912 பார்ப்பன ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த காலம் இது! நூற்றுக்கு மூவராக மட்டுமேயிருந்த பார்ப்பனர்கள் அரசு உயர் பதவிகள் அனைத்திலும் மிகப் பெரிய அளவில் இடம் பெற்று ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக, ஒரு கணக்கெடுப்பின்படி டிப்டி கலெக்டர்களில் 55ரூ, சப்ஜட் களில் 83ரூ, மாவட்ட முன்சீப்களில் 72ரூ பார்ப்பனர்களாகவே இருந்தனர். உயர் பதவியிலுள்ள பார்ப்பனர்கள் தமக்குக் கீழ் உள்ள பார்ப்பனரல்லாதாரைப் பாரபட்சமாக நடத்துதல்,பதவி உயர்வு பெறவிடாமல் அழுத்தி வைத்தல், சுய ஜாதி அபிமானத்துடன் அவர்களை இழிவுபடுத்துதல் ஆகிய கொடுமைகளைப் புரிந்து வந்தனர். இக்கொடுமைகளையும், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளியில் எடுத்துச் சொல்லக்கூட திராணி அற்றவர்களாகப் பார்ப்பனரல்லாத அரசு அலுவலர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் சென்னை ரெவின்யூபோர்டு அலுவலகத்திலும், மற்றும் சில அரசு அலுவலகங்களிலும் பணி புரிந்த சில பார்ப்பனரல்லாத எழுத்தர்களும் அலுவலர்களும் தங்கள் குறைகளை வெளியிடவும் பார்ப்பன ஆதிக்கத்தால்தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடவும், “சென்னை அய்க்கிய சங்கம்” என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் தொடங்கினர். இவர்களில், பின்னாளில் தஞ்சை டிப்டி கலெக்டராகப் பணி ஆற்றிய திரு.சரவணப் பிள்ளை, பொறியியல் துறையில் பணியாற்றிய திருவாளர்கள் ஜி.வீராசாமி நாயுடு, துரைசாமி முதலியார்,ரெவின்யூ போர்டு அலுவலகத்தில் பணிபுரிந்த திரு.எஸ்.நாராயணசாமி நாயுடு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.இவர்கள் உள்ளிட்ட ஏனைய அரசு அலுவலர்கள் அந்நாளில் சென்னையில் சிறந்து விளங்கிய மருத்துவரும்,பொதுநலப் பண்பும், தயாள சிந்தையும் உடையவருமான டாக்டர் சி.நடேச முதலியாரை அணுகி, தக்க உதவியும் ஆலோசனையும் வழங்கி ஆதரிக்குமாறு வேண்டியதற்கு இணங்க, அவரும் இம்முயற்சியைப் பாராட்டி, அனைத்து உதவிகளையும் அளித்ததோடு தாமே செயலாளராகவும் இருந்து அச்சங்கத்தை நடத்திச் சென்றார்.

சென்னை அய்க்கிய சங்கத்தின் கூட்டங்கள், சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் டாக்டர் சி.நடேசனாரின் மருத்துவமனை முன்பகுதியில் இருந்த தோட்டத்தில் நிகழ்ந்து வந்தன. இச்சங்கத்தின் முதல் சமூகப் பணி, முதியோர் கல்விக்கான வகுப்புகளை நடத்தியதே ஆகும். இரவு நேரங்களில்நடந்த இவ்வகுப்புகளில் அரசு அலுவலர்களே ஆசிரியர்களாக அமைந்து பாடம் நடத்தினர். நாளடைவில் இச்சங்கத்தில், அரசு அலுவலரோடுகூட, பொதுநல உளப்பாங்குடையோரும் உறுப்பினராகச் சேர்ந்து சமூகப் பணி ஆற்றினர். இச்சங்கம் தொடங்கி ஓராண்டுக்குள் 300 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்து பணி ஆற்றினர். நடேசனாரின் மருத்துவமனைக்கு அருகில் சில வீடுகள் தள்ளி, குடியிருந்தவரும்‘தி ஸ்டாண்டர்டு’ என்ற ஆங்கில நாளிதழின் ஆசிரியருமான திவான் பகதூர் கருணாகர மேனன், இராமராய நிங்கர் என்னும் பெயரைஉடைய பனகல் அரசர் ஆகியோர் இச்சங்கக் கூட்டங்களில் அவ்வப்போது கலந்து கொண்டதோடு தக்க ஆலோசனைகளையும் வழங்கி வந்தனர்.

அரசுப் பொதுப்பணி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ராயல் கமிஷன் முன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சர்.பி.தியாகராயர் உட்பட பல்வேறு பிரமுகர்களும், மாநில அரசு நிர்வாகத்தில் பார்ப்பன ஆதிக்கம் நிலவுவதை விளக்கியும், எல்லா வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியதின் தேவை குறித்தும் தெரிவித்தனர். சென்னை நகராட்சி மூலம் டி.மாதவன் (நாயர்) சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி ஆற்றி வந்தார்.

(அடுத்த இதழில் - 1913)

கழக வெளியீடான ‘திராவிடர் இயக்க வரலாற்றுச் சுருக்கம்’ நூலிலிருந்து

Pin It