கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் இடிந்த கரை மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பாளையங்கோட்டையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர்  மணி, இந்த ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பு விடுத்திருந்தார். மார்ச் 23 ஆம் தேதி பாளையங்கோட்டை ஜவகர் திடலில் பெரியார் திராவிடர் கழகம் ம.தி.மு.க., நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, த.தே.பொ.க., தமிழர் தேசிய விடுதலை இயக்கம், ஆதித் தமிழர் பேரவை, பா.ம.க., எஸ்.டி.பி.அய்., தமிழ்ப் புலிகள், காஞ்சி மக்கள்  மன்றம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், இந்திய தவ்ஹித் ஜமாத், அணுஉலை எதிர்ப்பு கூட்டமைப்பு அமைப்பினரும், அணுஉலை எதிர்ப்பாளர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.

பாளையங்கோட்டையிலிருந்து இடிந்தகரை நோக்கி பேரணியாக பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் புறப்படத் தயாரானார்கள். முன்னதாக ஜவகர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, கொளத்தூர் மணி, சீமான், வன்னிஅரசு உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். பேரணிக்கு அனுமதி மறுத்து ஆயிரத்துக்கும் அதிகமான தோழர்களை போலீசார் கைது செய்தனர். பொது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவம், போலீஸ் படையை திரும்பப் பெற வேண்டும்; கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும்; கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைள் முன் வைக்கப்பட்டன.

கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்துக்கு அமெரிக்காவிலிருந்து நிதி வருவதாக குற்றம்சாட்டிய மன்மோகன் சிங் ஆட்சி, அப்படி நிதி வருவதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை என்று மாநிலங்களவையில் அறிவித்து விட்டது. இப்போது மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள், இந்தப் போராட்டத்தை நடத்துவதாக அடுத்தகட்ட பொய்யுரைகளை பரப்பி வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று விடுதலையான பிறகு, விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் வன்னியரசு, ‘தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை’ அமைப்பைச் சேர்ந்த சதீஷ், ஈரோடு தோழர் முகிலன் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்துள்ளது.

உதயகுமார் உருக்கமான உரை

போராட்டக்குழு தலைவர் உதயக்குமார், பல்லாயிரக்கணக்கான போராட்டக் குழுவினருடன் தொடர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறார். சென்னையில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநில மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம் மார்ச் 25 மாலை சென்னை லயோலா கல்லூரி அரங்கில் நடந்தபோது அதில் பங்கேற்றுப் பேசுவதாக இருந்த உதயகுமார், அலைபேசி வழியாக கூடங்குளத்திலிருந்து பேசினார். அவரது உரை, ஒலிபெருக்கி வழியாக ஒலி பரப்பப்பட்டது. 6வது நாளாக பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்த நிலையில் கூடங்குளம் மக்கள் மீது, மத்திய மாநில அரசுகள் ஏவி விடும் அடக்குமுறைகளை எடுத்துக் கூறினார். ‘நக்சலைட்டுகள்’ போராட்டமாக காவல்துறை சித்தரிக்கும் முயற்சிகளை சுட்டிக்காட்டிய அவர், பட்டினிப் போராட்டம் நடத்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிலை பற்றி மாநில அரசு எந்தக் கவலையும் எடுத்துக் கொள்ளவில்லை. போராடும் பகுதியில் பொது சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் ஆபத்துகள் உருவாகியுள்ள நிலையில் அரசு சுகாதார அமைப்புகள், திரும்பிப் பார்க்காமல் புறக்கணித்து வருவதோடு, ஒடுக்கப்பட்ட சாதி, ஏழை மக்களின் இந்த நியாயமான போராட்டத்தை அலட்சியப்படுத்தி புறக்கணித்து வருகிறது. உண்ணாவிரதம் தொடங்கியபோது, கடமைக்காக ஒரு மருத்துவரும், 4 உதவியாளர்களும் பரிசோதித்தனர். அதற்குப் பிறகு எந்த மருத்துவரும் திரும்பிப் பார்க்கவில்லை. இந்த ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த ஏழை மக்கள் அப்படியே செத்துப் போகட்டும் என்ற முடிவுக்கே அரசு வந்து விட்டதாக கருத வேண்டியிருக்கிறது. ஆனாலும், போராட்டத்தை நாங்கள் உறுதியாக தொடருவோம்” என்றார் உதயகுமார்.

தூது போனாரா ‘துக்ளக்’ சோ?

தமிழக அரசு கூடங்குளம் விவகாரத்தில் இப்படியொரு முடிவை அறிவித்ததில், பத்திரிகையாளர் சோவின் பங்கும் உண்டு என்கிறார்கள். இந்த அணு உலையை இயங்க வைப்பதையே தனது ஒரே பணியாகக் கொண்டு சுழன்று வந்த பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, தனது கடைசி அஸ்திரமாக சோவைத்தான் நம்பினாராம். இது சம்பந்தமாக அமைச்சரின் பிரதிநிதிகள் சோவைச் சந்தித்திருக்கிறார்கள். அதன் பின்னரே அரசின் நடவடிக்கையில் விறுவிறு மாற்றங்கள் ஏற்பட்டதாம்.

- ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ 29.3.2012

போராட்டத்தில் கழகத் தோழர்கள்

நெல்லையில் நடைபெற்ற இடிந்தகரை நோக்கிய பயணத்தில் பங்கேற்க தமிழகம் முழுதுமிருந்தும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஏராளமாக பங்கேற்றனர். பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், கோவை தோழர்களோடு கலந்து கொண்டார். சென்னையிலிருந்து 90 கழகத் தோழர்கள் இரயில் மூலமாக நெல்லைக்குச் சென்று போராட்டத்தில் பங்கேற்றனர்.

Pin It