‘இனி என்ன செய்யப் போறீங்க?’ எனும் தலைப்பில் பெரியார் திராவிடர் கழகம் தயாரித்துள்ள குறுந்தகடு நாடு முழுதும் அதிர்வு அலைகளை உருவாக்கி வருகிறது. காங்கிரஸ்வட்டாரங்கள் கலக்கமடைந்திருப்பதாக ஏடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ‘தினமலர்’ பார்ப்பன ஏடு அந்தக் குறுந்தகடு தடை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு மூன்று நாட்களாக எதிர்ப்பான செய்திகளை வெளியிட்டுள்ளது. ‘தினமலர்’, பார்ப்பன நாளேட்டுடன் கடந்த சில காலமாக நட்பு பாராட்டத் தொடங்கியுள்ளது தி.மு.க. என்பது குறிப்பிடத்தக்கது. சீமான், கொளத்தூர் மணி கைது செய்யப்பட வேண்டும் என்று ‘தினமலர்’ வலியுறுத்தியதைத் தொடர்ந்து - உடனே தி.மு.க. ஆட்சி, அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து விட்டது. கழகத்தின் குறுந்தகடு பற்றி ‘ஜூனியர் விகடன்’ வார ஏடு (மார்ச் 11, 2009) காங்கிரசுக்கு எதிராக ‘ஆயுத்தமாகும் சி.டி.கள்’ என்ற தலைப்பில் இரண்டு பக்க கட்டுரையை வெளியிட்டு, அதில் அடங்கியுள்ள கருத்துகள், படங்களை விவரித்துள்ளது. கழகத் தோழர்கள் பேட்டியையும், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேட்டியையும் வெளியிட்டுள்ளது. இதைத் தடை செய்யும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக தங்கபாலு கூறியுள்ளார்.

‘நக்கீரன்’ ஏடு இது குறித்து இரண்டு பக்க கட்டுரையை பொதுச் செயலாளர் இராமகிருட்டிணன் பேட்டியோடு வெளியிட்டுள்ளது. கட்டுரை இவ்வாறு தொடங்குகிறது. “பதினைந்து நிமிடங்கள்தான் ஓடுகிறது அந்த குறுந்தகடு. ஆனால், ஐந்தாண்டுகால ஆட்சியின் ஆணிவேரையே அசைக்கும் வலிமை அதற்கு இருப்பதை, அதிலுள்ள காட்சிகளைக் காணும் மக்களிடமிருந்து வெளிப்படும் உணர்வின் மூலமாக அறிய முடிகிறது.”

தமிழகம் முழுதும் - பல்லாயிரக்கணக்கில் பிரதி எடுத்து வழங்கப்பட்டு வரும் இந்தக் குறுந்தகடு காங்கிரசாரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Pin It