பல்டி அடித்த சாட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை
ஜெயேந்திரனைக் காப்பாற்ற அரசு தரப்பு தீவிரம்
அம்பலப்படுத்துகிறார் காவல்துறை அதிகாரி

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பார்ப்பனர் காஞ்சி ஜெயேந்திரன் “தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி” என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை கடந்த 23 ஆம் தேதி தொடங்கியுள்ளார். ஆவடி இரவிச்சந்திரன் என்ற தொழிலதிபர் கட்சியின் தலைவராம். மதமாற்றத் தடை சட்டம், பசுவதை தடை சட்டம், கோயில் நிர்வாகத்தை அரசிடமிருந்து எடுத்தல், மக்களை பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்தி, தூய்மையான, மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்குதல் ஆகியவை இக்கட்சியின் கொள்கைகளாகும் என்று ஜெயேந்திரன் கூறியுள்ளார். இக்கட்சி உடனடியாக தேர்தலில் ஈடுபடாது என்றும் கூறியுள்ளார். மதத் தலைவர்கள், அரசியல் கட்சி தொடங்குவதில் தவறு இல்லை என்று ‘துக்ளக்’ சோ கூறி, கட்சியை வரவேற்றுள்ளார். இந்த நிகழ்வில் பங்கேற்ற மற்றொரு பார்ப்பனரான பா.ஜ.க. தலைவர் இல. கணேசன், இந்த ஆன்மிக கட்சி, பா.ஜ.க. கொள்கைகளோடு இணைந்து நிற்கிறது என்றார். சீக்கிய பார்ப்பனரான மேனகா காந்தி, முன்னாள் அய்.ஏ.எஸ். பார்ப்பன அதிகாரி சந்திரலேகா ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்று ஜெயேந்திரன் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

சங்கர் ராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காஞ்சி ஜெயேந்திரனைக் காப்பாற்றுவதற்கு தமிழக காவல்துறையே முயற்சி செய்து வருகிறது. சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறி வருகின்றனர். வழக்கை விசாரித்த முக்கிய காவல்துறை அதிகாரியான எஸ்.பி. சக்திவேலு என்பவரையே சங்கராச்சாரிக்கு எதிராக சாட்சி கூற வேண்டாம் என்று தமிழக காவல்துறை அதிகாரிகள் கூறியதை எதிர்த்து எஸ்.பி. சக்திவேலு, உயர்நீதிமன்றம் வந்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் அவர் சார்பாக கழக வழக்கறிஞர் எஸ்.துரைசாமி வழக்கு மனுதாக்கல் செய்தார். வழக்கறிஞர்கள் எஸ். குமாரதேவன் மற்றும் எஸ்.சி.வி. விமல்பானி பெயர்களில் வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தயாரித்த மனுவில் காவல்துறை அதிகாரி சக்திவேலு கூறியுள்ள விவரங்கள்:

காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் நிர்வாகி சங்கர்ராமன், கோயிலுக்குள்ளேயே அடையாளம் தெரியாத 5 நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் காஞ்சி ஜெயேந்திர சரசுவதி எனும் சுப்பிரமணியனுக்கு  தொடர்பு இருப்பதாக புலனாய்வில் தெரியவந்தது. உடனே ஆந்திர மாநிலம் அய்தராபாத் மகபூப் நகரில் பதுங்கி இருந்த காஞ்சி ஜெயேந்திரனை, கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த நானும், மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த பிரேம்குமாரும் கைது செய்து, காஞ்சிபுரம் பெருநகர நீதிமன்றத்தில் நிறுத்தினோம். ஜெயேந்திரன் நீதித் துறை காவலில் வைக்கப்பட்டார். பின்னர் ஜெயேந்திரன் காவல்துறை விசாரணையின்போது பல உண்மைகளை ஒப்புக் கொண்டார்.

2001 ஆம் ஆண்டு ஜெயேந்திரன் சீனாவுக்கு செல்ல திட்டமிட்டதை சங்கரராமன் தான் - அது மடத்தின் சம்பிரதாயத்துக்கு விரோதம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை செய்தார். அதைத் தொடர்ந்து ஜெயேந்திரன் மடத்துக்கு சொந்தமான நிலத்தை மிகக் குறைந்த விலையில் விற்க முயன்றபோது சங்கர்ராமன், இந்து அறநிலையத் துறை ஆணை யருக்கு புகார் கடிதம் எழுதினார். (27.12.2001) ஜெயேந்திரனின் இந்த முறைகேடான நடவடிக்கையால் மடத் துக்கு ஒரு கோடியே 13 லட்சத்து 55 ஆயிரத்து 766 ரூபாய் இழப்பு ஏற்பட் டுள்ளதாகவும், எனவே ஜெயேந்திரனின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தி இருந்தார்.

காஞ்சி ஜெயேந்திரனும் அவரது ‘ஜூனியரான’ விஜயேந்திர சரசுவதியும் மடத்துக்குள் ‘ஒழுக்கக் கேடான’ வாழ்க்கை நடத்தி வருவது பற்றி, மீண்டும் அறநிலையத் துறை ஆணையருக்கு ‘சோம சேகர கனபாடிகள்’ என்ற பெயரில் சங்கர்ராமன் ஒரு கடிதம் எழுதினார் (21.5.2002). காஞ்சி ஜெயேந்திரன் ஒரு பெண்ணுக்கு, அவரே கைப்பட எழுதிய காதல் கடிதமும், பெண்களுடன் ஜெயேந்திரன் பாலியல் உறவு கொள்ளும் படங்களும், தம்மிடம் இருப்பதாக சங்கர்ராமன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதைத் தவிர, திருமதி உஷா என்ற பெண்ணிடம் காவல்துறை விசாரணை நடத்தியபோது ஜெயேந்திரன் செல்பேசி வழியாக பல்வேறு பெண்களுடன் பாலியல் உறவு குறித்து பேசுவது வழக்கம் என்ற விவரங்கள் கிடைத்தன.

சங்கர்ராமன் சோமசேகர கனபாடிகள் என்ற தனது புனைப் பெயரில் அறநிலையத் துறை ஆணையருக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் (26.6.2003) பல தகவல்கள்இடம் பெற்றிருந்தன. அக்கடித்தில் இருந்த வாசகங்கள்:

“ஏற்கனவே ஜெயேந்திரனுக்கு ஒரு பெண்ணுடன் பாலியல் உறவு இருந்ததை நான் பலரது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன். அது பழைய கதை. இப்போது புதிய கதை ஒன்றை நான் கூறுகிறேன். காஞ்சியில்  ஜெயேந்திரனுக்கு ஒரு ‘வைப்பாட்டி’ இருக்கிறார். இது எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஜெயேந்திரனின் வைப்பாட்டிகளில் இவர்தான் ‘சீனியர்’. காஞ்சிபுரம் நகரம் முழுமைக்கும் இவர்களின் உறவு பற்றி தெரியும். மடத்துக்குள்ளேயே ஜெயேந்திரன், தனக்கு தேவைப்படும்போது, இந்த பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்வார். அந்தப் பெண்ணின் கணவர் கண் முன்னே இது நடக்கும். கணவர் கவலைப்படமாட்டார். ஜெயேந்திரன் அறைக்கு அடுத்த அறை அவரது உதவியாளர் ரகுவின் அறை. ரகு அறைக்கதவை பாதி திறந்த நிலையிலேயே வைத்துக் கொண்டு ஜெயேந்திரருக்கு நெருக்கமான அதே பெண்ணிடம் தகாத உறவு கொண்டிருந்தபோது, கதவைத் திறந்த ஜெயேந்திரர் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்து, விளக்கை அணை என்று கூச்சல் போட்டார். உதவியாளர் ரகு, ஜெயேந்திரனின் கூச்சலை காதிலே போட்டுக் கொள்ளவே இல்லை.

பல பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு, பிறகு அந்தப் பெண்களை மடத்தின் செலவிலேயே சில அப்பாவிகளைப் பிடித்து திருமணம் செய்து வைத்து விடுவார்கள். (இப்படி ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவருமே  தகாத உறவு கொண்டிருந்த பெண்கள், அவர்களால் கருவுற்ற பெண்கள், பிறகு அவர்களுக்கு கணவர்களாக திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள் எல்லோருடைய பெயர்களையும் அந்தக் கடிதத்தில் சங்கர்ராமன் குறிப்பிட்டிருந்தார்.) அடையாறில் ‘ஜூனியர்’ விஜயேந்திரர் பாலியல் வியாதிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்.”

இப்படி பல தகவல்களை சங்கர்ராமன் அறநிலையத் துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் விரிவாக விளக்கியிருந்தார்.

இவற்றால் சங்கர்ராமன் மீது ஜெயேந்திரனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இத்தகைய ஒழுங்கற்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால், மக்களிடம் உண்மைகளை அம்பலப்படுத்துவேன் என்று சங்கர்ராமன் இறுதியாக ஜெயேந்திரனுக்கே கடிதம் எழுதி (16.7.2004) இறுதி எச்சரிக்கை செய்தார். தொடர்ந்து ‘தினமலர்’ நாளேட்டின் ஆசிரியருக்கு இந்த ஒழுக்கக் கேடுகளை விளக்கி சங்கர்ராமன் ஒரு கடிதம் எழுதினார் (14.8.2004) - ‘தினமலர்’ ஆசிரியர் அந்தக் கடிதத்தை தனது பத்திரிகையில் வெளியிடுவதற்கு பதிலாக ஜெயேந்திரனிடமே நேரில் கொடுத்து விட்டார். இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி விடுமாறும் கேட்டுக் கொண்டார். கடைசியாக ஜெயேந்திரனுக்கு சங்கர்ராமன் தனது வழக்கமான புனைப் பெயரில் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதினார்.

“உங்களுடைய ஒழுக்கக் கேடான நடவடிக்கைகள் மடத்தின் பெயரை பாழாக்கிவிட்டது. மடத்தின் பெயரைக் காப்பாற்ற தியாகம் செய்வதுகூட தவறு கிடையாது. இப்போது நான் தியாகத்துக்கு தயாராகி விட்டேன். உம்முடைய அனைத்து ஒழுக்கக் கேடுகளையும் சட்டத்துக்கு புறம்பான செயல்பாடுகளையும் வெளிக் கொண்டு வரப் போகிறேன். எங்கெங்கே உமக்கு தொடர்பு உண்டு என்பது எனக்கு தெரியும். விஜயவாடா, பம்பாய், திருப்பதி, இலியாத்திராங்குடி மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள தொடர்புகள். கல்லூரி பெண்கள் விடுதியில் நடந்த கொலை, ரகுவின் ஒழுக்கக்கேடுகள் எல்லாவற்றையும் வெளியிடப் பேகிறேன். தேவைப்பட்டால் நீதிமன்றம் வழி யாகவும் அம்பலமாக்குவேன்” - என்று அந்தக் கடிதத்தில் எச்சரித்திருந்தார்.

அந்தக் கடிதம் - ஜெயேந்திரனிடம் வந்தவுடன் (30.8.3004) ஆத்திரத்தின் எல்லைக்குப போன ஜெயேந்திரன், ரவி சுப்பிரமணியத்தை அழைத்தார். கிருஷ்ணசாமி என்கிற அப்புவையும், கதிரவனையும், உடனே அழைத்து வர ஆணையிட்டார். இதற்காக 50 லட்சம் பணம் தர ஜெயேந்திரன் முன் வந்தார். மடத்தின் கணக்காளர் சுந்தரேச அய்யரை அழைத்து மடத்தின் கணக்கி லிருந்து அந்தத் தொகையை ரவி சுப்ரமணியத்திடம் தருமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அப்பு கதிரவனிடம் சங்கர்ராமனின் கதையை முடித்துவிட உத்தரவிட்டார். அதன்படி கதிரவனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்கள் 3.9.2004 மாலை 5.45 மணிக்கு கோயில் வளாகத்துக்குள்ளேயே சங்கர் ராமனை கொலை செய்தார்கள்.

என்னுடைய (சக்திவேலு) புலனாய் வில் பல உண்மைகள் தெரிய வந்தன. அதாவது கொலை செய்யப்பட்ட சங்கர்ராமன், ஜெயேந்திரன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்துமே உண்மை. பல பெண்களுடன் அவர் தகாத உறவு கொண்டிருந்ததும் உண்மை. உதாரணத்துக்கு ஒன்றை கூற வேண்டுமானால், திருவரங்கத்தில் உள்ள திருமதி உஷா பற்றிக் கூறலாம் அந்தப் பெண்ணிடம் விடியற்காலை 4 மணியிலிருந்து 5 மணி வரை அடிக்கடி செல்பேசியில் பாலியல் பற்றி ஜெயேந்திரர் பேசுவது வழக்கம். இதற்கான சான்று ஆவணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுடன் தனக்கிருந்த முறைகேடான உறவை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு மடத்தின் பணத்தை அவ்வப்போது ஜெயேந்திரன் கொடுத்து வந்துள்ளார்.

அனுராதா ரமணன் என்ற பிரபல தமிழ் எழுத்தாளரிடம் தகாத உறவுக்கு ஜெயேந்திரர் முயன்றதை, அந்தப் பெண்ணே பத்திரிகையாளர்களிடம் அம்பலப்படுத்தினார். அவரிடம் வாக்குமூலம் பெற்று, நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன். ஜெயேந்திரருக்கு உலகம் முழுதும் சீடர்கள் உண்டு. அனுராதா ரமணன் கண்பார்வையிலேயே வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு கொண்ட ஜெயேந்திரன், அதற்குப் பிறகு, குளிக்கக் கூட போகாமல், தன்னுடைய பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கியதை நேரில் பார்த்ததாக அனுராதா ரமணன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

நான் (சக்திவேலு) இந்த வழக்கில் 500 சாட்சிகளை விசாரித்துள்ளேன். ஆயிரக்கணக்கான சான்று ஆதாரங்களைத் திரட்டியுள்ளேன். அனைவருமே தாமாக முன் வந்து சாட்சியம் அளித்தார்கள். எனவே அவர்கள் ‘பல்டி’ அடித்து பிறழ்சாட்சியாக மாறுவதற்கான வாய்ப்புகளே இல்லை. இந்த வழக்கில் 24 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இரண்டாவது குற்றவாளியான ரவி சுப்ரமணியம், ‘அப்ரூவர்’ ஆனார். அவர் அளித்த வாக்குமூலம் (இ.பி.கோ. 164-வது பிரிவின் கீழ்) நீதிபதி முன் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் முடிவில் குற்றத்தை ஒப்புக் கொண்டதற்காக அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. (இ.பி.கோ.307வது பிரிவின் கீழ்) செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை ஜெயேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனுபோட்டு கேட்டுக் கொண்டதற்காக வேறு மாநிலமான புதுவைக்கு மாற்றப்பட்டது. 2005 ஆம் ஆண்டிலிருந்து புதுச்சேரி நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

வழக்கு விசாரணை நடக்கும்போதே நான் (சக்திவேலு) ஓய்வு பெற்று விட்டேன். அதன் பிறகு, அரசு தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக என்னைக் கலந்து ஆலோசிப்பது இல்லை. ஜெயேந்திரனுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால், வழக்கைக் குலைக்க முயற்சிப்பார் என்பதால்தான், இ.பி.கோ.164 ஆவது பிரிவின் கீழ் சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்தோம். சாட்சிகளைக் கலைத்தாலும்கூட வாக்கு மூலங்கள் உறுதியாக நிற்கும் என்பதால்தான் இந்த ஏற்பாட்டை செய்தோம். அப்ரூவராக மாறி வாக்கு மூலம் தந்த ரவி சுப்ரமணியமே பல்டி அடித்து பிறழ் சாட்சியாகிவிட்டது, எனக்கு அதிர்ச்சியளித்தது. இ.பி.கோ. 164 பிரிவில் வாக்கு மூலம் தந்தவர், தனது கருத்தை மாற்றிக் கொள்வது குற்றம். பொய்யான வாக்குமூலம் தந்தமைக்காக அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை; அரசு தரப்பினரே குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரனுடன் சேர்ந்து கொண்டு சாட்சிகளை குலைத்து விட்டார்கள் என்ற உண்மை எனக்கு தெரிய வந்தது.

இதுவரை விசாரிக்கப்பட்ட 176 சாட்சிகளில் 76 பேர் பிறழ்சாட்சிகளாகி பல்டி அடித்து விட்டனர். அதில் அப்ரூவர் ரவிசுப்பிரமணியமும் ஒருவர். இதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஜெயேந்திரன் கைது செய்யப்பட்டது ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில். அதற்குப் பிறகு ஆட்சி மாறியது; ஆட்சி மாறிய பிறகே ஜெயேந்திரன் மீதான வழக்கு விசாரணை தொடங்கியது. சாட்சிகளாக விசாரிக்கப்பட்ட அரசு அதிகாரிகளே பிறழ்சாட்சிகளாகி விட்டனர். வழக்கு விசாரணைக்கு அரசோடு ஒத்துழைக்க அதிகாரி மறுத்தால், அவர் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அரசுப் பணியில் இருந்தால் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது நடக்கும் ஆட்சி, பல்டி அடித்த சாட்சிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்ரூவராக மாறியவரே பிறழ் சாட்சியானபோதும்கூட இ.பி.கோ. 308வது பிரிவின் கீழ் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்கவில்லை.

இந்த வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியே நான் தான். அந்த அடிப்படையில் நான் தயாரித்த வழக்கு டைரியின் அடிப்படையில் என்னை விசாரணைக்கு அழைத்தாக வேண்டும். 500-க்கும் மேற்பட்ட சாட்சிகளின் பதிவுகள் இடம் பெற்றுள்ள வழக்கு டைரி, ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்டது. ஆனால், கடந்த மார்ச் 14 ஆம் தேதி வரை எனக்கு அரசு தரப்பிலிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. ஆனால், அழைப்பை ஏற்காமல் நான் தவிர்த்து வருவதாக பத்திரிகைகளுக்கு தவறான தகவல் தந்து மார்ச் 23 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்துள்ளனர். தேர்தலுக்கு முன் வழககை முடித்து ஜெயேந்திரரைக் காப்பாற்றுவதில் காவல்துறை அவசர அவசரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலைமையை அறிந்தவுடன், நான் (சக்திவேலு) காஞ்சிபுரத்தில் வழக்குக்கு பொறுப்பாக உள்ள மாவட்ட காவலதுறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு, நான் சாட்சி சொல்வதற்கு, எனது வழக்கு டைரியைத் தருமாறு கேட்டேன். அதைப் படித்தால் தான் மறந்து போனவற்றை நினைவூட்டிக் கொள்ள முடியும். ஆனால், நான் தயாரித்த வழக்கு டைரியை என்னிடம் கையளிப்பதற்கு அந்த அதிகாரி மறுத்துவிட்டார். விசாரணைக் கூண்டில் ஏறி நிற்கும்போது வழக்கு டைரியைக் காட்டுவோம் என்றும், அரசு எடுத்துள்ள நிலைக்கு (ஜெயேந்திரரை காப்பாற்றுவது) ஒத்துழைக்க மறுத்தீர்களேயானால், உங்களை பிறழ் சாட்சியாகவே கருதி, வழக்கை முடித்து விடுவோம் என்றும் கூறினார்.

இந்த நிலையில் அரசு தரப்பின் இந்த நடவடிக்கைகளுக்கு நான் உடன்பட விரும்பவில்லை. பெயரளவில் கூண்டில் ஏறி சாட்சியாக நிற்க விரும்பவில்லை. நான் சாட்சியாக விசாரிக்கப்படுவதற்கு முன்பு பிறழ் சாட்சி கூறியவர்கள் மீதும், ‘அப்ரூவராகி’ பிறகு மாறியவர் மீதும் அவர்களை அழைத்து, ஏற்கனவே இ.பி.கோ. 164 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட அவர்களது சாட்சியங்கள் இ.பி.கோ.161 ஆவது பிரிவின் கீழ் கூறிய சாட்சியத்திலிருந்து முரண்பட்டு நிற்பதை பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் தயாரித்த வழக்கு டைரியை முழுமையாக நான் படிப்பதற்கு உரிய அவகாசம் தர வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விடுவிப்பதற்கு அரசு தரப்பு ஆர்வம் காட்டி செயல்படுகிறது. இத்தனைக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றத்தை நிரூபிக்கும் சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. கோயில் வளாகத்துக்குள்ளேயே ஒரு அப்பாவி மனிதரை திட்டமிட்டு தீர்த்துக் கட்டியுள்ளனர். அவர் செய்த தவறு வேறு ஒன்றும் இல்லை. தான் மிகவும் மதித்துப் போற்றிய புனிதமான மடத்தின் பெருமைகள் குலைந்து விடாமல் காப்பாற்ற துடித்தார். ஜெயேந்திர சரசுவதி ஏராளமான பெண்களுடன் வைத்திருந்த தகாத உறவுகளை தடுக்க முயன்றார். அதற்காகவே பலியானார்.

பிறழ் சாட்சிகளாக பல்டி அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை மீண்டும் மறு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அரசு தரப்பு என்னையும் பிறழ் சாட்சியாகக் கருதி செயல்படாதிருக்க நீதிமன்றம், ஆணை பிறப்பிக்க வேண்டும். எனக்கு இந்த நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை.

உடனடியாக இப்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். தடை விதிக்கா விட்டால் உண்மையான குற்றவாளிக்கு எதிராக நான் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும், நடவடிக்கைகளும் வீணாகி  விரயமாகிவிடும். இவ்வாறு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சக்திவேலு தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணையின் நடுவில் தலையிட இயலாது என்று கூறிய நீதிமன்றம், நீதிபதி எஸ்.பி. சக்திவேலுவிடம் காவல்துறை டைரியை ஒப்படைக்குமாறு ஆணையிட்டுள்ளது.