டெல்லி உயர்நீதிமன்றத்தால் 2009 இல் நீக்கம் செய்யப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவுக்கு இப்போது உச்சநீதிமன்றம் உயிர் கொடுத்திருப்பது நாடு முழுதும் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. “இயற்கைக்கு விரோதமாக உடல்உறவு கொள்வது தவறு; மீறுவோருக்கு ஆயுள் தண்டனை” என்று கூறும் இந்தச் சட்டம் 1860 இல் மெக்காலே உருவாக்கிய குற்றவியல் சட்டத்தில் இடம் பெற்றதாகும். பிரிட்டிஷ்காரர்கள் அன்றைய இங்கிலாந்தில் இதே போன்ற சட்டம் இருந்ததால் இந்தியாவுக்கும் கொண்டு வந்தார்கள். இன்று இங்கிலாந்திலேயே அந்த சட்டம் நீக்கப்பட்டுவிட்டது.

2014 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் ஆணும்-ஆணும் அல்லது பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. திருமணத்தின் அடுத்தக்கட்டப் பரிமாணம் ‘இது’ என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது. 18 ஆப்பிரிக்க நாடுகளும், 20 ஆசிய நாடுகளும் இந்த ‘ஓர் பால்’ திருமண முறையை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளன. 78 நாடுகள் இதை குற்றமாகக் கருதுகின்றன.

பாலின உறவுகள் தனி மனித உரிமைகளின் பாற்பட்டது. அதில் சட்டங்கள் குறுக்கிடுவதை நாகரிக சமூகம் ஒரு போதும் ஏற்காது. 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ‘ஓர் பால்’ வாழ்க்கையைத் தொடங்கியவர்கள் மற்றும் திருநங்கைகளின் வாழ்க்கை இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கேள்விக்குறியாகியுள்ளது.

ஒவ்வொரு வீட்டின் படுக்கை அறைக்குள்ளும் காவல்துறை நுழைந்து, அங்கே “இயற்கைக்கு” மாறான உடல் உறவுகள் நிகழ்கிறதா என்பதை கண்காணிக்கக்கூடிய ஒரு சட்டம், ஒரு நாட்டில் இருப்பது அந்த நாட்டுக்கே தலைகுனிவு! தீர்ப்பை எழுதிய நீதிபதிகள், மதவாதப் பழமைவாதிகளாகவே மாறிப் போயிருக் கிறார்கள் என்பதுதான் வேதனை! ‘இத்தகைய ஓர்பால் உறவுக்காரர்களை உயிரோடு எரிக்க வேண்டும்’ என்று 1300 இல் பிரிட்டனில் சட்டம் இயற்றப்பட்டதையும்,  ‘சமூகத்துக்குப் பயன்படாதவர்கள்’ என்ற மதவாதிகள் கருத்தையும் தீhப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.

பாரதிய ஜனதா - இயற்கைக்கு மாறான உறவுகளை ஏற்க மாட்டோம் என்று கூறுகிறது. அப்படியானால் இந்துக் கடவுளர் களின் இயற்கைக்கு மாறான உறவுகளைத்தான் (அய்யப்பன் உட்பட) புராணங்களும், இதிகாசங்களும் கதை கதைகளாகக் கூறிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கற்பனைகளை விமர்சித்தாலே இந்துக்களின் மனம் புண்படுகிறது என்கிறார்கள். ஒரு பக்கம் தங்கள் கடவுள்களின் இயற்கைக்கு மாறான உறவுகளை புனிதமாக வணங்கிக் கொண்டு, சமூகத்தில் மட்டும் அதை ‘பாவமாக’க் கருதுவது ஏன்? என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.

‘திருமணம்’ என்ற அமைப்பு முறை நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. ஆணாதிக்கத்தின்கீழ் அடைபட்டுக் கிடக்க விரும்பாத உரிமைகளை நேசிக்கும் பெண்களும், ‘குழந்தைப் பேறு’ என்ற அடிமைத்தளையிலிருந்து விடுவித்துக் கொள்ள விரும்பும் பெண்ணியவாதிகளும், ‘பெண்-ஆண்’ கட்டாயத் திருமணத்திலிருந்து விடுபட்டு, தங்களுக்கு விருப்பமான திருமண உறவுகளை தேர்வு செய்கிறார்கள். இதில் சட்டங்கள் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்?

ஓரின உறவை எதிர்க்கத் தேவையில்லை என்று கத்தோலிக்கர்களின் மதத் தலைவர் போப் கூறியிருப்பதோடு, அய்.நா.வின் 94 உறுப்பு நாடுகள் இதை ஏற்றுக் கொண்டுள்ளன.

திருமணம் என்பது மாறுதலுக்கு உட்பட்டது என்று பெரியார் கூறுகிறார். அதையும் தாண்டி, இந்த உடலுறவு முறை குறித்தும் பெரியார் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“கலவி முறை என்பதும், சொத்து முறை என்பதும் பெரும்பாலும் தேசாச்சாரம், மதாச்சாரம் அல்லது சாதியாச்சாரம், பழக்க வழக்கம் முதலியவற்றைப் பொறுத்து இருக்கிறதே தவிர, வேறு நியாயமான நிர்ப்பந்தமான உலகெங்கும் ஒரே வழி துறையான காரண காரிய முறை கிடையாது” (குடிஅரசு 2.6.1945) என்கிறார்.

இதேபோல், ‘ஒழுக்கம்’ என்பதற்கான வரையறைகளும் மாற்றத் துக்குள்ளாகியே தீரும். மனித சமுதாயத்துக்கும், சமூக சமத்துவத்துக்கும் ஏற்புடையதாகவும், மற்றவர்களுக்கு தொல்லை தராததும், உதவு வதும்தான், சுயமரியாதைக்காரர்களுக்கான ஒழுக்கம் என்று பெரியார், ‘ஒழுக்கத்துக்கான’ உள்ளடக்கத்தை மறுவரையறை செய்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகள் மாற்றப்பட வேண்டும். 153 ஆண்டுகளாக 377 ஆவது சட்டப் பிரிவு அமுலிலுள்ள இந்த நாட்டில் இந்தச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக இதுவரை ஒருவர் கூட ஆயுள் தண்டனைப் பெற்றதில்லை என்பதிலிருந்தே இந்தச் சட்டம் செயலளவில் தோற்றுப் போய் நிற்கிறது என்பது விளங்கும்.

தனி மனித உறவுகளை சமூகத்திற்கு பாதிப்பின்றி தீர்மானித்துக் கொள்ளும் உரிமைகளை அங்கீகரிப்பதுதான் ஒரு நாகரிக சமுதாயத்துக்கான அடையாளம்!

Pin It