வடகிழக்கு மாநிலங்களில் மக்களை மூர்க்கமாக ஒடுக்கி வரும் ராணுவ சிறப்பு அதிகார சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று அண்மையில் மத்திய உள்துறை செயலாளர் பதவியிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ள ஜி.கே. பிள்ளை ‘டெக்கான் கிரானிக்கல்’ நாளேட்டுக்கு (ஜூலை 3) அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த சட்டத்தை நீக்கிட வேண்டும் என்று அரசே நியமித்த நீதிபதி ஜீவன்ரெட்டி தலைமையிலான குழுவின் பரிந்துரையை தாம் முழுமையாக ஆதரிப்பதாக அவர் கூறியுள்ளார். மத்திய அரசின் சில துறைகள் இந்த சட்டத்தை நீக்குவதை விரும்பாததால் இதில் குழப்பம் நீடிக்கிறது என்கிறார் ஜி.கே. பிள்ளை.

வடகிழக்கு மாநிலங்கள் மோசமாக புறக்கணிக்கப்படு வதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடகிழக்கு மாநில மக்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் எழுதுவது இல்லை. மணிப்பூர் மாநிலத்து மக்களுக்கு ரயில் இணைப்பு தருவதாக 1970 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சர் அறிவித்து, 41 ஆண்டுகளில் ஒரு கிலோ மீட்டர் ரயில் பாதை மட்டுமே அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. திரிபுராவில் குமாரசாத் என்ற ஊரில் மட்டும் ரயில் நிலையம் வந்தது. 2010 ஆம் ஆண்டில்தான் தலைநகரான ‘அகர்தலா’வுக்கே மற்றொரு ரயில் நிலையம் வந்திருக்கிறது. சுதந்திரம் பெற்றபோது வடகிழக்கு மாநிலங்களில் 26 விமான நிலையங்கள் இருந்தன. இப்போது அவை 12 ஆக குறைந்து போய்விட்டன.

இந்த நிலையில் ராணுவத்துக்கு விசாரணையில்லாமலே சுட்டுத் தள்ளும் சிறப்பு அதிகாரத்தை வழங்கி ராணுவ ஆட்சியை ‘இந்தியா’ நடத்திக் கொண்டிருப்பதை உள்துறை செயலாளராக இருந்த ஒருவரே வேதனையோடு சுட்டிக்காட்டுகிறார்.

Pin It