அரியனாவில் ஹிகார் மாவட்டத்திலுள்ள இராக்கி ஷா, இராக்கி ஹாஸ் எனும் இரட்டை கிராமங்கள், வரலாற்று முக்கியத்துவமானவை. காரணம், இக்கிராமப் பகுதி சிந்து சமவெளி நாகரிகம் தழைத்தோங்கிய காலத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாக கண்டறியப்பட்டவை. 12 ஆண்டுகளுக்குமுன் இங்கே நடந்த அகழ்வாராய்ச்சியில் சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அது, ஏடுகளில் தலைப்பு செய்திகளாகவும் வந்தன.

சுமார் 160 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்ட இந்த பகுதிதான் இந்தியாவிலேயே கண்டறியப்பட்ட சிந்து சமவெளி நாகரிக மக்கள் வாழ்ந்த மிகப் பெரிய பகுதி.

அமரேந்திரநாத் என்ற அகழ்வாராய்ச்சியாளர் தலைமையிலான குழு, 1997-1999 ஆண்டுகளில் 3 கோடை விடுமுறைகளில் இந்த ஆய்வுகளை மேற் கொண்டது. ஒரு சமூகததின் நாகரிகத்தைக் கண்டறிய முக்கிய ஆவணமாகக் கருதப்படும், இறந்தவர் உடல்கள் புதைக்கப்பட்ட குழிகளும் இங்கே கண்டறியப்பட்டது. தொண்மை மிக்க திராவிடர் நாகரிகத்தின் சான்றுகளைக் கொண்ட இந்தப் பகுதி, இப்போது மலைமலையாக மாட்டுச் சாணங்களை யும் குப்பைகளையும் கொட்டிக் கிடக்கும் இடமாக மாறிக் கிடக்கிறது. இது பற்றி மிக விரிவான ஒரு கட்டுரையை ‘சண்டே டைம்ஸ்’ ஏடு (ஜூன் 3, 2012) படத்துடன் வெளியிட்டுள்ளது. அச்சனா காரே கோஸ் என்ற அதன் பெண் செய்தியாளர் இப் பகுதிக்கு நேரில் சென்று இந்த அவலக் காட்சிகளை படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

hariyana_450இந்தப் பகுதியைச் சுற்றி தொல்பொருள் ஆய்வுத் துறை கம்பி வேலி போட்டிருக்கிறது. ஆனால் அந்த கம்பிகள் அகற்றப்பட்டு அருகே உள்ள கிராமங் களுக்கு போய் வரும் குறுக்குப் பாதையாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிந்து சமவெளியில் திராவிடர்கள் வாழ்ந்த ஹரப்பா, மொகஞ்சாதாரோ பகுதிகள், பாகிஸ்தானில் உள்ளன. அங்கும் அது சீரழிந்துதான் கிடக்கிறது. ‘ஆர்.ஜி.ஆர்.அய்’ என்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் அரியானாவி லுள்ள இந்த இரட்டை கிராமப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நடுத்தர வயதுப் பெண் அணியும் சங்குகளால் ஆன வளையல், டெல்லியிலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கே அகழ்வாராய்வில் கண்டெடுக்கப்பட்ட பல பொருள்கள் பூனேயில் உள்ள டெக்கான் கல்லூரியில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய முக்கியத் துவம் பெற்ற ஒரு நாகரீக வரலாற்றின் சான்றாக தொல்பொருள் துறையால் அறிவிக்கப்பட்ட இந்தப் பகுதி கடந்த பல ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டுக் கிடப்பதை விரிவாக, விளக்குகிறது இக்கட்டுரை.

இப்பகுதியில் நிறைந்து கிடக்கும் திராவிடர்கள் பயன்படுத்திய பொருள்களை அக்கிராம இளைஞர்கள் பார்வையிட வரும் வெளிநாட்டினரிடம் விற்பனை செய்து வருகிறார்கள். முள்கம்பி போடப் பட்டுள்ள பல பகுதிகள், கம்பிகள் அகற்றப்பட்டு துண்டிக்கப்பட்டுவிட்டன. சுடுகாடு ஒன்றையும் கட்டிவிட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன் தர்கா ஒன்றும் வந்துவிட்டது. ஆசியாவிலுள்ள 10 வரலாற்று தொன்மைப் பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக வரலாற்று தொன்மங்களை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பான உலக தொன்மங்களின் நிதியம் (Global Heritage Fund) அறிவித்துள்ளது. அதில் இந்தப் பகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தொல்பொருள் ஆய்வுத் துறை இந்தப் பகுதியை கண்காணிக்க தினக் கூலி அடிப்படையில் ஒரு காவல்காரரை நியமித் துள்ளது. ஆனால் அவரோ இங்கே திரும்பிப் பார்ப்பதே இல்லை.

தொல்பொருள் துறையின் சண்டிகார் பகுதி நிர்வாகத்தின் கீழ் இந்த தொன்மப் பகுதி வரு கிறது. இதற்கு பொருப்பாள ராக இருப்பவர் வி.சி.சர்மா என்ற பார்ப்பன அதிகாரி. இக் கட்டுரையை எழுதிய செய்தி யாளர். அவரிடம் இது பற்றி நேரில் கேட்டபோது, “அரணாக போடப்பட்ட வேலிகள் அப்படியே தான் உள்ளன” என்றார். வேலிகள் அகற்றப்பட்டு, சீரழிந்து கிடப்பதை புகைப்பட ஆதாரங்களுடன் செய்தியாளர் எடுத்துக் காட்டியபோது, அதை எதிர்பார்க்காத அந்த பார்ப்பன அதிகாரி, “எல்லாம் எங்களுக்கும் தெரியும்; எங்கள் துறையில் போதுமான ஊழியர்கள் கிடை யாது; 24 மணி நேரமும் எங்களால் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது” என்று ஆத்திரத்துடன் பதிலளித்துள்ளார்.

தொல்பொருள் ஆய்வுத் துறையின் தலைமை இயக்குனர் சென்குப்தாவை சந்தித்தபோது அவரும், “இங்கு மட்டுமல்ல; நாடு முழுதும் அகழ் ஆய்வுக் குரிய பகுதிகள் இப்படித்தான் இருக்கிறது” என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார். “ஆபத்துகள் சூழ்ந்து நிற்கும் அகழ்வாய்வுப்பகுதி”(Endangered site) என்று உலக தொன்ம கண்காணிப்பு அமைப்பு குறிப்பாக இந்தப் பகுதியை அறிவித்துள்ளதே என்று கேட்டதற்கு இதற்கான முக்கியத்துவமே அந்த இயக்குனருக்குப் புரியவில்லை என்கிறார், செய்தி யாளர். அருகே வாழும் கிராமங்கள் தங்களின் புழங்கக்கூடிய பகுதியாக பயன்படுத்தத் தொடங்கி விட்ட நிலையில், தொன்மை மிக்க திராவிடர் நாகரி கத்தின் சின்னங்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியுமா என்ற கேள்வியுடன், இந்தக் கட்டுரையை முடிக்கிறார், செய்தியாளர் அர்ச்சனா காப்ரே கோஸ்! பார்ப்பன இந்தியாவில் திராவிடர்கள் வாழ்ந்த நாகரிகத்தின் சுவடுகள் இப்படி அழிக்கப்படும்போது மற்றொரு நிகழ்வையும் இத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்! தமிழ்நாட்டில் சேதுக் கால்வாய் திட்டம் தமிழர் களின் நீண்டகாலக் கனவு. தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் துணை செய்யும் திட்டம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே அவரது கப்பல்துறை அமைச்சகம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற திட்டம்.

hariyana_520

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்தபோது தீவிர முயற்சி எடுத்து திட்டத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பல கோடி ரூபாய் செலவிட்ட பிறகு திட்டம் பாதியிலே நிறுத்தப் பட்டது. “இராமன் இலங்கை மீது போர் தொடுத்தபோது கடலுக்கடியில் கடந்து சென்ற பாலம், இத் திட்டத்தினால் அழிக்கப்படுகிறது” என்று பார்ப்பனர்கள் கூக்குரலிட்டார்கள். ராமன் கட்டிய பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று சுப்ரமணியசாமி என்ற பார்ப்பனர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தமிழகத்தின் பார்ப்பன தலைவர் ஜெயலலிதாவும் இதே குரலைத்தான் ஒலித்தார். ராமன் கட்டிய பாலம் என்று ஒன்று இருந்ததாக வரலாற்று சான்றுகள் ஏதும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த தொல்பொருள் துறை அடுத்த நாளே பார்ப்பனியத்துக்கு பயந்து மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது.

இராமாயணம் வரலாறு அல்ல; அது ஒரு கற்பனை புராணம்; திராவிடர்களை ஆரியர்கள் எத்தகைய சூழ்ச்சிகளால் வென்று அடிமைப்படுத்த வேண்டும் என்று பார்ப்பனர்களுக்கு உணர்த்தும் ஒரு கற்பனை. இராமாயண கதை என்பது ஒன்று மட்டும் அல்ல; 20-க்கும் மேற்பட்ட இராமாயணக் கதைகள் உள்ளன. ஆனாலும் அதை வரலாறு என்று திரித்துக் கூறி - பார்ப்பனர்கள், இராமன் பாலத்தை வரலாற்றுச் சின்னம் என்று ஆர்ப்பரித்து உச்சநீதிமன்றம் வரை போய் தடைப்படுத்தி விட்டார்கள்.

ஒரு பக்கம் - திராவிடர்கள் வாழ்ந்த சிந்துவெளி நாகரிகப் பகுதி, மாட்டுச் சாணக் குவியலாய் கிடக்கிறது. ஆரிய மேலாண்மையை உயர்த்திப் பிடிக்கும் கற்பனையான ‘இராமன்’ பாலம் வரலாற்றுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு, சேது சமுத்திர திட்டமே முடக்கப்பட்டுவிட்டது. திராவிட அடையாளம் இழிவானது. பார்ப்பன ‘கற்பனைகள்’ புனிதமானது. இதுவே இப்போதும் இந்தியாவின் ஆட்சி முறை என்றால், ‘மனுதர்மம்’ கோலோச்சு கிறதா இல்லையா? இத்தகைய மனுதர்ம சிந்தனைக்கு இறுதி முடிவு எழுதப்படாமல் கல்லறைக்கு அனுப்பப்படாமல் இந்த சமுதாயத்தில் எந்த மாற்றங்களைக் கொண்டு வர முடியும்?

Pin It