதியம்’ எனும் தலைப்பில், வழக்குரைஞர் ப.பா. மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில், ‘காவல் துறையில்’ எனும் தலைப்பில் ‘எவிடென்ஸ்’ கதிர், ‘இணைய ஊடகங்களில்’ எனும் தலைப்பில் ‘கீற்று இரமேஷ்’, ‘காட்சி ஊடகங்களில்’ எனும் தலைப்பில் வழக்குரைஞர் பாண்டிமாதேவி, ‘அச்சு ஊடகங்களில்’ எனும் தலைப்பில் திருமுருகன் காந்தி, ‘அரசியல் கட்சிகளில்’ எனும் தலைப்பில் வழக்கறிஞர் இரஜினிகாந்த் ஆகியோர் ஆழமான கருத்துகளை முன் வைத்தனர். பின்னர் வழக்குரைஞர் ப.பா. மோகன் சிறப்புரையாற்றினார்.

வேர் விடும் விழுதுகள்

மாலை 6 மணியளவில் ‘வேர் விடும் விழுதுகள்’ எனும் தலைப்பில் கழகக் கொள்கைக் குடும்பங்களின் குழந்தைகள் நிகழ்த்தும் இயல், இசை, கூத்து சிறப்புடன் நடைபெற்றது.

இளம் தோழர் அருள்மொழி, “ஒரு தாய் தனது குழந்தைக்கு தாலாட்டுப் பாடி, சுயமரியாதை உணர்வை எப்படி ஊட்டுகிறாள்” என்பது குறித்தப் பாடலையும், “ஒரு ஏழைப் பள்ளி மாணவி தனது குடும்பத்தின் வறுமையும், இயலாமையும் விளக்கி அன்புத் தாய்க்கு மகள் எழுதும் கடிதம்” என்ற பாடலையும் பாடினார்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம்-கோகிலா ஆகியோரின் மகன் கிரி, பெரியார் வேடம் அணிந்து, பழமைவாதிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பெரியார் மொழியில் விடையளித்தார்.

ஈரோடு மாவட்டம் ஜெயக்குமார்-அம்பிகா ஆகியோரின் மகன் ஆதி, பெரியார் வேடம் அணிந்து பேசினார். மேட்டூர் சக்திவேல் -அனிதா ஆகியோரின் மகள் அறிவுமதி, பெரியாரின் இன இழிவு ஒழிப்பு தொண்டு குறித்து உரையாற்றினார். ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் மகன் இந்திர பிரியன், பெரியார் குறித்து கவிதை வாசித்தார்.  கவுந்தம்பாடி வீரக்குமார்-சகிதா ஆகியோர் மகன் வினித், பகுத்தறிவு பாடல் ஒன்றைப் பாடினார். ஈரோடு மணிகண்டன்-கவுசிகா ஆகியோரின் மகள் மதுமிதா, ‘பெரியார் எனும் பெரும் நெருப்பு’ எனும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.

மணிகண்டன்-கவுசல்யாதேவி ஆகியோர் மகள் ஜனனி, மேட்டூர் ராஜசேகர் மகள் மதி, கோபி ரகுநாதன்-கிருஷ்ணவேணி மகன் அறிவுமதி, மேட்டூர் ராஜேந்திரன்-கவிதா மகள் சினேகா, கபிலன் ஆகியோர் பெரியார் குறித்து உரையாற்றினர்.

பின்னர், தூத்துக்குடி சிறுவர்கள் அகராதி புவியரசு, புகழேந்தி சிறப்பாக சிலம்பம் ஆடினர். தூத்துக்குடி புவியரசு மிக வேகமாக வாள் சுழற்றி பிரமிக்க வைத்தார்.  கோவை தோழர் வசந்தகுமார் மகள்கள் தமிழ் ஈழம், ஓவியா - பாம்புகளை கழுத்தில் போட்டு விளையாடியது அனைவரையும் கவனிக்க வைத்தது. திருப்பூர் பெரியார் பிஞ்சுகள் பரமேசு, மான்மதி, இளமதி உள்ளிட்ட குழுவினர் பெரியார் குறித்தப் பாடலுக்கு சிறப்பாக நடனமாடினர். தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார், கலைநிகழ்ச்சி நடத்திய குழந்தைகளை பாராட்டினார்.

ஜாதி மறுப்பு திருமணங்கள்

முதல் நாள் மாநாட்டின் முத்தாய்ப்பாக இரவு 9 மணியளவில் மாநாட்டு மேடையில் மூன்று ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணங்கள்நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் சாலை அத்திக்கோம்பையில் வசிக்கும் கருப்பாயி-பன்னீர்செல்வம் ஆகியோரின் மகன் அனந்தராசு விற்கும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சாண்டலர்புரத்தில் வசிக்கும் மரியம்மாள்-ஜோசப் பாண்டி ஆகியோரின் மகள் அனிதாவிற்கும் மண விழா நடைபெற்றது. இது சாதி மறுப்புத் திருமணம்.

இரண்டாவதாக, சேலம் மாவட்டத்தில் மேட்டூர் வட்டம் கொளத்தூர் ஒன்றியம் செட்டியூரில் வசிக்கும் தேவகி-ஈஸ்வரன் ஆகியோரின் மகன் சத்யமூர்த்திக்கும், கோவை நகரம் கிருஷ்ணாபுரம், வடக்கு வீதியில் வசிக்கும் பிரேமா-குட்டி கிருஷ்ணன் ஆகியோரின் மகள் ரம்யாவிற்கும் ஜாதி மறுப்பு திருமணம் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.

சத்யமூர்த்தி-ரம்யா தம்பதியினர், தங்கள் மணவிழாவையொட்டி மாநாட்டு நிதியாக ரூ.10000 கழகத் தலைவரிடம் வழங்கினர்.

மூன்றாவதாக - திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு, கோவிந்தாபுரம் உன்னிக் கிருஷ்ணன்-சத்யபாபா ஆகியோரின் மகன் பிரசாத் திற்கும்; திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் வட்டம் லெக்கையன் கோட்டை அம்பேத்கர் நகர் காளியப் பன்-கனகுமணி ஆகியோரின் மகள் கா.கயல் விழிக்கும் மணவிழாவை பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன் நடத்தி வைத்தார்.  ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட மூன்று இணையருக்கும் முனைவர் ஜீவானந்தம் ரூ.100 அன்பளிப்பு வழங்கினார்.

இறுதி நிகழ்வாக இயக்குநர் ராஜ்குமார், இயக்கத்தில் ‘வெங்காயம்’ திரைப்படக் குழுவினரின் பேரறிஞர் அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகம், கோவை மாவட்டக் கழக புரவலர், மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் தலைமையில் சிறப்புடன் நடந்தது.

ஈரோடு சண்முகப்பிரியன் நன்றி கூற முதல்நாள் மாநாட்டு நிகழ்வு இரவு 11.30 மணியளவில் நிறைவடைந்தது.

டிசம்பர் 24 - இரண்டாம் நாள்

‘மனு சாஸ்திர எரிப்பு’ப் போராட்ட விளக்க மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் காலை 9 மணியளவில் தொடங்கியது. துவக்கத்தில் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இது மேட்டூர் கழகத் தோழர்களே நடத்தும் இசைக் குழுவாகும்.

தொடர்ந்து சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கொளத்தூர் குமார் தலைமையில்  வீதிநாடகம் தொடங்கியது. அவர் தனது உரையில், “இந்த வீதி நாடகக் கலைக்குழு தமிழகம் முழுவதும் பெரியாரியல் கருத்துகளை சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு சிந்தனை, பெண்ணடிமை ஒழிப்பு கருத்துகளை மக்களிடம் ஒரு பரப்புரை இயக்கமாக கொண்டு சேர்க்கும்” என்று குறிப்பிட்டார்.

வீதி நாடகத்தை சென்னை மு.செல்லையா முத்து சாமி தொடங்கி வைத்தார். நாடக ஒருங்கிணைப் பாளர் குமரேசன், இளம் பிள்ளை சந்திரசேகரன், கொளத்தூர் புருசோத்தமன், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் ஆகியோர் உணர்வுபூர்வமாக மனுதர்மம் திணிக்கும் சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டினர்.

உள்ளாட்சி அமைப்புகளில்கூட தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களை நாற்காலியில் உட்காரகூட அனுமதிக்க மறுக்கும் ஆதிக்கசாதி மனப்பான்மை உள்ள சாதிவெறியர் களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக ‘வீதி நாடகம்’ அமைந்திருந்தது.

காலை சரியாக 10 மணியளவில் சமூக ஆய்வரங்கம், ‘சாஸ்திரம்-ஜாதி-சுரண்டல்’ எனும் தலைப்பில் தொடங்கியது. ஆய்வரங்கத்தில் உரை நிகழ்த்த வருகை தந்திருக்கும் பேராசிரியர்களை திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் அறிமுகப்படுத்தி தொடக்க உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, ‘பெரியாரும் மனு சாஸ்திரமும்’ எனும் தலைப்பில் பேராசிரியர் எஸ்.வி. இராசதுரை, ‘வரலாற்றில் மனு சாஸ்திரம்’ எனும் தலைப்பில் பேராசிரியர் அருணன், ‘அம்பேத்கரும் மனு சாஸ்திரமும்’ எனும் தலைப்பில் பேராசிரியர் புதுவை அன்புச் செல்வன் ஆகியோர் கருத்துகளை வழங்கினர். (உரை பின்னர்)

தொடர்ந்து சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கொழுமம் ஆதி தீட்டிய ஒயிலாட்ட பாடலை, கொழுமம் ஆதி, தீந்தமிழ், சுடரொளி, சாந்தி, சுபா, கவிதா ஆகியோர் சிறப்பாகப் பாடினர்.

பட்டிமன்றம்

பகல் 12.30 மணியளவில் பட்டிமன்றம் “அறிவியல் சாதனங்களின் வளர்ச்சி-சமுதாயத்தைச் சீர்படுத்து கிறதா? சீரழிக்கிறதா?” என்கிற தலைப்பில், கழகத் தின் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரனை நடுவராகக் கொண்டு தொடங்கியது.

‘சீர்ப்படுத்துகிறது’ என்ற அணியில், அம்பேத் இராமசாமி, கணியூர் தமிழ்ச் செல்வன், மேட்டூர் கனகா ஆகியோரும், ‘சீரழிக்கிறது’ என்ற தலைப்பில் வழக்குரைஞர் நீலவேந்தன், வெள்ளமடை நாகராசு, சென்னை பாரதி ஆகியோரும் சிறப்பாக கருத்துகளை எடுத்து வைத்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நடுவர் பால். பிரபாகரன், “அறிவியல் சாதனங்களின் வளர்ச்சி, சமுதாயத்தை சீர்படுத்தவே அதிகம் பயன்படுகிறது” எனத் தீர்ப்பளித்தார். பட்டிமன்றத்துடன் மதிய நிகழ்வு நிறைவு பெற்று, தோழர்கள் மாநாட்டு பேரணிக்கு தயாராயினர்.

பேரணி

தோழர்களின் ‘சீருடை அணிவகுப்புப் பேரணி’, மாலை 5 மணிக்கு ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜ் நடுநிலைப் பள்ளி அருகிலிருந்து தொடங்கியது. மாநாட்டுப் பேரணியை சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமையில், கோவை மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விஜயன், கழகக் கொடியினை அசைத்துத் தொடங்கி வைத்தார்.

டைகர் பாலன், பேரணிக்குத் தலைமை தாங்கி பேசியபோது, “திராவிடர் விடுதலைக் கழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இப்பேரணி, தமிழகத்தில் ஒரு புதிய சரித்திரத்தை படைக்கும்” என குறிப்பிட்டார்.

சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் பல்லடம் தோழர்கள் பறை இசை முழங்க, எடப்பாடி குழுவினரின் கொம்பு இசை அதிர வைக்க, இரு குதிரைகளில் ஈரோடு குட்டிமணி எனும் திவ்யா, ஈரோடு சுகுணா ஆகிய தோழியர்கள் கழகக் கொடியினை ஏந்தி மிடுக்குடன் வந்தனர்.

பெரியார் பிஞ்சுகள் - பெரியார், அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், இமானுவேல் சேகரன், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோர் வேடம் அணிந்து ஊர்வலத்தில் வந்தது எழுச்சியூட்டியது.

பேரணியை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன், கழகப் பொருளாளர் ஈரோடு ரத்தினசாமி, அறிவியல் மன்ற பொறுப்பாளர் திருப்பூர் சிவகாமி ஆகியோர் சத்தியமங்கலம் சாலையில் தனிமேடையில் நின்று, ஒவ்வொரு மாவட்டப் பேரணிக்கும் மதிப்பெண் போட்டு, சிறப்பான மூன்று மாவட்டங்களை தேர்வு செய்தனர்.

முக்கிய வீதிகளை கடந்து பேரணி மாநாட்டு திடலை 6.30 மணியளவில் அடைந்தது. வீதியின் இருபுறங்களிலும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று பேரணியை பார்வையிட்டனர். பேரணியில் வந்தவர்களை அரங்கில் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் எழுச்சியான பாடல்கள் வரவேற்றது.

பொது மாநாடு

போராட்ட விளக்கப் பொது மாநாடு இரவு 7 மணியளவில் தொடங்கியது. மாநாட்டிற்கு வருகை தந்த அனைவரையும் கழகப் பொருளாளர் ஈரோடு ப. ரத்தினசாமி வரவேற்று உரையாற்றினார். அவர் தமது உரையில்,

ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் போரில் திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ச்சியாக போராடும். அதற்கு பெரியாரின் கருத்துகளை பட்டி தொட்டி எங்கும் பரப்புவோம் எனக் குறிப்பிட்ட தோடு, மாநாட்டுக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி கூறினார்.

தொடர்ந்து தலைமை கழகச் சொற்பொழிவாளர் கோபி. வேலுச்சாமி, ஈரோடு வடக்கு மாவட்ட கழகத் தலைவர் நாத்திக ஜோதி, திருப்பூர் மாவட்ட தலைவர் சு. துரைசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், ஓவியா ஆகியோர் உரையாற்றினர்.

தொடர்ந்து மாநாட்டில் 7 தீர்மானங்களை முன்மொழிந்து, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் பேசினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி.சம்பத் சாதி தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைந்து நிற்கும் என்றார். (உரை பின்னர்)

மாநாட்டுப் பேரணியில் சிறப்பாக அணி வகுத்து வரும் மாவட்டத்திற்கு பரிசுகள் அளிக்கப்படும் என முன்பே தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.

இப்பேரணியில், தமிழகம் முழுவதுமிருந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, கரூர், நாமக்கல், வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர், சென்னை, காஞ்சிபுரம், கோவை, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுவை உள்ளிட்ட பகுதியிலிருந்தும் தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் நீலநிற ஜீன்ஸ் பேண்ட், கருப்புச் சட்டை சீருடை அணிந்து கழகக் கொடியுடன் சிறப்பாகப் பங்கேற்றனர்.

பேரணியில் மிகச் சிறந்த முறையில் பங்கேற்ற சேலம் மாவட்டம் முதலிடமும், சென்னை மாவட்டம் இரண்டாமிடமும், புதுச்சேரி மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்துப் பரிசினைப் பெற்றனர்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாவட்டத் திற்கு பேராசிரியர் அருணன் எழுதிய ‘காலந்தோறும் பிராமணீயம்’ எனும் நூல் தொகுப்புகளை கழகத் தலைவர் கொளத்தூர் மணி பலத்த கரவொலிக் கிடையே பரிசாக அளித்தார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னணி அமைப்பான சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் தோழர் செல்வமணி, சாதி ஒழிப்பை மையப்படுத்தி, தயாரித்துள்ள ‘ஒட்டுண்ணி’ என்ற குறும்படத்தின் குறுந்தகட்டை தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சம்பத் வெளியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பெற்றுக் கொண்டார்.

சென்னிமலை கழகத் தோழர் அழகப்பன்-சித்ரா இணையரின் மகளுக்கு ‘கனல் விழி’ என கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெயர் சூட்டினார். சுய மரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் பரமேசுவரி, மாநாட்டு நிதியாக ரூ.1000 கழகத் தலைவரிடம் வழங்கினார்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அதன் மாநில பொறுப்பாளர்கள், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தொல் திருமாவளவன் ஆகியோருக்கும் சால்வை அணிவித்தனர். மாநாடு வெற்றிப் பெற உழைத்த தோழர்களுக்கு கழகப் பொறுப்பாளர் ஈரோடு ரத்தினசாமி முன்னிலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘குடிஅரசு’ தொகுப்புகளை பரிசளித்தார்.

தாலி நீக்கம்

பெண்களின் அடிமைச் சின்னமாம் தாலியை தங்கள் கணவர் முன்பாக அகற்றும் நிகழ்வு மேடையில் நடந்தது. 

பல்லடம் விஜயன்-சாந்தி; பல்லடம் பிரகாஷ்-சுபா; உடுமலை குணசேகர்-கவிதா ஆகிய கழகக் குடும்பத் தம்பதியினர், தங்கள் தாலியை தங்கள் துணைவர்களையே வெட்டச் செய்து, அந்த தங்கத்தையும் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் கழகத்துக்கு நன்கொடையாக வழங்கினர். (தங்கத்தின் மதிப்பு 10 கிராம்)

தொல். திருமாவளவன்

தொடர்ந்து கொளத்தூர் மணி ஏப்.14 ஆம் நாள் கழகம் நடத்தவிருக்கும் மனுசாஸ்திர எரிப்புப் போராட்ட அறிவிப்பு தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். (உரை பின்னர்)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், கழகத் தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் சால்வை அணிவித்து, மனுசாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாட்டின் நோக்கத்தை விளக்கி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறைவுரையாற்றினார்.  (உரை பின்னர்) கேபி நிவாசு நன்றி கூற இரவு 11 மணியளவில் மாநாடு நிறைவு பெற்றது.
செய்தி தொகுப்பு: மன்னார்குடி காளிதாசு

Pin It