தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சி.எஸ்.கர்ணன், சாதி அடிப்படையில் அவமதிக்கப்படுவதாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு புகார் செய்துள்ள சேதி, தமிழ்நாட்டுக்கே தலைகுனிவைத் தருவதாகும். சாதி-தீண்டாமை, நீதிபதிகளிடமிருந்தே விடை பெறவில்லை என்றால், இந்த நீதித்துறையிடமிருந்து எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?

உடன் பணியாற்றும் நீதிபதிகளே தம்மை இழிவுபடுத்துவதை நீதிபதி சி.எஸ். கர்ணன், உள்ளக் குமுறலுடன் கூறியுள்ளார். தம்மிடம் வரும் வழக்குகளில் சுயமாக எடுக்கும் முடிவுகளை ‘குழு மனப் பான்மையோடு’ முடிவுகளை எடுக்கும் நீதிபதிகள் விரும்புவ தில்லை என்றும், எல்லோரும் கலந்து பேசி, ஒருமித்த தீர்ப்பை வழங்க வேண் டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது நீதித்துறையின் நேர்மையான செயல்பாட்டுக்கு எதிரானது என்றும், அவர் ஆணையத்தின் தலைவர் பி.எல். புனியாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நீதித்துறை தொடர்பான நிகழ்வுகளிலும், அரசு நிகழ்ச்சியிலும் தலித் என்பதால், தன்னை பங்கேற்க அனுமதிக்க வில்லை என்றும், சென்னை திருமண நிகழ்வு ஒன்றில் தனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நீதிபதி, தனது செருப்புக் காலைத் தூக்கி, தனது காலின் மீது போட்டதாகவும், மற்றொரு நிகழ்வில், தனக்கு பின் இருக்கை யில் அமர்ந்திருந்த ஒரு நீதிபதி, தனது இருக்கையைப் பிடித்து அசைத்துக் கொண்டே இருந்ததாக வும், தமது புகார் மனுவில் கூறி யுள்ளார். ஆணையத்தின் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இந்த மனுவை அனுப்பியுள்ளார்.

கேரளாவிலிருந்தும், கடந்த ஏப்ரல் மாதம் இதே போன்ற ஒரு செய்தி வெளி வந்தது. மாநில பதிவுத் துறையில் தலைமைப் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ.கே. இராமகிருட்டிணன் என்ற பட்டியல் இனப் பிரிவைச் சார்ந்த அதிகாரி, பதவி ஓய்வுப் பெற்ற பிறகு, காவல் துறையில் ஒரு புகாரைத் தந்தார். இவரது அலுவலகத்தையும், பயன்படுத்திய அரசு மகிழுந்தையும், பணி ஓய்வு பெற்ற பிறகு சில அதிகாரிகள் மாட்டுச் சாணத்தைத் தெளித்து தீட்டுக் கழிக்கும் சடங்குகளை நடத்தியதாகப் புகார் கூறியிருந்தார்.

இவர் பதவி ஓய்வு பெற்ற நாளன்று, சாதி வெறி அதிகாரிகள் பட்டாசு வெடித்து மகிழ்ந் துள்ளனர். மாநில மனித உரிமை ஆணை யமும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் இது குறித்து விரிவான விளக்கம் கேட்டது. அதைத் தொடர்ந்து மாநில காவல் துறை மூன்று அதிகாரிகளைக் கைது செய்தது.  ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு (ஏப்.21,2011) இதை வெளியிட்டுள்ளது. சாதி தீண்டாமைக்கு எதிரான இயக்கங் களின் தேவையையே இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

பெயரிலும் பெண்ணிற்கு இழிவு

மனிதனின் முக்கிய அடையாளம் அவரது பெயர்தான். ஆனால், பெயர் அடையாளத்திலேயே பால், சாதி வேறுபாடுகளும் புகுத்தப்பட்டு விடுகிறது. பெயரைக் கொண்டே ஒருவரது சாதியைக் கண்டறியும் நிலை இருந்து வந்தது. தமிழ்நாட்டில் பெரியார் இயக்கத்தின் புரட்சிகளில் ஒன்று - பெயருக்குப் பின்னால் ஒட்டியிருந்த ‘சாதி’யையும், பெயருக்குள் பதுங்கி நின்ற சாதியையும் ஒழித்தது ஆகும். இப்போதும் வடநாட்டில் பெயரைக் கொண்டே சாதியைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள். மகாராஷ்டிர மாநில அரசு ஆதரவுடன் அண்மையில் பெண்களுக்கு பெயர் மாற்றும் நிகழ்ச்சி நடந்துள்ளது. பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால், விரக்தியடைந்த பெற்றோர்கள் மராட்டியத்தில் ‘நாகுஷா’ என்று பெயர் சூட்டி விடுவார்களாம். இதற்கு ‘வேண்டப்படாதவள்’ என்று அர்த்தம். அண்மையில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்தப் பெண்களின் பெயர்களை மாற்றும் நிகழ்ச்சி ஒன்றை அரசின் ஆதரவோடு சதாரா என்ற பகுதியில் நடத்தி,  பெயர் மாற்றத்துக்கான அரசு சான்றிதழ்களையும் பெற்றுத் தந்துள்ளன. ‘நாகுஷா’ என்று பெயர் சூட்டப் பெற்ற 200க்கும் அதிகமான பெண்கள், தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.

Pin It