கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் தலைவர் எஸ்.வி. உதயகுமாருக்கு வெளிநாட்டுப் பணம் ரூ.150 கோடி வந்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து, பொதுக் கூட்டங்களிலும் பேசி வந்தார். அமைச்சர் நாராயணசாமியின் இந்த அவதூறுக்கு எதிராக உதயகுமார், மத்திய அமைச்சர் நாராயண சாமிக்கு தனது வழக்கறிஞர் இராதாகிருடடிணன் வழியாக தாக்கீது அனுப்பியிருந்தார். உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் நாராயணசாமி, தொண்டு நிறுவனங்கள் வழியாக உதயகுமாருக்கு பணம் வருவதாகத் தாம் கூறவே இல்லை என்றும், தான் கூறாத ஒன்றை கூறுவதாக உதயகுமார் கூறி, தன்னை களங்கப்படுத்துவதாகவும், தனது வழக்கறிஞர் வழியாக பதில் அனுப்பியுள்ளார். இதன் மூலம் ‘வீரம்’ பேசிய நாராயணசாமி, தலைகுப்புற சரணடைந்துள்ளார்.

“உங்களுடைய கட்சிக்காரர் உதயகுமார் கூறியிருப்பதுபோல், அமைச்சர் நாராணசாமி, அவருக்கு எதிராக, எந்தப் புகாரையும் கூறவில்லை. அவர் நடத்தும் தொண்டு நிறுவனம் வரியாக ரூ.150 கோடி பெற்றதாக அமைச்சர் நாராயணசாமி ஒரு போதும் கூறவில்லை. இது அமைச்சர் நாராயண சாமிக்கு எதிரான தவறான குற்றச்சாட்டு” (My client denies that he had made totally a false allegation against your client that NGO run by your client recieved foreign funds to the tune of 1.50 crores.”) என்று நாராயணசாமி தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க ஆதரவு கொண்ட நிறுவனங்களும், சில அய்ரோப்பிய தொண்டு நிறுவனகளும் கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்துக்கு நிதி வழங்குவதாக ‘சயின்ஸ்’ என்ற இதழுக்கு அளித்த பேட்டியில் குற்றம் சாட்டி யிருந்தார். அதையே நாராயணசாமியும் இப்போது உதயகுமாருக்கு பதிலாக அனுப்பியுள்ள ‘நோட்டீசில்’ கூறியுள்ளார். மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டிய பிரதமர், இப்படி தங்களுக்கு சாதகமான கருத்துகளை தேடிப் பிடிப்பது கூடாது; மக்களை திருப்திப்படுத்த வேண்டும் என்று, ‘இந்து’ நாளேடு இது குறித்து தலையங்கம் தீட்டியுள்ளது.

சுவீடன் நாட்டில் செயல்படும் ‘அய்டியா’ என்ற தொண்டு நிறுவனம், ‘பாதிப்பிலிருந்து மீட்டெடுக் கும் ஆதார மய்யம்’ (Reconciliation Resource Centre)என்ற அமைப்பை நடத்தி வருகிறது. இந்த அமைப்பு, தெற்காசியாவில் பாதிப்புற்ற மக்களுக்கான மீட்டெடுப்பு முயற்சிகள் குறித்து 2005 ஆம் ஆண்டு மார்ச் 17-19 தேதியில் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உதயகுமாருக்கு அழைப்பு அனுப்பியது. மீண்டும் 2006 ஆம் ஆண்டு சுவீடனில் நடந்த ஆய்வுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இது தவிர, தமக்கும் அந்த நிறுவனத்துக்கும் நிதி தொடர்பான எந்த தொடர்பும் இல்லை என்று உதயகுமார் திட்ட வட்டமாக மறுத்துள்ளார். ‘அய்டியா’ அமைப்பு இது தொடர்பாக தனக்கு அனுப்பிய கடிதங்களை யும், தாம் அனுப்பிய பதிலையும் ஆவணங்களோடு  செய்தியாளர்களிடம் உதயகுமார் வழங்கினார்.

இப்போது நாராயணசாமி, வழக்கறிஞர் வழியாக அனுப்பிய மனுவில், நார்வே நாட்டின் ‘அய்டியா’ நிறுவனத்தின் உதவியோடு தமிழ்நாட்டில் செயல்படும் ‘அய்டியா’ தொண்டு நிறுவனத்துக்கு 2006-11 ஆம் ஆண்டுக்குள் ரூ.30 லட்சம் பணம் வந்துள்ளதாகவும், இந்த ‘அய்டியா’ அமைப்புக்கு வேறு வழிகளில் பணம் வந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் இயங்கும் ‘அய்டியா’ தொண்டு நிறுவனத்தை உதயகுமார் நடத்தவில்லை. ‘பாதிக்கப்பட்டோர் பாதிப்பிலிருந்து மீட்டெடுக் கும்’ ஆய்வு விவாதங்களில் பங்கேற்றதைத் தவிர பணம் தொடர்பாக தமக்கும் ‘அய்டியா’வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று உதயகுமார் சான்றுகளுடன் மறுத்து விட்டார்.

கூடங்குளம் பிரச்சனையோடு செயற்கையாக உயிரூட்டப்படும் ‘பி.டி. கத்தரிக்காய்’ எதிர்ப்புக்கும், வெளிநாட்டுப் பணம் வருவதாக அதே பேட்டியில் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியிருந்தார். பிரதமர் குற்றச்சாட்டை அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவரும், சுற்றுச்சூழல் பொறுப்பை ஏற்கனவே நிர்வகித்தவருமான ஜெய்ராம் ரமேஷ் மறுத்துள்ளார். 2010 ஆம் ஆண்டு ‘பி.டி. கத்தரிக்காய்’ உற்பத்திக்கு தாம் தடை விதித்தது, நியாயமான காரணங்களுக்கே தவிர, தொண்டு நிறுவனங்கள் வற்புறுத்தலால் அல்ல  என்று மன்மோகன் கூற்றை மறுத்துள்ளார்.

உதயகுமாருக்கு 150 கோடி ரூபாய் பணம் வந்தது என்று சவால்விட்ட சண்டியர் நாராயணசாமியோ, “நான் அப்படி கூறவே இல்லை, என் மீது அபாண்டமாக பழி போட வேண்டாம்” என்று தப்பி ஓடுகிறார். போகிற போக்கில் ‘சுவீடனி’லிருந்து பணம் வருகிறது என்கிறார். அதற்கும் உதயகுமார் ஆப்பு வைத்து விட்டார்.

பிட்டி கத்தரிக்காயை தடை செய்யும் போராட்டத்துக்கும்  வெளிநாட்டுப் பணம் தொண்டு நிறுவனங்கள் வழியாக வருகிறது என்ற பிரதமரின் புலம்பலுக்கு அவரது கட்சியைச் சார்ந்த அமைச்சரே ஆப்பு  வைத்து விட்டார்.

பிரதமரே! நீங்களும் நாராயணசாமி தரத்துக்கு இறங்கி விட்டீர்களா அய்யா!

Pin It