அணுமின் திட்டங்களை உருவாக்குவதில் தான் சர்வதேச சக்திகளின் பின்னணி இருக்கிறதே தவிர, அத் திட்டத்துக்கான எதிர்ப்பில் இல்லை. அணுசக்தி பிரச்சினையில் அமெரிக்காவுக்கு பின்னால் ஓடுவது இந்தியா தான் என்று இயற்பியல் விஞ்ஞானிகள் கருத்து தெரி வித்துள்ளனர். ‘இந்து’ நாளேட்டில் (நவ.6) வெளிவந்த இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்துகளின் சுருக்கம்:

கூடன்குளம் அணுஉலை தொடங்கக் கூடாது; மூடவேண்டும் என்ற மக்கள் போராட்டம் தீவிர மடைந்துள்ள நிலையில், அணுமின் நிலைய நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கை பிரச்சினைக்குரிய நிலையை ஏற்படுத்தி யுள்ளது. இந்திய அணுசக்தி வாரியத்தின் தலைமை நிர்வாகி கூடன்குளத்தில் நடைபெறுகின்ற போராட்டங்களின் பின்னணியில் வெளிநாட்டுச் சக்தி இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், அணு உலைகள் “100 சதவீதம் பாதுகாப்பானது” என்று தெரிவித்ததோடு, ‘இந்து’ ஆங்கிலப் பத்திரிகையில் நவம்பர் 6 ஆம் தேதி எழுதிய கட்டுரையில் அணுசக்தி நமக்குத் தேவை; அதுவே நம்முடைய நாடு வளர்ச்சியடை வதற்கும், வளமாவதற்கும் வழி வகுக்கும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற கருத்துகள் நம்மை வரலாற்றின் பக்கங்களைப் பின்னோக்கிப் பார்க்கச் செய்கின்றது. உதாரணத்திற்கு ஜவகர்லால் நேரு அணுசக்தி புரட்சியைத் தொழிற் புரட்சியோடு ஒப்பிட்டார். நீங்கள் அந்த வளர்ச்சியோடு செல்லாவிடில் மற்றவர்கள் உங்களை முந்திச் செல்ல நேரிடும். நீங்கள் பின் தொடர்ந்து செல்ல நேரிடும் என்றார். ஆனால், கடந்த அரை நூற்றாண்டில் அவர் கணித்தபடி அணுசக்தி எதிர்பார்த்த முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை. பொருளாதார ரீதியான வளர்ச்சி, எதிர்பார்த்த நாட்டின் வளர்ச்சி தவறான கருத்தாகவும் வரலாற்றுப் பிழையாகவும் அமைந்து விட்டது.

அணுசக்தி உற்பத்திக்கான வாய்ப்பு தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் அணுசக்தித் துறை ஏராளமான அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது. அணுசக்தியில் வல்லமை பெறுவதைக் குறித்துச் சொல்லப்பட்ட தொலைநோக்குத் திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஏனென்றால் அந்தத் திட்டங்கள் வாயிலாக நாம் எதிர்பார்த்த பலனை அடையவில்லை. உதாரணத்திற்கு 1970-களின் தொடக்கத்தில் அணுசக்தி மூலமாக 43,500 மெகா வாட் மின்சாரம் வரை உற்பத்தி செய்ய 2000 ஆம் ஆண்டு வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், உற்பத்தி செய்ய முடிந்த மின்சார அளவு வெறும் 2,720 மெகா வாட் மட்டும்தான்.

கடந்த ஆண்டு அணுமின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தில் 2.8 சதவீதம் மட்டுமே. குறைந்த அளவே மின்சாரம் அணு உலைகளின் மூலமாக உற்பத்தி செய்யப் பட்டாலும் மற்றவைகளோடு ஒப்பிடும்போது உற்பத்திச் செலவு அதிகமே. தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அணுசக்தித் திட்டத்திற்குப் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த போதிலும் அணு சக்தித் திட்டங்கள் தோல்வியைத்தான் சந்தித் துள்ளன. எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை.

சில வருடங்களாக அணுசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் எதிர்காலக் கனவிற்கு ஓர் உந்துதல். அது இந்தியா - அமெரிக்கா அணுசக்தி உடன்பாட்டின் மூலம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தம் மன்மோகன் சிங் அரசின் வெளிநாட்டுக் கொள்கை மேற்கத்திய நாடுகளுடனான உறவை மேம்படுத்த அவர்கள் பக்கம் சாய்வதற்கு ஏதுவாக அமைந்தது. அமெரிக்க நாட்டைப் பொறுத்தவரை ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஆலோசகராக இருந்த ஆஸ்லி டெல்லிஸ் அவர்களின் கூற்றுப்படி இந்தோ-அமெரிக்க ஒப்பந்தம் முழுமையான உற்பத்தியோடு கூடிய ஓர் ஒப்பந்தம் என்று வர்ணித்தார். ஆனால், இந்த உறவு சம பலம் பொருந்தியவர்களுக்கிடையே ஏற்பட்டது அல்ல.

இதன் மூலம் இந்தியா அமெரிக்காவின் திட்டமிட்ட வியூகத்தைப் பின்பற்றக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, பன்னாட்டு அணுமின் முகாமத்தில் ஈரான் சம்பந்தமான பிரச்சினை எழுந்தபோது, அமெரிக்க நிலையை ஏற்றுக் கொண்டு இரண்டு முறை ஈரானுக்கு எதிராக வாக்களித்தது. அதன் முலம் நிறைவேற்றப்பட இருந்த ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா இடையேயான குழாய் மூலம் கொண்டு வர இருந்த எரிவாயுத் திட்டம் நிறுத்தப்பட்டது. நமது எரிசக்தியைப் பலப்படுத்து வதற்கான வாய்ப்பு நழுவி விட்டது.

மன்மோகன் சிங் அரசு இந்தோ-அமெரிக்க ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்காக இன்னும் அதிக விலையைக் கொடுக்கத் தயாராக உள்ளது. முன்னாள் அணுமின் சக்தித் துறையின் தலைவராக இருந்த அனில் காக்கோடடர் மராத்தி நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் இந்தியா பல கோடி பில்லியன் டாலர் செலவு செய்து அணு உலைகளை இறக்குமதி செய்து மேலை நாடுகளை யும் அங்குள்ள கம்பெனிகளின் வர்த்தகத்தையும் மேம்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற இறக்குமதி களும் அதற்கு வழிவகுத்த வெளியுறவுக் கொள்கை யும் மீண்டும் ஒரு புதிய காலனி ஆதிக்கத்தை நினைவூட்டுகிறது.

எனவே, “வெளிநாட்டுச் சக்திகள்” அணுஉலை களின் விரிவாக்கத்தில்தான் உள்ளது. ஆங்காங்கே அமைய உள்ள அணுமின் நிலையத்திற்கு எதிராக நடைபெறுகின்ற போராட்டத்தில் அந்நிய சக்திகள் இல்லை. அந்நிய சக்திகளின் சதி என்ற கருத்து அணுமின் நிலைய கழகத்தால் ஆங்காங்கே பரப்பப்படுவது மக்களின் நியாயமான கவலையை முறியடிப்பதற்கான முயற்சியே.

கூடன்குளத்தில் கிராம மக்கள் எழுப்பிய எதிர்ப்புக் குரல் ஆரம்பத்தில் இருந்து புறக்கணிக்கப் பட்டு எள்ளி நகையாடப்பட்டது. விரக்தியின் உச்சத்திற்குப் போன மக்கள் போராட்டத்தை மேலும் வலுவாக்கினார்கள். கூடன்குளம் அணுஉலைக்காக செலவிடப்பட்ட மக்கள் பணம் விரயமாவதற்கும் மக்களின் பிடிவாதம் காரணமல்ல. ஆரம்பம் முதல் அந்த மக்கள் எழுப்பிய அச்சத்தைப் போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததுதான் இந்த நிலைக்குக் காரணம்.

அப்பகுதியில் வாழும் மக்களுக்குத் தங்கள் கவலையைச் சொல்ல, அச்சத்தை வெளிப்படுத்த உரிமை உள்ளது. அணு உலை விபத்துகள் பேரழிவை ஏற்படுத்தி மக்களின் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியன. புகுசிமா அணு உலையால் ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்து கொள்ள நீண்ட நாளானது. ஆனால், முடிவு மரண ஓலம்தான்.

செர்னோஃபில்லில் நடந்த விபத்தில் 57 பேர்தான் நேரிடையாக உயிரிழக்க நேரிட்டது என்று அணுஉலை ஆதரவாளர்கள் தெரிவித்தாலும் உலக நலக் கழகம் 9000 பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்கள் என்று தெரிவித்தது. அமெரிக்கா விலுள்ள புற்றுநோய் மையம் நடத்திய ஆய்வில் செர்னோஃ பில்லில் இருந்து வெளியான அயோடின்-131 அணுக் கசிவால் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் இன்றும் தைராய்டு புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். சமூகத்தில் பரவுகின்ற நோய்க் கிருமிகள் குறித்து ஆய்வு செய்பவர்கள் செர்னோஃபில் விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அவர்களுடைய மதிப்பீடு அதிக அளவில் உள்ளது. இன்றும் செர்னோஃபில் அணு விபத்தால் பாதிக்கப்பட்ட 10000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கடுமையான ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் அந்தப் பகுதியானது சீசியம்-137 என்ற கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது. தாக்கம் 30 ஆண்டு காலத்திற்கு வீரியமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

விண்வெளி விஞ்ஞானிகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடத்திய ஆய்வில், புகுசிமா அணுஉலையில் ஏற்பட்ட விபத்தில் சீசியம்-137, அதாவது, செர்னோஃபில்லில் ஏற்பட்ட விபத்தில்

40 சதவீதம் அளவுக்கு அணுக்கசிவு ஏற்பட்டுள்ளது கணடறியப்பட்டுள்ளது. புகுசிமா விபத்தின்போது காற்றின் வீச்சு பசிபிக் பெருங்கடலை நோக்கிக் குறிப்பிட்ட அளவுக்கு இருந்ததால் அங்கும் கதிர்வீச்சின் தாக்கம் உள்ளது. செர்னோஃபில் விபத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் 10 சதவீத பகுதி பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. காற்றின் திசை என்றும் நமக்குச் சாதகமாக இருக்காது. இந்தப் புள்ளி விவரங்களை இந்தியா கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நிலத்தையும் கடலையும் நம்பியே வாழ்கின்றனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

விஞ்ஞான ரீதியாக தற்போதைய அணு உலைகள் மற்றும் கூடன்குளத்தில் இருக்கக்கூடிய வி.வி.இ.ஆர். அணு உலைகள் அனைத்தும் 100 சதவீதம் பாதுகாப்பானது என்று சொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எல்லா அணுஉலைகளும் ஓரளவுக்குக் குறைந்த வாய்ப்புடைய பாதிப்பை ஏற்படுத்தவல்லது. ஆரம்பத்தில் வி.வி.இ.ஆர். அணு உலைகளின் கட்டுப்படுத்தப்பட்ட உலோக இயக்கத்தில் பிழை இருந்தது. மார்ச் 1, 2006 ஆம் ஆண்டு பல்கேரியாவில் உள்ள கொழுடி அணு உலையின் 4 ஆவது பிரிவில் மோட்டார் சாதனத்தில் ஏற்பட்ட தடை, மின் உற்பத்தி 67 சதவீதமாக குறைந்தபோது கட்டுப்படுத்தப்பட்ட உலோக இயக்கம் பாதிக்கப்பட்டது. அதாவது 61 இல் 22 உலோகங்கள் இயங்கவில்லை. மேற்சொன்ன குறைபாடு அணு உலைப் பாதுகாப்பில் விபத்தை ஏற்படுத்த வல்லது.

சாதாரண மறைமுக சோதனை மூலமாகவே வல்லுநரல்லாத ஒருவரே அணுஉலைப் பாதுகாப்பை மதிப்பீடு செய்ய முடியும். அணு உலைகளினால் விபத்து ஏற்பட 0 சதவீத அளவுக்குக்கூட வாய்ப்பில்லை என்றால், அணுஉலையை விற்பவர்கள் விபத்துக்குப் பொறுப்பு ஏற்கின்றபோது - நஷ்டஈடு வழங்க மறுத்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முனைவது ஏன்? கூடன்குளம் அணுமின் நிலைய விற்பனையாளரான ஆட்டம் ஸ்டோரிக் ஸ்போர்ட் என்ற நிறுவனம் இந்திய அரசுடன் ஒரு சிறப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் விபத்துக்கு ஆளானவர்கள் இந்த நிறுவனத்திடம் இழப்பீடு கேட்க முடியாது.

வெஸ்டிங் அவுஸ் என்ற நிறுவனம் அணு உலை விற்பனயை நிறுத்தியுள்ளது. ஏனென்றால் புதிய இழப்பீடு சட்டம் குறைந்த அளவு அவர்களைப் பொறுப்பாளியாக்குவதால் தயக்கம் காட்டுகின்றது. 100 சதவீதம் ஆபத்தில்லாதது என்று சொல்லப்படும்போது அணுமின் நிலைய விற்பனை நிறுவனங்கள் தங்களுக்குப் பொருளாதார இழப்பு நேர்ந்துவிடக் கூடாது என்று அதிக கவனத்து டனும் எச்சரிக்கையுடனும் ஏன் இருக்கின்றன? இங்குள்ள அரசாங்கம் கூடன் குளத்தில் வாழும் மக்களை உயிரைப் பணயம் வைக்கச் சொல்வது நியாயமா?