குடியரசுத் தலைவரை கட்டாயப்படுத்தியது உள்துறை அமைச்சகம்

தமிழ்நாட்டில் சாந்தன், முருகன், பேரறிவாளன் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் திடீர் என்று நிராகரித்ததற்கான காரணங்கள் அம்பலமாகியுள்ளன. குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டில் இந்த மனுக்கள் மீது கருணை காட்ட வேண்டும் என்றே கருதிய நிலையில், மத்திய அரசு குடியரசுத் தலைவரை கட்டாயப்படுத்தி, இந்த மனுக்களை நிராகரிக்குமாறு கூறியுள்ளது. சோனியா வெளிநாட்டில் சிகிச்சைப் பெற்று திரும்புவதற்குள் இந்த தூக்குத் தண்டனையை நிறைவேற்றி முடித்துவிட திட்டம் தீட்டியதாகவே தெரிகிறது. குடியரசுத் தலைவரை மத்திய அரசு குறிப்பாக, ப.சிதம்பரத்தின் உள்துறை அமைச்சகம், பிரதிபா பட்டிலை நிர்ப்பந்தித்ததாலேயே கருணை மனுக்கள் அவசரம் அவசரமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்ற தகவலை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு அம்பலப்படுத்தியுள்ளது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வில் (செப்.4, 2011) அதன் செய்தியாளர் மனோஜ் மிட்டா, ‘மற்றொரு நாளில் மரணம்’ எழுதியுள்ள செய்தி ஆய்வில் இதுபற்றி எழுதியுள்ளதாவது:

குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன், தூக்குத் தண்டனைக்கு உடன்பாடு இல்லாதவர் என்பதால், தன்வசமிருந்த கருணை மனுக்களில் ஒன்றைக்கூட அவர் நிராகரிக்கவில்லை. அடுத்து பதவிக்கு வந்த அப்துல் கலாம், மேற்கு வங்கத்தைச் சார்ந்த சட்டர்ஜி என்பவரின் கருணை மனுவை மட்டும் தள்ளுபடி செய்தார். மற்றொரு கருணை மனுவுக்கு கருணை காட்டி தூக்குத் தண்டனையை நிறுத்தினார். தம்மிடமிருந்த தூக்குத் தண்டனைக்கு பரிந்துரைக்கப்பட்ட ஏனைய மனுக்களை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சகத்துக்கு திருப்பி அனுப்பினார். கருணை மனுவை பரிசீலிப்பதற்கு மத்திய அரசிடம், வழி காட்டும் நெறிமுறைகள் ஏதுமில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். கலாமைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பிரதிபாபட்டீல், இந்த ஆண்டு மே மாதம் வரை, எந்த ஒரு கருணை மனுவையும் நிராகரிக்கவில்லை. அது மட்டுமல்ல, 9 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். அதனைத் தொடர்ந்துதான், பிரதிபா பட்டீலுக்கு உள்துறை அமைச்சகத்திடமிருந்து நெருக்கடி தரப்பட்டது. அசாம், பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களிலிருந்து வந்துள்ள கருணை மனுக்களுக்கு தண்டனைக் குறைப்பு தரக்கூடாது என்று பிரதிபா பட்டீல் நிர்ப்பந்திக்கப் பட்டார்.

முதலில் கடிதம் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் தரப்பட்டது. ‘குடியரசுத்தலைவர் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கு அரசியல் சட்டத்தின் 72வது பிரிவு வழங்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவர் தன் விருப்பப்படி, பயன்படுத்த முடியாது; மத்திய அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின்படிதான் முடிவெடுக்க முடியும். உச்சநீதிமன்றம் ‘மாருராம்’ வழக்கில், இதைத் தெளிவுபடுத்தியுள்ளது என்று, உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி மிரட்டியது. இந்த நிலையில் பஞ்சாபைச் சேர்ந்த புல்லார், தனது கருணை மனு மீது நீண்டகாலம் முடிவெடுக்கப்படாத நிலையில் (13 ஆண்டுகாலம்), தமது தூக்குத் தண்டனையை தள்ளுபடி செய்யுமாறு, உச்சநீதி மன்றத்தை நாடினார்.

புல்லார் ரிட் மனு தாக்கல் செய்த அடுத்த இரண்டு நாட்களிலேயே அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார். இதிலிருந்தே அரசின் தலையீட்டினால் அதன் பழிவாங்கும் செயலுக்காகவே குடியரசுத் தலைவர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள உண்மை வெளிச்சத்துக்கு வந்து விட்டது. கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதற்கு நீண்ட காலம் தாமதிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையிலேயே குடியரசுத் தலைவரின் முடிவை நீதிமன்றங்கள் நிறுத்தி வைத்துள்ளன. புல்லாவின் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றமும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரநாத் தாஸ் என்பவரின் மரணதண்டனையை கவுகாத்தி உயர்நீதிமன்றமும், பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றமும் நிறுத்தி வைத்துள்ளன.

தமிழ்நாட்டில் மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிரான எழுச்சியின் காரணமாக தமிழக முதல்வர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். புல்லார் மீதான தூக்கு தண்டனைக்கு எதிராக பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங்பாதல், முன்னாள் முதல்வர் அமேரிந்தர் கிங் இருவருமே குரல் கொடுத்துள்ளனர். அதேபோல் அப்சல்குருவின் தூக்கு தண்டனையை காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எதிர்த்து வருகிறார். தமிழக சட்டமன்றத்தைப்போல் காஷ்மீர் சட்டமன்றத்திலும் அப்சல்குரு தூக்குக்கு எதிராக ஏன் தீர்மானம் போடக்கூடாது என்று கேட்டுள்ளார் என்று அந்த ஏடு எழுதியுள்ளது.

Pin It