தாழ்த்தப்பட்டோர் பழங்குடிப் பிரிவினருக்கு அரசுப் பதவிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கிடும் மாயாவதி ஆட்சியின் ஆணையை உ.பி. உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இந்த பதவி உயர்வை உறுதி செய்யும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர். வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையை காங்கிரஸ் ஏற்க மறுத்தபோது 1925 இல் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார். பெரியார் அன்று வலியுறுத்திய கொள்கையையே இன்று காங்கிரசாரும் பேசுகிறார்கள் என்பதே பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. நாடாளு மன்றத் துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமி பதிலளிக்கையில், இடஒதுக்கீட்டின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி, புதிய மசோதா ஒன்றைக் கொண்டு வரும் முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது என்றும், இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

இத்தகைய இடஒதுக்கீடுகளின் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர் ஏற்கனவே பல மாநில அரசுகள் இது தொடர்பாக கொண்டு வந்த பல சட்டத் திருத்தங்களை நீதிமன்றங்கள் ரத்து செய்து விட்டன என்றார். தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான நிரப்பப் படாத இடஒதுக்கீட்டுக்கான இடங்களை நிரப்புவதற்கான தீவிர முயற்சிகள் 2008 இல் தொடங்கப்பட்டது. ஆனால் 75 சதவீத இடங்களை மட்டுமே நிரப்ப முடிந்தது என்றார் அமைச்சர். பகுஜன் சமாஜ் கட்சி, இந்த பதிலில் திருப்தியடை யாமல் வெளிநடப்பு செய்தது. பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இடஒதுக்கீடு பிரச்சினையில் முடிவுகளை ஏற்காமல், அரசு காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம்சாட்டினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி. இராஜா, தனியார் துறையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தினார். விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷத், பிற்படுத்தப்பட்டோருக்கு மக்கள் தொகை அடிப்படையில் வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற கொள்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இடஒக்கீடு 50 சதவீதத்துக்கு  மேல் போகக் கூடாது என்ற நீதிமன்றத் தீர்ப்பு, அரசின் கைகளை கட்டிப் போட்டுள்ளது என்றார்.

இந்தக் கூட்டத் தொடரிலேயே ‘தாழ்த்தப்பட் டோர் பழங்குடியினர் பதவி உயர்வில் இடஒதுக் கீட்டை உறுதி செய்யும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும்’ என்று சந்திர மிஸ்ரா (பகுஜன் சமாஜ்) வற்புறுத்தினார். காங்கிரஸ் உறுப்பினர் பல்சந்த் முங்கேக்கர் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அழுத்தமாக ஆதரித்துப் பேசினார். “இந்திய அரசுத் துறைச் செயலாளர்களில் தாழ்த்தப்பட்ட பழங்குடிப் பிரிவைச் சார்ந்த ஒருவர்கூட இல்லை. இயக்குனர் மட்டத்தில் மட்டும் குறைவான அதிகாரிகள் மட்டுமே உள்ளனர்” என்ற உண்மையையும் அவர் சுட்டிக் காட்டினார். ‘பதவி உயர்வுகளை தீர்மானிக்கும் குழுவில் தாழ்த்தப்பட்ட பழங்குடிப் பிரிவினருக்கு இடமளிக்கப்பட வேண்டும்’ என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன். ‘உ.பி. உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்’ என்று பா.ஜ.க. உறுப்பினர் தவர்சந்த் கெலோட் வலியுறுத்தினார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க., பகுஜன் சமாஜ் என்று கட்சி வேறுபாடின்றி பெரியார் போராடிய இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆதரவான குரல் மாநிலங்களவையில் ஒலித்தது, குறிப்பிடத்தக்கது.