பம்பாய் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ் - மனித உரிமைப் போராட்டங்களில் முன்னணியில் நிற்பவர். தலித், சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு பொது விசாரணைகளில் நடுவராகப் பங்கேற்றவர். காவிரி நீர் உரிமைக்காக - தமிழர்கள், கன்னடர்களால் மோசமாகத் தாக்கப்பட்டனர். அப்போது உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் ஆலோசனைப்படி நீதிபதி சுரேஷ் தலைமையில் ஒரு குழு விசாரணை நடத்தி, தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை உலகத்தின் முன் வெளிக் கொண்டு வந்தது. தூக்குத் தண்டனைக்கு எதிரான கருத்துள்ள நீதிபதி சுரேஷ் - தனது பதவி காலங்களில் ஒருமுறை கூட தூக்குத் தண்டனை விதித்தது கிடையாது. ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ சார்பில் சென்னை தியாகராயர் நகரில் நடந்த கருத்துரிமை முழக்கம் கூட்டத்தில் பங்கேற்று தடுப்புக் காவல் சட்டங்கள் முறைகேடாகப் பயன்படுத்துவது பற்றியும், தேசிய சுய நிர்ணய உரிமை கோருவோரை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது பற்றியும் விரிவாக விளக்கினார். அவரது ஆங்கில உரையை தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு தமிழில் மொழிபெயர்த்தார். நீதிபதி எச்.சுரேஷ் ஆற்றிய உரையின் சுருக்கம்:

நாடு முழுவதும் மக்கள் மீது அரசுகள் அடக்கு முறைகளையும், அதிகாரங்களையும் கட்டவிழ்த்து விட்டு வருவதைப் பார்க்கிறோம். பயங்கரவாதம் தலைதூக்கி வருகிறது என்ற பெயரில் இந்த அடக்குமுறைகள் நடைபெறுகின்றன. நாட்டில் மக்களின் அடிப்படையான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால், அவர்களுக்கான நீதி மறுக்கப்படக் கூடாது. அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டாக வேண்டும். உண்மையான அர்த்தமுள்ள சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். இவற்றை வழங்கிடாமல் அடக்குமுறைகளையும், அதிகாரத்தையும் திணிப்பது பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது.

சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவத்தை நமது அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. மக்களின் குரலை அங்கீகரிக்க அரசு தான் உண்மையான குடிஅரசு. நமது அரசியல் சட்டத்தில் நாம் உறுதி செய்திருக்கிறோம். ஆனாலும், மக்களின் உரிமைகள் - அது பற்றிய அவர்களின் உணர்வுகள், விருப்பங்களை நாம் மதிக்கிறோமா என்பதுதான், இப்போது எழுந்துள்ள கேள்வி. அரசமைப்புச் சட்டங்கள் வந்ததற்குப் பிறகு, பிற்காலத்தில் அய்.நா. வின் அரசியல் மற்றும் குடியுரிமை உடன்பாடுகளும் வந்தன. தேசிய சுயநிர்ணய உரிமைக்கு அய்க்கிய நாடுகளின் அவை ஏற்பு வழங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் இந்த உரிமைக்கு ஏற்பு வழங்கியுள்ளன.

அய்.நா.வின் பல்வேறு மனித உரிமை உடன்பாடுகளை நாம் ஏற்றுக் கொண்டாலும், ஒரே ஒரு உடன்பாட்டை மட்டும் ஏற்க, இந்தியா மறுத்துள்ளது. அதுதான் தேசிய சுயநிர்ணய உரிமைக்கு ஏற்பு வழங்கும் உடன்பாடு. தேசிய சுய நிர்ணய உரிமையை இந்தியா ஏற்காத காரணத்தால்தான் தங்களை தாங்களே ஆட்சி செய்து கொள்ள விரும்பும் காஷ்மீர் மக்களின் உரிமையை நாம் மறுக்கிறோம். மணிப்பூர் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஏற்க மறுக்கிறோம். இதே போல - பல ஆண்டுகளுக்கு முன் பஞ்சாபில் நடந்த தேசிய சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தையும் மறுத்தோம்.

நான் அண்மையில் மணிப்பூர் மாநிலம் சென்றிருந்தேன். இப்போது மணிப்பூர் மக்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தினால், அவர்கள் - இந்தியாவுடன் சேர்ந்து இருக்க மாட்டோம் என்றே வாக்களிப்பார்கள்.

மணிப்பூர் மக்கள் வீரம் செறிந்தவர்கள். மணிப்பூர் பெண்கள் பர்மாவை எதிர்த்து போரிட்டவர்கள் - மணிப்பூரில் நிலப்பிரபுத்துவ மன்னராட்சிதான் நடந்தது. பிரிட்டானியர் காலனி ஆட்சிக்குப் பிறகு, மணிப்பூர் மக்களுக்கு அவர்கள் சுதந்திரம் வழங்கினர். ஆனால், இந்தியா, எப்படியோ மணிப்பூரை, 1949 அக்டோபர் 15-ம் தேதி முதல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்தியாவுடன் இணைவதால், ஜனநாயக ஆட்சி தங்களுக்கு கிடைக்கும் என்று அந்த மக்கள் நம்பினார்கள். ஆனால் என்ன நடந்தது? 1952 ஆம் ஆண்டு ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் கொண்டு வரப்பட்டு, ஆயுதப் படைகள் அனுப்பப்பட்டு, 57 ஆண்டுகளாக இந்திய ராணுவ ஆட்சி அங்கே நடந்து கொண்டிருக்கிறது.

நான் மணிப்பூர் தலைநகரம் இம்பாலுக்கு சென்றிருந்தேன். அங்கே திரையரங்குகளில் கடைசி திரைப்படக் காட்சி மாலை 4.30 மணிக்கு, 6.30 மணிக்குப் பிறகு மக்கள் வீட்டை விட்டு வெளியே போக முடியாது. வெளியே பார்த்தால், ராணுவத்தினர் சுட்டு விடுவார்கள்.

ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். இம்பாலில் முதன்மை பெருநகர நீதிபதியின் வீட்டிற்குள் ராணுவம் நுழைந்து, அவரை கடத்திப் போய், ரகசிய இடத்தில் வைத்து மூன்று நாள் சித்திரவதை செய்தது. அவரது உடலில் மின்சாரத்தை செலுத்தினார்கள். அந்த நீதிபதி, தனது வீட்டில் மணிப்பூர் பழங்குடி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத் திருப்பதாக குற்றம் சாட்டினார்கள். 3 நாள் சித்திரவதைக்குப் பிறகு, அவரை அப்படியே விட்டுவிட்டு ராணுவம் வெளியேறியது. பாதிக்கப்பட்ட நீதிபதி, கிழிந்த உடையுடன், உயர்நீதிமன்றம் போய் நடந்ததைக் கூறியபோது, நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி மாவட்ட நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை உயர்நீதிமன்றம் அமைத்தது. விசாரணையில் குற்றமிழைத்த ராணுவத்தினர் அடையாளம் காணப்பட்ட பிறகும் கூட - எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சட்டத்தை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. ஆனால், சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஒழுங்கு நெறி முறைகளை நீதிமன்றம் அறிவித்தது. அந்த நெறிமுறைகளை ராணுவம் பின்பற்றுவதே இல்லை. இந்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஷர்மிளா என்ற பெண் கடந்த 9 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். ராணுவம் அந்தப் பெண்ணை தூக்கிப் போய் மருத்துவமனையில் குழாய் வழியாக உணவை கட்டாயப்படுத்தி செலுத்தும். மீண்டும், அவர் போராட்டத்தைத் தொடங்குவார். அண்மையில் ராணுவம் அவரை கைது செய்துள்ளது.

அண்மையில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் பம்பாய் வந்திருந்தனர். அவர்களில் இந்து, முஸ்லீம், வழக்கறிஞர், பேராசிரியர் என்று பல்வேறு பிரிவினரும் இருந்தனர். பம்பாய் வந்த அவர்கள், தங்கள் வாழ்வில் முதல் முறையாக சுதந்திர காற்றை சுவாசிப்பதாகக் கூறினர். அத்தகைய ஒடுக்கு முறையை இந்திய ராணுவம் அங்கே நடத்தி வருகிறது.

தங்களுக்கான சுயநிர்ணய உரிமை கோரி போராடும் மக்கள் மீதுதான் அரசு மோசமான ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. மக்களின் நேர்மையான அந்தப் போராட்டங்களைக் கையாளுவதில் தவறான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. தடுப்புக் காவல் சட்டங்கள் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசமைப்பின் 22வது பிரிவின்கீழ் உள்ள 2 முதல் 7 பகுதிகள் வரை, விசாரணை இன்றி தடுப்புக் காவலில் வைக்கும் சட்டங்களைக் கொண்டு வருவதற்கு வழி வகுக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பிரிவு இடைக்கால ஏற்பாடாகவே இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வரும் அனைத்துக் கட்சிகளுமே மாறி மாறி, இந்தத் தடுப்புச் சட்டங்களைப் பயன்படுத்தியே வருகின்றன.

எனவே - அரசியலமைப்பில் தடுப்புக் காவல் சட்டங்களைக் கொண்டுவர வழி வகுக்கும் 22வது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று முன்னாள் நீதிபதி சுரேஷ் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசுகையில் சென்னையில் வழக்கறிஞர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல், நீதித்துறையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறிய அவர், இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி, தற்போது எடுத்துள்ள முட்டுக்கட்டையை நீக்க வேண்டும் என்றார். தென்னாப்பிரிக்காவில் கறுப்பர், வெள்ளையர்கள் இனவெறியோடு தாங்கள் செயல்பட்டதை ஒப்புதல் வாக்கு மூலமாக தெரிவிக்க ட்ரூத் ஆணையம் ஏற்படுத்தப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். வழக்கறிஞர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் வேண்டுமென்றே நடத்தப்படுவதாக கூறுவதை மறுத்த அவர், நீதிமன்றம் தான் அவர்கள் வாழ்க்கை, பிழைப்பு என்ற நிலையில் வேண்டுமென்றே எப்படி புறக்கணிப்பார்கள் என்று கேட்டார்.