பெரியார் பேச்சு - எழுத்துகள் - நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் எஸ்.வி.ராஜ துரைக்கு எதிராக, ‘விடுதலை’யில் கட்டுரை தீட்டிய மின்சாரம் - வ.கீதா பார்ப்பனப் பெண் என்றும், எஸ்.வி.ஆர். பெண் தோழி என்றும் எழுதியுள்ளதற்கு - எதிர் வினையாக - தமிழின உணர்வுடன் தோழர் ஒருவர் எழுதியுள்ளதை வெளியிடுகிறோம். எஸ்.வி.ராஜதுரையுடன் வ.கீதா எழுதியவை பெரியார் குறித்த நூல்கள் மட்டுமல்ல; பல்வேறு மார்க்சிய நூல்கள், கவிதை, சிறுகதை மொழியாக்கங்கள் உண்டு. வ. கீதா, எம்.எஸ். எஸ்.பாண்டியனுடன் இணைந்தும் எழுதியுள்ளார். அதேபோல இராமாயணம் பற்றி பெரியார் எழுதிய விமர்சனங்களை ஆங்கில மொழிக்குக் கொண்டு சென்ற பாலா ரிச்மன் என்னும் அமெரிக்க அறிஞருடனும் இணைந்து எழுதியுள்ளார்.

பெரியாரையும் அவரது சுயமரி யாதை இயக்கத்தையும் குறிப்பிட்ட வரலாற்று, அரசியல் சூழலில் வைத்தும் பெரியார் இயக்கத்தவரால் எந்த நூலும் எழுதப் பட்டிராத நிலையில், எஸ்.வி. ராஜ துரையுடன் இணைந்து வ.கீதா எழுதியுள்ள ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம் நூலுக்கோ, எஸ்.வி. ராஜதுரை தனியாக எழுதியுள்ள ‘பெரியார்: ஆகஸ்ட் 15’ நூலுக்கோ இணையான நூலொன்றை வீரமணி கூட்டத்தார் என்றேனும் எழுதியிருக்கிறார்களா? அதேபோல, பெரியாரின் வாழ்வையும் சிந்தனையையும் இந்தியா முழுவதற்கு மட்டுமின்றி உலகெங்கினுமுள்ள அறிஞர் பெருமக்களுக்கும் எடுத்துச் செல்வதற்காக வ.கீதாவும், எஸ்.வி.ராஜ துரையும் இணைந்து எழுதியுள்ள ‘Towards a Non-Brahmin Millennium: From Iyothee Thass to Periyar’ என்னும் நூல் மூன்றாவது பதிப்பைக் கண்டிருக்கிறது. வ.கீதாவும், எஸ்.வி. ராஜதுரையும் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பு ‘The Periyar Century: Themes in Caste and Gender’ என்னும் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தால் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் வ.கீதாவின் பங்களிப்பு தான் முதன்மையானது. ஹைதராபாத், மும்பை, டெல்லி, திருவனந்தபுரம், கோல்கத்தா போன்ற இந்திய நகரங்களில் மட்டுமல்லாது அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளும் நடத்தப்பட்ட பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பெரியார் கருத்துகளைப் பரப்பியவர் வ.கீதா.

பெண் விடுதலை குறித்த சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் தந்தை பெரியாரும் சுயமரியாதை இயக்கப் பெண்களும் வழங்கிய பங்களிப்புகளை ‘காலக் கனவு’ என்னும் நாடக வடிவத்தில் அமைத்து அதைத் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மட்டுமின்றி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் அரங்கேறச் செய்தவர் வ.கீதா தான். ‘இந்துப் பண்பாட்டைக் காப்பாற்றுதல்’ என்னும் பெயரால் கர்நாடக மாநிலத்தில் ராம் சேனையினர் நடத்தி வரும் காலித்தனங்களைக் கண்டித்து டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் அருந்ததி ராய் போன்ற அறிஞர்களைக் கொண்டு நடத்திய கண்டனக் கூட்டங்களில் பெண் விடுதலை பற்றி பெரியார் கூறிய கருத்துகளும் படிக்கப்பட்டன. அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அந்த மாணவர்களுக்குக் கொடுத்துவிட்டு வந்தவர் வ.கீதா தான்.

வ. கீதா எழுதிய ஆங்கில நூல்கள், மும்பை எஸ்.என்.டி.டி. பெண்கள் பல்கலைக்கழகத்தில் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரியார் கருத்துகள் கணிசமாக இடம் பெற்றுள்ளன. ‘அனைவருக்கும் கல்வி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை, தொடக் கப் பள்ளிச் சிறுவர் சிறுமிகளுக்காக ‘வாசிப்பு நூல்கள்’ சிலவற்றைக் கொண்டு வந்துள்ளது. அவற்றைக் கொண்டு வரும் பொறுப்பு வ.கீதா விடம் ஒப்படைக்கப்பட்டது. வ.கீதா வின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்ட நூல்களிலொன்று ‘அனைவரும் உறவுகளே’. பார்ப்பனிய கல்வி முறையே இதுகாறும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் துப்புரவுத் தொழிலாளிகளையும் செருப்புத் தைக்கும் தொழிலாளியையும் குழந்தைகள் ‘மாமா’, ‘அண்ணன்’ என்று உறவு முறை வைத்து அழைக்கும்படி செய்கிறது அந்த நூல். அந்த ‘வாசிப்பு நூல்கள்’ வெளியீட்டு விழா சென்னையில் சென்ற ஆண்டு நடந்தது. அதில் சிறப்புரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, வ.கீதாவின் பணிகளைப் போற்றிப் புகழ்ந்தார். ‘கீதோபசங்களை வெறுப்பவன் நான். ஆனால், இந்த கீதாவின் (வ.கீதாவின்) உபதேசங்களை மணிக்கணக்கில் கேட்பதில் எனக்கு விருப்பமுண்டு’ எனப் பேசியிருக்கிறார்.

தோழர் எஸ்.வி. ராஜதுரை மார்க்சிய சிந்தனையாளர். பல ஆண்டுகள் பொதுவுடைமை இயக்கங்களில் இருந்தவர். தற்போது எந்தக் கட்சியையும் நிறுவனத்தையும் சாராமல் இருக்கும் அவர், பெரியார் சிந்தனையை உலகெங்கும் பரப்புவதற்காக, இப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததன் காரணமாக ஒரு கண் பார்வையை இழந்து, மும்முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் புற்று நோயால் அவதியுற்ற தனது துணைவியாரின் ஓய்வூதியத்தையும், தனது எழுத்துகளுக்குக் கிடைக்கும் அற்ப சன்மானங்களையும் கொண்டு எழுபது வயதை நெருங்கும் இந்த நேரத்திலும் சலிப்பின்றி உழைத்து வருபவர்.

- ஓர் உணர்வுள்ள தமிழன்