உடுமலைப்பேட்டை அருகே உள்ள கடத்தூரில் கோயில் வாசலில் இந்து முன்னணியினர் கட்டிய கொடி ஊர் பொதுமக்கள் மற்றும் சாதி ஒழிப்பு முன்னணியினர் எதிர்ப்பால் அகற்றப்பட்டது. இந்து முன்னணியைச் சார்ந்த வீரப்பன் என்பவர், ஏற்கனவே உடுமலை கழகத் தோழர் மலரினியன் மீது ஆயுத பூஜை எதிர்ப்பு துண்டறிக்கையை வழங்கியதற்காக காவல்துறையில் புகார் தந்தவர், அதே வீரப்பன் என்பவர். கடத்தூரிலுள்ள கோயில் வாசலில் அந்த ஊரில் ஒரு இந்து முன்னணியினர்கூட இல்லாத நிலையில் தனது கட்சிக் கொடிகளைக் கட்டினார். ஊருக்குப் பொதுவான கோயிலை இந்து முன்னணி கோயிலாக மாற்றுவதற்கு ஊர்ப் பொது மக்களும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொடியை வீரப்பன் அகற்ற மறுத்ததால் சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தின் கொடியை தோழர்கள் கட்டினர். நிலைமை பதட்டமானது. காவல்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். சாதி ஒழிப்பு கூட்டியக்க சார்பில் அதில் இடம் பெற்றிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் காந்தி, த.பெ.தி.க. தோழர் கதிரவன் மற்றும் ம.தி.மு.க.வினரும் பொது மக்களும் இந்து முன்னணி கொடியை அகற்றினால் தான் தங்கள் கொடியை அகற்றுவோம் என்று உறுதியுடன் கூறினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி காவல்துறையினருடன் தொலைபேசியில் இதை கண்டிப்பாகவே கூறினார். பிறகு, இரு அமைப்பின் கொடிகளும் காவல்துறை முன்னிலை யில் அகற்றப்பட்டது. கடத்தூரில் காலூன்ற முயன்ற இந்து முன்னணி முயற்சி முறியடிக்கப்பட்டது.

- நமது செய்தியாளர் காந்தி

Pin It