ஆழமான விவாதங்கள்; கருத்துப் பகிர்வுகள்

ஈரோடு மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி முகாம், கோபி அருகே உள்ள மகுடஞ்சாவடியில் சத்யபாமா திருமண மண்டபத்தில் ஜூன் 21, 22 ஆம் தேதிகளில் சிறப்புடன் நடைபெற்றது. 160 புதிய இளைஞர்கள் முகாமில் பயிற்சி பெற்றனர். ஜூன் 21 ஆம் தேதி காலை 11 மணியளவில் தொடங்கிய முகாமில், மாவட்ட செயலாளர் இராம.இளங்கோவன் அறிமுக உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த பெரியார் கொள்கையாளரும், முகாமுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுமான தோழர்கள் க. மதியழகன், மே.பா. இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தொடக்க உரையில் புதுச்சேரி, மேட்டூரில் நடந்து முடிந்த முகாம்களைப் பற்றியும், பெரியார் காலத்தில் தமிழர் சமுதாயத்தின் எதிரிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள், இப்போது வேறு வடிவங்களில் வந்துள்ளதையும், எனவே - பெரியாரியலை மேலும் விரிவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, கழகம் இந்த முகாம்களை நடத்தி வருகிறது என்று குறிப்பிட்டார். உலகமயமாக்கல் என்று உலகையே உலுக்கி வரும் பொருளாதார அரசியல் கொள்கைகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிராக உள்ளன.

பன்னாட்டு நிறுவனங்கள் - வல்லரசு நாடுகளின், இந்த சுரண்டல் கொள்கையில் பார்ப்பனர்கள், கைகோர்த்து நிற்கின்றன. எனவே, உலகமயமாக்கல் மற்றும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளை, பெரியாரியல் பார்வையில் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார். தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெற்றிச் செல்வன், உலகமயமாக்கல் எனும் தலைப்பில் ஏராளமான தகவல்களுடன் பயிற்சியளித்தார்.

சுகாதாரம், சுற்றுச் சூழல், உணவுத் துறைகளில் உலகமயமாக்கலால் நிகழ்ந்துள்ள கடுமையான பாதிப்புகளையும் 1947 ஆம் ஆண்டிலேயே ‘காட்’ ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு, பிறகு 10 ஆண்டுகாலம் உருகுவே நாட்டில் நடந்த பல்வேறு சுற்றுப் பேச்சு வார்த்தைகளிலும் பங்கேற்று, இறுதியில் உருவாகப்போகிற ஒப்பந்தம் எது என்பதை அறியாமலே, 60,000 பக்க வெற்றுக் காகிதத்தில் இந்தியப் பார்ப்பன அதிகாரிகள் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கியதையும் எடுத்துக் கூறினார்.

1987-லிருந்து 1994 வரை வல்லரசு நாடுகள் கூடிப் பேசி 1995 இல் உருவானது தான் உலக வர்த்தக நிறுவனம். 1990 இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த நிலையில், அமெரிக்கா தன்னை உலக ‘எஜமானனாக்க’ திட்டமிட்டு காய்களை வேகமாக நகர்த்தத் தொடங்கியது. உலகமயமாக்களின் அடிப்படையான அம்சம், நுகர்வு கலாச்சாரத்தை விரிவுபடுத்தி, அதில் தேர்வு செய்யும் உரிமையையும், நுகர்வோரிடமிந்து பறித்து, தனது உற்பத்தியை நுகர்வோர் மீது திணித்தது தான். உலக வர்த்தக நிறுவனத்தின் நிபந்தனைகளை முழுமையாக ஏற்றால்தான், அதில் உறுப்பினராக முடியும். ஏற்காத நாடுகள் வெளியேறலாம் என்று மிரட்டப்பட்டன.

ஆனால், உலக வர்த்தக நிறுவனத்தில் எத்தகைய ஒப்பந்தங்கள் இருக்கின்றன என்பதற்குக்கூட கணக்கு கிடையாது. அவ்வளவு ஒப்பந்தங்கள் இருக்கின்றன. இந்த உலகமயமாக்கலின் கீழ்-சுதந்திர குடிமக்கள் என்று எவரும் இல்லை. அனைவருமே கட்டுப் படுத்தப்பட்டவர்கள்.

25 கோடி பேர் இந்தியாவில் ஒரு வேளை உணவும் கிடைக்காதவர்கள் என்றும், உலகிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியா வில் தான் அதிகம் என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், மருத்துவத் துறை தனியார் மயமாக்கப்பட்டு, மருத்துவம், சுற்றுலாத்துறையாக்கப்பட்டு, இந்தியா பின்பற்றிவந்த காப்புரிமை நெறிமுறைகள் சட்டத்தைத் திருத்தி, பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள் அதிக விலையில் விற்பனைசெய்ய வழிவகுக்கப்பட்டுவிட்டது என்று விளக்கினார் வெற்றிச் செல்வன். தோழர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு விரிவான விளக்கமளித்தார்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, கழக அமைப்பாளர் சதுமுகை பழனிச்சாமி இயக்கப் பாடல்களைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினார். பங்கேற்பாளர்கள் தங்களைப் பற்றிய விரிவான அறிமுகத்தை வழங்கினர். கடவுள் நம்பிக்கையாளர்களாக திகழ்ந்து, பிறகு நண்பர்கள் அறிமுகத்தால், பெரியார் கருத்துகளைக் கேட்டும், பிறகு பெரியார் நூல்களைப் படித்தும், பெரியார் இயக்கக் கொள்கை நோக்கி வந்ததாகப் பலரும் தெரிவித்தனர்.

சாதி, தீண்டாமை ஒடுக்கு முறைகளால் பாதிக்கப்பட்டு, இதைத் தடுக்க முடியாத கடவுளும் மதமும் தேவைதானா என்ற கேள்வி, தங்களை பெரியாரியல் நோக்கி திருப்பியது என்றும் சில தோழர்கள் தெரிவித்தனர். முதலில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் ஈர்க்கப்பட்டு, அந்த முகாமில் சில காலம் இருந்து, பிறகு, அவர்களின் சாதிய, பார்ப்பனிய போக்குகளை உணர்ந்து, பெரியாரியல் நோக்கி திரும்பியதாகவும், சில தோழர்கள் தெரிவித்தனர்.

தோழர்கள் அறிமுகத்தில் முன் வைத்த கருத்துகளின் அடிப்படையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையைத் தொடங்கினார். பெரியார் திராவிடர் கழகத்தை மேலும் மக்களிடையே கொண்டு செல்வதற்கான செயல் உத்திகளை விளக்கி, நண்பர்களை தோழர்களாக்கி, தோழர்களை இயக்கத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் பற்றியும் விரிவாகப் பேசினார்.

சாதி - தீண்டாமை ஒழிப்பை முன்னிறுத்தி, அதற்காக கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, - உலக மய எதிர்ப்பு, தனியார் துறை இடஒக்கீடு, பெண்ணுரிமை என்ற விரிவான தளைங்களில் மக்கள் இயக்கம் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை விரிவாக எடுத்துரைத்து பேசினார். தமிழ்த் தேசியம், மார்க்சிய-லெனினியம் , தலித் அமைப்புகள் போன்ற இயக்கங்களோடு, பெரியாரியம் விலகி நிற்கும் புள்ளிகளையும், இணைந்து நிற்கும் புள்ளியையும் சுட்டிக்காட்டி, இரண்டரை மணி நேரம் தோழர்களுடன் விவாதித்தார். ஒவ்வொரு பெரியார் திராவிடர் கழக தோழரும் ஆண்டுக்கு குறைந்தது ஒருவரை யாவது புதிதாக கழகத்துக்கு கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தினார். இரவு 7.30 மணியளவில் முதல் நாள் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இரண்டாம் நாள் காலை நிகழ்ச்சி காலை 11 மணிக்கு தொடங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சமூக நீதி, பெண்ணுரிமை,நவீன மூட நம்பிக்கைகள், சிறு தெய்வ வழிபாடு, முருகன் தமிழ்க் கடவுளா? போன்ற பல்வேறு பிரச்னைகள் பற்றி விளக்கி உரையாற்றி, தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கமளித்துப் பேசினார்.

மதிய உணவுக்குப் பிறகு, மக்கள் உரிமைக் கழக செயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன், மனித உரிமைகள், வன்கொடுமைச் சட்டங்கள் மனித உரிமைச் சட்டங்கள் பற்றி பெரியாரியல் பார்வையில் ஏராளமான தகவல்களுடன் விரிவாக பயிற்சியளித்தார். இரவு 8 மணியளவில் பயிற்சி முகாம் நிறை வடைந்தது. இருநாள் பயிற்சியும் தங்களுக்கு நல்ல பயனுள்ளதாக அமைந்தது என்று, பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

இது, புதுவை, மேட்டூரைத் தொடர்ந்து கழகம் நடத்திய மூன்றாவது பயிற்சி முகாம் ஆகும். அடுத்து, நாகை மாவட்டம் பூம்புகாரிலும், கோவையிலும் கழகத்தின் பயிற்சி முகாம்கள் நடைபெறவுள்ளன.