ஊப்ளி தமிழர் பேரணியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வற்புறுத்தல்

கருநாடக மாநிலம் ஊப்ளி நகரில் ராஜபக்சேயை போர்க் குற்றவாளி என்று அறிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கருநாடக தமிழர்கள் மாபெரும் பேரணி ஒன்றை மே 22 ஆம் தேதி நடத்தினர். பேரணியை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கருப்புக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியைத் தொடர்ந்து விழிப்புணர்வு மாநாடு   கருநாடக வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்புரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஈழத் தமிழர்களிடம் அய்.நா. அவர்களுக்கான சுய நிர்ணய உரிமைக்கு வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இலங்கையில் இலட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சே, அவருடைய சகோதரர்கள் மற்றும் ராணுவத் தளபதிகள் அனைவரையும் கைது செய்து அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஊப்ளியில் கர்நாடகத் தமிழர் பேரவை சார்பில் பேரணி நடந்தது. இந்த பேரணியை கழக  தலைவர் கொளத்தூர் மணி கருப்புக் கொடி அசைத்து தொடங்கினார்.

உருவ பொம்மை எரிப்பு

பேரணியை தொடங்கி வைப்பதற்கு முன்பு, ஊப்ளி தலைமை தபால் நிலையம் எதிரேயுள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பிருந்து புறப்பட்ட பேரணிக்கு கர்நாடகத் தமிழர் பேரவை, தார்வார் மாவட்டக் கிளையின் தலைவர் அ. தனஞ்செயன் தலைமை தாங்கினார். பேரணியில் திருப்பூர் தமிழ் இலக்கிய சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான அனிதா கிருஷ்ணமூர்த்தி, கர்நாடகத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தண்டபாணி, ஒருங்கிணைப்பாளர்கள் எம்.பி.சம்பத் மற்றும் அழகிரிசாமி, பெண்கள் சுய உதவிக் குழுத் தலைவர் தேவகி, சிவமுகா, தமிழ்த் தாய் சங்க தலைவர் ராஜசேகரப்பா மற்றும் நிர்வாகிகள், தாவண்கெரே மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள், ஹாசன் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேவசேனாதிபதி மற்றும் நிர்வாகிகள், சிக்கமகளூர் $ சுப்ரமணி பாரதி மகாசபாவின் செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள், சிக்கமகளூர் தமிழ் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய ஐயப்ப சேவா சங்கத்தின் தலைவர் மோகன், கர்நாடகத் தமிழா பேரவையின் பொதுச் செயலாளர் பெங்களூர் ராவணன், பெரியார் திராவிடர் கழகத் தின் பெங்களூர் கிளையின் நிர்வாகி ராஜேந்திரன், ஊப்ளி வைர மலை வைரவேல் முருகன் ஆலயக் குழுத் தலைவர் மணி மற்றும் நிர்வாகிகள், பெளத்த சங்கத் தலைவர் சித்தோதனன் உட்பட கர்நாடகம் முழுவதுமிருந்து பல்வேறு தமிழ்ச் சங்க நிர்வாகி களும், ஊப்ளி வாழ் தமிழர்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் பேரணியில் கலந்து கொண்டு ‘போர்க் குற்வாளி ராஜபக்சேவை கைது செய்’, ‘இந்திய அரசே, இந்திய அரசே, தமிழர்களைக் கொன்ற போர்க் குற்றவாளிககு உதவி செய்யாதே’, ‘உலக நாடுகளே இனப் படு கொலை நாடு இலங்கை மீது பொருளாதார  தடையை விதி’ போன்ற முழக்கங்களுடன் கருப்புக் கொடிகளை ஏந்தி சென்றனர்.

ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஊப்ளியின் இதயப் பகுதியான ராணி சென்னம்மா சர்க்கிளை அடைந் தது. அங்கு இலங்கையில் நடந்த கொடுமைகள் குறித்து கொளத்தூர் மணி உரையாற்றினார். பிறகு ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்தனர். பிறகு ஊர்வலம் மாநாடு நடக்கும் இடமான கர்நாடக வர்த்தக சபை வளாகத்தை சென்றடைந்தது.

விழிப்புணர்வு மாநாடு

விழிப்புணர்வு மாநாட்டை குறள் வணக்கம் பாடி சிவமுகா தண்டபாணி தொடங்கி வைத்தார். கர்நாடகத் தமிழர் பேரவையின் தார்வார் மாவட்டக் கிளையின் தலைவர் அ.தனஞ்செயன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணியை பேரவை செயலாளர் தன்ராஜ் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அனிதா கிருஷ்ணமூர்த்தியை சி.ஆர். ஆன்ரூஸ் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். வெளி மாவட்டங்களி லிருந்து வந்திருந்த நிர்வாகிகள் அனைவருக்கும் எம்.மாரி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

புத்தகம் வெளியீடு

திருப்பூர் தமிழ் இலக்கிய சங்கத்தின் தலைவர் அனிதாகிருஷ்ண மூர்த்தி எழுதிய ‘என் கோபமெல்லாம் சீதையோடுதான்’ என்ற நூலை கொளத்தூர்  மணி வெளியிட்டார். கர்நாடகத் தமிழ்ச் சங்க கூட்டமைப்பு  ஒருங்கிணைப்பாளர்  எம்.பி. சம்பத் பெற்றுக் கொண்டார். கனவுகள் பூப்பறிக்கும் மற்றும் வசந்தகால தேரோட்டம் என்ற புத்தகங்களையும் கொளத்தூர் மணி வெளியிட, சிக்கமக்ளூர் இளைஞர் மன்றத் தலைவர் சீனிவாசன் மற்றும் தாவண் கெரே மாவட்ட தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். புத்தகம் குறித்தான அறிமுக உரையை அனிதா கிருஷ்ணமூர்த்தி ஆற்றினார்.

கர்நாடகத் தமிழர்கள் அரசியல் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தங்களுக்கென்று வாதாட ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. இவர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் அரசியல் அனாதைகளாக இருக்கிறோம். கர்நாடகம் முழுவதும் சிதறியுள்ள தமிழர்கள் ஒன்றுபட்டால் அனைத்து அரசியல் கட்சிகளும் நம்மை திரும்பிப் பார்க்கும் நிலை உண்டாகும். கர்நாடகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புக்கள் கர்நாடகத் தமிழ்ச் சங்க கூட்டமைப்பின் கீழ் ஒன்றுபட வேண்டும். இந்த ஒற்றுமையை ஏற்படுத்த ஊப்ளியில் நடந்த விழிப்புணர்வு மாநாட்டை போல் மாவட்டந்தோறும் விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தப்படவேண்டும் என்று சிவமுகா எம்.பி. சம்பத் கூறினார்.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் உண்ண உணவின்றி பட்டினியால்  வாடுகிறார்கள் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

“ஒரு குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீர் மட்டுமே கொடுக்கிறார்கள். குடிக்க, குளிக்க, சமைக்க இந்த தண்ணீர் எப்படி போதுமானதாக இருக்கும்? பெண்கள் இலங்கை வீரர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு கட்டாப்படுத்தப்படு கிறார்கள். இலங்கை ராணுவ வீரர்கள் முகாமிலுள்ள இளைஞர்களை விசாரணைக்கு என அழைத்துச் செல்கிறார்கள். இளைஞர்கள் திரும்பி வருவதே இல்லை. அவர்கள் கதி என்ன என்பது யாருக்கும் தெரியாது. கேட்க நாதி இல்லை. இந்த சூழலில் தமிழர்கள் சிங்களவர்களோடு எப்படி சேர்ந்து வாழ முடியும்? தமிழர்களுக்கு தங்கள் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்க ‘சுய உரிமை வாக்கெடுப்பு’ நடத்த ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகளை மீறிய ராஜபக்சே, அவருடைய சகோதரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் அனைவரையும் அனைத்துலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரணை நடத்தி அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். இலங்கை நாட்டை இனப்படுகொலை நாடு என அறிவிக்க வேண்டும். ராஜபக்சே தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள இந்தியாவின் உதவியை நாடுகிறார். இந்திய அரசு ராஜபக்சேவிற்கு உதவி செய்யக் கூடாது. தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் மூலம் காங்கிரஸ் கட்சி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு குறைத்து மதிப்பிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என எச்சரிக்கிறேன்” - இவ்வாறு கொளத்தூர் மணி பேசினார். கர்நாடகத் தமிழர் பேரவையின் மாநிலத் துணைத் தலைவர் அழகிரிசாமி மாநாட்டிற்கு தலைமை தாங்கி உரையாற்றினார். கடைசியில் பேரவையின் தார்வார் மாவட்டக் கிளையின் துணைத் தலைவர் சீனிவாசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இலங்கையை இனப்படுகொலை நாடு என ஐ.நா. சபை அறிவிக்க வேண்டும். இந்திய அரசு சிங்கள பேரினவாத இலங்கை அரசு போர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்க உதவக் கூடாது.

புதியதாக தோந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடுஅரசை பாராட்டுகிறோம். இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை செல்வி ஜெயலலிதா அரசு வலியுறுத்த வேண்டும்.

கர்நாடகத் தமிழர்கள் அரசியல் அங்கீகாரம் பெற தமிழ்ச் சங்க கூட்டமைப்பின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கர்நாடகம் முழுவதுமிருந்து வந்திருந்த தமிழ்ச் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் உணவு இடைவேளைக்குப் பின் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு கர்நாடக தமிழ்ச் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவமுகா சம்பத் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் துணைத் தலைவர் தண்ட பாணி முன்னிலை வகித்தார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன:

கர்நாடகத் தமிழர்களை ஒற்றுமைப்படுத்த மாவட்டங்கள் தோறும் ஊப்ளியில் நடந்ததைப்போல் விழிப்புணர்வு பேரணி மற்றும் மாநாட்டை நடத்த வேண்டும்.

அடுத்த கலந்தாய்வு கூட்டத்தை சிமோகாவில் 19.6.2011 ஞாயிற்றுக் கிழமை நடத்த வேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவிற்கேற்ப கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும்.   

போர்க் குற்றவாளி 16 ஆண்டுக்குப் பிறகு கைது


யுகோஸ்லேவியாவிலிருந்து போஸ்னியா பிரிந்து தனி நாடாகிவிட்டது. 1995 இல் அதே போஸ்னியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான இனப் படுகொலையை நடத்தியது செர்பியா. செர்பியா யூகோஸ்லேவியாவில் இடம் பெற்றுள்ள நாடு. இந்த படுகொலையை திட்டமிட்டு நடத்தியவன் செர்பிய இராணுவத் தளபதி மிலோடிச். மிலோடிச் இனப் படுகொலை குற்றச்சாட்டுக்கு உள்ளானான். போஸ்னியா இனப் படுகொலை தீப்பாயத்தின் முன் கொண்டு வர திட்டமிட்டது போஸ்னியா ஆட்சி. 16 ஆண்டுகளாக இராணுவ தளபதி மிலோடிச் தலைமறைவாகி விட்டான். கடந்த புதன் கிழமை அவன் கைது செய்யப்பட்டான். இனப்படுகொலையை விசாரிக்கும் பன்னாட்டுத் தீர்ப்பாயத்தின் முன் அந்த இராணுவ தளபதியை போஸ்னியா நிறுத்தவுள்ளது. இதே கதி ராஜபக்சேவுக்கும் அவரது ராணுவ தளபதிகளுக்கும் வந்தே தீரும்.

Pin It