பல்லடத்தில் நடந்த நாத்திகர் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை தொடர்ச்சி:

சாதி ஆச்சாரம் என்பவை மதம் என்னும் மரத்தை சுத்திக் கொண்டிருக்கின்றன. சாதியை மதத்திலிருந்து பிரித்து எடுக்க வேண்டும். அப்படி பிரிப்பதற்கு முடியாத வகையில் சாதியும் மதமும் ஒன்றோடு ஒன்று இறுகி பிணைந்திருக்குமேயானால் இந்த இரண்டையும் வீழ்த்தியாக வேண்டும். சாதி மட்டும் ஒழிக்கனும் என்றுதான் நான் சொல்கிறேன். முடிஞ்சா சாதியை தனியா எடுத்து ஒழிச்சுட்டு போய்விடலாம். அதெப்டீங்க முடியும். இந்து மதத்தோடு பிணைந்துதான் இருக்கிறது. இந்து மதத்தை விட்டு சாதியை பிரிக்க முடியாது. அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய 25வது வயதில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறபோது சொன்னார், சாதி ஒற்றையாக இயங்காது பன்மையில் தான் இயங்கும். ஏன்னா தனியா ஒரு சாதி மட்டும் இருக்க முடியாது. பத்து சாதி இருந்தாத்தான் அது மேலே இது கீழ இருக்க முடியும். அம்பேத்கர் சொன்னார், “இந்து மதம் என்பது பல அடுக்குகள் கொண்ட மாளிகை; ஒரு அடுக்குக்கும் இன்னொரு அடுக்குக்கும் படிக்கட்டும் இல்லை வாசலும் இல்லை ஒரு அடுக்கில் பிறந்தவன் அதிலே சாக வேண்டும். வேற அடுக்குக்கு போகவும் முடியாது வெளியே வரவும் முடியாது” இப்படித்தான் இந்துமதம் நம்மை வைத்திருக் கிறது என்று அன்றும் பேசினார், இறுதி வரையும் அதைத்தான் பேசினார். அப்ப மதத்திலிருந்து சாதியைப் பிரிக்க வேண்டும் முடிஞ்சா உன் மதம் நல்லதென்றால் பிரிச்சு எடுத்துட்டு போயிடுப்பா. நான் இந்து மதத்தை பற்றி ஒன்னும் சொல்லிக்கலே. ராமகோபாலனுக்கும் சொல்லிக்கலாம். இந்து மதத்தில் நமக்கு கோபம் இல்லை. சாதி மட்டும் வேண்டாமென்று சொல்லிக்கிறோம். இல்லை சாதியை இந்து மதத்தைவிட்டு பிரிக்க முடியாது.

அம்பேத்கர் அவரது சட்ட வரைவு குழுவில் அரசியல் நிர்ணய சபையில் பேசுகிறபோது ஒன்றைச் சொன்னார், யாராக இருந்தாலும் இந்து சட்டத்தை எடுத்துப் படியுங்கள். இந்து தத்துவத்தின் முதல் வரியில், முல்லா எடிசன் என்று ஒன்று இருக்கிறது. அதுதான் இந்து சட்டத்தைப் பற்றி ஆழமாக எழுதி வைத்திருக்கிற ஒரு நூல். அதில் தான் பல நூறு பதிப்புகள் வந்து விட்டன.   அந்த முல்லா எடிசனின் முதல் பக்கத்தில் சாதி இல்லாத இந்து என்பவன் இருக்க முடியாது என்று சொல்கிறது. இந்து மதம்னா சாதி இருக்கும். இப்ப மதம் மாறாதேனு சொல்கிறான். திருப்பிக் கொண்டு வருவதற்கு மதமாற்ற இயக்கம் நடத்தப் போகிறோம் என்கிறான். இஸ்லாமியனும் கிறிஸ்துவனும் பண்ணினா மதம் மாற்றம். இவன் பண்ணினா சுத்தி இயக்கம்; தாய் மதத்திற்கு கொண்டு வருகிறார்களாம். சரி, பத்து தலைமுறைக்கு முன்னால் வந்த கிறிஸ்துவனை கொண்டு வா உன் மதத்திற்கு, எந்த சாதியில் சேர்த்துக் கொள்கிறாய், அதை மட்டும் சொல்லு. உன் மதத்திற்கு வேண்டுமென்றால் கொண்டு வந்து விடலாம்.

மதமாற்றம் ஒன்றும் புதிதல்ல. அது பழசு. அந்தக் காலத் தில் நடந்துதான் சமணனாக நின்ற சேர்நெடுமாறனை கூண்பான்டியனை சைவ மதத்திற்கு திருப்பிக் கொண்டு வருவதற்கு திருஞானசம்பந்தர் ஏற்பாடு செய்தார்,. தர்ம சேனர் (எ) திருநாவுக்கரசர் சமணராக இருந்தவரை திருநாவுக்கரசராக சைவ மதத்திற்கு கொண்டு வந்திருக் கிறார்கள். நீ தான் மத மாற்றத்தை முதலில் செய்துள்ளாய். இப்ப பண்ணுவதெல்லாம் புது மதமாற்றம். இப்ப கொஞ்ச நாளாதான் செஞ்சுட்டுருக்கிறான் அவன். நீ ஆயிரம் ஆண்டுகளாய் செய்திருக்கிறாய். அடுத்த மதத்துக்காரனை மிரட்டி மிரட்டி கொண்டு வந்திருக்கிறாய். சமணனை, பவுத் தனை எல்லாம் பண்ணியிருக்கிறாய். இந்த மதமாற்றத்தை நீ தடுக்கிற போது சாதி இல்லாம மதமில்லை என்ற போதுதான் நான் அதையும் சேர்த்துதான் எரிக்கிறேன் என்று பெரியார்  சொல்கிறார்.

“அப்படி பிரிப்பதற்கு முடியாத வகையில் சாதியும் மதமும் ஒன்றோடு ஒன்று இறுகப் பிணைந்து கொண் டிருக்குமேயானால் இந்த இரண்டையும் வீழ்த்தியாக வேண்டும். முன்னிருந்த உயர்சாதி கபடர்கள் அவ்வளவு தந்திரமாக அப்படி பிரிக்க முடியாத வகையில் சாதியையும் மதத்தையும் பிணைந்து பின்னிக் கொண்டிருக்கும்படி இறுகக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆகையால் சாதியை ஒழிக்க தலைப்படுகையில் மதமும் வெட்டப்படுகிறது என்று பயப்படாமல் சாதி மரத்தையும் மத மரத்தையும் சேர்த்து நெருப்பு வைத்து சாம்பலாக்க வேண்டுமென்பது தடுக்க முடியாத அவசியமாகும். இதிலும் ஒரு சங்கடமிருக்கிறது. அதாவது மதமானது வேதம், புராணம் ஆகியவைகளோடு கட்டிப் பிணைந்து கொண்டிருக்கிறது. ஆகையால் இந்த வேதம் புராணங்களிலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டும். இதிலும் பிரிக்க முடியாதபடி கட்டு பலமாக இருந்தால் இங்கும் இரண்டையும் சேர்த்து நெருப்பு வைக்க வேண்டியதுதான் வேற வழியில்லை. ஆனால் இந்த வேதம் கடவுளோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது. இதிலும் பிரிக்க முடியாத பிணைப்பு இருந்தால் அந்த கடவுள் என்பதன் தலையிலும் கை வைத்துதான் ஆக வேண்டி இருக்கிறது” என்று சொல்கிறார். வேறு வழியில்லாமல் தான் கடவுளுக்கு போனார்கள்.

ஒரு வேளை மற்ற நாட்டில் இருப்பதைப்போல மனிதனை மனிதன் உயர் தாழ்வு கற்பிக்க கடவுள் காரணமில்லை என்றால் பெரியார் நாத்திகம் பேசியிருக்க மாட்டார் என நினைக்கிறேன். ஒரு வேளை பேசாமல்கூட இருந்திருக்க லாம். வேண்டுமென்றால் அறையில் உட்கார்ந்து ஆராய்ச்சி கட்டுரை எழுதலாம். வீதியில் வந்து பேச வேண்டிய அவசிய மும் பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் இருந்திருக்காது. இந்த கடவுள் தத்துவத்தின் பெயரால்  கற்பிக்கப்பட் டிருக்கிற இழிவுகளை, செய்யப்பட்டிருக்கிற பிரிவினைகளை நியாயப்படுத்திக் கொண்டு, நம்மை பிரிவினைவாதிகள் என பேசுகிறார்கள். ஏன்னா தமிழ்நாடு தனியா வர வேண்டும் என நாம் சொல்கிறோம். ஒன்று பட்ட இந்தியா வில் எங்களுக்கு விடுதலை இல்லை என நாம் நம்புகிறோம்.

நம் தலைவர் நமக்குச் சொல்லி சென்றிருக்கிறார். அவன் நம்மை பிரிவினைவாதி என்கிறான். பெரியார் கேட்டார், மண்ணுக்கு பிரிவினை கூடாது என்கிறாயே, மனிதனுக்குள் பிரிவினை இருக்கலாமா? நீ அதைச் சொல்லவில்லை என்றால் நான் ஏன் இதை சொல்லு கிறேன். எனக்கு அவசியமே இல்லை. ஒன்றுபட்ட இந்தியா வில் எங்களுக்கு விடுதலை இல்லை. எங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை இல்லை என்று கருதினார். அவர்களுடைய இழிவுகளிலிருந்து விடுபட முடியாது என்று கருதினார். இந்த சாதி இந்து மதம் எங்களை விடாது என்று கருதினார். எனவே தனியா வந்திடலாம் என சொன்னார். நீ அதை ஒழி என்று சொன்னார்.

ஒரு வேளை ஒன்றுபட்ட இந்தியாவில் சாதி ஒழிந்தாலும் நிலைத்திருக்காது என்று சொன்னார் பெரியார். கொஞ்ச நாளில் திருப்பி வந்திடும் என்றார். பொதுவுடமை பற்றி நாம் பேசுகிறோம். நாம் அதற்கு ஆதரவானவர்கள். ஆனால் வழக்கமான பொதுவுடமை வேறு பெரியார் பேசிய பொது வுடமை வேறு. பெரியார் தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முதலில் தமிழில் மொழி பெயர்த்தார்.  இந்திய மொழிகளில் முதலில் தமிழில்தான் ஆங்கிலத் திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. அதை செய்தவர் பெரியார்.

1925 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு ரீதியாக இந்தியாவில் வந்துவிட்டது. ஆனால் 1931 ஆம் ஆண்டு வரை அவர்கள் மொழி பெயர்க்கவில்லை. பெரியார் தான் மொழி பெயர்த்து வெளியிட்டார். அதை புத்தகமாக வும் போட்டார். ஏழெட்டு வாரம் எடுத்து குடிஅரசில் போட்டு விட்டு பிறகு புத்தகமாகவும் போட்டார் முன்னுரையில் பெரியார் எழுதினார். அதை எழுதும் போதே சொன்னார், இல்லையில்லை இந்த நாட்டில் பொதுவுடமை அப்படியே வந்து விடாது. இங்கே மக்களை பிரிப்பதற்கு பாட்டாளிகளை பிரிப்பதற்கு சாதிமுறை இருக்கிறது. அதை எடுத்துவிட்டு அதற்கு அடிப்படையான இந்து மதத்தை ஒழித்து விட்டுதான் இங்கு பொதுவுடமை வரும் என சொல்லிவிட்டுதான் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

அவர் வெளிநாட்டுக்கு போனார். ரஷியா புரட்சியைப் பார்த்து மகிழ்ந்து போய், ரஷிய நாட்டை பார்க்க விரும்பினார். 1931 ஆம் ஆண்டிலேயே ரஷியாவிற்கு போனார். 1932 ஆம் ஆண்டில் மூன்று மாத காலம் ரஷியாவில் இருந்தார். அந்த நாட்டில் 1932-ல் மே தின விழாவிற்கு பெரியார் தான் சிறப்பு விருந்தினர். இந்தியாவிலிருந்து வந்திருக்கிற நாத்திக தலைவர் என பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டு பேரணியில் கலந்து கொண்டார். அங்கிருந்து திரும்பி வரும்போது இலங்கையில் வந்து பேசினார். முதலில் இலங்கை பிரசங்கங்கள் என்றும், இப்போது இலங்கை பேருரை என்றும் நூலாக வந்திருக்கிறது படித்துப் பாருங்கள்.  ரஷ்யாவை பார்த்தார், மகிழ்ந்தார், வரவேற்றார். ஆனால் இந்தியாவிற்கு பொருந்தாது என்று சொன்னார். ரஷ்யாவில் மூன்று மாதம் இருந்துட்டு வந்து இந்தியாவிற்கு அந்த முறை அப்படியே பொருந்தாது. சதி செய்வதற்கு என்றே ஒரு சாதி இல்லாத நாட்டில் லெனின் வெற்றிப் பெற்று விட்டார் என்று சொன்னார். இங்க முடியாது என்றார். சதி செய்வதற்கென்று ஒரு சாதி அதற்கென்று ஒரு அமைப்பு இங்கிருக்கிறது. அதை தடுக்க பொது உரிமையோடு கூடிய பொதுவுடமை வேண்டும் என்று பெரியார் சொன்னார்.

வங்கிகளெல்லாம் தேசியமயமாக்கினோம். நாட்டுடமை என்றால் பொதுவுடமை என்றுதான் பொருள். ஆனால், வங்கியில் நம்ம ஆளு இருக்கிறார்களா? அவர்களிடம் தான் இருக்கிறது.
அதனால் தான் நம்ம வந்து செருப்புக்கடை வைக்க ஐந்தாயிரம் ரூபாய் வாங்கினாலும், மின் மோட்டார் வாங்க பத்தாயிரம் ரூபாய் வாங்கினாலும், மாடு வாங்க பதினைந்து ஆயிரம் ரூபாய் வாங்கினாலும், ஒரு மாதம் தவணை கட்டவில்லைனா மாட்டை பிடித்துக் கொண்டு போய் விடுகிறான். கடையை காலி செய்கிறான். வட்டிக்காக வீட்டிலுள்ளதையும் சேர்த்துக் கொண்டு போகிறான். ஆனால், பி.ஜே.பி. ஆட்சியில் கடைசி ஆண்டில் தள்ளுபடி செய்த கடன் மட்டும் 86000 கோடி ரூபாய். ஏன்னா வங்கி அதிகாரிகளாக அவர்கள் இருக்கிறார்கள். நம்மாளா வாங்கியிருப்பான் 86000 கோடி, 5000 அல்லது 10000 வாங்கியிருப்பான். அதிகபட்சம் அவ்வளவுதான். வங்கிகள் அவர்களிடம் தான் இன்றும் இருக்கிறது. பேருக்கு வேண்டுமென்றால் நாட்டுடமை ஆக்கியிருக்க லாம் என்று பெரியார் சொன்னார்.

பொது உரிமை வராத நாட்டில் பொதுவுடமை வந்தால் மீண்டும் ஆதிக்கக்காரன் கைக்கே பொதுவுடமை போய் விடும் என்று சொன்னார். அதை மாற்றுவதற்காகத்தான் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும். சாதியம் ஒழிய வேண்டும். அதைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிற வேதங்கள் ஒழிய வேண்டும். அதற்கு அடிப்படையாக உள்ள கடவுள் ஒழிய வேண்டுமென்று சொன்னார் என்பதை நாம் புரிந்து கொண்டு கடவுள் மறுப்பை பேச வேண்டும்.

பெரியார் பேசிய கடவுள் மறுப்பு பார்ப்பன எதிர்ப்போடு கூடிய கடவுள் மறுப்பு. சாதி ஒழிப்பை இலக்காகக்கொண்ட பார்ப்பன எதிர்ப்பு. வெறும் பார்ப்பன எதிர்ப்பாக இருந்தால் திருநெல்வேலியில் அதிகம் இருக்கும் சைவப் பிள்ளைகள் நம்மைவிட அதிகமாக பார்ப்பனர்களை எதிர்ப்பார்கள். அவன் நான் தான் பெரிய சாதி. நீ என்ன பெரிய சாதி என்று பார்ப்பானை எதிர்க்கிறான். அண்ணா சொல்வார் பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே எங்கள் இலக்காக இருக்கு மானால் எங்கள் தலைமையிடம் ஈரோட்டில் இருக்காது. திருநெல்வேலியில் இருந்திருக்கும். அவன் பார்ப்பானை எதிர்ப்பதன் நோக்கம் வேறு. நம் நோக்கம் வேறு. சாதி ஒழிப்பை இலக்காகக் கொண்ட பார்ப்பன எதிர்ப்பு. பார்ப்பன எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட கடவுள் மறுப்பு. அதைத்தான் பெரியார் செய்தார். அதைத் தான் பெரியார் சொன்னார். அதைத்தான் நம்மிடம் எதிர் பார்த்தார்.

மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடவுள் மறுப்பை மட்டுமல்ல. பெரியார் கடவுள் மறுப்பை சொன்னதன் நோக்கத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும். நமக்கு மேலான ஒருவனைப் பார்த்து நமக்கு வருகிற கோபம் கீழானவனை உயர்த்த வேண்டும் என்கிற பரிவாகவும் இருக்க வேண்டும். பெரியாரை கேட்டார்கள் நீ ஏன் பார்ப்பானை எதிர்க்கிறாய், ஏன் anti-brahmin ? பெரியார் சொன்னார், ஆம் நான் anti-brahmin ஏனென்றால் நான் Pro-Human  என ஆங்கிலத்திலேயே திருப்பிச் சொன்னார். நான் மனிதாபிமானத்துக்கு ஆதரவாக இருப்பதால் பார்ப்பானை எதிர்க்க வேண்டியிருக்கிறது.

அதை நாம் புரிந்து கொண்டு பெரியாரை உள்வாங்கிக் கொள்வது என்பது கடவுள் மறுப்பை மட்டுமல்ல, ஏன்னா அவன் புதுப்பிச்சுக்குவான். ஆண்டாண்டுக்கு புதுப்பிக்  கிறான். காலையில்கூட கருத்தரங்கில் பேசினார்கள். ஆண்டுதோறும் திருமணம் பண்ணுகிறான். பெரியார் தான் கேட்பார், ராமனுக்கும் சீதைக்கும் போன வருடம் கல்யாணம் பண்ணினயே திரும்பி ஏன் கல்யாணம்? சீதை ஓடிப் போயிட்டாளா? இல்லை செத்துப் போயிட்டாளா? யாரையாவது கேட்டாயா? என பெரியார் கேட்டார். வள்ளி திருமணம் ஏன் ஆண்டுதோறும் நடக்குது, என்ன ஆச்சு? முருகனுக்கு ஏற்கனவே கல்யாணம் பண்ணிய வள்ளி என்ன ஆச்சு? அது வேற வள்ளியா? அது எஸ். வள்ளியா? இது பி. வள்ளியா? அப்படி ஏதாவது இன்ஷியல் மாறிய பெண்ணா அதே வள்ளியை திரும்பத் திரும்ப ஏன் கல்யாணம் பண்ணுகிறாய்? என பெரியார் கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. ஏன்னா பதில் இல்லை.

பெரியார் புராண கதைகளுக்கெல்லாம் கேள்வி கேட்டப்போ அறிவியல் பூர்வமாக யாரும் பதில் சொல்லவில்லை. தீபாவளி கதை சொன்னார்கள். பூமியை சுருட்டினான். டேய் பூமி தட்டையா? இல்லை பாயா? சுருட்டறதுக்குனு கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. பூமியை சுருட்ட முடியாது. உருட்டத்தான் முடியும். சரி சுருட்டினாய் என்றே வைத்துக் கொள். எங்க நின்னுட்டு சுருட்டினாய் எனக் கேட்டார். சரி சுருட்டினான் கொண்டு போய் கடலில் வைச்சா கடல் எங்க தனியாவா இருக்குதுனு கேட்டார். இதையெல்லாம் நாம் சிந்தித்து பார்க்கவில்லை என்பதுதான் இருக்கிற இழிநிலையே.

வேடிக்கையா கேட்டார், முருகன் மயில்மேல் போனானாம். ஏண்டா இரண்டு பக்கமும் கால் போட்டா எப்படீடா மயிலால பறக்க முடியும்னு கேட்டார். இது சின்ன செய்தி. நாம் சிந்தித்துப் பார்க்கவில்லை. இதுவரைக்கும் பார்க்கல. முருகனை பார்த்து கும்பிட்டுதான் இருந்தோம். இரண்டு பக்கம் கால் போட்டா இறக்கையை விரிக்க முடியாதுனு யாரும் நினைச்சு பார்க்கல. பெரியார் கேட்டார்.

நாம் நினைக்காத பல செய்திகளைப் பெரியார் கேட்டார். கடவுள் இல்லை என்று சொல்லுவதற்கு மட்டுமில்லை. இந்த கடவுள் பெயரால் கற்பிக்கப்பட்டிருக்கிற வேதங்கள், அதனால் நிலைத்திருக்கின்ற மதம், அதன்பெயரால் இருக்கிற சாதி, எல்லாவற்றையும் ஒழிப்பதாக சொன்னார். இந்த நாத்திகர் விழாவில். அதுதான் செய்தி.

கடவுள் மறுப்பு என்பது சாதி மறுப்பே என்பதை நம் தோழர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நான் திருமணங்களில் எல்லாம் அடிக்கடி சொல்வேன், அவன் மார்க்சிஸ்ட்டாக இருப்பான், பெரியாரிஸ்ட்டாக இருப்பான், அம்பேத்கரிஸ்ட்டாக இருப்பான், ஆனால் ஆணாகத்தான் குடும்பத்தில் இருப்பான். அதில் பெரிய மாற்றம் இருக்காது என்று. நம்மில் பலர் அப்படித்தான் நாத்திகராக இருப்பார்கள். ஆனால், சாதிக்காரர்களாக இருப்பார்கள். அதை நாம் மனதில் கொண்டு உண்மையான கடவுள் மறுப்பும், உண்மையான நாத்திகமும் சாதி ஒழிப்பில்தான் இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டி வந்திருந்த உங்களுக்கு நன்றி சொல்லி இந்நிகழ்ச்சியை அழகாக முறையாக சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்களை பாராட்டி விடை பெறுகிறேன்.

(நிறைவு)

Pin It