Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

கடைசி பதிவேற்றம்:

  • செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017, 10:59:40.

பெரியார் முழக்கம்

உலகில் அர்ச்சகன், மாந்திரிகன், சோதிடன் இவர்களைவிடப் பித்தலாட்டத்தில் கைதேர்ந்தவர்கள் கிடையாது.

மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்திவிட்டன. குறிப்பாகப் பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்ச்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப்போலத்தான் மக்களில் சரி பகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிபோடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் - நல்ல துணிமணி வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள்.

பிராமணன்-சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன்-பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம்.

இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால், ‘கலியாணம்’ என்பதையே சட்ட விரோதமாக ஆக்கவேண்டும். இந்தக் ‘கலியாணம்’ என்ற அமைப்பு முறை இருப்பதால்தான் கணவன்-மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. மனைவியாகிவிட்டால் அதோடு சரி - அவள் ஒரு சரியான அடிமை! அதுமட்டுமல்ல - இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துக்கள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக்கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன.

மந்திரி ஆகிறவன்கூட, கலெக்டர் ஆகிறவன்கூடப் பெண்டாட்டி பிள்ளையைக் காப்பாற்றத்தானே இருக்கிறான். இந்த வகையில் அமைப்பு முறை என்றால், உலகத்தைப் பற்றியோ சமுதாயத்தைப் பற்றியோ எவன் கவலைப்படுவான்? பொது உணர்ச்சி எப்படி ஏற்படும்? அவனவடன் சொந்த வாழ்க்கைப் பிரச்சினைக்கே ஈடு கொடுத்துக் கொண்டு இருப்பதென்றால், சமுதாய உணர்ச்சி எப்படி ஏற்பட முடியும்?

இந்தக் கலியாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான்தான். சாத்திரங்களில் சூத்திரனுக்குக் கலியாண முறையே இல்லையே!

தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் - அய்யர் யாத்தனர் கரணம் - என்ப” என்று இருக்கிறதே! “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே” என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்தெல்லாம் சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.

பெரும்பகுதி மக்களைச் சூத்திரனாக்க - உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப்போலத்தான் - பெண்களை அடிமையாக்கக் ‘கலியாணம்’ என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.

தவம், சூத்திரச் சம்பூகன் எப்படிச் செய்யக்கூடாது என்று இராமாயணத் தத்துவம் கூறுகிறதோ அதை அடிப்படையாக வைத்துத்தான், வள்ளுவனும் பெண்கள் கடவுளைத் தொழாமல் கணவனையே தொழ வேண்டும் என்று எழுதி வைத்து இருக்கிறான்.

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை”

- என்ற குறள் அதுதான்.

இந்நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள்.

இதைத்தான் நமது இதிகாசங்களும் புராணங்களும் சாத்திரங்களும் வலியுறுத்துகின்றன.

வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதி இருக்கிறானே தவிர ஆண்களோடு சரி சமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே!

ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்தரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?

முசுலிமை எடுத்துக்கொண்டால் பெண்களை, உலகத்தைக்கூடப் பார்க்கவிடமாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதைவிடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்துவிடுவானே! சாந்தி முகூர்த்தம் நடந்த மறுநாளே அந்தப் பெண் ஆஸ்பத்திரிக்குப் போய் விடுவாள் - இவ்வளவு காட்டு மிராண்டித்தனங்களும் பெண்கள்மீது சுமத்தப்பட்டு இருந்தனவே! பெண்களுக்காவது உணர்ச்சி வரவேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வரவேண்டாமா?

உலகிலே மற்ற நாட்டுக்காரன் எல்லாம் எப்படி எப்படி முன்னேறி வருகிறான்? வெள்ளைக் காரன் என்ன நம்மைவிடப் புத்தியுள்ளவனா? இயற்கையிலே நம்மைவிட அவன் அறிவில் குறைந்தவன்தானே - அவனோ குளிர்தேசத்துக்காரன்; நாமோ உஷ்ண தேசத்துக்காரன். பாம்புக்குக்கூட உஷ்ண தேசத்துப் பாம்புக்குத்தான் விஷம் அதிகம். பூவில்கூட உஷ்ணதேசத்துப் பூவுக்குத்தான் மணமும் மதிப்பும் அதிகம். அந்த இயற்கை அமைப்புப்படி, நாம் இயற்கையிலேயே அவர்களைவிட அறிவாளிகள்தான். இருந்தாலும் அவர்களின் முன்னேற்றம் எங்கே? நம் நிலை எங்கே? காரணம் - அவன் அறிவைப் பயன்படுத்தினான் - நாமோ பயன்படுத்தத் தவறி விட்டோம். அறிவைப் பயன்படுத்தினால் நாமும் அவனைவிட வேகமாக முன்னேற்ற மடையலாம்.

நான் 1932 இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, “ஞசடியீடிளநன hரளயெனே யனே றகைந” என்றார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். “நாங்கள் உண்மையான கணவன்-மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர், நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்” என்றார்கள். “எவ்வளவு காலமாக?” என்று கேட்டேன். “எட்டு மாதமாக” என்றார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? ‘பதிவிரதம்’ பேசி, பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?

‘விடுதலை’ 28.6.1973

****

பெரியார் கருத்து வெற்றி பெறுகிறது!

திருமணமின்றி சேர்ந்து வாழலாம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்கள் மற்றும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கச் சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை 28.11.2013 அன்று வழங்கியது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணையும், அவருக்குப் பிறந்த குழந்தையையும் தனியாகத் தவிக்கவிட்டு, திடீரென ஆண் ஒருவர் பிரிந்து சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தன்னை தவிக்கவிட்டுச் சென்ற அந்த ஆணிடம் இருந்து பராமரிப்பு செலவு பெற்றுத் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கின் விசாரணை, நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “திருமண மாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்கள், அவர் களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் உரிய சட்டத்தை இயற்ற வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தர விட்டது.

மேலும், “திருமணமாகாமல் ஆண்-பெண் சேர்ந்து வாழ்வது குற்றமும் அல்ல, பாவம் அல்ல. இதுபோல் சேர்ந்து வாழ்வோருக்கு வெளிநாடுகளில் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படுகிறது. ஆகையால் இதற்கு ஏற்பு வழங்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்” என்றனர்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

+1 #1 prabhu sn 2014-01-14 20:08
அருமை.. நமது தந்தையின் சிந்தனை தான் எப்பொழுதும் வெல்லும்...
Report to administrator
0 #2 மணி 2014-01-20 11:27
ஒண்ணுக்கு ரெண்டு கல்யாணம் பண்ண பெரியாரா திருமணம் வேண்டாததுன்னு பேசுறது.
Report to administrator
0 #3 ba.krish 2014-01-21 12:30
பெரியார் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான திருமணம் வேண்டாததுங்கிறா ர். அவரு சிஷ்யர் விடுதலை ராசேந்திரன், ஆணுக்கும் ஆணுக்குமான, பெண்ணுக்கும் பெண்ணுக்குமான திருமணத்தை வேண்டுக்கிறாரு.
Report to administrator

Add comment


Security code
Refresh