மரணத்தை மூலதனமாக்கி வயிற்றைக் கழுவும் நிலையில்தான் பட்டாசுத் தொழிற்சாலையில் நமது மக்கள் வேலை பார்க்கிறார்கள். 39 உயிர்களைக் காவு கொண்டு விட்டது சிவகாசி அருகே இருந்த சட்டவிரோதமான பட்டாசு தொழிற்சாலை. மரணமடைந்தவர்களில் 63 சதவீதம் பேர் ‘தலித்’ சமூகத்தினர் என்று கூறப்படுகிறது.

இந்து மத இழிவின் வெளிப்பாடான ‘தீபாவளி’க்கு பட்டாசு வெடிப்பதை மதச் சடங்குகளில் ஒன்றாக திட்டமிட்டு மாற்றினார்கள். பின்னர் - இது வேறு வேறு நிகழ்ச்சிகளுக்கும் அரசியல் கட்சிகளின் ‘திருவிழாக்களுக்கும்’ விரிவுபடுத்தப்பட்டு, பட்டாசு விற்பனைக்கான சந்தை விரிவானது. உயிருக்கு ஆபத்தான இந்த ‘பட்டாசு’ தயாரிப்புத் தொழிலை கருநாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் முற்றாகத் தடைசெய்துவிட்டன. ‘அணு மின்சாரம்’ என்றாலும் ‘ஆபத்துக்குரிய பட்டாசு’ உற்பத்தி என்றாலும் அது தமிழகத்தில்தான் தங்கு தடையின்றி அனுமதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு பட்டாசும் வேண்டாம்; பட்டாசுத் தயாரிப்பும் வேண்டாம்; இந்த ‘மரணப் பிடியில் நிறுத்தும் தொழிலை’ நம்பியிருக்கும் மக்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை உருவாக்கி, அவர்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு, மக்கள் நல அரசுக்கு உண்டு.

‘தீபாவளி’ கொண்டாடும் மக்களைக் கேட்கிறோம், உங்களின் மகிழ்ச்சிக் குதூகலத்துக்காக பட்டாசு தயாரித்த உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் பிணமாகி விட்டார்கள். அவர்களின் மரணத்தில் நீங்கள் துயரமடைவது உண்மையானால், குறைந்தது பட்டாசு வெடிப்பதையாவது நிறுத்துகிறோம் என்ற முடிவை எடுங்கள்! வெடித்துச் சிதறும் ஒவ்வொரு பட்டாசு சத்தத்திலும் மரணத்தை முதலீடாக்கி, உடலால் ஒவ்வொரு நாளும் ரசாயன நச்சுகளால் செத்துக் கொண்டிருக்கும் இந்த தொழிலாளர்களின் உழைப்பு இருப்பதை எண்ணிப் பாருங்கள்!