வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தமிழகம் பின் தங்கியுள்ளது என்று ‘டீம்லீஸ்’ எனும் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளில் வேலை வாய்ப்பு குறைந்து வருவதோடு நாடு முழுதும் சுகாதாரம் மற்றும் மருந்து உற்பத்தித் துறை ஏறுமுகமாக இருந்தாலும், தமிழகம் மட்டும் பின்னடைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. தென்னக நகரங்களிலேயே வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கியிருப்பது சென்னைதான் என்றும் ஆய்வு கூறுகிறது. மிகவும் கவலையளிக்கக் கூடிய இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடிய பிரச்சினை குறித்து ஆட்சியாளர்கள் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அடுத்து வரவிருக்கும் தேர்தல்கள்தான் அழுத்தமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களை இறக்குமதி செய்தபோது வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று உறுதிமொழியை மத்திய மாநில ஆட்சிகளின் தமிழக அமைச்சர்கள் கூறினார்கள். அப்படி வேலைவாய்ப்பு ஏதும் அதிகரித்து விடவில்லை. தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஊழியர்களை சேர்க்காமல், குறைந்த ஊதியத்தில் பயிற்சி யாளர்களாக ஓராண்டுக்கு மட்டும் வேலைக்கு எடுத்து, உழைப்பை உறிஞ்சிக் கொண்டு, வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்கள். 21000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்த, நோக்கியா நிறுவனம், 7000 ஊழியர்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு, நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுத்துவிட்டது. நோக்கியாவைக் கொண்டு வந்த தயாநிதி மாறன்கள் - மவுனம் சாதிக்கிறார்கள்.

தனியார்நிறுவனங்களின் கதை இப்படி என்றால், தமிழ்நாடு அரசு நிலையோ, மேலும் மோசம். ஆசிரியர் தேர்வில் சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைத்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, பல வேலைகளுக்கு அறிவிப்புகளை வெளியிட்டாலும் “பெருந்தொகை” கைமாறினால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலை.

தமிழ்நாடு தேர்வாணையம், குரூப்-1 தேர்வுகளுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்ற சமூகநீதி கோரிக்கையையும் தமிழக அரசு காதில் போட்டுக் கொள்ள மறுக்கிறது. இந்தத் தேர்வுக்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30 ஆகவும், மற்ற அனைத்து வகுப்பினருக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் ஒரு காலத் திட்டத்தின்படியும் நடப்பது இல்லை. அத்துடன் வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போர் பட்டியலும் அதிகரித்து வரும் நிலையில் 35 வயதுக்குள் வேலை வாய்ப்பு வழங்காதது அரசின் தவறே தவிர, இளைஞர்களின் தவறு அல்ல.  மற்ற மாநிலங்களில் இந்த வயது வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது.

அரியானா, ஜார்கண்ட், பீகார், திரிபுரா, குஜராத், கேரளத்தில் 45 ஆகவும், ஆந்திராவில் 41 ஆகவும், உ.பி.யில் 40 ஆகவும் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 35 ஆகவே இருக்கிறது. வயது வரம்பு உயர்த்தப்பட்டால், 3.5 லட்சம் பட்டதாரிகள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் இளைஞர்களின் எதிர்காலம் நெருக்கடிக்கு உள்ளாவதால்தான்  அவர்கள் தவறான திசையில் தடம்மாறிப் போய் விடுகிறார்கள். செயின் பறிப்பு, குழந்தை கடத்தல், சைபர் கிரைம் என்ற கணினி தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் எல்லாம் படித்த இளைஞர்களாகவே இருப்பது ஆபத்தான அறிகுறி. கொலை, கொள்ளைகள் அதிகரிக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது. அதிகாரிகள் தரும் அறிக்கைகள் புள்ளி விவரங்களில் மூழ்கிப் போய் கற்பனைப் பெருமைகளில் மூழ்கிக் கிடக்காமல் நாட்டின் நிகழ்வுகளை கவலையோடு பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு தமிழக முதல்வருக்கு உண்டு!

Pin It

சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம், திருப்பூரில் அக்.20 ஆம் தேதி நிகழ்ந்த திராவிடர் வாழ்வியல் விழா, உணவு விழாவையொட்டி ‘திராவிடர் பண்பாட்டு மலர்’ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வாழ்வியலின் மூலக் கூறுகளான திருமணம், மறுமணம், கல்யாண விடுதலை, குழந்தைப் பேறு, கர்ப்பத் தடை, சோதிடம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரியாரின் ஆழமான கட்டுரைகளை தேடிப்பிடித்து தொகுத்திருப்பது மலரின் தனிச் சிறப்பாகும். ‘வாஸ்து’ மூடநம்பிக்கை, பெயர் சூட்டல் குறித்து - கொளத்தூர் மணி கட்டுரைகளும், சங்க இலக்கியங்களிலேயே பார்ப்பனியம் ஊடுருவியதை விளக்கும் - விடுதலை இராஜேந்திரன் கட்டுரையும் நல்ல கருத்து விளக்கங்களை முன் வைக்கின்றன.

‘திராவிடர் உடை’ என்ற கட்டுரை, வேட்டி சேலை அணிவதும், இந்து மதப் பண்பாடு என்று சங்கராச்சாரி கூறுவதை எடுத்துக்காட்டி, அதையே தமிழர்களின் அடையாளமாக தமிழ்ப் பண்பாடு பேசுவோரையும் சுட்டிக்காட்டி, தமிழர் அடையாளம் இந்துப் பண்பாடா என்ற கேள்வியை எழுப்புகிறது. உணவு மற்றும் உடையைப் பொறுத்தவரை மதம், கலாச்சாரப் பார்வையைத் தவிர்த்துவிட்டு, அவரவர் வசதி விருப்பத்தைச் சார்ந்தது என்பதே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். பெரியார், உடையில் பெண், ஆண் வேறுபாடு இருப்பதே தேவையில்லை என்றார். இந்திய வைத்தியக் கல்லூரி ஒன்றை நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் தொடங்கியபோது, சமஸ்கிருத அடிப்படையிலான ஆயுர்வேதத்துக்கு மட்டுமே கல்லூரி தொடங்க வேண்டும் என்று சத்தியமூர்த்தி பார்ப்பனர்கள் பேசியதும், மத சாஸ்திரங்களுக்கு விரோதமில்லாத வைத்தியமுறை ஆயுர்வேதம்தான் என்றும், நாத்திகர்களுக்கு வைத்தியமே செய்யக்கூடாது என்றும், மூத்த சங்கராச்சாரி கூறியிருப்பதும் மலரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியாரின் ஒழுக்கம் குறித்த மதிப்பீடுகளை ஆழமாக திறனாய்வு செய்துள்ள சுகுணா திவாகரின் கட்டுரை நல்ல வெளிச்சத்தைத் தருகிறது. கிராம சீர்திருத்தம் என்பதே கிராமங்களை எல்லாம் அழித்து, கிராம மக்களை நகரத்துக்குக் குடியேற்றுவதுதான் என்று பெரியார் கூறும் கிராம சீர்திருத்தக் கட்டுரை, ‘மாட்டுக் கறி’ உணவு பற்றிய மீனா மயிலின் அரிய கட்டுரை, மாற்றுத் திரைப்படம் பற்றிய பாமரன் சிந்தனை என்று மலர் பக்கத்துக்கு பக்கம் கருத்துச் செறிவுடன் விளங்குகிறது. பெரியார் பண்பாட்டுப் புரட்சியின் வாழ்வியல் கூறுகளை விரிவாக அலசும் திராவிடர் பண்பாட்டு மலர் ஒவ்வொருவரும் வாங்கிப் படித்து, பாதுகாக்க வேண்டிய கருத்துக் கருவூலம்.

மலர் கிடைக்குமிடம் : தலைமையகம், திராவிடர் விடுதலைக் கழகம், 95 டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், சென்னை-600041. பேசி : 044-24980745

பக். : 175; விலை : ரூ.150. கருந்திணை : திண்டுக்கல். பேசி : 9786889325

- இந்திரஜித்

Pin It

நவம்பர் 27 அன்று மாலை 6.05 மணிக்கு கொளத்தூர் புலியூர் பிரிவு, தண்டாசாலையில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கழக மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை வகித்தார். பொது மக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், வணிகர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. மற்றும் தோழமை அமைப்புகள் உட்பட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாவீரர் களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். வீரவணக்க நிகழ்வுக்கு பின் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் காவேரி, காமராசு, கழகப் பொருளாளர் இரத்தினசாமி ஆகியோரது உரைக்குப் பின் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார்.

சரியாக 6.04 மணிக்கு மாவீரர் வீரவணக்கப் பாடல் ஒலிக்க, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மாவீரர் பொன்னம்மான் நினைவு நிழற்குடையில் அமைக்கப் பட்டிருந்த மாவீரர் சின்னத்துக்கு ஆண்களும் பெண்களுமாக சாரை சாரையாக மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்திய காட்சி உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு சொந்தமான விடுதலைப் புலிகளின் பயிற்சி நடந்த தோட்டம் அருகே இந்நிகழ்வு நடைபெற்றது.  1984 ஆம் ஆண்டு தொடங்கி, 1986 ஆம் ஆண்டு வரை நடந்த இந்த முகாமில் பயிற்சிப் பெற்ற போராளிகள்தான் பிற்காலத்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளாக களத்தில் நின்று, மாவீரர்கள் ஆனார்கள். தமிழகம் முழுதும் நடந்த விடுதலைப் புலிகள் பயிற்சியை ஒருங்கிணைத்து வழி நடத்திய போராளி பொன்னம்மான்தான் இந்த பயிற்சி முகாமையும் வழி நடத்தினார். இலங்கையில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்தபோது வெடி பொருள் வெடித்து உயிர்ப்பலியான வீரர்களில் ஒருவர் பொன்னம்மான். மூன்று பிரிவுகளாக இங்கு நடந்த பயிற்சியில் 4 முறை தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நேரில் வருகை தந்து பார்வையிட் டுள்ளார். விடுதலைப் புலிகள் முன்னணி தளபதிகள் ராதா, புலேந்திரன், லூகாஸ் மேனன் உள்ளிட்டவர்கள் பயிற்சி பெற்றது, இதே முகாமில் தான். பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன், கேணல் கிட்டு ஆகியோர் அடிக்கடி இந்த முகாமுக்கு வந்து பார்வையிட்டார்கள். மூன்று ஆண்டுகள் நடந்த இந்த முகாமுக்கான செலவு அனைத்தையும் மக்கள் மனமுவந்து வழங்கிய பொருட்கள், நிதி உதவியுடன் தான் நடந்தது குறிப்பிடத்தக்க சிறப்பு. அப்போது திராவிடர் கழகத்தில் இருந்த தோழர் கொளத்தூர் மணி, ஆதரவாளர்களுடன் இணைந்து, இதற்கான பொருள், நன்கொடைகளை திரட்டும் பணிகளை மேற்கொண்டார்.

குமாரப்பட்டி என்ற பெயர் கொண்ட அந்தப் பகுதி, பிறகு புலியூர் என்று பெயர் மக்களால் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்தப் பகுதியில் ‘மாவீரர் நாள்’ எழுச்சியுடன் நடந்து வருகிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு கட்டங்களில் பல்வேறு முனைகளில் பயிற்சிகள் நடந்தாலும் போரட்டம் தொடங்கிய காலத்தில் போராளிகளைத் தயார் செய்த பெருமை இந்தப் புலியூருக்கு உண்டு என்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார். மாவீரர்களின் மகத்தான தியாகம், அர்ப்பணிப்பு குறித்து தேசியத் தலைவர் பிரபாகரன் பதிவு செய்த கருத்துகளையும் சமையலறையில் முடங்கிக் கிடந்த பெண்களை விடுவித்து அவர்களை ஆயுதம் தரிக்கச் செய்த புரட்சியை பெரியாரின் பெண் விடுதலைப் பார்வையில் தேசியத் தலைவர் முன்வைத்த கருத்துகளையும் விடுதலை இராசேந்திரன், அவரது உரையிலிருந்து படித்துக் காட்டினார்.

“தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் பேருதவிகளை வழங்கிய பெருமை பெரியார் இயக்கங்களுக்கு உண்டு. பெரியார் இயக்கம், விடுதலைப் புலிகளோடு கொண்டிருந்த தோழமை உறவால் இயக்கத் தோழர்கள் கொள்கை உறுதி; தன்னலமற்ற அர்ப்பணிப்பு; விளம்பரம் தேடாத உழைப்பு போன்ற பாடங்களைப் பெற்று, தங்களுக்கு உரமூட்டிக் கொண்டார்கள். அதே போன்று விடுதலைப் புலிகள் இயக்கமும் பெரியார் இயக்கத்தின் உறவால் பகுத்தறிவு, பெண்ணுரிமை, கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, அதை தங்கள் இயக்கத்துக்குள் அறிமுகப்படுத்தியது.

இயக்கப் போராளிகள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வதையும், அதுவும் போராளிகளின் குடும்பங்களுக்கிடையே நடப்பதையும் வலியுறுத்திய தேசியத் தலைவர் பிரபாகரன். தாலி இல்லாத திருமணங்கள் நடந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று அறிவுறுத்தினார். அப்படியே தாலி கட்ட வேண்டும் என்றால், மதச் சின்னங்கள் இல்லாத புலிச் சின்னம் பொறித்த தாலியை பரிந்துரைத்தார். இயக்கம் நடத்திய ‘அறிவுச்சோலை’ புத்தக விற்பனையகங்களில் மூடநம்பிக்கை பரப்பும் நூல்கள் தடை செய்யப்பட்டிருந்தன. கிளிநொச்சியில் அமைந்திருந்த தமிழ் ஈழத்தின் அலுவலகங்கள் அனைத்திலும் கடவுள் படங்கள் எதுவும் இடம் பெறவில்லை. தேசியத் தலைவர் பிரபாகரன் கருத்துகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதை ஏற்று, இயக்கம் நடத்திய வைப்பகங்களில் தை முதல் நாளே வங்கிக் கணக்குகள் புதுப்பிக்கும் நிகழ்வுகள் நடந்தன. கல்வித் துறைப் பொறுப்பாளர் இளங்குமரன் எனும் பேபி சுப்பிரமணியம், பரப்புரைப் பொறுப்பாளராக இருந்து, பிறகு காவல்துறைப் பொறுப்பாளராகிய இரமேஷ் எனும் இளங்கோ, நிதித் துறை பொறுப்பாளர் புகழேந்தி போன்ற முன்னணி தளபதிகள், பகுத்தறிவு, பெண்ணுரிமை போன்ற பெரியாரிய சிந்தனைகளை இயக்கத்துக்குள் முன்னெடுப்பதில் முனைப்பாக செயல்பட்டனர். தேசியத் தலைவர் பிரபாகரன் இதை ஊக்கப்படுத்தி ஆதரவு தந்தார்.

புலிகளின் வானொலியில் இராமாயணக் கதை நெடுந்தொடர் நாடகமாக ஒலிபரப்பப்பட்டது. அதில் இராமாயணக் கதை ஆரிய-திராவிடப் போராட்டமே என்ற கருத்தின் அடிப்படையில் உரையாடல்கள் அமைந்திருந்தன. இராவணன்-திராவிடர்களின் தலைவனாகவும்; இராமன் ஆரியர்களால் போற்றப்பட்ட வனாகவும் சரியாகவே சித்தரிக்கப்பட்டார்கள். இதற்கு இராமாயணத்தைப் பக்தியுடன் போற்றும் பழமைவாதி களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. தேசியத் தலைவர் பிரபாகரன், எதிர்ப்புகளைப் புறந்தள்ளியதோடு, அந்த நெடுந்தொடரை மறு ஒலிபரப்புச் செய்ய ஆணை யிட்டார். நூல் வடிவில் வெளிவந்த அந்த நெடுந்தொடருக்கு ஆரிய-திராவிடப் பார்வையிலேயே அணிந்துரையும் வழங்கினார். ஒரு கட்டத்தில் தமிழகத்திலிருந்து பெரியார் இயக்கத்தைச் சார்ந்த பகுத்தறிவுப் பரப்புரையாளர்களை அழைத்து, பரப்புரை செய்யவும் விரும்பினார். அதை கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடமும் தெரிவித்தார். சில பல காரணங்களால் அம்முயற்சி தடைபட்டது. கோயில்களுக்கு மாற்றாக மாவீரர் துயிலுமிடங்களே வணங்கத்தக்கவையாக மாற்றப்பட்டன. போராளிகள் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றப்பட்டு, மத அடையாளங்கள் கொண்ட பெயர்கள் நீக்கப்பட்டன. 40,000 தமிழ்ப் பெயர்களைக் கொண்ட பட்டியல் நூல் தயாரிக்கப்பட்டு மக்களிடம் பரப்பப்பட்டது. புலிகளின் தொலைக் காட்சி, வானொலி மற்றும் இதழ்களில் மதம் சார்ந்த கருத்துகள் தவிர்க்கப்பட்டன. இப்படி எத்தனையோ நிகழ்வுகளைப் பட்டியலிட முடியும். பெரியார் இயக்கத்துக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துமான உறவு கொள்கைப் பரிமாற்றங்களை கொண்டிருந்த உறவாகும்.

புலிகளின் மகத்தான தியாகம்தான் இன்று ஈழத் தமிழர் பிரச்சினையை சர்வதேச அரங்கிற்குள் நகர்த்தி இருக்கிறது. இந்த நகர்வை மேலும் விரைவுபடுத்தி, ஈழ விடுதலை எனும் இலங்கை நோக்கிப் பயணிக்கச் செய்வதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீர வணக்கம். கனவுலகில் கற்பனைப் பெருமிதங்களில் மூழ்கிக் கிடப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றார் விடுதலை இராசேந்திரன்.

சு.க.ப.க. மண்டல செயலாளர் அ.குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கு. சூரியகுமார் நன்றி கூறினார். தோழர் தா.செ. பழனிச்சாமி அனைவருக்கும் இரவு உணவு வழங்கினார். நிகழ்ச்சிகளை கனடா தமிழ் வானொலி நேரடியாக ஒலிபரப்பியது. நமது செய்தியாளர்

Pin It

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதா, மராட்டிய சட்டமன்றத்தில் டிசம்பர் 13 ஆம் தேதி நிறைவேறியது. நரபலி தருவது, பில்லி சூன்யம் மந்திரிப்பது, நோய் தீர்க்க மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மூடநம்பிக்கைகள் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, மகாராஷ்டிர மேலவையில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும். பகுத்தறிவாளர் நரேந்திர தபோக்கர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது நினைவாக அவசர சட்டமாக - இதை மகாராஷ்டிர அரசு பிறப்பித் திருந்தது. இப்போது சட்டசபையில் சட்டமாக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் குறிப்பிட்ட மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க சட்டம் வகை செய்கிறது.

மசோதா குரல் ஓட்டின் மூலம் நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஜனதா, சிவசேனா போன்ற இந்து மத அமைப்புகள் இந்த மசோதாவில் ஏராளமான திருத்தங்களைக் கொண்டுவந்தன. அதில் பெரும்பாலான திருத்தங்களை மாநில அரசு ஏற்றுக் கொண்டது. இதன்படி, சோதிடம், வாஸ்து சாஸ்திரம் போன்ற மூடநம்பிக்கைகள், மசோதாவிலிருந்து விலக்கப்பட்டுவிட்டன. மசோதாவை அறிமுகம் செய்து பேசிய சமூக நலத் துறை அமைச்சர் சிவாஜிராவ் முகே, “இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம்; அப்பாவி மக்களை பில்லி சூன்ய நம்பிக்கைகளிலிருந்து விடுவித்து, காப்பாற்றும் தீர்மானம். இந்த மசோதா சமூக மாற்றத்துக்கான இயக்கத்துக்கு வழி வகுக்கும்” என்று குறிப்பிட்டார்.

சிவசேனா உறுப்பினர் சுபாஷ் தேசாய் இந்தச் சட்டத்தை எதிர்த்ததோடு, இந்தச் சட்டம் இந்துக்களின் மதச் சுதந்திரத்தில் குறுக்கிட்டால் வீதிக்கு வந்து பேராடுவோம்” என்று எச்சரித்து, மூடநம்பிக்கையும் இந்து மதமும் பிரிக்க முடியாதவை என்பதை உணர்த்தினார். சுட்டுக் கொல்லப்பட்ட மருத்துவர் நரேந்திர தபோல்கரின் மகள் முக்தா தபோல்கர், சட்டம் நிறைவேறியதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மராட்டிய முதலமைச்சரும் சமூக நலத்துறை அமைச்சரும் தந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளனர். மேலவையிலும் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Pin It

கோவை மாவட்டம், கிணத்துக் கடவு அருகே பத்தனம் என்கிற கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் சாதித் தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர். இதையறிந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் அந்த ஊருக்குச் சென்று அங்கு படிக்கின்ற தலித் மாணவ, மாணவிகளையும் அவர்தம் பெற்றோர்களையும் அவர்களுடைய வீடுகளுக்கேச் சென்று சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர்.

அதன்படி அவர்கள் சொன்னது, - அந்தப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளையும் அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஈஸ்வரி என்பவர், தேநீர் வாங்க, பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய பெருக்க பயன்படுத்து வாராம். ஆனால், பள்ளிக் கழிப்பறையை மட்டும் கழுவி சுத்தம் செய்ய தலித் மாணவ, மாணவிகளைப் பயன்படுத்துவாராம். இது பல காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அது தற்போதுதான் வெளி வந்துள்ளது.

அதாவது தற்போது அந்தப் பள்ளியில் படிக்கும் சுபாஷினி என்கிற மாணவி கழிப்பறை சுத்தம் செய்ய தண்ணீர் கொண்டு வராததால் அவரை ஆசிரியர் ஈஸ்வரி அடித்து அவரின் கை வீங்கிப் போனது. அதைக் கண்ட அவரின் பெற்றோர் கேட்ட போதுதான் அந்த மாணவி நடந்ததைச் சொல்லியுள்ளார்.

பெற்றோரும், தீண்டாமைக்குட்பட்ட மற்ற மாணவர்களின் பெற்றோர்களும், மக்கள் விடுதலை முன்னணியும் சென்ற 20.11.2013 அன்று அந்தப் பள்ளி ஆசிரியரிடம் கேட்கச் சென்ற போது, சம்பவ இடத்திலேயே இவர்கள் முன்னிலையிலேயே, அந்த ஆசிரியருக்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அலைபேசியில் அந்த ஆசிரியரிடம், ‘என்னம்மா பசங்களை கக்கூஸ் கழுவச் சொல்றீங்களாமே என்று கேட்டுள்ளார்.

அந்த ஆசிரியை, உங்க பசங்களையெல்லாம் (பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்) அப்படி சொல்லவில்லை, மாதாரிப் பசங்களைத்தான் சொன்னேன் என்று அவர்கள் முன்னிலையிலேயே சொல்லியிருக்கிறார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்த உதவிக் கல்வி அலுவலர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு முற்றுகையை கைவிட்டார்கள்.

ஏற்கனவே கிணத்துக்கடவைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரட்டைக் குவளை மற்றும் முடித்திருக்கும் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு முடி வெட்டாமை ஆகியவற்றைக் கண்டித்து தடையை மீறி கிணத்துக்கடவில் கண்டன ஆர்ப்பாட்டமும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டமும் திராவிடர் விடுதலைக் கழகத்தால் நடத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டு வழக்கு நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி : நிர்மல்குமார்

Pin It