விநாயகன் சிலைகளை ‘பிளாஸ்டோ பாரீஸ்’ போன்ற இரசாயனக் கலவைகளில் செய்து நீரில் கரைக்கக் கூடாது என்று சுற்றுச் சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. அதேபோல் சிலைகளின் உயரம் 10 அடிக்குமேல் இருக்கக்கூடாது என்றும் காவல்துறை கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றமும் இதே கருத்தை அறிவுறுத்தியிருந்தது. காவல்துறை நீதிமன்ற கருத்துகளுக்கு மாறாக சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரசாயன கலவையால் செய்யப்பட்ட 18 அடி உயர விநாயகன் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதியில் 5 நாட்கள் விநாயகன் விழா என்ற பெயரில் பரப்புரைக் கூட்டங்களை நடத்தி, இஸ்லாமியர்களுக்கு எதிரான பகைமை உணர்வைத் தூண்டி விடுவதை இந்து முன்னணியினர் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்து முன்னணி அமைப்பாளர் இராமகோபாலன், இந்த நிகழ்வுகளில் பங்கேற்று சிலை கரைப்பு நாளன்று விநாயகன் சிலையுடன் மசூதி உள்ள வழியாகப் புறப்படுவதும், பிறகு கைதுச் செய்யப்பட்டு, உடன் விடுதலை செய்யப்படுவதும் வழக்கமாக நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக காவல்துறை சட்டத்தை மீறி வைக்கப்படும் விநாயகன் சிலைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது கிடையாது.

இந்த முறைகேட்டை சுட்டிக்காட்டி, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த விநாயகன் சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அப்புறப்படுத்தா விட்டால், மதவெறி சக்திகளுக்கு எதிராகப் போராடிய பெரியாரின் கைத்தடி களோடு எதிர் ஊர்வலம் நடத்துவோம் என்றும் கழக சார்பில் காவல்துறைக்கு கடிதம் அளிக்கப்பட்டது. காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பெரியார் கைத்தடிகளுடன் ஊர்வலத்துக்கு தயாரானார்கள். சென்னை மற்றும் காஞ்சி மாவட்டத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் செப்டம்பர் 23 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் மசூதி அருகே திரண்டனர்.

“சட்ட விரோத விநாயகன் சிலைகளை காவல்துறையே அகற்று; தடை செய்யப்பட்ட பகுதியில் மீண்டும் மீண்டும் ஊர்வலம் வரமுயன்று மதக் கலவரத்தை உருவாக்கும், இராம கோபாலனை கைது செய்! வருகுது பார், வருகுது பார்; பெரியார் கைத்தடி ஊர்வலம் வருகுது பார்! மக்களைக் கொல்லும் மதவெறிக்கு எதிராக பெரியார் கைத்தடிகள் வருகுது பார்!” என்பது போன்ற உணர்ச்சி முழக்கங்களுடன் மூன்று பெண்கள் உள்பட தோழர்கள் விநாயகன் ஊர்வலத்துக்கு எதிர் ஊர்வலமாகப் புறப்பட்டனர். காவல்துறை 170 தோழர்களைக் கைது செய்து இராயப்பேட்டையிலுள்ள சமூகநலக் கூட்டத்தில் வைத்திருந்தனர். இரவு 8.30 மணியளவில் ‘விநாயகன்’ கடலில் கரைக்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சென்னை-காஞ்சி மாவட்ட கழகப் பொதுக் செயலாளர்கள், தோழர்கள் பங்கேற்றனர்.