தளி ராமச்சந்திரன் மீது நாம் எடுக்கும் பழி தலைக்கு தலை எடுப்பது அல்ல; அந்த கும்பல் பறித்துள்ள நிலங்களை மக்களுக்கு மீட்டுத் தருவதுதான் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார்.

கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி இராயக் கோட்டையில் பழனி நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றதை பார்த்த பின்பு, தளி பகுதியைச் சார்ந்த சிலர், “இதுவரை எம்.எல்.ஏ.வின் அக்கிரமங்களை யாரும் எதிர்த்து தைரியமாக பேசியதில்லை. இந்தக் கூட்டத்தை பார்த்தவுடன் எங்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. இது போன்ற ஒரு கூட்டத்தை எங்கள் ஊரிலும் நடத்த வேண்டும் என்று கழகத் தோழர்களிடம் கேட்டுக் கொண்டனர்.” பெரியார் திராவிடர் கழகம் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ‘தளி’யில் 5.8.2012 ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட கழக அமைப்பாளர் பழனி நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

விவசாயக் கூலித் தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த கலைக்குழுவினரின் பாடல்களோடு (தெலுங்கு மொழியில்) துவங்கியது. இங்குள்ள பெரும் பான்மை மக்கள் பேசும் மொழி தெலுங்கு என்பதால், பல்வேறு அமைப்புகளில் இருந்து கலந்து கொண்டு பேசியவர்களில் பலரும் தெலுங்கு மொழியில் பேசினர். தளி சிறிய ஊராக இருந்த போதும், ஏராளமான மக்கள் திரளுடன் கூட்டம் நடைபெற்றது.

மனித உரிமைக்கான மக்கள் இயக்கத்தைச் சார்ந்தவரும், இந்தப் பகுதியில் நடந்த உண்மை அறியும் குழுவில்  இடம் பெற்றவருமான வழக் கறிஞர் சி.ஜே. இராஜன், இந்த பகுதி இராமச் சந்திரன் மற்றும் அவருடைய ஆட்களால் அடக்கப் பட்டிருப்பதை விளக்கிப் பேசினார். அதேபோல இங்குள்ள காவல்துறை மக்களுக்கு விரோதமாக நடந்து கொண்டிருப்பதை மக்கள் தெளிவாக விளக்குகிறார்கள் என்று கூறி மக்கள் சொன்ன அதிகாரிகளின் பெயர்களை பட்டியலிட்டார். மாவட்ட காவல் துறை ஆய்வாளரும், மாவட்ட ஆட்சியரும் தங்களை யார் என்று காட்டிக் கொள்ளாமல் சாதாரண மக்களைப் போல் இந்தப் பகுதியில் சென்று மக்களிடம் விசாரித்தால் இன்னும் ஏராளமான செய்திகளை அறிந்து கொள்ளலாம். அவ்வாறு செய்தால் இந்த மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் பேசினார்.

மற்றொரு உண்மை அறியும் குழுவிற்கு தலைமையேற்று  சென்றிருந்தவரும், தமிழ்த் தேச விடுதலை இயக்க பொதுச் செயலாளருமான தியாகு இந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் சேகரித்த செய்திகளை விளக்கிப் பேசினார். மேலும் கொலையுண்ட பழனி, நிலத் தரகர் வேலை செய்து அதிக அளவில் சொத்துச் சேர்த்திருப்பதாக சி.பி.ஐ. கட்சியினர் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என்று சுட்டிக் காட்டினார். பொதுவுடைமை கட்சியைச் சார்ந்த இராமச்சந்திரன் வீட்டில் வானூர்தி இறங்கும் அளவிற்கு அனைத்து வசதி மிக்க ஏற்பாடு இருப்பதையும், தோழர் பழனியின் வீட்டில் சைக்கிள் நிறுத்தும் அளவிற்குக்கூட நிழல் இல்லாத வசதி குறைவான வீடு என்பதை பாலேபுரத்தில் வந்து பாருங்கள். சென்னையில் இருந்து கொண்டு அவதூறுகளை பரப்பாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார். நீலகிரியைச் சார்ந்த கழகத் தோழர்கள் கிருஷ்ணன், சங்கர் ஆகியோர் தாங்கள் முதன்முதலாக கருப்புச் சட்டை அணிந்தபோது எம்.எல்.ஏ.வின் ஆட்கள் கிழித்து எரித்தது போன்ற பிரச்சினைகள் குறித்தும், நாங்கள் விரும்பும் கட்சிக்குச் செல்லக் கூடாதா? என்றும் கேட்டு தாங்கள் பாதிக்கப்பட்ட விவரங்களைப் பேசினர். தோழர் கிருஷ்ணன், தனது நியாயங் களையும் ஆதங்கங்களையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியபோது, கூடியிருந்த அனைத்து மக்களும் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

கூட்டத்தை கேட்டுக் கொண்டிருந்த அப்பா° அலி என்பவர், கழகத் தலைவருக்கு சால்வை அணிவித்து, கழகத்தின் முயற்சியை பாராட்டி நன்கொடையாக இரண்டாயிரம் ரூபாய்க்குரிய காசோலையை வழங்கி, தனது ஆதரவை வெளிப் படுத்தினார். பழிக்குப் பழி என்பது தலையை வெட்டுவதல்ல. நம்மிடம் ஏமாற்றி பறித்த நிலங்களை மீண்டும் நாம் திரும்பப் பெறுவது தான் உண்மையான பழிக்குப் பழி என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தனது உரையில் குறிப்பிட்டார். அவரது உரையின் சுருக்கம்:

தோழர் பழனியை கொலை செய்த கொலை யாளிகள் நிகழ்த்திய கொடூரங்கள் யாருடைய மனதில் இருந்தும் எளிதில் மறைந்து விடாது. அதுவும் ஒரு கொள்கைக்காக நின்றவரை, கொள்கைகளையும் இலட்சியங்களையும் பேசுபவர்களே கொலை செய்திருக்கிறார்கள் என்பது நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. அதுவும் தோழர் பழனி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார் என்பதை குற்றமாகக் கருதி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய இயக்கத்தைச் சார்ந்தவர்களே கொலை செய்திருக்கிறார்கள் என்பதுதான் மிகக் கொடூரமானது. பழனி ஒன்றும் காந்தி அல்ல என்றும், அவர் ஐந்து கோடி ரூபாய் பணம் வைத்திருந்தவர் என்றும், தொலைக்காட்சி யில் பேட்டி கொடுக்கும் கொள்கை “குன்று” களைக் கேட்கிறோம்! கோட்சே என்றால் கொலை செய்து விடுவீர்களா? அய்ந்து கோடி பணம் வைத்திருப்பது குற்றமா? அப்படியானால் உங்கள் இராமச் சந்திரனிடம் உள்ள கோடிகளுக்கு எத்தனை முறை வெட்ட வேண்டும்? ஒரு உயர்ந்த கொள்கையை பேசுகிற கட்சியின் பொறுப் பாளர்களே இப்படி பொறுப்பற்று பேசுகிறீர்கள் என்றால் உங்களை பேச வைக்கிற சக்தி எது? ஒரு கொடூரமான கொலையை கண்டிக்க வேண்டிய வர்கள், கொலையுண்டவரையே கேவலப்படுத்தி கொலையாளிக்கு துணை நிற்கும் உங்களுடைய மனதில் பொதுவுடைமை சிந்தனைகளை தேக்கி வைத்திருந்தால், இப்படிப்பட்ட கருத்து உங்கள் வாயில் இருந்து வந்திருக்குமா? கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை கூடினால் போதும் என்கிற கேவலமான போக்கு ஒரு முதலாளித்துவ கட்சிகளுக்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், ஒரு எம்.எல்.ஏ. இருந்தால் போதும் என்கிற எண்ணம் உங்களுக்கு இருக்கலாமா?

பணத்தை வைத்தே அனைவரையும் பணிய வைத்துவிட முடியும் என்ற கேவலமான போக்கிற்கு அந்த கட்சியே போய் விட்டதோ என்று நாம் கருத வேண்டியிருக்கிறது. இந்திய பொதுவுடமை கட்சி எங்களுக்கு தோழமை கட்சி என்று நாங்கள் ஒவ்வொரு முறையும் சொன்னோம். அந்தக் கட்சி எங்களோடு இணக்கமாக பணியாற்றுகிற கட்சி. அதில் இருக்கும் ஒரு கயவன் இப்படி செய்து விட்டான் என்றுதான் இதுவரை சொல்லி வந்தோம். ஆனால், இந்த கருத்து தவறானது என்று எங்களுக்கு உணர்த்துவதைப்போல பொது வுடைமை கட்சி நடந்து கொள்கிறது. அவர்களின் பேச்சு மேலும் நம்மை ஆத்திரப்படுத்துகிற அளவில் இருக்கிறது.

வெங்கடேசன் என்பவர் கொலை செய்யப்பட்ட போதே, அவர் எங்கள் கட்சியை சார்ந்தவரல்ல என்றாலும், ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட நிகழ்வுகளை அனுமதிக்கக் கூடாது என்று கருதி, இது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று விரும்பிய நாங்கள், ஒரு உண்மை அறியும் குழுவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். பேராசிரியர் மார்க்°, அப்போது வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார். முதல் தகவல் அறிக்கைகளை நாங்கள் சேகரிக்க தொடங்கினோம். விரிவாக சேகரித்து முடிப்பதற்குள் மார்க்°, மலேசியா செல்ல நேரிட்டது. அவர் வந்த பின்னால் சில தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளால் அது தள்ளிப் போனது. அதற்குள் தோழர் பழனியின் கொலையும் நடந்து விட்டது.

கழகத் தொடர்பு ஏற்பட்டு இந்தப் பகுதிகளுக்கு வரத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளில், ஒரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் வந்து போகிற எனக்கே இங்கு நடக்கிற கொடுமைகள் தெளிவாக தெரிகிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதியில் கட்சி நடத்துபவர்கள் - ஒரு அய்ந்து ஆண்டுகளுக்கு மேலாக இராமச் சந்திரனோடு தொடர்பு வைத்திருப்பவர்கள் சி.பி.ஐ. கட்சியினர்அவர்களுக்கு இந்த கொடுமைகள் எப்படி தெரியாமல் இருக்கும்?

நீலகிரியில் இராசப்பா என்பவரை விசாரணைக்காக, காவல் துறை அழைத்துச் செல்கிறது. அவர் மீது ஏதேனும் வழக்குப் பதியப்பட்டால் நீங்கள் உயிரோடு இருக்க முடியாது என்று நமது தோழர்களை பத்து நாட்களுக்கு முன்பு கூட சி.பி.ஐ. கட்சியைச் சார்ந்தவர்கள் மிரட்டியுள்ளார்கள். இன்று நடைபெறும் கூட்டத்திற்காக ஒட்டப்பட்ட விளம்பர சுவரொட்டிகள் அனைத்தையும் கிழித்திருக்கிறார்கள். இன்னும் இவர்கள் மாறவில்லை என்பதுதான் உண்மை. பழனியின் கொலை வழக்கில் காவல் துறையின் நடவடிக்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஆனால், உள்ளூர் காவல் நிலையங்களில் இருப்பவர்கள் இன்னும் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. இந்தப் பகுதியில் நடக்கிற எந்த ஒரு கொலை வழக்கிலும் பணத்திற்காக போலி குற்றவாளிகளே சிறை செல்வார்கள். ஆனால், இப்போது முதன்முறையாக உண்மை கொலையாளிகள் கைதாகியிருப்பது மகிழ்ச்சி தான். தொடர்ந்து புலன் விசாரணை சரியாக நடத்தப்பட்டு இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது நமது நோக்கம். இவர்களை தண்டனை பெற வைப்போம் என்று உறுதியாக நம்புகிறோம்.

ஆனால், இந்த வழக்கில் இவர்களுக்கு தண்டனை கிடைப்பது மட்டும் போதாது. முடிக்கப்பட்ட பழைய வழக்குகள் மறு விசாரணை செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் போலி குற்றவாளிகளை விடுதலை செய்து, உண்மையான கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதுவும் போதாது... நீங்கள் உங்கள் நிலங்களை இழந்து ஏமாந்தது போதும், இனியும் ஏமாறாதீர்கள். ஏமாந்தவர்கள் துணிச்சலோடு எழுந்து வாருங்கள் - உங்களின் இழப்புகளை தைரியமாகச் சொல்லுங்கள். நாம் அரசிடம் செல்வோம். நமக்கு அரசாங்கம் காவல்துறை. இவை குறித்து வேறுவிதமான கருத்து உண்டு என்றாலும், நாம் அரசாங்கத்தை வைத்துதான் இயங்க வேண்டியிருக்கிறது. இந்த அரசும், காவல் துறையும் சரியாக இயங்குவது என்பது பொது மக்களாகிய நம்முடைய கையில்தான் இருக்கிறது. இங்கு நடந்திருக்கிற அனைத்து அக்கிரமங்களையும் அம்பலப்படுத்த வேண்டும். அதுதான் மீண்டும் அக்கிரமங்கள் தொடராமல் தடுக்கும் வழி. இங்கு மற்றவர்கள் பேசும்போது ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை தெரிவிக்கும் நீங்கள் உங்களுக்கு தெரிந்த பிரச்சினைகளை சொல்லாமல் விட்டுவிடாதீர்கள். நீங்கள் தெரிவிப்பதால் ஒருவருக்கு நடந்த கொடுமை, நாளை இன்னொருவருக்கு நடக்காமல் இருக்கும், மற்றொரு நாள் உங்களுக்கும் நடக்காமல் இருக்கும். கடந்த காலங்களில் ஏவல் நாய்களாக இருந்த காவல் துறையினர் இப்போது திருந்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக திருந்தும் வரை நாம் விடப் போவதில்லை. காவல் நிலையத்தில் சரியான நடவடிக்கை இல்லை என்றால், காவல் நிலையம் முன்பு திரண்டு போராடுகிற துணிவு ஏற்பட வேண்டும். பழிக்குப் பழி வாங்குவோம் என்ற கருத்து பலரிடம் இருக்கலாம். ஆனால், அது எங்களிடம் இல்லை. பழிக்குப் பழி என்பது இராமச்சந்திரனின் தலையை வெட்டுவதல்ல. நம்மிடம் ஏமாற்றி பறித்த நிலங்களை மீண்டும் நாம் திரும்பப் பெறுவது தான் உண்மையான பழிக்குப் பழி. நம் வேண்டுகோளை ஏற்று மனித உரிமைக்கான மக்கள் இயக்கம் போன்றவர்கள் உதவ முன் வந்துள்ளார்கள். ஓய்வு பெற்ற நீதிபதிகளையும், துணை வேந்தர்களையும் அழைத்து வந்து இந்தப் பகுதியில் விரைவில் பொது விசாரணை நடத்துவதற்கும் தயாராக உள்ளார்கள். அதற்கென ஒரு அலுவலகம் அமைக்கப்படும். அந்த அலுவலகத்தில் நீங்கள் கொடுக்கும் ஆவணங்களை திரட்டி முறையான நடவடிக்கைகள் எடுக்க தயாராக இருக்கிறார்கள். அப்போது நீங்கள் உண்மையை சொல்ல முன் வாருங்கள். நடந்து முடிந்த இந்த கொடுஞ்சாவு, ஆதிக்கத்திற்கான கொடுஞ்சாவாக முடியட்டும். அதுதான் தோழர் பழனிக்கு நாம் செலுத்துகிற உண்மையான அஞ்சலி, உண்மையான இரங்கல், உண்மையான வீர வணக்கம். அனைவரும் ஒன்று திரண்டு வாருங்கள். இந்த ‘தளி’ நாட்டை, சுதந்திர நாடாக மாற்றுவோம் - என்றார் கொளத்தூர் மணி.
இந்த நினைவேந்தல் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஆந்திர மாநில விவசாய கூலித் தொழிலாளர் சங்கத் தலைவர் கோட்டையா, தமிழக மக்கள் புரட்சிக் கழகம் அரங்க. குணசேகரன், ஆந்திராவை சார்ந்த கிஷோர் பாபு, பெங்களூர் கலைச் செல்வி, சி.பி.அய். (எம்.எல்) விந்தை வேந்தன், காஞ்சி மக்கள் மன்றம் மேகலா, தளி விவசாயக் கூலித் தொழிலாளர் சங்கம் கிருஷ்ணப்பா, தமிழக மக்கள் விடுதலை முன்னணி தமிழரசன் ஆகியோர் உரையாற்றினர்