தேடப்பட்டு வரும் தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வெளி மாநிலங்களில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் வங்கிகள் மூலம் பண பரிவர்த்தனை எதுவும் மேற்கொண்டு விடக் கூடாது என்பதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட 22 பேரின் வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர், “கொலையாளிகள், தங்களின் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது எங்களுக்கு சில துப்பு கிடைத்தள்ளது. அதைக் கொண்டு விசாரித்து வருகிறோம். மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. கொலையாளிகள் எங்கும் தப்பிவிட முடியாது. அவர்களை நாங்கள் நெருங்கி விட்டோம். இன்னும் ஓரிரு நாட்களில் தலைமறைவாக உள்ள கொலையாளிகள் பிடிபடுவார்கள்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர்கள் சிலர் கல்குவாரிகள் போன்ற தொழில்கள் செய்து வருகிறார்கள். அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் 115 பேர் உத்தனப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தேடப்படும் குற்றவாளிகளுடன் தனிப்படையிலுள்ள போலீசாருடன் ரகசிய தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் முன்கூட்டியே தரும் தகவல் காரணமாகவே தப்பி வருகின்றனர் என்றும் தோழர் பழனி கொலை நடந்த பிறகு, தலைமை காவலருடன் தேடப்படும் நபர் 40 நிமிடம் அலைபேசியில் பேசியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும், ஒரு தமிழ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மாவட்ட காவல்துறை அதிகாரி, தற்போது மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரனைக் குற்றமற்றவர் என்று நியாயப் படுத்திவரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சில தோழர்கள் கூற்று உண்மைக்கு மாறானது என்பதை உறுதிப்படுத்தும் சில தகவல்களை இங்கே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது.

•       சட்டமன்ற உறுப்பினர் தளி. இராமச்சந்திரனின் அண்ணன், அண்ணன் மனைவி, மாமனார், மைத்துனர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த 1500 ஏக்கர் நிலத்தை ஜி.எம்.ஆர். என்ற ஆந்திர தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார். இதற்கான பத்திரப் பதிவு ஆதாரங்கள் இருக்கின்றன.

•       தளி இராமச்சந்திரனுக்கு பூர்வீகமாக 70 ஏக்கர் நிலம் இருந்ததாகவும், அதில் கிரானைட் இருந்ததாகவும் அதைக் கொண்டுதான் தனது செல்வத்தைப் பெருக்கியதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் நியாயப்படுத்துகிறார்கள். அது உண்மையல்ல. எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான வெள்ளி விந்தை கிராமத்தில் அவருக்குச் சொந்தமாக இருந்தது 7 ஏக்கர் நிலம் தான். அதிலும் ‘கிரானைட்’ கிடையாது.

        தளி இராமச்சந்திரனை சுற்றி நிற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறிக் கொள்ளும் அவர்களது ஆட்களின் கதை என்ன?

•       எம்.எல்.ஏ.வின் செயலாளராக இருப்பவர் பெரியசாமி. இவரும் கம்யூனிஸ்ட் கட்சி தான். இவர் மீது முதல் மனைவியை கொலை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. கோடிக்கணக்கான டாலர்களை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

•       இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக உள்ள சுந்தரேசன் குவாரி உரிமையாளர் ஒருவரது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

•       ஒன்றிய விவசாய அணி செயலாளராக உள்ள பாலவண்ணன் என்பவர் மீதும் கொலை வழக்கு உள்ளது.

•       சட்டமன்ற உறுப்பினரின் மைத்துனர் கேசவ மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சுந்தரேசன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.

•       தளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக இருக்கும் பெண்ணின் கணவர் கலீல். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர். என்.சி.இராமன் கொலை வழக்கு உட்பட பல்வேறு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.

•       அரசியலில் வன்முறை தொடர்புடையவர்கள் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தந்த இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ‘வோரா’ குழு அறிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருவர் பெயர்கூட இடம் பெறவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்நத தோழர் வீரபாண்டியன் தொலைக்காட்சி ஒன்றில் கூறினார். அவரது பார்வைக்கு மேற்கண்ட தகவல்களை சமர்ப்பிக்கிறோம்.

•       தளி இராமச்சந்திரன், சுற்றி சுற்றி பொதுவுடைமை இயக்கங்களை மட்டுமே தேர்ந்தெடுத்தவர்; நல்ல கம்யூனிஸ்ட், நேர்மையானவர் என்று தோழர் வீரபாண்டியன் அதே பேட்டியில் கூறினார். 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தளி தொகுதியில் ஜனதாதளமும், பா.ஜ.க.வும் போட்டியிட்டபோது, தளி இராமச்சந்திரனும் அவரது ஆட்களும் பா.ஜ.க. வேட்பாளர்களையே ஆதரித்தனர். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கப்பட்டதே ஒரு தனிக் கதை. 2006 சட்டமன்றத் தேர்தலில் தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்த நாக ராஜிரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அப்போது மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த தளி இராமச்சந்திரன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டார். கூட்டணி தர்மத்துக்கு எதிராகவும், கட்சிக் கட்டுப்பாட்டை எதிர்த்தும் போட்டியிட்ட அவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கட்சியை விட்டு நீக்கியது. அந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை தோற்கடித்து, இராமச்சந்திரன் வெற்றிப் பெற்றார். ஆனால், சொந்தக் கட்சி வேட்பாளரையே தோற்கடித்த தளி இராமச்சந்திரனையும் அவரது ஆட்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருகரம் நீட்டி வரவேற்று, தமது கட்சியில் இணைத்துக் கொண்டது.

மனம் உடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகராஜிரெட்டி, தனது பாதுகாப்பு கருதி, அ.இ.அ.தி.மு.கவில் சேர்ந்து விட்டார். நகாராஜி ரெட்டி இரண்டு முறை கொலை முயற்சி தாக்குதலுக்கு உள்ளாகி வாய் பேச முடியாத நிலைக்கு முடக்கப்பட்டு விட்டார். தொலைக்காட்சிகளில் அவர், ‘திக்கித் திக்கி’ தன் மீது கொலை வெறித் தாக்குதல் நிகழ்த்திய தளி இராமச்சந்திரன் மற்றும் அவரது கும்பலைப் பற்றி இப்போது பேட்டி அளித்துள்ளார்.

கிருட்டிணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் தோழர் பழனி, நீண்டகாலம் பொதுவுடைமை இயக்கத்தில் பணியாற்றியவர். எம்.எல்.ஏ. தளி இராமச்சந்திரனோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பாளராக வேலை செய்தவர். தோழர் பழனியின் நேர்மையான எதற்கும் அஞ்சாத உறுதியான செயல்பாடுகளை தளி இராமச்சந்திரனே நன்கு அறிவார். பிறகு பொதுவுடைமை கட்சியிலிருந்து விலகி, தமிழ்நாடு விடுதலைப் படைக்கு ஆதரவாளராக இருந்து அந்த அமைப்பு முடக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகாலம் ஒதுங்கி நின்று, பிறகு இரண்டு ஆண்டுகாலத்திற்கு முன் பெரியார் திராவிடர் கழகத்தின் சாதி ஒழிப்புப் பணிகளால் ஈர்க்கப்பட்டு, பெரியாரியத்தை ஏற்று, பெரியார் திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். ஏராளமான இளைஞர்களை இயக்கத்தில் சேர்த்தார்.

தோழர் பழனி முயற்சியால் பெரியார் திராவிடர் கழகத்தில் இளைஞர்கள் சேர்ந்தது; திருச்சியில் கழகம் நடத்திய தீண்டாமை சுவர் இடிப்பு போராட்டம்; இடிந்தகரையில் நடந்த அணுஉலை எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்றது; நாகமங்கலம் ஊராட்சித் தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ. நிறுத்திய பெண் வேட்பாளரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியது; போன்றவற்றால் கழகத்தின் மீது ஆத்திரமடைந்து உள்ளூர் கழகத் தோழர்களை வீடு புகுந்தும், மருத்துவமனை புகுந்தும் தாக்கிய செய்திகள் கடந்த இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மார்க்சிய லெனினிய தோழர் தொப்பி குமாரின் படுகொலை

சட்டமன்ற உறுப்பினர் தளி இராமச்சந்திரன் மற்றும் அவரது ஆட்களின் கொலைவெறியாட்டத்தைக் கண்டித்து 28.4.2012 அன்று கெலமங்கலத்தில் பெரியார் திராவிடர் கழக சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூட்டத்தில் பங்கேற்று, தளி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

இக்கூட்டத்தில் இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிய-லெனினிஸ்ட்) அமைப்பைச் சார்ந்த தோழர்களும் பங்கேற்றனர். அடுத்த நாள் 29.4. 2012 அன்று லெனின் பிறந்த நாளுக்காக மார்க்சிய லெனினியக் கட்சி பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்துக்கு காவல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்யுமாறு ராமச்சந்திரன் வற்புறத்தவே ஏப்.28 ஆம் தேதி இரவு 10 மணிக்கு, 29 ஆம் தேதி நிகழ இருந்த கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. பெரியார் திராவிடர் கழகத்தை, சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக இக்கட்சி தூண்டிவிடுவதாக ராமச்சந்திரனும் அவரது ஆட்களும் கருதினார்கள்.

கூட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திர மாநில கூலி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் தோழர் கோட்டய்யா, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அதிகாரியுடன் தொடர்பு கொண்டு பேசி, மே 13 ஆம் தேதி கூட்டம் நடத்த அனுமதி பெற்றுத் தந்தார். கூட்டத்தை எப்படியும் தடுத்தே தீர வேண்டும் என்று கருதிய கும்பல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) செயல் வீரர் கூட்டத்துக்காக இரவு முழுதும் சுவ ரொட்டிகள் ஒட்டிய தோழர் தொப்பி குமாரை கூட்டத்துக்கு முதல் நாள் மே 12 ஆம் தேதி கெலமங்கலம் நடு வீதியில் வெட்டி படுகொலை செய்தனர். சுவரொட்டி ஒட்டிய கைகளை முதலில் வெட்டி வீசி வயிற்றில் குத்தினர்.

தோழர்கள் தொப்பி குமாரை ஓசூர் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுரை கூறினர். பிறகு பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொப்பி குமார் மரணமடைந்துவிட்டார். தொப்பி குமார் உடலை தோழர்கள் எடுத்து வந்து 13 ஆம் தேதி கெலமங்கலம் வீதிகளில் வீரவணக்க ஊர்வலமாக எடுத்துச் சென்று 5.30 மணிக்கு அடக்கம் செய்துவிட்டு 6 மணிக்கு திட்டமிட்டபடி பொதுக் கூட்டத்தை நடத்தினர். தளி பகுதியில் நடந்த மற்றொரு கோர அரசியல் படுகொலை இதுவாகும்.  தொப்பி குமாருக்கு வீரவணக்கம்!