பார்ப்பனர்கள் சாப்பிட்டுவிட்டு வீசி எறியும் எச்சில் இலைகள் மீது உருண்டு புரண்டால் தோல் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்கள் இதைச் செய்து வருகிறார்கள்.  கருநாடக மாநில அரசு கட்டுப்பாட்டிலுள்ள கோயிலில், அம்மாநில அறநிலையத் துறையே இந்த சடங்குகளை அனுமதித்து வருவதுதான் கொடுமை. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பார்ப்பான் எச்சில் இலையில் புரளும் இந்த மதச் சடங்கு மங்களூர் அருகே தட்சிண கன்னட மாவட்டத்திலுள்ள “குக்கே” சுப்பிரமணிய சாமி கோயிலில் மூன்று நாட்கள் நடக்கின்றன.

இந்த மூன்று நாட்களிலும் பார்ப்பனர்களுக்கு மட்டும் கோவில் செலவில் பெரும் விருந்து போடப்படுகிறது. ‘ஓசி’யில் மூன்று நாட்களும் தின்று கொழுக்கும் பார்ப்பனர்கள், ‘மிச்சம் மீதி’ களை எச்சில் இலையில் வைப்பார்கள்; அதற்காகவே காத்திருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கோயில் வளாகங்களில் இந்த எச்சில் இலைகளை அப்படியே எடுத்து வந்து அடுக்கி வைத்து, அதில் உருண்டு புரளுவதை பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள். இதனால் “தோல் வியாதிகள்” குணமாகிவிடும் என்றும், குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் பார்ப்பனர்கள் நம்ப வைத்துள்ளனர்.

இந்த மடமை - பார்ப்பன சடங்குக்கு ‘மடே ஸ்நானா’ என்று பெயர் சூட்டப்பட்டு, 400 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறதாம். கடந்த ஆண்டு முதல் மனித மாண்புக்கே எதிரான இந்த காட்டுமிராண்டி சடங்குக்கு முற்போக்கு சிந்தனை யாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களிலேயே இதை அனுமதிக்கலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். உள்ளூர் நிர்வாகம் இதை நிறுத்திவிட முடிவு செய்தாலும், பார்ப் பனர்கள், அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்களைத் தூண்டிவிட்டு நிறுத்தக் கூடாது என்று எதிர்ப்புகளை தூண்டி விடுகின்றனர்.

தமிழ்நாட்டைப்போல இந்த அவலங்களைக் கண்டித்து மக்களை சிந்திக்க வைக்கும் பெரியார் இயக்கங்கள் கருநாடகத்தில் இல்லை என்பதால், ஒடுக்கப்பட்ட மக்களும் ‘விட்டில்பூச்சி’களாக பார்ப்பன சதியில் விழுந்து கிடக்கிறார்கள்.

இந்த மனிதவிரோத பார்ப்பனியத்தை தடை செய்யக்கோரி கருநாடகாவில் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் மாநிலத் தலைவர் கே.எஸ்.சிவராமு, கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். மனுவை கொடுத்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோயில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே விருந்து போடுவதை நிறுத்த வேண்டும் என்றும், மதம், நம்பிக்கை என்ற போர்வையில் இத்தகைய அறிவியலுக்கு எதிரான நிகழ்ச்சிகளை அனுமதிக்கக் கூடாது” என்றும் கூறினார்.

காவல்துறை பாதுகாப்பு இருந்தும், கும்பல் ஒன்று அவரைத் தாக்கத் தொடங்கியது. தப்பித்து ஓட முயன்ற அவரை வன்முறைக் கும்பல் துரத்திச் சென்று தாக்கியது. அதற்குப் பிறகே காவல்துறை தலையிட்டு, மருத்துவமனையில் அவரைச் சேர்த்தது. அறிக்கை ஒன்றை தயாரித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருப்பதாகவும், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் சிவராமு தெரிவித்தார். தன் மீது தாக்குதல் நடத்திய பிற்படுத்தப் பட்ட மக்கள் அப்பாவிகள் என்றும், கோயில் அர்ச்சகப் பார்ப்பனரின் தூண்டுதலில் அடியாள் களாக மாறி தாக்கினர் என்றும் அவர் கூறியுள்ளார்.

கோயிலில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். செல்வாக்கு அதிகம் என்று கூறப்படு கிறது. இதே மாவட்டத்திலிருந்து சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வித் துறை அமைச்சராக இருக்கும் வி.எஸ். ஆச்சாரி என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், “இது மக்களின் நம்பிக்கை; அதில் தலையிட்டு தடை செய்தால், மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகும்” என்று கூறியுள்ளார். இத்தனைக்கும் இந்தப் பார்ப்பன அமைச்சர் ஒரு மருத்துவர். வழக்கறிஞரும், மாநில பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தின் முன்னாள் தலை வருமான டாக்டர் சி.எஸ். துவாரகாந்த் கூறுகையில், மீண்டும் பார்ப்பன மேலாதிக் கத்தை நிலைநிறுத்த விரும்பும் ஆர்.எஸ். எஸ்.சின் செயல் திட்டங்களில் இதுவும் ஒன்று என்று கூறியுள்ளார். இப்படி மனித நாகரிகத்துக்கு எதிரான சடங்குகளை நடத்தும் இந்தக் கோயிலை நோக்கித்தான், பெரும் அரசியல் தலைவர்களும், சச்சின் டெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் “நட்சத் திரங்களும்”, ரவி சாஸ்திரி போன்ற பார்பபன கலைஞர்களும் அண்மைக்காலமாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

மதச்சார்பற்ற கட்சிகளாக கூறிக் கொள்ளும் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) ஆகிய கட்சிகளும், பா.ஜ.க.வைப் போலவே தங்களது ஓட்டு வங்கியை மட்டுமே குறி வைத்து இந்த பார்ப்பனக் கொடுமையை எதிர்க்காமல் மறைமுகமாக ஆதரித்தே வருகிறார்கள். இடதுசாரி கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இதேகோயிலில் ‘அஜலு’ என்ற பெயரில் ஒரு சடங்கு நடந்து வந்தது. பார்ப்பனர்கள் வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு எச்சில் இலையில் மிச்சமிருப்பதோடு, தங்கள் தலைமுடியையும் நகத்தையும் வெட்டிப் போட்டு பிச்சையாகக் கொடுப்பார்களாம். ‘கொரகா’ என்ற பழங்குடி மக்கள் அதைப் பிச்சையாகப் பெற்று பயபக்தியுடன் சாப்பிடுவார்களாம். இந்த பார்ப்பன சடங்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் தடை செய்யப்பட்டது.

மாநில அறநிலையத் துறை அமைச்சராக உள்ள ஏ. நாராயணசாமி, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர். இதைத் தடை செய்யவே தாம் விரும்புவதாக அவர் கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டிலும் பார்ப்பானின் எச்சில் இலையை புனிதமாகக் கருதும் சடங்குகள் மதம், கடவுள், பெயரால் தொடருவதும், அதை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள், அமைச்சர்கள் நியாயப்படுத்துவதும், பார்ப்பன வல்லாதிக்கமே நாட்டை ஆள்கிறது என்பதை உறுதிப்படுத்தி வருகிறது.